ஜாக்குடன் சமாதான முயற்சியா? நடந்தது என்ன?
அல்லாஹ்வின் வேதம், அவனது தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு எவரது கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்ற அஸ்திவாரத்தில் தான் ஜாக் என்ற கட்டடம் ஆரம்பத்தில் எழுப்பப்பட்டது.
இடையில் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அஸ்திவாரத்தையும் ஜாக் சேர்த்துக் கொண்டுள்ளது.
ஆனால் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டு அஸ்திவாரத்தில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளுக்கும் மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்படுமாயின் அதை நோக்கி முதன் முதலில் சமாதானக் கையை நீட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயங்காது என்பதை ஏகத்துவம் இதழ் சார்பில் சார்பில் இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.
கடந்த ஜனவரி 2009 இதழ் ஏகத்துவம் தலையங்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பில் ஜாக் அமைப்பிற்கு இப்படி ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜாக்கை நோக்கி தவ்ஹீது ஜமாஅத் திடீரென்று இப்படி சமாதானக் கரம் நீட்டுவது ஏன்? தவ்ஹீது ஜமாஅத்திற்கு ஏதோ ஒரு பலவீனம்! அதனால் தான் ஜாக்குடன் அது இணக்கக் குரலை எழுப்புகின்றது என்ற ஐயம் ஜாக் அமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இதற்கான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
2.12.2008 அன்று சகோதரர் பி.ஜே. அவர்களை திரைப்பட இயக்குனர் அமீர் சந்தித்து, ஜாக்கும், தவ்ஹீது ஜமாஅத்தும் இணக்கமாகச் செயல்பட்டால் என்ன? என்ற சமாதானக் கருத்தை முன்வைத்தார்.
அவரது நல்லிணக்க முயற்சிக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் அவரிடம் பி.ஜே. ஒரு கடிதத்தை அளித்தார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:
அன்புள்ள சகோதரர் அமீர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜாக் இயக்கத்துக்கும், தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் இரு தரப்பும் மனம் விட்டுப் பேசி, ஒவ்வொரு தரப்பும் தனது தவறுகளை ஒப்புக் கொண்டு இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தினீர்கள்.
இதைன நான் ஏற்றுக் கொள்கிறேன். தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளும் என்னிடம் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். தாங்கள் இதற்கான முன் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் கொள்கையில் சமரசம் இல்லாத வகையில் அனைத்து ஒற்றுமைகளையும் நாம் மனதார விரும்புகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
பீ.ஜைனுல் ஆபிதீன்
இந்தக் கடிதம் அமீர் அவர்கள் மூலம் ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனியிடம் கொடுக்கப்பட்டு விட்டது.
அமீரின் இந்த முயற்சியை அடிப்படையாகக் கொண்டு தான் ஏகத்துவம் இதழ் இணக்கத்திற்குத் தயார் என்று தெரிவித்திருந்தது.
ஏற்கனவே கோவை ஜாக்கில் உள்ள சில சகோதரர்கள் இதே இணக்க சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர். அவர்கள் தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்களிடம் இணக்கம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டும் இருந்தனர். 04.04.09 அன்று பி.ஜே. கோவை வந்திருந்த போது அவரை அந்தச் சகோதரர்கள் சந்தித்தனர்.
கோவை ஆராதனா ஹோட்டலில் நடைபெற்ற அந்தச் சந்திப்பில் ஜாக் சகோதரர்கள் முன்வைத்த கருத்துக்கள், யோசனைகள் வருமாறு:
இன்று அரசியலில் கூட வலது, இடது கம்யூனிஸ்ட்கள் இணைந்து செயல்படுகின்றனர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ள நாம் ஏன் இணைந்து செயல்பட முடியாது?
நாம் நமக்குள்ளேயே பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டும் இருக்கிறோம். முதலில் ஜாக்கிலிருந்து பிரிந்து சி.டி. போட்டீர்கள். பிறகு தமுமுக தோன்றியது. பிறகு அதிலிருந்து பிரிந்து சி.டி. போட்டீர்கள். பிறகு பாக்கர் பிரிந்ததும் அதற்கும் சி.டி. போட்டிருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் தங்கள் மீது சொல்லப்படுகின்றன. இந்நிலையில் தாங்கள் இணக்கத்திற்குத் தயாராக இருப்பதை அறிந்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்து ஒரு நெருக்கத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் இமயம் தொலைக்காட்சியில், ஜாக் ஒரு மத்ஹப்’ என்று தாங்கள் பேசியது ஒளிபரப்பானது. மேலும் ‘ஜாக் மற்றும் தமுமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை தவ்ஹீது ஜமாஅத்தில் சேர்த்துக் கொள்வீர்களா?’ என்ற கேள்விக்குத் தாங்கள் அளித்த பதில்: ஜாக்கிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம்; அந்த அமைப்புக்கே தகுதியில்லை என்று தூக்கி எறியப்பட்ட ஒருவரை தவ்ஹீது ஜமாஅத் எப்படிச் சேர்த்துக் கொள்ளும்? அந்த அமைப்பு சரியில்லை என்று மனம் மாறி வந்தால் தவ்ஹீது ஜமாஅத் சேர்த்துக் கொள்ளும்’ என்று குறிப்பிட்டீர்கள்.
அதாவது ஜாக் என்பது அந்த அளவுக்கு மட்ட ரகமான அமைப்பு என்பது போல் பதில் சொன்னீர்கள். இது எங்களுடைய சமாதான முயற்சிக்குப் பின்னடைவாக அமைந்தது.
நீங்கள் சமாதானம் என்று சொல்கிறீர்கள். ஆனால் பி.ஜே. இவ்வளவு பகிரங்கமாக ஜாக்கை தாக்கிப் பேசுகின்றார்’ என்று எங்களது சகாக்கள் கூறுகின்றார்கள்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நாங்கள் சில யோசனைகளை இங்கு முன் வைக்கிறோம்.
1. நீங்கள் இருவரும் (பி.ஜே. மற்றும் எஸ்.கே.) சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும்.
2. நமக்கு மத்தியிலுள்ள மஸாயில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
3. இரு அமைப்பினரும் பரஸ்பரம் விமர்சனம் செய்யக் கூடாது. குறை சொல்லக்கூடாது.
4. ஜாக் மேடையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும், தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஜாக்கினரும் கலந்து கொண்டு பேச வேண்டும்.
இவை தான் கோவை ஜாக் சகோதரர்கள் வைத்த கருத்துக்கள், யோசனைகள்!
இவை ஒவ்வொன்றுக்கும் பி.ஜே. அளித்த விளக்கத்தைப் பார்ப்போம்.
சி.டி. போட்டு விமர்சித்தல்
ஜாக்கில் இருக்கும் போது, அதன் நிர்வாகத்திடம் சில குறைகளைக் களையுமாறு நாங்கள் சுட்டிக் காட்டினோம். உதாரணத்திற்கு நாகூர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளில் நியமிக்கப்பட்ட ஒருவர் செய்த ஊழலைக் குறிப்பிடலாம். அவர் மீது கமாலுத்தீன் மதனி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காரணம், அவர் கமாலுத்தீன் மதனியின் நெருங்கிய உறவினர். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல! அவருக்குப் பதவி உயர்வும் வழங்கப்பட்டது.
இதுபோன்று திருச்சி ஜாக் பொறுப்பாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அவருடைய அந்தஸ்து மேலும் உயர்ந்தது.
இது போன்ற காரணங்களால் ஜாக்கை விட்டுத் தனித்து, தஃவா பணி செய்யலானோம். இந்தச் சந்தர்ப்பத்தில் ஜாக் தான் முதன் முதலில் சி.டி. வெளியிட்டது. அதற்கு நாம் பதில் தான் சொன்னோமே தவிர நாமாக சி.டி. போடவில்லை.
தமுமுக பற்றி சி.டி. போட்டதாகச் சொன்னீர்கள். ‘நீங்கள் தவ்ஹீதில் இருக்கிறீர்கள்; தமுமுகவின் வளர்ச்சியை உங்களது தவ்ஹீதுக் கொள்கை பாதிக்கின்றது’ என்று தவ்ஹீதைக் காரணம் காட்டி என்னை தமுமுகவிலிருந்து வெளியேற்றினார்கள்.
அப்போது உண்மை சொல்வோம்’ என்று ஜவாஹிருல்லாஹ் சி.டி. வெளியிட்டார். அதற்கு நாங்கள், உண்மை மட்டும் சொல்வோம்’ என்று பதில் சிடி தான் வெளியிட்டோம்.
பாக்கர் தொடர்பாக சி.டி. போட்டதைக் குறிப்பிட்டீர்கள்.
பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்து, அது நிரூபணமாகி அவர் மீது நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்கிறோம்.
அவரை வெளியேற்றிய விஷயத்தை மக்களிடம் விளக்கி விட்டு இனி பாக்கர் விஷயமாக நாங்கள் எதுவும் பேசுவதில்லை என்று முடிவெடுத்து அதை உணர்விலும் வெளியிட்டோம்.
அவர் வெளியே போய், தன் விஷயத்தில் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டது என்ற ரீதியில் பேச ஆரம்பித்தார். எனவே அது பற்றித் தெளிவுபடுத்தவே ஜமாஅத் சி.டி. வெளியிட்டது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்ட பாக்கர் விவகாரத்தை மற்ற விஷயங்களுடன் ஒப்பிட முடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் தெரிவித்த யோசனைகளுக்கு வருகின்றேன்.
முதலாவது யோசனை – பரஸ்பரம் சந்தித்தல்
நானும், எஸ்.கே.யும் சந்தித்து மனம் விட்டுப் பேச வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.
இது இணக்கத்திற்கு வழிவகுக்காது. காரணம் இது போன்று பலமுறை சந்தித்து மனம்விட்டுப் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பின் போதும் சொல்கின்ற குறைகளைச் சரிப்படுத்துகின்றேன் என்று கமாலுத்தீன் மதனி சொல்வார். சபையில் வைத்து அத்தனையையும் ஒத்துக் கொள்வார். பிறகு மாறி விடுவார்.
இந்தச் சந்திப்பு பல்வேறு இடங்களில், பல்வேறு கட்டங்களில் நடந்திருக்கின்றது.
1. சென்னை ஜான் டிரஸ்ட்
2. திருச்சி அரிஸ்டோ ஹோட்டல்
3. நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசல்
இந்தச் சந்திப்புகளுக்கு முன்னர் தவ்ஹீது பிரச்சாரக் குழு என்ற பெயரில் 14.11.1998 முதல் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். இலங்கையில் நடைபெற்ற ஓர் ஏகத்துவ மாநாட்டிற்கு இந்தப் பெயரிலேயே நமது தாயீக்கள் சென்று வந்தனர்.
இந்நிலையில் தான் நாகர்கோவில் ஹனீபா நகர் பள்ளிவாசலில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பின் போது ஜாக் நிர்வாகம், தமுமுக விவகாரம் அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த இணக்க முயற்சிகளை வலுப்படுத்துவற்காக ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்து கொண்டிருந்த பஷீர், ஸய்யித் முஹம்மத் மதனீ ஆகியோர் அடங்கிய ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள்ளாகக் குறைகள் சரிசெய்யப்பட்டு இணக்கத்திற்கு வழிவகுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
இம்மூன்று மாத காலத்திற்கு தவ்ஹீது பிரச்சாரக் குழு தனது அனைத்து செயல்பாட்டையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று கமாலுத்தீன் கேட்டுக் கொண்டார். அதற்கு இணங்க தவ்ஹீது பிரச்சாரக் குழுவின் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இணக்கத்திற்கான பதிலுக்காகக் காத்திருந்தோம். மூன்று மாத கால அவகாசமும் முடிந்தது. கமாலுத்தீன் மதனி தனது மவுனத்தைக் கலைக்கவில்லை. தவ்ஹீது பிரச்சாரக் குழுவை முடக்கி வைத்ததைத் தவிர்த்து வேறு எந்த முன்னேற்றமும் நடைபெறவில்லை. கமாலுத்தீன் மதனி எங்களை ஏமாற்றியது தான் மிச்சம்!
அரிஸ்டோ ஹோட்டல்
திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் ஒரு சந்திப்பு நடந்தது. இணக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புகளில் இது முக்கியமானதாகும். இதற்காக ஷம்சுல்லுஹா, ஸைபுல்லாஹ், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்ப கால தவ்ஹீதுவாதிகளைச் சந்தித்து அழைப்புக் கொடுத்தனர்.
1997ல் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இந்த சமாதானக் கூட்டச் சந்திப்பின் மூலம் ஓர் இணக்க சூழல் உருவானது. (இந்த இணக்க காலத்தில் தான் சென்னை ஜாக் மர்கஸில் பி.ஜே., ஈமானின் கிளைகள்’ என்ற தலைப்பில் தொடர் ஜும்ஆ உரையாற்றினார்.
ஆனால் அந்த இணக்கச் சூழலும் அற்ப ஆயுளில் முடிந்தது. இணக்க சூழ்நிலை நிலவிய அந்த ஆண்டு ரமளானில் கமாலுத்தீன் தன்னிச்சையாக, பிறை பற்றி அறிவிப்பு விடுத்தார். பிறை விவகாரத்தால் மீண்டும் ஒரு பிரிவினை ஏற்பட்டது.
இலங்கை ஜிஃப்ரியின் இணைப்பு முயற்சி
2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு தவ்ஹீது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு சமயத்தில் அப்துல் வதூத் ஜிஃப்ரீ அவர்கள் ஓர் இணக்க முயற்சியை மேற்கொண்டார். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.
பக்ரி தலைமையில் ஒரு முயற்சி
இதன் பின்னரும் இணக்க முயற்சி தொடரத் தான் செய்தது. மதுரை மாநட்டிற்குப் பின் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு உருவானது.
தவ்ஹீதுவாதிகள் சுன்னத் ஜமாஅத்தினரால் அடிக்கடி தாக்கப்பட்டு பெரும் சோதனைகளுக்கு உள்ளாயினர். சிறைவாசம் சென்றனர். ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். பிரச்சாரம் செய்வதை விட்டும் தடுக்கப்பட்டனர். பள்ளிவாசலில் தொழ விடாமல் தடுக்கப்பட்டனர்.
இவ்வாறு தாக்கப்படுகின்ற வேளையில் அப்போது காவல்துறை அதிகாரிகளை அணுகுவதற்கு இருந்த அமைப்பு தமுமுக தான். தமுமுக மேல்மட்டத்திற்கு இது கசக்க ஆரம்பித்தது. சு.ஜ., தவ்ஹீது ஜமாஅத் பிரச்சனையில் தவ்ஹீதுவாதிகளுக்கு ஆதரவாகச் சென்றால் சுன்னத் ஜமாஅத்தினரின் ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். முகம் சுளித்தனர்; எரிந்து விழுந்தனர். இந்நிலையில் உதயமானது தான் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு!
நல்ல கட்டமைப்பைக் கொண்டு குறுகிய காலத்தில் சிகரத்தை எட்டிய அமைப்பு! அந்த அமைப்பைக் கலைத்து விட்டு ஜாக்குடன் சங்கமிக்கத் தயாராக இருந்தோம். ஹாமித் பக்ரி தலைமையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இரு அமைப்புகளில் உள்ள தற்போதைய தலைவர்கள் விலகி, ஆரம்ப காலத் தவ்ஹீதுவாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களது தலைமையில் ஜாக் பெயரிலேயே சேர்ந்து செயல்பட வேண்டும்.
ஜாக் அமைப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தோம். அதை கமாலுத்தீன் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
இயக்குனர் அமீரின் இணக்க முயற்சி
அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் பரிணமித்தது. பல்லாயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டு ஒரு வலிமையான அமைப்பாக அது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் தான் விடுதலைப் புலிகள் ஆதரவு தொடர்பான விஷயமாக திரைப்பட இயக்குனர் அமீர் என்னைச் சந்திக்கின்றார். அந்தச் சந்திப்பின் போது அவர் இணக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்தார். அப்போது தான் அந்த இணக்கக் கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். அவரும் அந்தக் கடிதத்தை கமாலுத்தீன் மதனியிடம் சேர்த்து விட்டதாகத் தகவல் வந்தது. ஆனால் கமாலுத்தீன் இதுவரை அதற்கு எந்தப் பதிலும் தரவில்லை.
எனவே இதுவரை சொன்ன விளக்கங்களிலிருந்து பார்த்தால், நானும், கமாலுத்தீனும் பல தடவை மனம் விட்டுப் பேசியிருக்கின்றோம். தூதுக் குழுக்கள் மூலம் பேசியிருக்கின்றோம். சபையில் வைத்து எல்லாவற்றிற்கும் சரி என்பார். ஓர் அவகாசம் கேட்பார். பின்னர் பல்டி அடித்து விடுவார். அதனால் இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசினால் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற யோசனை ஏற்கனவே பலமுறை செயல்படுத்தப்பட்டு தோல்வியைத் தழுவிய யோசனை! அது எந்தப் பலனையும் தராது.
இரண்டாவது யோசனை – மஸாயில் பிரச்சனைகள்
நமக்கு மத்தியிலுள்ள மஸாயில் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
மஸாயில் பிரச்சனை என்று வருகின்ற போது அதை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.
தொழுகையில் தக்பீர் நெஞ்சுக்கு மேல் கட்டுவதா? அல்லது தொப்புளுக்குக் கீழ் கட்டுவதா? என்ற பிரச்சனை தொழுகையுடன் மட்டும் நின்று விடும். மஸாயில் பிரச்சனைகளில் இப்படி ஒரு வகை இருக்கின்றது.
மற்றொரு வகை, அந்தந்த விஷயத்துடன் நின்று விடாமல் ஆயிரம் மஸாயில் – மார்க்கச் சட்டங்கள் எடுப்பதற்கு அடிப்படையாக அமைந்து விடும். அதற்கு எடுத்துக்காட்டு, ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற பிரச்சனை! ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று ஜாக் சொல்கின்றது.
என்று பீஜே கோவையில் விளக்கிய போது ஜாக் சகோதரர்கள்: நாங்கள் ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று சொல்லவில்லையே! என்று குறுக்கிட்டனர்.
ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்று அல்ஜன்னத்தில் கமாலுத்தீன் எழுதியிருக்கின்றார் என்பதை பீஜே எடுத்துக் காட்டினார்.
இது தொடர்பாக அவர்கள் அல்ஜன்னத்தில் வெளியிட்ட தீர்மானங்கள் இதோ:
அல்ஜன்னத், அக்டோபர் 2004 இதழில் பக்கம் 15ல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
1. நபிமார்களுக்குப் பிறகு ஸஹாபாக்களான நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் ஹதீஸில் உள்ளன.
2. நபித்தோழர்களை அல்லாஹ் திருப்திப்பட்டுக் கொண்டதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
3. அல்லாஹ் விரும்பியது போன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினாலேயே அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்துள்ளான்.
4. நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.
5. நபித்தோழர்கள் குர்ஆனையும், சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.
6. நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
7 ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
8. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
9. ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.
10. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.
11. குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.
இது தான் அந்த அறிக்கை!
ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற இந்த வாசலைத் திறந்து விட்டால் போதும். எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த இது அடிப்படையாக அமைந்து விடும்.
தராவீஹ் 20 ரக்அத்கள், ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு, முத்தலாக் அத்தனையையும் சரி என்று நியாயப்படுத்தும் நிலை தோன்றி விடும்.
மூன்றாவது யோசனை – பரஸ்பர விமர்சனம் கூடாது
இரு அமைப்பினரும் பரஸ்பரம் விமர்சனம் செய்யக் கூடாது. குறை சொல்லக்கூடாது என்பது மூன்றாவது யோசனை.
நீங்கள் சொல்கின்ற இந்த யோசனையை ஏற்றுக் கொள்ள முடியாது. தவ்ஹீத் ஜமாஅத் மீது உள்ள குறைகளை நீங்கள் விமர்சியுங்கள்; ஜாக்கில் உள்ள குறைகளை நாங்கள் விமர்சிப்போம். விமர்சிக்காமல் விட மாட்டோம்.
மதுரையில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சி இமயம் டி.வி.யில் ஒளிபரப்பானது. அதில் ஜாக் ஒரு தனி மத்ஹப் என்று நான் விமர்சித்தேன்.
ஜாக் சகோதரர்கள்: ஜாக் ஒரு தனி மத்ஹப் என்று எப்படிக் கூற முடியும்?
பி.ஜே.: ஜாக் தன்னிலை விளக்கம் என்று ஒரு நூல் வெளியிட்டிருக்கின்றது. அந்த நூலில், மார்க்க விஷயத்திலும் உலக விஷயத்திலும் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னிலை விளக்கம் என்ற அந்நூலில் ஜாக்கில் சேர்த்துக் கொள்வதற்கு சில நிபந்தனைகளை கூறியுள்ளனர்.
‘அமீர் என்ற தலைமையை ஏற்று அரசியல், சமூகம், மார்க்க பிரச்சனைகளுக்கும் வழிமுறைகளுக்கும் அவரின் முடிவுக்கு கட்டுப்படுபவராக இருத்தல் வேண்டும். மாநில அளவிலோ கிளைகளிலோ தலைமைக்கு எதிரான கருத்துக்களையும் தங்களது சுய கருத்துக்களையும் (நிர்வாகம் மற்றும் மார்க்க விஷயங்களில்) தன்னிச்சையாகத் தெரிவித்தல் கூடாது.’
இவை தான் அந்த நூலில் காணப்படும் வாசகங்கள்.
மார்க்கப் பிரச்சனைகளுக்கும் அமீரின் முடிவுக்குக் கட்டுப்படுபவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தானே மத்ஹபுகள் கூறுகின்றன. இதை எதிர்த்துத் தான் இவ்வளவு காலமும் அடி உதைகளை வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
இன்னும் சொல்லப் போனால் மத்ஹபுகளில் கூட இவ்வாறு கூறப்படவில்லை. நான் கூறுவது குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமாக இருந்தால் எனது சொல்லை விட்டுவிடுங்கள் என்று ஷாஃபி இமாமும் அபூஹனிபா இமாமும் கூறியதாக மேடை தோறும் பேசுகின்றோம். ஆனால் ஜாக்கில் இருக்க வேண்டும் என்றால் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தாலும் அமீரின் முடிவுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று எழுதியுள்ளனர்.
இது தான் தனி மத்ஹப் என்று குறிப்பிட்டேன். அதனால் இது போன்ற குறைகளை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்?
திடல் தொழுகை
நாகர்கோவில், கோட்டாற்றில் வரலாற்றிலேயே முதன் முறையாக, நபிவழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம். கமாலுத்தீன் மதனி, பெருநாள் காலையில் சுப்ஹ் தொழுகைக்குப் பின்னரும், அதன் பின்னர் தொடர்ந்த உரைகளிலும் இதைக் கடுமையாக விமர்சித்தார்.
1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?
2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?
3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில் தொழுதார்கள்.
4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா?
இவ்வாறு பேசினார்.
வணக்க வழிபாடுகள் விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்ற வாதத்தை முன் வைத்து ஒரு செயலைச் செய்யக் கூடாது. மார்க்கத்தின் அடிப்படையை விளங்கியவர்கள் இந்தக் கேள்வியை ஒருக்காலும் கேட்க மாட்டார்கள்.
இந்த வாதத்தைச் சொல்லியே இணை வைப்பு ஆலிம்கள் மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளனர்.
தர்ஹா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனி நபர் வழிபாடு, பித்அத், தாயத்து, தட்டு எல்லாவற்றிற்கும் மூல முதல் ஆதாரமாக அமைந்திருப்பது, தடை இருக்கின்றதா? என்ற கேள்வி தான். குராபிகளின் இந்த வாதத்தை தான் கமாலுத்தீன் மதனீ கேட்கின்றார். பெண் வீட்டு விருந்துக்கும் இதே கேள்வியைக் கேட்டு நியாயப்படுத்துகின்றனர்.
பெண் வீட்டு விருந்து
இன்று பெண் வீட்டு விருந்துகளில் ஜாக் அமைப்பினர் கலந்து கொள்கின்றனர். இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. இது முதல் அடிப்படை! அப்படி விருந்து வைத்தால் கூட அதில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மருந்துக்குக் கூட அதில் போய் கலக்கக் கூடாது. இது இரண்டாவது அடிப்படை! ஏனென்றால் இது மிகப்பெரும் சமூகக் கொடுமையான வரதட்சணை ஆகும். குமரி மாவட்டத்தில் இன்று இரு வீட்டார் அழைப்பு என்ற பெயரில் பெண் வீட்டுத் தலையில் விருந்துச் செலவில் பாதியைக் கட்டி விடுகின்றனர்.
மேலப்பாளையத்தில் கமாலுத்தீன் மதனி வந்து நடத்திய ஒரு திருமணத்தில், பெண் வீட்டில் ஆயிரக்கணக்கானோரை அழைத்து விருந்து போட்டனர். இது சரியா? என்று ஒரு கொள்கைச் சகோதரர் கேள்வி எழுதிக் கொடுத்தார். அதற்கு அவர், தடையில்லை என்று பதில் சொன்னார்.
மிகப் பெரிய சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை, தடையில்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டுச் செல்கின்றார். இப்படித் தான், வரதட்சணை வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா?’ என்று குராபிகள் கேட்டார்கள்.
ஸஹர் பாங்கு
அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் நேரத்தில் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.
‘இது தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளனர்.
நவீன கால வசதியைக் கவனித்து ஸஹர் பாங்கு வேண்டாம் என்றால், பயணத்தின் போதும் கஸர் தொழுகை தேவையில்லை என்றாகி விடும். பாங்கு சொல்லத் தேவையில்லை; அலாரம் வைத்துக் கொண்டால் போதும் என்று கூற வேண்டி வரும். தொழுகைக்கு இமாம் தேவையில்லை; வீடியோ போட்டுக் கொண்டு அதைப் பின்பற்றித் தொழலாம் என்ற நிலை ஏற்படும்.
இது போன்ற குறைகளைக் கண்டு கொள்ளக் கூடாது; விமர்சிக்கக் கூடாது என்றால் அது சரியான யோசனை இல்லை.
நான்காவது யோசனை – ஒரே மேடையில்…
ஜாக் மேடையில் தவ்ஹீத் ஜமாஅத்தினரும், தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஜாக்கினரும் கலந்து கொண்டு பேச வேண்டும் என்பது அடுத்த யோசனையாகும்.
இதுவும் இணக்கத்தைத் தராது. நீங்கள் எங்கள் மேடையில் பேசுவதினாலோ அல்லது நாங்கள் உங்கள் மேடையில் பேசுவதினாலோ பெரிய இணக்கம் ஏற்பட்டு விடாது. இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை தான் மேலும் பெரிதாகும். நீங்கள் எங்கள் மேடையிலும் நாங்கள் உங்கள் மேடையிலும் பேசிக் கொண்டிருப்போம். ரமளான் மாதம் வரும். பிறையைப் பற்றி நீங்கள் ஒரு கருத்தைச் சொல்வீர்கள். நாங்கள் ஒரு கருத்தைச் சொல்வோம். உங்களுக்கு ஒரு ரமளான் பிறை எங்களுக்கு ஒரு ரமளான் பிறை என்றும், உங்களுக்கு ஒரு பெருநாள்; எங்களுக்கு ஒரு பெருநாள் என்றும் பிரிந்து விடுவோம். மேடையில் கலந்து கொள்வது இந்த அளவுக்குத் தான் பயனைத் தரும். எனவே நாம் காணவிருக்கும் இணக்கம் சாத்தியமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.
அதற்கு வழி என்ன?
நமக்கு மத்தியில் என்னென்ன பிரச்சனைகள் குறுக்கே வந்து நிற்கின்றன? அவற்றை அடையாளம் கண்டு இரு தரப்பில் உள்ள அறிஞர்களை வைத்துப் பேச வேண்டும்.
1. ஸஹாபாக்களைப் பின்பற்றுதல்
2. பிறை
3. ஜகாத்
என என்னென்ன பிரச்சனைகள் உள்ளனவோ அத்தனையையும் பேச வேண்டும்.
நீங்கள் சொல்வது சரியாக இருந்தால் உங்கள் கருத்துக்கு நாங்கள் வந்து விட வேண்டும். நாங்கள் சொல்வது சரியாக இருந்தால் எங்கள் கருத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். இணக்கத்திற்கான பேச்சுவார்த்தை இந்த அடிப்படையில் அமைந்தால் தான் அது சரியாக அமையும். இல்லையெனில் அது ஒரு நடிப்பாக, நாடகமாக அமையும்.
இந்த நெருடல்களைக் களைந்த பின்னர் தான் இருவரும் ஒரே மேடையில் இணைந்து பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும். அதுவரை ஒரே மேடையில் கலந்து கொள்வதென்பது சாத்தியமில்லை. அத்துடன் இங்கு இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது இரு சாராரும் தங்கள் அமைப்புகளைக் கலைத்து விட்டு ஒன்று சேர்வது இப்போது சாத்தியமில்லை. ஆனால் இருவரும் அழைப்புப் பணியில் இணைந்து பணியாற்றலாம். அதற்கு முன் நமக்கு மத்தியிலுள்ள நெருடல்களை நான் கூறிய அடிப்படையில் பல அமர்வுகள் உட்கார்ந்து சரி செய்து கொள்வோம்.
கோவை ஜாக் சகோதரர்கள், பி.ஜே.யுடன் இணக்கம் தொடர்பாகச் சந்தித்த போது நடைபெற்ற உரையாடலின் தொகுப்பை மேலே தந்திருக்கிறோம்.
ஜாக் சகோதரர்கள் பி.ஜே.வைச் சந்தித்த பிறகு இணக்கத்திற்கான முயற்சிகள் மேலும் வலுப்பெறும் என்றிருந்த நமக்கு, கமாலுத்தீன் மதனி தருகின்ற பதிலைப் பாருங்கள்.
‘இந்த இலட்சியப் பயணத்தில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ காரணங்களுக்காக சிலர் இந்த அமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கினார்கள். அதனால் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பதை சத்தியத்தை விரும்புகிறவர்கள் உணர்ந்தார்கள். ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய ஏகத்துவக் கொள்கையுடையவர்கள் சிதறி ஒருவருக்கொருவர் விரோத, குரோதத்தோடு வாழ்கின்றனர் என்பதைக் கண்டு வேதனையடைந்தனர்.
இதையெல்லாம் அறிந்து, நமது அமைப்பிலிருந்து பிரிந்து சென்று இயக்கங்களை உருவாக்கியவர்கள் மீண்டும் தாய் அமைப்பில் இணைந்து சத்தியப் பிரச்சாரத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த எண்ணம் தெரிவித்திருப்பதாக சில சகோதரர்கள் மூலம் அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்’
அல்ஜன்னத், ஏப்ரல் 2009
இயக்குனர் அமீர் ஒரு மூன்றாவது நபர்! விடுதலைப்புலிகள் விவகாரம் குறித்து பி.ஜே.யுடன் அவருக்கு ஒரு சந்திப்பு நிகழ்கின்றது. அந்தச் சந்திப்பின் போது சமாதானம், இணக்கம் பற்றிப் பேசுகின்றார். அவருடைய வேண்டுகோளை மதித்து பி.ஜே. இணக்கக் கடிதம் கொடுக்கின்றார். அதற்கு ஒரு மரியாதைக்குக் கூட கமாலுத்தீன் மதனி பதில் தரவில்லை.
நாம் ஏதோ ஜாக்கில் போய்ச் சேர வேண்டும் என்று தவியாய் தவிப்பது போலவும், தவமாய் காத்துக் கிடப்பது போலவும், நாம் தவறு செய்து விட்டு இவரிடம் தவ்பா செய்வது போலவும் வார்த்தைகளை இந்த அறிவிப்பில் அள்ளித் தெளித்திருக்கின்றார்.
தவ்ஹீது ஜமாஅத் ஒரு போதும் ஜாக்கின் கதவைத் தட்டவில்லை. தட்டவும் செய்யாது. அதற்கான அவசியமும் இல்லை. ஏன்?
குர்ஆன், ஹதீஸ் என்ற இரு சக்கரங்களை விட்டு ஜாக் என்ற வண்டி கழன்று ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது சக்கரத்தைச் சேர்த்து நாளாகி விட்டது. ஆனால் தவ்ஹீது ஜமாஅத், குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலேயே அவ்விரண்டிலும் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளாது தனது பயணத்தைத் தொடர்கின்றது.