நாள் வாடகை வட்டியாகுமா?
ஒரு வாகனத்தை நாள் வாடகைக்கு விடுவது வட்டி என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?
பதில் :
வட்டி என்பது என்ன? இதைச் சரியாக விளங்கிக் கொண்டால் குழப்பம் வராது.
நம்முடைய பணம் எவ்வளவு காலம் ஒருவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் பெறுவது தான் வட்டி என்பது.
நம்முடைய பொருள் எவ்வளவு காலம் ஒருவரிடம் இருக்கிறதோ அதற்கு ஏற்ப ஆதாயம் அடைவது வாடகை எனப்படும்.
பிறரின் பணம் ஒருவரிடம் இருப்பதற்கும், பணம் அல்லாத மற்றவை ஒருவரிடம் இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும். நமது பணத்தை ஒருவர் பயன்படுத்தினால் அதனால் பணத்தின் மதிப்பு குறையப் போவதில்லை. நோட்டு பழையதாக ஆனாலும் பணத்தின் மதிப்பு குறையாது. பழைய நோட்டுகளுக்கும், புதிய நோட்டுகளுக்கும் மதிப்பு ஒன்று தான்.
ஆனால் ஒருவனது வீட்டையோ, வாகனத்தையோ பயன்படுத்தினால் அதனால் தேய்மானம் ஏற்படுகிறது. மதிப்பு குறைகிறது.
இந்த வகையில வாடகையும், வட்டியும் வேறுபடுகிறது.
ஒருவரது பணத்தை நாம் ஏதோ ஒரு துறையில் பயன்படுத்தினால் அதில் லாபமும், நட்டமும் ஏற்படலாம். நிச்சயமான ஆதாயம் இல்லை.
ஆனால் ஒரு பொருளை வாடகைக்கு எடுத்தால் அதை நாம் அனுபவித்து விடுவது நிச்சயமானது.
எனவே பிறரின் பொருளை நாம் பயன்படுத்தும் போது அப்பொருள் தேய்மானம் ஆவதால் அதற்கு ஈடு கட்டும் வகையில் நாம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதில் நியாயம் உள்ளது.
ஆனால் பணத்தை நாம் திருப்பித் தரும் போது அதில் எந்தத் தேய்மானமும் ஏற்படாது. கொடுத்த பணத்தை அப்படியே திரும்ப வாங்கிக் கொள்கிறோம். இதற்கு ஆதாயமும் பார்ப்பதில் நியாயம் இல்லை.
இது தான் வாடகைக்கும் வட்டிக்கும் உள்ள வேறுபாடு.
நாம் கடனாகக் கொடுத்த ரூபாயின் மதிப்பு குறைந்து விடுகிறதே? இது இழப்பு தானே என்ற சந்தேகம் எழலாம். ஆனால் இந்தச் சந்தேகம் சரியானதல்ல.
பணத்தின் மதிப்பு சில வேளை குறையலாம்; சில வேளை அதிகரிக்கலாம். இது கடன் வாங்கியவர் பயன்படுத்தியதால் ஏற்பட்டதல்ல. அந்தப் பணம் நம்மிடம் இருந்தாலும் இதே விளைவு ஏற்படும்.
இப்படி வட்டிக்கும் வாடகைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.