செல்வத்தை விட மானம் பெரிது!

பொருளாதாரத் தேடலில் சுயமரியாதையைப் பேணுதல்

பொருளாதாரத்தைத் தேடுவதற்காக எந்த நெறிமுறைகளையும் பேணாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் மானம் மரியாதையை விட பொருளாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகும்.

மானம் மரியாதையை விட பொருளாதாரமே முதன்மையானது என்ற எண்ணம் பலரிடம் காணப்பட்டாலும் பொருளாதாரத்தை விட மானம் மரியாதையே முதன்மையான செல்வம் என்று இஸ்லாம் போதிக்கிறது. சுயமரியாதையை விட்டால்தான் பணம் கிடைக்கும் என்றால் பணத்தை அலட்சியம் செய்து விட்டு சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுரை கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் ஆரம்பக் கட்டத்தில் இருந்தபோது அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட ஹெர்குலிஸ் மன்னர் நபிகள் நாயகத்தின் அப்போதைய எதிரியாக இருந்த அபூஸுஃப்யானிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் என்ன என்று விசாரித்தபோது அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக் கால) கூற்றுக்களையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயமரியாதையைப் பேணுமாறும் உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று கூறினார்.

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

நூல் : புகாரி 7

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆரம்பகாலப் பிரச்சாரத்தின்போது முன்னுரிமை அளித்தவற்றுள் சுயமரியாதையைப் பேணுவதும் ஒரு அம்சமாக இருந்ததை இந்த வரலாற்று நிகழ்ச்சியில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

6470 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ اللَّيْثِيُّ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، أَخْبَرَهُ: أَنَّ أُنَاسًا مِنَ الأَنْصَارِ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَسْأَلْهُ أَحَدٌ مِنْهُمْ إِلَّا أَعْطَاهُ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ، فَقَالَ لَهُمْ حِينَ نَفِدَ كُلُّ شَيْءٍ أَنْفَقَ بِيَدَيْهِ: مَا يَكُنْ عِنْدِي مِنْ خَيْرٍ لاَ أَدَّخِرْهُ عَنْكُمْ، وَإِنَّهُ مَنْ يَسْتَعِفَّ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ، وَلَنْ تُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ

அன்சாரிகளில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டார்கள். கேட்ட யாருக்குமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை உங்களுக்கு வழங்கப்படப் போவதில்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : புகாரி 6470, 1469

சுயமரியாதையை விட பணம்தான் பெரிது என்ற எண்ணம்தான் மனிதனை யாசகம் கேட்பவனாகவும், மனிதர்களிடம் கையேந்தக் கூடியவனாகவும் ஆக்கிவிடுகிறது. எனவேதான் யாசகம் கேட்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.