இரத்தக்கட்டியா? சினை முட்டையா?
திருக்குர் ஆன் 23:14 வசனத்துக்கு இக்பால் மதனி பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.
இந்திரியத்தை இரத்தக் கட்டியாக ஆக்கினோம்
இந்திரியம் இரத்தக் கட்டியாக ஆவதில்லை என்பதால் இவரது தவறான தமிழாக்கம் விஞ்ஞானத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
ஆனால் பீஜே பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.
இப்படி தமிழாக்கம் செய்து விட்டு அதைப் பின்வருமாறு பீஜே விளக்கியுள்ளார்.
-
கருவுற்ற சினை முட்டை
இவ்வசனங்களில் (22:5, 23:14, 40:67, 75:38, 96:2) மனிதனின் துவக்க நிலையைச் சொல்லும்போது அலக், அலக்கத் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
இரத்தக் கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை, ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்று இதற்குப் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக் கட்டி என்று ஒரு நிலை இல்லை. தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போது அது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும். தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதப் படைப்பு பற்றி இறைவன் வரிசைப்படுத்திக் கூறும்போது, முதலாவதாக நுத்ஃபா என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான். இரண்டாவதாக அலக்கத் என்ற மூலப்பொருளைக் குறிப்பிடுகிறான்.
நுத்ஃபா என்பது ஆணுடைய விந்திலுள்ள உயிரணுக்களாகும். மனிதன் உருவாவதற்கு ஆணுடைய நுத்ஃபா எனும் உயிரணு மட்டும் போதாது. பெண்ணுடைய சினை முட்டையுடன் ஆணின் உயிரணு சேரும்போது தான் கரு உருவாகும்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்த கலவை தான் இரண்டாவது மூலப்பொருளாகும்.
இதன்படி திருக்குர்ஆனில் கூறப்பட்ட அலக் என்பது இதைத்தான் குறிக்கும் என்பதை எளிதாக விளங்க முடியும். மேலும் அலக் என்ற சொல், பல அர்த்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வது என்ற பொருளில் தான் மிக அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆணுடைய உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் இதைக் குறிப்பிட இதை விடப் பொருத்தமான வேறு சொல் இருக்க முடியாது.
இதனால் தான் அலக் என்ற சொல் இடம் பெற்ற எல்லா இடங்களிலும் கருவுற்ற சினைமுட்டை என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம். இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினைமுட்டை.
இவ்வாறு பீஜே விளக்கியுள்ளார்.
ஆனால் இஸ்மாயீல் ஸலபி இந்த அறிவியல் உண்மை 23:14 வசனத்தில் உள்ளதாக உண்மை உதயம் அக்டோபர் 2009 இதழில் மெய்சிலிர்க்க வைக்கும் அறிவியல் உண்மைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
ஆனால் இவர் ஏற்றுள்ள இக்பால் மதனியின் இரத்தக் கட்டி என்ற தமிழாக்கத்தின்படி அதில் எந்த அறிவியலும் இல்லை. அறிவியலுக்கு எதிரான கட்ருத்தையே அது தருகிறது.
பீஜேயின் தமிழாக்கத்தின் படி தான் அறிவியல் கருத்துக்கள் உள்ளன.
ஒருவரது கொள்கை சரியானதோ தவறானதோ அக்கொள்கை உடையவரைப் பொருத்தவரை அது சரியானது என்று நம்புகிறார். அவ்வாறு நம்புவதில் அவர் உண்மையாளராகவும் உறுதியுடையவராகவும் இருக்க வேண்டும்.
இக்பால் மதனிக்கு மாற்றமாக அமைந்துள்ள பீஜேயின் தமிழாக்கம் தவறு என்று கருதுபவர் எந்தக் காலகட்டத்திலும் அந்தத் தவறான தமிழாக்கத்தைப் பயன்படுத்தி அதன் அடிப்படையில் வாதங்களை எடுத்து வைக்கக் கூடாது.
அனைத்து வசனங்களைப் பற்றியும் நான் பேசவில்லை. இக்பால் மதனி தமிழாக்கம் செய்ததற்கு நேர் முரணாக நான் தமிழாக்கம் செய்திருந்தால் அதை மட்டும் புறக்கணித்தால் தான் அவருக்கே அதில் நம்பிக்கை இருப்பதாக ஆகும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அவரிடம் எந்தக் கொள்கையும் கிடையாது என்பது தான் பொருள்.