கடன் தந்தவர் காணாமல் போய் விட்டால் என்ன செய்வது?

பதில்:

ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதை நீங்கள் கொடுத்தே ஆக வேண்டும். இதில் மற்றுக் கருத்து யாருக்கும் இல்லை. ஆனால் நாம் திருப்பிக் கொடுக்கத் தயாராக இருந்தும் கொடுப்பதற்கான சூழ்நிலை இல்லாத போது என்ன செய்வது என்பதில் தான் உங்களுக்குக் குழப்பம் உள்ளது.

நெருக்கடியான நேரத்தில் நிர்பந்தமான நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்று இஸ்லாம் கூறுவதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிர்பந்தமான நிலையில் சட்டங்கள் தளர்த்தப்படும் என்பது இறைவன் தொடர்பான விஷயங்களைப் பற்றியதாகும். நிர்பந்தமான நிலையில் நாம் ஒரு கட்டளையை மீறி விட்டால் நிச்சயம் அல்லாஹ் மன்னிப்பான்.

ஆனால் மனிதனின் உரிமை தொடர்பான எந்த விஷயத்தையும் அல்லாஹ் மன்னிப்பதில்லை. சம்மந்தப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லது அந்த மனிதனுக்கு நியாயம் வழங்காத வரை அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான்.

ஒரு காரியம் நிறைவேறினால் ஆயிரம் ரூபாய் தர்மம் செய்வேன் என்று நாம் நேர்ச்சை செய்தால் அதன் பின்னர் அதைச் செய்ய முடியாத அளவுக்கு வறுமை ஏற்பட்டு அதை நிறைவேற்ற முடியாவிட்டால் அல்லாஹ் அதை மன்னிப்பான்.

ஒருவரிடம் கடன் வாங்கி விட்டு அதைக் கொடுக்க முடியாத அளவுக்கு வறுமை ஏற்பட்டால் அதுவும் நிர்பந்தம் தான்.

ஆனால் கடன் கொடுத்தவன் நாளை மறுமையில் நியாயம் கேட்கும் போது அவனிடம் வசதி இல்லாததால் அவன் தரவில்லை என்று அல்லாஹ் பதில் தர மாட்டான். அவ்வாறு பதிலளித்தால் அது பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கும் நீதியாக அமையாது.

நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவன் மறுமையில் நியாயம் கேட்கும் போது உங்களுடைய நல்லறங்கள் அதற்கு ஈடாக அவனுக்கு மாற்றப்படுவது தான் மறுமையில் அவனுக்கு வழங்கும் சரியான நீதியாகும்.

நாம் யாரிடம் கடன் வாங்கினோமோ அவர் சார்பில் அதைத் தர்மம் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை. அது இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரானதாகும். அவர் திருப்பப் பெறுவதற்காகத் தான் கடன் தந்தார். அதை நீங்கள் தர்மம் செய்வது அவருடைய உரிமையைப் பறிப்பதாக ஆகும்.

இந்த அத்தனை அடிப்படையையும் கவனத்தில் கொண்டு தான் இதற்கான தீர்வை நாம் காண வேண்டும்.

நாம் வாங்கிய கடனுக்காக நம்முடைய நன்மைகள பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டவனுக்குக் கொடுக்கப்படும் என்பதை விளங்கி அதற்கேற்றவாறு உபரியான வணக்கங்களை அதிகப்படுத்திக் கொள்வதன் மூலமும் அவர் சார்பாக இல்லாமல் நம் சார்பில் அந்தத் தொகையை தர்மம் செய்வதன் மூலமும் இதை ஈடு செய்ய முடியும்.

அதனால் தான் கடமையான வணக்கங்கள் மட்டுமின்றி மேலதிகமான வணக்கங்களும் மார்க்கத்தில் ஆர்வம் ஊட்டப்பட்டுள்ளன.

இப்படி உபரியான வணக்கங்களை நாம் சேமித்து வைத்து இருந்தால் பாதிக்கப்பட்டவனுக்காக நம்முடைய நன்மைகள மாற்றப்பட்டாலும் நரகம் செல்லும் நிலை நமக்கு ஏற்படாது. நாம் உபரியாகச் செய்துள்ள வணக்கங்களில் சில அடுத்தவனுக்குப் போய் விட்டாலும் நம்முடைய கடமையான வணக்கங்கள் நமக்கு மிச்சமாகி விடும்.

எனவே அவருக்குக் கொடுக்க வேண்டிய கடனை அவர் சார்பாக நீங்கள் தர்மம் செய்ய முடியாது. காணாமல் போனவர் வந்து அந்தக் கடனைக் கேட்டால் தர்மம் செய்து விட்டேன் என்று பதில் சொல்ல முடியாது. கடன் கொடுத்தவர் வந்து கேட்டால் நான் திரும்பக் கொடுப்பேன் என்ற எண்ணத்துடன் உங்கள் சார்பில் தர்மம் செய்யலாம்.