தடை செய்யப்பட்டவைகளை மற்றவருக்கு விற்பது கூடுமா?

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது கூடுமா? கூடாது என்றால் அதை பிறமதத்தினருக்கு விற்கலாமா? தங்க மோதிரம், பட்டுச் சட்டை போன்றவற்றை ஆண்கள் அணியத் தடை உள்ளது. இவற்றை விற்கலாமா?

பதில்:

தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அது போல் அவற்றை விற்பனை செய்வதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

صحيح البخاري

2236 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ عَامَ الفَتْحِ وَهُوَ بِمَكَّةَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الخَمْرِ، وَالمَيْتَةِ وَالخِنْزِيرِ وَالأَصْنَامِ»، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ شُحُومَ المَيْتَةِ، فَإِنَّهَا يُطْلَى بِهَا السُّفُنُ، وَيُدْهَنُ بِهَا الجُلُودُ، وَيَسْتَصْبِحُ بِهَا النَّاسُ؟ فَقَالَ: «لاَ، هُوَ حَرَامٌ»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ إِنَّ اللَّهَ لَمَّا حَرَّمَ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوا ثَمَنَهُ»،

மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்துள்ளனர்!’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது ஹராம்!’ எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து, ‘அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! யூதர்களுக்குக் கொழுப்பை அல்லாஹ் ஹராமாக்கிய போது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 2236

صحيح البخاري

2223 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي طَاوُسٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: بَلَغَ عُمَرَ بْنَ الخَطَّابِ أَنَّ فُلاَنًا بَاعَ خَمْرًا، فَقَالَ: قَاتَلَ اللَّهُ فُلاَنًا، أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَاتَلَ اللَّهُ اليَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ، فَجَمَلُوهَا فَبَاعُوهَا»

ஒரு மனிதர் மதுவை விற்பதை அறிந்த உமர் (ரலி), ‘அவரை அல்லாஹ் சபிப்பானாக! யூதர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது, அதை உருக்கி அவர்கள் விற்றதால் அல்லாஹ் அவர்களை அழிப்பானாக’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அவர்கள் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2223

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளனவோ அவற்றை விற்பனை செய்வதும் கூடாது அறியலாம்.

தடை செய்யப்பட்டவைகளைப் பிறமதத்தவர்களுக்கு விற்பதற்கு அனுமதி இல்லை.

ஆயினும் முழுமையாகத் தடை செய்யப்படாமல் ஒரு அளவுக்குத் தடை செய்யப்பட்டிருந்தால் அது போன்ற பொருட்களை விற்கலாம். முஸ்லிமுக்கும், முஸ்லிமல்லாதவருக்கும் விற்கலாம்.

பட்டாடை, தங்க மோதிரம் போன்றவை பொதுவாகத் தடை செய்யப்பட்டவை அல்ல! அவற்றை ஆண்கள் பயன்படுத்துவதற்கு மட்டுமே தடை உள்ளது.மேலும் தங்கத்தை அணிவதற்குத் தான் தடை உள்ளது. தங்க நகைகளை வைத்துக் கொள்வதற்கு ஆண்களுக்குத் தடை இல்லை.

இது போன்று பொதுவாகத் தடை செய்யப்படாமல் குறிப்பிட்ட சாராருக்கும், குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டும் தடுக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யலாம். இதற்கு மார்க்கத்தில் தெளிவான அனுமதி உள்ளது.

صحيح البخاري

948 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ: أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَخَذَهَا، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالوُفُودِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: إِنَّكَ قُلْتَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ الجُبَّةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ»

உமர் (ரலி) அவர்கள் கடை வீதியில் விற்பனை செய்யப்பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலை பேச முற்பட்டார்கள். அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி, பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் (அணிந்து) அலங்கரித்துக் கொள்ளலாமே!’ என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடையாகும்’ என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் நாடிய நாட்கள் வரை (இது பற்றி ஏதும் கேட்காமல்) பொறுமையாக இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீள அங்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை என்னிடம் கொடுத்தனுப்பி உள்ளீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இதை நீங்கள் விற்று விடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 948

தடுக்கப்பட்ட பொருட்களை விற்ற யூதர்களைச் சபித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்டாடையை விற்க அனுமதிக்கிறார்கள். காரணம் பட்டாடை நூறு விழுக்காடு தடுக்கப்பட்டதல்ல. ஆண்களுக்கு மட்டுமே தடுக்கப்பட்டதாகும். பெண்களுக்கு தடுக்கப்படவில்லை என்பதால் பட்டாடையை விற்கலாம் என்று இதில் இருந்து அறியலாம்.

இது போல் உண்பது மட்டும் தடுக்கப்பட்டு வேறு வகையில் பயன்படுத்தத் தடை இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அதையும் விற்கலாம்.

உதாரணமாக, இறந்த ஆட்டை நபித்தோழர்கள் பயன்படுத்தாமல் இருந்த போது, ‘இந்த ஆட்டின் தோலை நீங்கள் பயன்படுத்தலாமே’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

صحيح البخاري

1492 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: ” وَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً، أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ: قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»

மைமூனா (ரலி) அவர்கணின் அடிமைப் பெண்ணுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட ஆடு இறந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து சென்ற போது, ‘அதனுடைய தோலை எடுத்து, பதப்படுத்தி அதிலிருந்து நீங்கள் பயன் பெற்றிருக்கலாமே?’ என்று கேட்டார்கள். செத்தது’ என்று (தோழர்கள்) பதிலளித்தனர். ‘அதைச் சாப்பிடுவது தான் உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1492

எனவே உண்பதற்கு மட்டும் தடுக்கப்பட்டு, வேறு வகையில் பயன்படுத்தத் தடையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவற்றையும் விற்கலாம்.

حدثنا يحيى بن يحيى أخبرنا سليمان بن بلال عن زيد بن أسلم أن عبد الرحمن بن وعلة أخبره عن عبد الله بن عباس قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا دبغ الإهاب فقد طهر

பொதுவாக எல்லா தோல்களும் பாடம் செய்யப்பட்டால் சுத்தமாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல்கள், அனுமதிக்கப்பட்ட பிராணிகளில் தாமாக செத்துப்போனவைகளின் தோல்கள் ஆகியவற்றை நாம் வாங்கலாம் விற்கலாம். ஏனெனில் இவை உண்பது மட்டுமே தடை செய்யப்பட்டவை என்பதற்கு ஆதாரம் உள்ளது.