இரவை பகல் தொடருமா?
7:54 வசனத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும் உங்கள் மொழியாக்கத்தில் இரவைப் பகலால் மூடுகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு வேறு தர்ஜுமாக்களில் இரவைக்கொண்டு பகலை மூடுகிறான் என்று மொழிபெயர்த்துள்ளனர்.
இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?
இன்னொன்று, அதே வசனத்திற்கு , உங்கள் மொழியாக்கத்தில் பகல், இரவை தொடர்கிறது, என்று சொல்லியுள்ளீர்கள்.
வேறு வேறு மொழியாக்கங்களில் இரவு பகலைத் தொடர்கிறது என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.
இரண்டும் முரண்பாடான கருத்தல்லவா? எது சரி?
பதில்
நம்முடைய மொழி பெயர்ப்பு தான் சரியானது.
إِنَّ رَبَّكُمُ اللّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثاً وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلاَ لَهُ الْخَلْقُ وَالأَمْرُ تَبَارَكَ اللّهُ رَبُّ الْعَالَمِينَ (54)
யுக்ஷி
அல்லைல
அன்னஹார
என்று மூலத்தில் உள்ளது.
அல்லைல – அன்னஹார என்ற இரண்டு செயப்படு பொருட்கள் இதில் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படு பொருள் வந்தால் முதலாவது கூறப்பட்ட செயப்படு பொருளுக்கு ஐ காரம் சேர்த்து அர்த்தம் செய்ய வேண்டும். அதாவது இரவால் என்று கூறாமல் இரவை என்று மொழி பெயர்ப்பது தான் சரியானது.
இரண்டாவதாக கூறப்பட்ட மற்றொரு செயப்படு பொருளாக உள்ள அன்னஹார என்பதற்கு ஐ காரம் சேர்த்து பகலை என்று பொருள் கொள்ளாமல் ஆல் அல்லது மூலம் என்று சேர்த்து பொருள் செய்ய வேண்டும். அதாவது பகலால் பகல் மூலம் என்று கூற வேண்டும். தக்க காரணம் இருந்தால் தவிர இதில் மாற்றம் செய்யக் கூடாது என்பது அரபு இலக்கண விதி
இந்த இலக்கண விதி அனைவரும் அறிந்த விதியாக இருந்தாலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் இரவு தான் பகலை மூடுகிறது என்று கருதியதால் அந்த அர்த்தம் வர வேண்டுமென்பதற்காக இதை மீறியுள்ளனர். தக்க காரணம் இருக்கும் போது இவ்வாறு மீறுவது இலக்கணப் பிழையாக ஆகாது என்ற அடிப்படையில் அவ்வாறு செய்துள்ளனர்.
ஆனால் இவர்கள் இரவு பகலின் அடிப்படையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உலகில் இரவு தான் இயற்கையானது. சூரியன் என்ற ஒரு பொருள் படைக்கப்பட்டதால் தான் பகல் ஏற்படுகிறது. சூரியன் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்போதும் இருட்டு தான்.
பூமியின் இயற்கையான தன்மை இருட்டு எனும் போது அதை பகல் தான் மூடுகிறது. பகல் எனும் திரையை நீக்கி விட்டால் இரவாகி விடும்.
இதற்கேற்ப திருக்குர்ஆன் முதல் செயப்படு பொருளாக இரவை கூறி மாபெரும் அறிவியல் உண்மையைக் கூறியுள்ளது. ஆனால் இதை விளங்காமல் கருத்துப் பிழை வந்து விடும் என தவறாக்க் கருதி இலக்கணத்தை மீறி பொருள் செய்துள்ளனர்.
இரவும் அவர்களுக்கு ஒரு சான்று. அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்.
திருக்குர்ஆன் 36:37
இவ்வசனத்தில் இரவில் இருந்து பகலை உரித்து எடுக்கிறோம் என இறைவன் கூறுகிறான். அதாவது இரவின் மீது பகல் எனும் போர்வை போர்த்தப்பட்டுள்ளதாகவும், பகலை உரித்து எடுத்தவுடன் தானாக இரவு வந்து விடுகிறது எனவும் இவ்வசனத்தில் சொல்லிக் காட்டுகிறான். அதே கருத்தைத் தான் நீங்கள் சுட்டிக்காட்டிய வசனமும் சொல்கிறது, நாம் செய்த மொழி பெயர்ப்பு தான் மிகச் சரியானது.
உங்களின் இரண்டாம் கேள்விக்கும் இதிலேயே விடை உள்ளது.
يَطْلُبُهُ حَثِيثاً
அதை இது தொடர்கிறது என்று தான் மூலத்தில் உள்ளது.
எது முதலில் உள்ளதோ அது தான் தொடரப்படும் பொருள் என்பதும், எது பிந்தையதாக உள்ளதோ அது தான் தொடரும் பொருள் என்பதும் தான் சரியான கருத்தாக இருக்க முடியும். எனவே இதிலும் நாம் செய்த அர்த்தம் தான் சரியானது. இரவு தான் இயற்கையானது எனும் போது இரவைப் பகல் தொடர்கிறது என்பதே சரியானது.