வேட்டையாடுதல் குறித்த சட்டங்கள்

அவர்கள் உம்மிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டவைகளைப் பற்றிக் கேட்கின்றனர். தூய்மையானவைகளும் அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி உங்களால் பயிற்றுவிக்கப்பட்ட வேட்டைப் பிராணிகள் வேட்டையாடியதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன என்று கூறுவீராக! (வேட்டையாடும்) பிராணிகள் வேட்டையாடியதில் (எதையும் உண்ணாமல்) உங்களுக்காகக் கொண்டு வந்தால் அவற்றை உண்ணுங்கள்! அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்.

அல்குர்ஆன் 5:4

இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

صحيح البخاري

5477 – حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرْسِلُ الكِلاَبَ المُعَلَّمَةَ؟ قَالَ: «كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ» قُلْتُ: وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ؟ قَالَ: «كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ»

நாங்கள் பயிற்றுவிக்கப்பட்ட நாயை (வேட்டைக்கு) அனுப்புகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (தான் சாப்பிடாமல்) உனக்காக அவை கொண்டு வருவதைச் சாப்பிடு! என்றார்கள். அவை கொன்று விட்டாலுமா? என்று நான் கேட்டேன். ஆம்! கொன்று விட்டாலும் தான் என்று விளக்கமளித்தார்கள். நாங்கள் அம்பால் வேட்டையாடுகிறோம் என்று கூறினேன். அதற்கவர்கள் (அம்பின் முனை) கிழித்துச் சென்றால் சாப்பிடு! அதன் அகலவாக்கில் தாக்கியிருந்தால் சாப்பிடாதே என்றார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5477, 7397

صحيح البخاري

5483 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الكِلاَبِ؟ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ المُعَلَّمَةَ، وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَإِنْ قَتَلْنَ، إِلَّا أَنْ يَأْكُلَ الكَلْبُ، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ»

நாங்கள் நாய்கள் மூலம் வேட்டையாடுகிறோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினேன். பயிற்றுவிக்கப்பட்ட நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறியிருந்தால் அவை (சாப்பிடாமல்) உங்களுக்காகவே கொண்டு வந்ததைச் சாப்பிடுங்கள்! கொன்று இருந்தாலும் சரியே. வேட்டை நாய் அதைச் சாப்பிட்டிருந்தால் அவை தமக்காகவே பிடித்தன. எனவே அதைச் சாப்பிட வேண்டாம். அதனுடன் வேறு நாய்கள் கலந்திருந்தால் (வேட்டையாடப்பட்டதை) சாப்பிடாதே என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5483, 5487

صحيح البخاري

5484 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَمْسَكَ وَقَتَلَ فَكُلْ، وَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ، وَإِذَا خَالَطَ كِلاَبًا، لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهَا، فَأَمْسَكْنَ وَقَتَلْنَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهَا قَتَلَ، وَإِنْ رَمَيْتَ الصَّيْدَ فَوَجَدْتَهُ بَعْدَ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ لَيْسَ بِهِ إِلَّا أَثَرُ سَهْمِكَ فَكُلْ، وَإِنْ وَقَعَ فِي المَاءِ فَلاَ تَأْكُلْ»

صحيح البخاري

5485 – وَقَالَ عَبْدُ الأَعْلَى: عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيٍّ، أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرْمِي الصَّيْدَ فَيَقْتَفِرُ أَثَرَهُ اليَوْمَيْنِ وَالثَّلاَثَةَ، ثُمَّ يَجِدُهُ مَيِّتًا وَفِيهِ سَهْمُهُ، قَالَ: «يَأْكُلُ إِنْ شَاءَ»

நீ உனது நாயை அனுப்பும் போது அல்லாஹ்வின் பெயர் கூறியிருந்தால் அது (சாப்பிடாமல்) உனக்காக கொண்டுவந்தால் அதைக் கொன்றிருந்தாலும் சாப்பிடு! (வேட்டைப் பிராணியில் ஒரு பகுதியை) அது சாப்பிட்டு விட்டால் நீ சாப்பிடாதே! ஏனெனில் அது தனக்காகவே பிடித்தது. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத வேறு நாய்களுடன் கூட்டாக வேட்டையாடி உனக்காக கொண்டு வந்தால் அதைச் சாப்பிடாதே! ஏனெனில் எந்த நாய் அதைப் பிடித்தது என்பதை நீ அறியமாட்டாய். வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒருநாள் இரண்டு நாட்களுக்குப் பின் அவற்றைக் கண்டுபிடித்தால் அதில் உனது அம்பின் அடையாளங்கள் தவிர வேறு அடையாளம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிடு! தண்ணீரில் விழுந்து கிடந்தால் அதைச் சாப்பிடாதே! என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி)

நூல்: புகாரி 5485

இது சம்பந்தமான மேலும் பல ஹதீஸ்கள் புகாரி 2054, 5475, 5476, 175; முஸ்லிம் 3560, 3561, 3562, 3563, 3564, 3565, 3566; திர்மிதீ 1385, 1389, 1390, 1391; நஸயீ 4190, 4191, 4192, 4193, 4195, 4196, 4197, 4198, 4199, 4200, 4201; அபூதாவூத் 2464, 2465, 2466, 2467, 2468, 2470, 2471; இப்னுமாஜா 3199, 3202, 3205, 3206; அஹ்மத் 17534, 17538, 17544, 17547, 18560, 18563, 18570 ஆகிய ஹதீஸ்களைக் காண்க!

வேட்டைக்காக நாயை அல்லது அம்பை அனுப்பும்போது பிஸ்மில்லாஹ் கூறினால் கொன்ற நிலையில் பிடித்து வந்தாலும் அதை உண்ணலாம்.

உயிருடன் பிடித்து வந்தால் பிஸ்மில்லாஹ் கூறி அறுத்து சாப்பிடலாம் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து அறியலாம். வேட்டையாடுவது சம்பந்தமான மேலும் பல விதிகளையும் இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

வேட்டை என்ற பெயரால் பிராணிகளைக் கம்பால், இரும்பால் அடித்துக் கொன்றால் அதை உண்ணக் கூடாது. வேட்டையாடப் பயன்படுத்தும் கருவி அப்பிராணிக்குள் ஊடுருவிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும். ஊடுருவவும் வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. இந்த அடிப்படையில் துப்பாக்கிகளால் வேட்டையாடலாம். ஏனெனில் அதன் குண்டுகள் பிராணிகளுக்குள் ஊடுருவும்.

கவன் (உண்டிவில் – கவட்டை) மூலம் வேட்டையாடி வேட்டைப் பிராணி செத்துவிட்டால் அதை உண்ணக் கூடாது. ஏனெனில், அதிலிருந்து புறப்படும் கல் ஊடுருவிச் செல்வதில்லை. உயிருடன் விழுந்தால் அறுத்து உண்ணலாம்.

கல்லால் எறிந்து வேட்டையாடுவதும், ஈரக் களிமண் உருண்டைகளைக் குழாயில் வைத்து வாயால் ஊதி வேட்டையாடுவதும் இதே வகையைச் சேர்ந்தவை தான். இது போன்ற வேட்டைகளில் பிராணிகள் செத்துவிட்டால் உண்ணக் கூடாது. மேற்கண்ட ஹதீஸிலிருந்து இத்தனை விஷயங்களையும் விளங்கலாம்.

நாம் வேட்டையாட அனுப்புகின்ற ஒரு நாய் வேட்டையாடி விட்டு அதில் ஒரு பகுதியை உண்டால் அதை நாம் உண்ணலாமா என்பதில் இரு கருத்துள்ள ஹதீஸ்கள் உள்ளன. உண்ணக் கூடாது எனக் கூறும் ஹதீஸ்களை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

இதற்கு முரணாகத் தோன்றும் மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்.

مسند أحمد بن حنبل

 6725 – حدثنا عبد الله حدثني أبي ثنا عبد الصمد بن عبد الوارث حدثني أبي ثنا حبيب عن عمرو عن أبيه عن عبد الله بن عمرو أن أبا ثعلبة الخشني أتى النبي صلى الله عليه و سلم فقال : يا رسول الله ان لي كلابا مكلبة فأفتنى في صيدها فقال ان كانت لك كلاب مكلبة فكل مما أمسكت عليك فقال يا رسول الله ذكى وغير ذكى قال ذكى وغير ذكى قال وان أكل منه قال وان أكل منه قال يا رسول الله أفتني في قوسي قال كل ما أمسكت عليك قوسك قال ذكى وغير ذكى قال ذكى وغير ذكى قال وان تغيب عنى قال وان تغيب عنك ما لم يصل يعني يتغير أو تجد فيه أثر غير سهمك قال يا رسول الله افتنا في آنية المجوس إذا اضطررنا إليها قال إذا اضطررتم إليها فاغسلوها بالماء واطبخوا فيها

تعليق شعيب الأرنؤوط : صحيح لغيره وهذا إسناد حسن

வேட்டைக்கு அனுப்பும் நாய்கள் வேட்டையாடப்பட்டதைச் சாப்பிட்டால் (அதை நாம் சாப்பிடலாமா?) என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவை சாப்பிட்டாலும் நீ அதைச் சாப்பிடலாம் என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸஃலபா (ரலி)

நூல்கள்: அஹ்மத் 6438, அபூதாவூத் 2496, 2474

இவ்விரு ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானவை தாம். ஒன்று மற்றொன்றை மாற்றிவிட்டது என்று முடிவு செய்ய வழியில்லை. ஏனெனில் எது ஆரம்ப நிலை? எது இறுதி நிலை? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இவ்விரு ஹதீஸ்களில் ஒன்று ஆதாரப்பூர்வமானதாகவும் மற்றொன்று பலவீனமானதாகவும் இருந்தால் பலவீனமானதை விட்டுவிட்டு ஆதாரப்பூர்வமானதை எடுத்து நடக்கலாம். ஆனால் இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவையே!

இந்நிலையில் இரண்டில் எதைச் செய்வது பேணுதலானதோ எது திருக்குர்ஆனின் போதனையுடன் ஒத்து வருகின்றதோ அதை எடுத்துக் கொண்டு மற்றதை விட்டு விடுவதே முறையானதாகும்.

நாம் முன்னர் எடுத்துக்காட்டிய வசனத்தில் வேட்டையாடும் பிராணிகள் (எதையும் உண்ணாமல்) உங்களிடம் அப்படியே கொண்டு வந்தவைகளை உண்ணுங்கள் என்று கூறப்படுகின்றது. புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ்கள் இந்த வசனத்துடன் ஒத்துப் போகின்றன. அஹ்மத், அபூதாவூதில், இடம்பெறும் இந்த ஹதீஸ் இந்த வசனத்துடன் முரண்படுகின்றது.

மேலும் முதல் ஹதீஸை ஏற்று, வேட்டைப் பிராணிகளால் சாப்பிடப்பட்டதை உண்ணாமல் இருப்பதால் எந்தக் கேள்வியும் வராது. பேணுதலுக்கு ஏற்றதாக உள்ள முதல் ஹதீஸினடிப்படையில் செய்யப்படுவதே சரியானதாகும்.

வேட்டையின் போது அம்பால் தாக்கப்பட்ட பறவை மற்றும் பிராணிகள் உடனே தண்ணீரில் விழுந்து இறந்துவிட்டால் அதை உண்ணக்கூடாது. ஆனால் அம்பால் தாக்கப்பட்டவை ஓடிச் சென்று பின்னர் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு செத்துக் கிடக்கக் கண்டால், அது செத்ததற்கு நாம் எய்த அம்புதான் காரணம் என்பதும் உறுதியானால் அதை உண்ணலாம்.

மேலே நாம் எடுத்துக்காடிய புகாரி 5485 வது ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

வேட்டையாடப்படும் போது முறையாக அறுப்பு நிகழவில்லையாயினும் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் இதற்குத் தனி விதிகளைக் கூறுவதால் தாமாகச் செத்தவற்றில் இவை அடங்காது என்பதை அறியலாம்.

இவற்றைத் தவிர வேறு வகையில் இறந்த எந்தப் பிராணியும் தாமாகச் செத்தவை என்பதில் அடங்கும். அதை உண்ணக்கூடாது.

உயிருடன் உள்ள பிராணியின் ஒரு உறுப்பை அல்லது ஒரு பகுதியை வெட்டி எடுத்தால் அதுவும் தாமாகச் செத்தவற்றில் அடங்கும். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

 سنن ابن ماجه

3216 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: “مَا قُطِعَ مِنْ الْبَهِيمَةِ وَهِيَ حَيَّةٌ، فَمَا قُطِعَ مِنْهَا فَهُوَ مَيْتَةٌ”

உயிருடன் உள்ள பிராணியிடமிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பகுதி தாமாகச் செத்தவையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 3207