பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்ததாக குர்ஆனில் உள்ளதா?
இப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஜாகிர் நாயக் கூறி உள்ளார். இது சரியா?
முஹம்மத் அஃப்சல்
பதில் :
நீங்கள் குறிப்பிடும் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுவே.
وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا (30) 79
இதன் பின்னர் பூமியை விரித்தான்.
திருக்குர்ஆன் 79:30)
ஆனால் ஜாகிர் நாயக் இவ்வசனத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாமல் இதன் பின்னர் பூமியை நெருப்புக்கோழி முட்டையின் வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.
இந்த வசனத்தில் வரும் தஹா என்ற சொல்லுக்கு நெருப்புக்கோழியின் முட்டை என்று அர்த்தம் உள்ளதாகவும் எனவே பூமியை நெருப்புக் கோழி முட்டை வடிவில் படைத்தான் என்று மொழிபெயர்த்துள்ளார்.
பூமி நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் அமைந்திருப்பதாகவும் இந்த மாபெரும் விஞ்ஞான உண்மையை இவ்வசனம் கூறுவதாகவும் அவர் வாதிடுகின்றார்.
இவர் கூறுவது போல் தஹா என்ற சொல்லுக்கு இப்பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களிலோ, தஃப்சீர் நூற்களிலோ கூறப்படவில்லை. மாறாக தஹா என்ற இச்சொல்லுக்கு பஸத விரித்தான் என்பதே பொருள் என அனைவரும் கூறுகின்றனர்.
தஹா என்ற இச்சொல்லிலிருந்து பிரிந்து வந்த மத்ஹா, உத்ஹீ போன்ற சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்றும் அது குஞ்சு பொறிக்கும் இடம் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.
நெருப்புக் கோழி தனது கூட்டை தரையில் பரவிய வகையில் விரிவாக அமைக்கக் கூடியது. விரித்தல் என்ற அசலான பொருள் இதனுள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில் தான் இச்சொற்களுக்கு நெருப்புக் கோழியின் கூடு என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
தஹா என்ற சொல்லிலிருந்து பிரிந்து வந்த எந்தச் சொல்லுக்கும் நெருப்புக் கோழியின் முட்டை என்ற பொருள் அறவே கிடையாது. பரந்து விரிந்த கூடு என்ற கருத்தில் நெருப்புக் கோழியின் கூடு என்ற பொருள் மட்டுமே உள்ளது.
ஒரு பேச்சுக்கு இவர் கூறுவது போல் துஹ்யா என்ற சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை என்று பொருள் இருப்பதாக ஒத்துக் கொண்டாலும் இவருடைய மொழிபெயர்ப்பு சரியாகி விடாது.
ஏனென்றால் துஹ்யா என்பது பெயர்ச் சொல். தஹா என்பது வினைச் சொல். அரபு மொழியில் ஒரு வினைச் சொல்லுக்கு பொருள் கொடுப்பதாக இருந்தால் அந்த வினைச் சொல்லுக்கு என்னென்ன பொருள்கள் கூறப்பட்டுள்ளன என்றே பார்க்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இஷ்டப்படி பெயர் சொல்லிலிருந்து அந்த வினைச்சொல்லுக்கு பொருள் எடுத்தல் கூடாது.
ஒரு வினைச் சொல்லை அரபு அகராதியில் குறிப்பிடுகின்றார்கள் என்றால் அதற்குரிய அனைத்து அர்த்தங்களையும் விவரிக்காமல் விட மாட்டார்கள்.
எந்த அரபு அகராதி நூலிலும் தஹா இந்த வினைச் சொல்லுக்கு நெருப்புக் கோழியின் முட்டை வடிவில் ஆக்கினான் என்று பொருள் கூறப்படவே இல்லை.
எனவே ஜாகிர் நாயக் செய்துள்ள இந்த மொழிபெயர்ப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை.
விஞ்ஞான உண்மைகளைப் பற்றிப் பேசும் வசனங்கள் குர்ஆனில் இருப்பதைப் போன்று விஞ்ஞானத்தைப் பற்றி பேசாமல் வேறு விஷயங்களைப் பற்றி பேசக்கூடிய வசனங்களும் குர்ஆனில் இருக்கின்றன.
குர்ஆன் வசனங்கள் கூறாத விஞ்ஞானக் கருத்துக்கள் அவ்வசனங்களில் இருப்பதாக வலிந்து வாதிடுவது தவறான போக்காகும். இவ்வாறு செய்தால் இறைவன் கூறாத கருத்தை இறைவன் பெயரால் இட்டுக்கட்டிய குற்றம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.