யாரைத்தான் நம்புவது?

நாம் நம்பிய பலர் பண மோசடியில் ஈடுபட்டு அல்லது துரோகம் செய்து விட்டு நீக்கப்படுகின்றனர். இப்படியே போனால் யாரைத்தான் நம்புவது?

சாதிக் அலி (அஜ்மான் மண்டலச் செயலாளர்) கடையநல்லூர்

குறிப்பு : இந்தk கேள்வி எனது ஊரைச் சார்ந்தவர்கள் சில நண்பர்கள் என்னிடத்தில் கேள்வி கேட்டார்கள் ,நான் பதில் கொடுத்தும் திருப்தி அடையவில்லை; எனவே இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் மூலம் பதில் கொடுத்தால் இன்ஷா அல்லா சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்

பதில் : உங்கள் குழப்பத்துக்குக் காரணம் தவ்ஹீதின் அடிப்படையை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். தவ்ஹீதின் அடிப்படை என்ன? மனிதன் எப்போதும் மனிதன் தான். அவனிடம் இறைத்தன்மை ஒருக்காலும் ஏற்படாது என்பதுதான் அந்த அடிப்படை.

நாம் ஒரு மனிதனை நல்லவன் என்று நம்புகிறோம். இதன் பொருள் என்ன? வெளிப்படையாகப் பார்க்கும் போது அவன் நல்லவன் என்று நமக்குத் தெரிகிறது. அவன் கெட்டவனாகவும் இருக்கலாம். ஆனாலும் வெளிப்படையாகத் தெரிந்ததை வைத்தே முடிவு செய்யும்படி தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இது தான் தஹீதின் அடிப்படை.

இந்த அடிப்படையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு எந்தக் குழப்பமும் வராது.

தவ்ஹீத் ஜமாஅத் ஒருவரை நல்லவர் என்று நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறது என்றால் அந்த முடிவு தவறாகவே ஆகக் கூடாது என்று நீங்கள் நம்பினால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு இறைத் தன்மை உள்ளது என்று நீங்கள் கருதுவதாகத் தான் பொருள்.

நாம் நல்லவர்கள் என்று கருதும் யாரும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று நம்புவது தான் தவ்ஹீத்.

கொள்கையில் உறுதியானவர்கள் என்று நாம் கருதும் தலைவைர்களில் இப்போதும் நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் இருக்கலாம். ஆனால் அது ஆதாரத்துடன் வெளியே தெரியாத வரை வெளிப்படையானதைத் தான் நாம் நம்ப வேண்டும்.

வெளிப்படையாக தெரிவதன் அடிப்படையில் நீங்கள் செய்த தர்மத்தை ஒருவர் மோசடி செய்தாலும் அதனால் உங்களின் மறுமை நன்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அதற்கான கூலி அல்லாஹ்விடம் கிடைத்து விடும்,

நீங்கள் ஆசைப்படுவது போல் எதிலும் சேராமல் தனித்து நின்று தான தர்மங்கள் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நிதியை வாங்கியவர்கள் அதில் மோசடி செய்ய மாட்டார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? ஜமாஅத் மூலம் ஒருவரை நல்லவர் என்று நம்பி செயல்படும் போது அதனால் ஏற்படும் பாதிப்பை விட நீங்கள் தனியாக உங்கள் தான தர்மங்களைச் செய்யும் போது அதிக அளவில் ஏமாறும் நிலைதான் ஏற்படும். ஒரு குழுவால் ஒருவன் கண்காணிக்கப்படுவதும் தனி நபரால் கண்காணிப்பதும் ஒரு போதும் சமமாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட சமுதாயமே தமக்குள் பிளவுபட்டார்கள். தமக்கிடையே போரும் செய்தார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சரியாக வழி நடத்தவில்லை என்று கூறுவீர்களா?

யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட ஆற்றலுக்கு உட்பட்டுத் தான் யாரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அந்த முடிவு சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் இருக்கலாம். தவறாகக் கணித்தது பின்னர் தெரிய வந்தால் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து நம்முடைய பலவீனத்தை ஒப்புக் கொண்டு பழகுங்கள், எந்தச் சோர்வும் ஏற்படாது.

உணர்வு 15:46