அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்!!

நூலின் பெயர்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுபூர்வமான பதில்கள்

ஆசிரியர் : P.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.

இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.

இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.

பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.

இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்!!

அறிமுகம்

முஸ்லிம் மீடியா டிரஸ்ட் மூலம் வெளியிடப்பட்டு வந்த ஒற்றுமை என்ற மாதமிருமுறை இதழில் சிந்தனையைத் தூண்டும் வாசகர்களின் கேள்விகளுக்கு பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கமளித்து வந்தார். அத்தகைய கேள்விகளில் மிகச் சிறந்த கேள்விகளும், அதற்கான விடைகளுமே அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள் என்ற இந்த நூல்.

இதில் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளன.

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

இறைவனை அல்லாஹ் என்று அழைப்பது ஏன்?

தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

கஅபாவுக்குள் என்ன இருக்கிறது?

கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?

தீ மிதிக்க முடியுமா?

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன் களிமண்ணால் படைக்கப் பட்டானா?

மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

முஸ்லிம்களுக்கிடையே பிரிவுகள் ஏன்?

முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்?

ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் 100 பிரிவுகளானது ஏன்?

ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?

பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றதே ஏன்?

முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்தவிதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுவது ஏன்?

முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?

இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படை தோற்றுவிட்டது எனக் கருதலாமா?

இஸ்லாம் மார்க்கமா? மதமா?

முதலில் தோன்றிய மதம் எது?

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

முஹம்மது நபி, ஏசுவை விடச் சிறந்தவரா?

காட்டுவாசிகளின் நிலை என்ன?

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

இஸ்லாமும் வாஸ்து சாஸ்திரமும்!

இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?

அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?

பிற மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?

பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்கத் தடை இருக்கின்றதா?

மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?

பெண் நபி ஏன் இல்லை?

ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டம் ஆகாதா?

குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா?

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்?

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளைப் பறிப்பதேன்?

திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?

சிந்திப்பது இதயமா? மூளையா?

இறந்தவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?

கரு வளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

அத்தாட்சிகளை மறுக்கலாமா?

மறு பிறவி உண்டா?

பட்டி மன்றம் நடத்தலாமா?

பாபர் மசூதியைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) தம்மை விட மூத்த வயதுடைய கதீஜாவை மணந்தது ஏன்?

குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

தாடி வைப்பது எதற்கு?

ரஹ், அலை, ஸல், ரலி என்றால் என்ன?

ஏசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

ஈஸா நபியின் தோற்றம் எது?

பிராணிகளுக்கு சொர்க்கம் – நரகம் உண்டா?

ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

மறுமை என்பது உண்மையா?

ஆகிய கேள்விகளுக்கு இந்நூலில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 2018 பதிப்புக்காக பீஜே அவர்கள் மீள்வாசிப்பு செய்து மேலும் மெருகேற்றித் தந்துள்ளார்கள்.

இது முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்.

நபீலா பதிப்பகம், சென்னை 1

1 இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?

– அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ.

பதில்: இது மார்க்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மொழி, வரலாறு, பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.

தமிழ்மொழி போன்ற சில மொழிகளுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை என்பது முதலில் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய் மொழியான அரபுமொழியில் இத்தகைய நிலை ஏற்படாது.

அவன் என்று ஒருவனைக் குறிப்பதற்கு அரபு மொழியில் ஹூவ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

அவர்கள் என்று பலரைக் குறிப்பதற்கு ஹூம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைக் குறிக்கும் போது மரியாதைக்காக ஹூம் (அவர்கள்) என்று கூறவே மாட்டார்கள்.

அல்லாஹ் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூவ (அவன்) என்று தான் குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது ஹூம் (அவர்கள்) என்று அல்லாஹ் பயன்படுத்தவில்லை.

அது போலவே தீயவர்களான இப்லீஸ், ஃபிர்அவ்ன் போன்றவர்களுக்கும் ஹூவ (அவன்) என்று தான் இறைவன் பயன்படுத்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் ஹூவ என்று தான் கூற வேண்டும். மரியாதைக்காக ஒருமையைப் பன்மையாக மாற்றுவது அரபு மொழியில் கிடையாது.

ஹூவ (அவன்) என்ற குறிப்பிடும் போது பலரைப் பற்றிக் கூறப்படவில்லை; ஒரு நபரைப் பற்றி மட்டும் தான் கூறப்படுகிறது என்று தான் அரபுகள் விளங்குவார்களே தவிர, அவர் மரியாதைக்குரியவரா அல்லவா என்பதை இவ்வார்த்தையிலிருந்து புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதே போல் ஒருவரைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் HE என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது. பலரைக் குறிப்பிடுவதற்கு THEY என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.

ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதைக்காக THEY என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதில்லை.

இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த நிலை தான் உள்ளது.

தமிழ் மொழியிலும் ஆரம்ப காலத்தில் இந்த நிலை தான் இருந்தது. அவன் என்பது ஒருவரைக் குறிக்கும். அவர் என்பது பலரைக் குறிக்கும். இது தான் தமிழ் இலக்கண விதி. நடைமுறையும் ஆரம்பத்தில் இப்படித் தான் இருந்தது.

ஒரு நபரைக் குறிப்பிடும் போது, பலரைக் குறிப்பிடுவதற்குரிய சொல்லை (அவர் என்ற பன்மைச் சொல்லை) மரியாதைக்காகப் பயன்படுத்துவது பிற்காலத்தில் வழக்கமானது. அதுவும் போதாதென்று பன்மையை மீண்டும் பன்மையாக்கி அவர்கள் என்று பயன்படுத்துவதும் வழக்கத்திற்கு வந்தது.

மரியாதை கொடுக்காத போது அவன் எனவும், மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரைக் குறிப்பிடும் போது அவர் எனவும், அதிகம் மரியாதை கொடுக்கப்பட வேண்டியவரை அவர்கள் எனவும் குறிப்பிடும் வழக்கம் பிற்காலத்தில் வந்தது.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருந்தாலும் அவன் என்றே குறிப்பிடப்பட்டனர். இன்றும் கூட அவ்வாறே குறிப்பிடப்படுகின்றனர்.

வள்ளுவன் சொன்னான்; கம்பன் கூறுகிறான்; ராமன் வில்லை ஒடித்தான் என்றெல்லாம் இன்றும் கூட குறிப்பிடப்படுவதைக் காணலாம்.

மரியாதைப் பன்மை தமிழில் வழக்கத்திற்கு வருவதற்கு முன், கடவுளைப் படர்க்கையாகக் குறிப்பிடும் போது அவன் என்றும், முன்னிலையாகக் குறிப்பிடும் போது நீ என்றும் தான் குறிப்பிடப்பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமிழுலகிற்கு அறிமுகமானதால் அவர்களைக் குறிப்பிடும் போது அவர்கள் என மரியாதைப் பன்மையில் குறிப்பிட்டனர்.

கம்பன் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்று நாம் கூற மாட்டோம். கருணாநிதி சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு என்போம்.

மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்து விட்ட பின் கருணாநிதி வாழ்கிறார்; மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வராத காலத்தில் கம்பன் வாழ்ந்தான் என்பதே இதற்குக் காரணம்.

கடவுள் சொன்னான் என்று கூறினால் அது மரியாதைக் குறைவு அல்ல. நபிகள் நாயகத்தை அவ்வாறு கூறினால் அது மரியாதைக் குறைவு என்று கருதுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதைப் பன்மை வழக்கத்திற்கு வந்த பின்பு தான் தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தார்கள் என்பதே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வை அவன் என்று குறிப்பிடுகின்ற முஸ்லிம்கள் மற்ற எந்தச் சமுதாயமும் கடவுளுக்கு அளிக்கும் மரியாதையை விட அதிக மரியாதை அளிப்பதைக் காணலாம்.

எவ்வளவு துன்பங்கள் ஏற்படும் போதும் கடவுளைப் பற்றி தரக்குறைவாகப் பேசாத ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் தான். கடவுள் முன்னிலையில் பாடுவதும், ஆடுவதும், கூச்சல் போடுவதும், கடவுளைக் கிண்டலடிப்பதும் முஸ்லிம்களிடம் அறவே இல்லை.

ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய இடத்தை யாருக்கும் வழங்காமல் அகிலத்தைப் படைத்த ஒரே இறைவனுக்கே வழங்குவதன் மூலம் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துகின்றனர்.

கடவுளை அவன் என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவுக்காக அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்னொரு காரணத்துக்காகவும் முஸ்லிம்கள் இறைவனை அவன் என்று ஒருமையில் குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ் கூறினார்கள் எனக் கூறும் போது நிறைய அல்லாஹ் இருப்பது போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தையில் காட்டும் மரியாதையை விட ஏகத்துவம் (ஒரு கடவுள் கொள்கை) மிகவும் முக்கியமானதாகும்.

அல்லாஹ்வை அவர்கள் என்று கூறிப் பழகி விட்டால் நிறைய அல்லாஹ் இருந்திருப்பார்களோ என்று எதிர்காலத்தில் நினைத்து விடலாம். அவ்வாறு நினைத்தால் இஸ்லாத்தின் அடிப்படையே வீழ்ந்து விடும்.

மரியாதையை விட கடவுள் ஒருவன் என்று கூறுவது தான் முக்கியமானது என்பதால் அல்லாஹ்வை அவன் என்று கூறுவதைத் தமிழ் கூறும் முஸ்லிம்கள் பிடிவாதமாகப் பிடித்துக் கொண்டுள்ளனர்.

அதே சமயத்தில் மார்க்கத்தில் இப்படி எந்தக் கட்டளையும் இல்லை.

அல்லாஹ்வை அவர் என்றோ நீங்கள் என்றோ ஒருவர் கூறினால் மார்க்கத்தில் இது குற்றமாகாது. அவ்வாறு கூறும் உரிமை அவருக்கு உள்ளது.

மரியாதையை மனதில் வைத்து ஓரிறைக் கொள்கைக்கு பங்கம் வராமல் அவன் எனக் கூறுவதே சிறந்தது என்பது நமது கருத்தாகும்.

2. கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?

முஹம்மது கனி, சித்தார்கோட்டை.

பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு ஆட்டுப் பண்ணையோ, கோழிப்பண்ணையோ வைத்திருக்கிறீர்கள். அவற்றை நீங்கள் வழிநடத்திச் செல்வதற்காக நீங்கள் ஆடாக, அல்லது கோழியாக மாறத் தேவையில்லை. நீங்கள் நீங்களாக இருந்து கொண்டே ஆடுகளை நீங்கள் விரும்பியவாறு வழிநடத்த முடியும். இன்னும் சொல்வதானால் உங்களால் ஆடாக மாற இயலும் என்று வைத்துக் கொண்டால் கூட நீங்கள் மாற மாட்டீர்கள்! மனிதனாக இருப்பதில் உள்ள பல வசதிகளை இதனால் இழக்க நேரிடும் என்று நினைப்பீர்கள்! மேலும் உங்களை விட பல விதத்திலும் தாழ்ந்த நிலையில் உள்ள ஜீவனாக நீங்கள் மாறத் தேவையில்லை. மாறவும் மாட்டீர்கள்!

உங்களுக்கும், ஆடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விட பல்லாயிரம் வேறுபாடுகள் கடவுளுக்கும், மனிதர்களுக்குமிடையே இருக்கின்றன.

எந்த விதமான பலவீனமும் இல்லாத கடவுளை, மலஜலத்தைச் சுமந்து கொண்டு எண்ணற்ற பலவீனங்களையும் உள்ளடக்கியுள்ள மனிதனாக மாறச் சொல்வதை விட கடவுளுக்குக் கண்ணியக் குறைவு வேறு இருக்க முடியாது.

முதலமைச்சராக இருக்கும் ஒருவர் முதல்வராக இருந்து கொண்டு தான் நாட்டை ஆள வேண்டும். அவரைச் சாக்கடையைச் சுத்தப்படுத்தும் வேலைக்குப் போகச் சொல்லக் கூடாது.

இருக்கின்ற தகுதியை விட இறக்கம் செய்வதை மனிதர்களே ஏற்க மாட்டார்கள் என்னும் போது கடவுள் எப்படித் தன்னை இழிவுபடுத்திக் கொள்வான்?

இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புவது தான் எந்த வகையில் நியாயமானது?

இப்படிச் சிந்தித்தால் கடவுள் கடவுளாக இருப்பது தான் பொருத்தமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கடவுள் மனிதனாக வருவான் என்று கதவுகளைத் திறந்து வைத்து விட்டால் என்ன ஏற்படும் என்பதை நாட்டு நடப்புகளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

நான் தான் கடவுள்; அல்லது கடவுளின் அவதாரம் எனக் கூறி யாரேனும் ஏமாற்ற நினைத்தால் கடவுள் மனிதனாக வருவான் என்று நம்பாத முஸ்லிம்களைத் தவிர மற்ற அனைவரையும் எளிதில் ஏமாற்றி விட முடியும். அவர்களைச் சுரண்ட முடியும்.

போலிச் சாமியார்கள் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோமே இதற்கெல்லாம் கடவுள் மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை தான் அடிப்படை.

கடவுள் மனிதனாக வரவே மாட்டான் என்று உறுதியாக நம்பினால் மதத்தின் பெயரால் நடக்கும் ஏராளமான சுரண்டல்களைத் தவிர்க்கலாம்.

இன்னொரு கோணத்திலும் இது பற்றி ஆராயலாம்.

கடவுள் மனிதனாக வருகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

மனிதனாக வந்த காரணத்தினால் மனிதனைப் போலவே கடவுள் செயல்பட வேண்டும். உண்ண வேண்டும்; பருக வேண்டும்; மலஜலம் கழிக்க வேண்டும்; மனிதனைப் போலவே குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட வேண்டும்.

சந்ததிகளைப் பெற்றெடுக்க வேண்டும். கடவுளால் பெற்றெடுக்கப்பட்டவனும் கடவுளாகவே இருப்பான்; கடவுளின் பிள்ளைகளான கடவுள்கள் கணக்கின்றி இப்பூமியில் வாழும் நிலை ஏற்படும்.

ஏதோ ஒரு காலத்தில் ஒரே ஒரு தடவை கடவுள் இப்பூமிக்கு வந்திருந்தால் கூட அவரது வழித்தோன்றல்கள் பல கோடிப் பேர் இன்றைக்கு பூமியில் இருக்க வேண்டும். ஆனால் கடவுளின் ஒரே ஒரு பிள்ளையைக் கூட நாம் பூமியில் காண முடியவில்லை. இதிலிருந்து கடவுள் மனிதனாக வரவே இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

எனவே கடவுள் ஒரு காலத்திலும் மனித வடிவில் வந்ததுமில்லை. வருவது அவருக்குத் தகுதியானதும் அல்ல.

3. இறைவனை அல்லாஹ் என்று அழைப்பதேன்?

கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ் என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்?

– அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ.

பதில்: ஏக இறைவனைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் எந்த மொழியிலும் நாம் பயன்படுத்தலாம்.

நபிகள் நாயகத்துக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் அவரவர் மொழியில் தான் கடவுளைக் குறிப்பிட்டனரே தவிர அல்லாஹ் என்று அரபு மொழியில் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருக்கவும் முடியாது.

கடவுள் கூறினார் என்று நான் பேசும் போது அகில உலகையும் படைத்துப் பரிபாலிக்கும் ஒரே இறைவனைத் தான் நான் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் விளங்கிக் கொண்டால் அது போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வாறு பயன்படுத்தலாம்.

ஏராளமான கடவுள்கள் இருப்பதாக நம்புகின்ற மக்களிடம் பேசும் போது அல்லாஹ் என்று கூறினால் தான் ஏக இறைவனைக் குறிப்பிடுவதாக அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

கடவுள் சொன்னார் எனக் கூறினால் எந்தக் கடவுள்? ராமரா? கிருஷ்ணரா? சிவனா? விஷ்ணுவா? முருகனா? விநாயகரா? இயேசுவா? மேரியா? என்றெல்லாம் குழப்பம் அடைவார்கள். எனவே பல கடவுள் நம்பிக்கையுடைய மக்களிடம் பேசும் போது அல்லாஹ் என்று கூறுவது தான் பொருத்தமானது.

4. தேவையற்ற இறைவனுக்கு வணக்க வழிபாடுகள் ஏன்?

கேள்வி: அல்லாஹ் யாரிடத்தும் தேவையற்றவன் என்று திருக்குர்ஆனில் உள்ளது. அப்படி இருக்க தொழு! அறுத்துப் பலியிடு என்ற கட்டளையும் உள்ளதே? இது எப்படி என்று ஒரு பிற மத சகோதரர் கேள்வி எழுப்புகிறார்.

– அபூ அப்துர்ரஹ்மான், ரியாத்.

பதில்: அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது இஸ்லாத்தின் முக்கியக் கோட்பாடு என்பதில் சந்தேகமில்லை. தேவையுள்ளவன் கடவுளாக இருப்பதற்குத் தகுதியற்றவன் என்று இஸ்லாம் உறுதிபடக் கூறுகிறது.

இறைவனைத் தொழ வேண்டும் எனவும், இறைவனுக்காக அறுத்துப் பலியிட வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுவதால் அல்லாஹ் தேவையுள்ளவன் என்று கருத முடியாது.

இறைவனைத் தொழுவதில்லை என்று உலக மக்கள் அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தாலும் இறைவனுக்கு எந்தக் குறைவும் ஏற்படப் போவதில்லை. இறைவனை அனைவரும் வணங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானம் போட்டாலும் இறைவனது மதிப்பு இதனால் அதிகமாகி விடப்போவதில்லை. இந்தக் கருத்தில் நபிகள் நாயகத்தின் பொன்மொழியும் உள்ளது.

நூல்: முஸ்லிம்

தொழுகை உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளையிடுவது அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல. மாறாக, நிறைவேற்றும் மனிதனின் நன்மைக்காகவே.

இன்னொருவரின் நன்மைக்காக அவரை ஒரு காரியத்தில் ஈடுபடுமாறு நாம் கூறினால் நமக்கு அந்தக் காரியத்தின் பால் தேவையுள்ளது என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

உங்கள் மகன் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறீர்கள்! போட்டிகளில் அவன் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறீர்கள்! இவையெல்லாம் உங்கள் தேவைக்காக அல்ல! மாறாக உங்கள் மகனின் நன்மைக்காகவே இவ்வாறு வலியுறுத்துகிறீர்கள்!

மகன் நல்ல நிலையில் இருந்தால் நம்மை நன்றாகக் கவனிப்பான் என்ற எதிர்பார்ப்பாவது இதில் மறைந்து நிற்கும்.

அல்லாஹ், நம்மிடம் எதிர்பார்க்கும் வணக்க வழிபாடுகளில் இது போன்ற எதிர்பார்ப்புகள் கூட கிடையாது.

ஒரு ஆசிரியர் தனது மாணவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது அவரது தேவைக்காகவா? மாணவனின் நன்மைக்காகவா?

நமது நன்மைக்காக ஒரு காரியத்தைச் செய்யுமாறு நமக்கு மேலே உள்ளவர் கூறினால் அவரது தேவைக்காக அதைக் கூறுகிறார் என்று யாருமே புரிந்து கொள்ள மாட்டோம். அப்படித்தான் இறைவனின் கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, நமது நன்மைக்காக இடப்படும் கட்டளைகளை கட்டளை பிறப்பித்தவனின் தேவைக்காக இடப்பட்ட கட்டளை என்று கருதுவது தவறாகும்.

5. அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? என்று ஒரு பிற மத நண்பர் என்னிடம் கேட்டார்.

– எஸ். ஷேக் பீர் முஹம்மது, மேலப்பாளையம்.

பதில்: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன் என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.

நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.

அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.

இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அஹ்மத்

இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டங்கள் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுபூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.

அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர்கொள்ளாமல் இருக்க முடியாது.

அறிவுபூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.

எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே என்று இஸ்லாம் கூறவில்லை.

மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.

எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.

எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.

அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.

ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

விதியை நம்புபவன், நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா? எனக் கூறி மறு நாளே இயல்பு நிலைக்கு வந்து விடுவான்.

விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் இயல்பு நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 57:23

விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.

விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.

இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும். அடக்கம் அதிகமாகும்.

அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.

நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான் என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் இயல்பு நிலையை அடைவான்.

இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

சிலர், எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்று காரணம் காட்டி வணக்க வழிபாடுகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லவர்களாக ஆவோம் என்று நமது விதியில் இருந்தால் நமது முயற்சி இல்லாமலேயே ஈடுபட்டு விடுவோம். நாம் நல்லவர்களாக மாட்டோம் என்று நமது விதியில் எழுதப்பட்டிருந்தால் நாம் முயற்சி செய்வதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர்கள் நினைக்கின்றனர்.

விதியை நம்பச் சொல்கின்ற இறைவன் தான் முயற்சிகள் மேற்கொள்ளுமாறும் நமக்குக் கட்டளையிடுகிறான் என்பதை மறந்து விடுகின்றனர்.

மேலும் ஒருவர் உண்மையிலேயே விதியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக வணக்க வழிபாடுகள் செய்யாமல் இருக்கிறார் என்றால் எல்லா விஷயத்திலும் அவர் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதில் மட்டும் விதி இருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. இவ்வுலகில் ஒருவனுக்கு ஏற்படும் செல்வம், வறுமை போன்றவையும், பட்டம் பதவிகள் போன்றவையும் விதியின் அடிப்படையிலேயே கிடைக்கின்றன என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.

இறைவணக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு விதியின் மீது பழியைப் போடுபவர் இந்த விஷயத்திலும் அப்படி நடந்து கொள்ள வேண்டுமல்லவா?

தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.

எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.

விதி குறித்து மேலும் அறிய

விதி ஒரு விளக்கம்

என்ற நூலை வாசிக்கவும்

6. அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?

கேள்வி: நாம் செய்வதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றும், முழு உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால், ஒருவர் ஒரு குற்றத்தை ஒரு இடத்தில் செய்கிறார், மற்றொருவர் வேறு ஒரு இடத்தில் ஒரு குற்றம் செய்கிறார்; ஒரே கடவுளான அவன், அவைகளை எப்படிக் கண்காணிக்க முடியும்? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார்.

– எஸ்.ஏ. சையத் அமீர் அலி, சிதம்பரம்.

பதில்: கடவுளும் நம்மைப் போன்றவரே; நமக்கு எது சாத்தியமோ அது தான் கடவுளுக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையே இக்கேள்விக்கான அடிப்படையாக உள்ளது.

நமக்கு எது முடியுமோ அது தான் கடவுளுக்கும் இயலும் என்றால் அத்தகைய கடவுள் நமக்குத் தேவையில்லை. அத்தகையவர் மனிதராக இருக்க முடியுமே தவிர கடவுளாக இருப்பதற்குத் தகுதியுடையவர் அல்லர்.

நமது இரண்டு பிள்ளைகள் ஒரு அறையில் சேட்டை செய்தால் நாம் இருவரையும் கண்காணிக்கிறோம். அவர்களது நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அறிந்து கொள்கிறோம்.

இறைவனைப் பொருத்த வரை இந்த முழு உலகமும் ஒரு அறையை விடச் சிறியது தான்.

ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமாகவே உள்ளது.

7. நல்லவர்கள் நோயால் அவதியுறுவது ஏன்?

கேள்வி: ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறுவதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? என்று எனது நண்பர் ஒருவர் கேட்கிறார்.

– எம். அஹ்மது, சென்னை-1.

பதில்: மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.

வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன.

நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.

ஒருவருக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ள மற்றவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும்.

அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்.

நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது.

இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் உணவுக்கு வழி இல்லாமல் அழிந்து விடுவோம்.

எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும்.

அனைவரிடமும் பத்து ஏக்கர் நிலம் உள்ளது என்று வைத்துக் கொள்ளுங்கள். அனைவரிடமும் பத்து ஏக்கர் உள்ளதால் உங்கள் நிலத்தில் வேலை பார்க்க யாரும் வர மாட்டார்கள். நீங்களே உழ வேண்டும்; நீங்களே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீங்களே விதைக்க வேண்டும். நீங்களே களையெடுக்க வேண்டும். நீங்கள் தான் அறுவடை செய்ய வேண்டும். நீங்கள் தான் போரடிக்க வெண்டும். பதரை நீக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு வேலையையும் நீங்கள் தான் செய்ய வேண்டும். உங்கள் உடையை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும். உங்கள் வீட்டை நீங்கள் தான் கட்டிக் கொள்ள வெண்டும்.

இதனால் என்ன ஏற்படும்? எந்த தேவையும் நிறைவேறாது.

இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான்.

நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது.

மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது.

வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது.

இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்.

எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை.

கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா?

இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள்.

8. கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?

கேள்வி: நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு என்ன விளக்கம் அளிக்கலாம்?

– எம். சையத் அலி, சாக்கிநாக்கா, மராட்டியம்.

பதில்: கஅபா என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்வாறு உங்களிடம் கேட்டிருக்கிறார்.

கஅபா என்னும் கட்டிடம் தொழுகை நடத்துவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் அது சிதிலமடைந்த பின் இப்ராஹீம் (அலை) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது. அவர்கள் அக்கட்டிடத்துக்குள்ளேயே தொழுதார்கள். நமது நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எப்படி தூய இடமாக உள்ளதோ அது போன்ற தூய இடம் மட்டும் தான் உள்ளே இருக்கிறது. எந்தப் பள்ளிவாசலும் எப்படி எந்தச் சிலையும், வழிபாட்டுச் சின்னமும் இல்லாமல் உள்ளதோ அது போன்ற வெற்றிடம் தான் கஅபாவுக்கு உள்ளேயும் இருக்கிறது.

மக்கள் தொகை பல கோடி மடங்கு பெருகி விட்ட நிலையில் அதனுள்ளே போய்த் தொழமுடியாது என்பதால் தான் உள்ளே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை.

கஅபாவுக்குள்ளே நான்கு சுவர்களும் தூண்களும் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதை அவருக்கு விளக்குங்கள்! உண்மையைப் புரிந்து கொள்வார்.

9. கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?

கேள்வி : மக்கா (கஅபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு முறை சவூதி – ரியாத்தில் நடந்த கலந்துரையாடலில் ஒரு பிற மத சகோதரர் கேட்டார். விளக்கம் தேவை.

செய்யது முஹைதீன், வேலூர்.

பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவரில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் என்னும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் வணங்குவதில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை.

ஆனால் இந்துச் சகோதரர்கள் லிங்கத்தை வணங்குகின்றனர்.

இது தான் முக்கியமான வித்தியாசம்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும்.

துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும்.

அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும்.

நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும்; விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ, லிங்கத்தையோ, இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

ஹஜ்ருல் அஸ்வத் பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக் கல் நாம் பேசுவதைக் கேட்கும்; நமது பிரார்த்தனையை நிறைவேற்றும்; அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெய்வீக அம்சம் எதுவுமில்லாத கல் என்பதை இஸ்லாம் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திரா விட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன் என்று கூறினார்கள்.

(நூல் : புகாரி: 1597, 1605)

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி விட்ட பின், தமது முப்பாட்டன்களான இப்ராஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் உடைத்தெறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படி கூறியிருக்க முடியும்?

ஹஜருல் அஸ்வத் என்னும் கல்லுக்கு எந்தவிதமான ஆற்றலோ, கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

அக்கல்லுக்கு கடவுள் தன்மை உள்ளது என்பது இஸ்லாத்தின் கொள்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அதன் காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி இவ்வுலகம் அழிக்கப்பட்ட பின் கடவுள் விசாரணை நடத்தி நல்லவர்களைச் சொர்க்கத்திலும், கெட்டவர்களை நரகத்திலும் தள்ளுவார். அந்தச் சொர்க்கத்தை அடைவது தான் முஸ்லிம்களின் இலட்சியமாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் போதனை.

ஹஜருல் அஸ்வத் என்னும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்த சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் ஒன்று இவ்வுலகில் காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும், தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்துப் பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது. இவ்வுலகிலேயே காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்களை அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழுவினர் சந்திரனிலிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அது அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர். இவ்வாறு செய்ததால் அம்மண்ணை அவர்கள் வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுப் பயணம் செல்பவர்கள் அந்தக் கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறி விடும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக் கல்லிடம் பிரார்த்தனை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்த்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

ஆனால் லிங்கம் கடவுளின் அம்சம் என்பது இந்து சகோதரர்களின் நம்பிக்கை. அது அவர்களால் வழிபாடு செய்யப்படுகிறது. அதற்கு அபிஷேகமும் நடத்தப்படுகிறது. எனவே கறுப்புக் கல்லை முத்தமிடுவதும், லிங்கத்தைக் கடவுளாகக் கருதி வழிபாடு நடத்துவதும் ஒன்றாக முடியாது.

மேலும், லிங்கம் சொர்க்கத்திலிருந்து வந்ததாக இந்துக்கள் நம்புவதாக நமக்குத் தெரியவில்லை. அப்படி நம்பினால் உலகம் முழுவதற்கும் ஒரே இடத்தில் ஒரே ஒரு லிங்கம் தான் இருக்க வேண்டும்.

ஆனால் ஊர்கள் தோறும் லிங்கங்கள் உள்ளன. மக்கள் தான் ஒரு கல்லைக் குறிப்பிட்ட வடிவில் செதுக்கி அதற்கு லிங்கம் என்று பெயரிட்டு வணங்குகிறார்கள் என்பது கண் முன்னே தெரியும் போது அது சொர்க்கத்தில் இருந்து வந்தது என்று எப்படி கூற முடியும்?

எனவே, அந்த இந்துச் சகோதரர் தவறான தகவலைக் கூறுகிறார். ஹஜருல் அஸ்வத் சொர்க்கத்தின் பொருள் என்று முஸ்லிம்கள் நம்புவதால் ஊர்கள் தோறும் ஹஜருல் அஸ்வத் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

10. தீ மிதிக்க முடியுமா?

கேள்வி: இஸ்லாம் உருவ வழிபாடு கூடாது என்று போதிக்கின்றது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில், நாங்கள் மாரியம்மனின் அருளினால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் சாமியை நினைத்து தீ மிதிக்கிறோம். அவ்வாறு உங்களுடைய இறைவனின் அருளினால் அந்த இறைவனை நினைத்துக் கொண்டே எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் நீங்கள் தீ மிதித்து வர முடியுமா? என்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியைப் பார்த்து வரும் ஒரு இந்து நண்பர் கேட்கின்றார்.

– ஜே. கோரி முஹம்மது, ஆடுதுறை.

பதில்: தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

மனிதர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் மற்ற பகுதிகளை விட வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது.

விளக்கில் தீ எரியும் போது அதில் விரலை நீட்டித் தொட்டு தொட்டு வெளியே எடுக்கலாம். ஒன்றும் செய்யாது. வைத்துக் கொண்டே இருந்தால் தான் விரலைப் பொசுக்கும்.

ஒரு அடுப்பில் உள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் கிராமத்துப் பெண்கள் சர்வ சாதாரணமாகப் போடுவார்கள்.

உள்ளங்கைகளையும், உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருந்தால் தான் பொசுக்குமே தவிர நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

இதன் காரணமாகத் தான் கடவுள் இல்லை எனக் கூறுவோரும் தீ மிதித்துக் காட்டுகின்றனர். முஸ்லிம்களில் அறிவீனர் சிலர் முஹர்ரம் பத்தாம் நாள் அன்று இது போன்ற தீ மிதித்தலை சில பகுதிகளில் செய்கின்றனர்.

எவராலும் செய்ய முடிகின்ற சாதாரணமான ஒரு காரியம் அறியாமை காரணமாக அசாதாரணமான காரியமாகக் கருதப்படுகின்றது.

மாரியம்மன் அருளால் தான் தீ மிதிக்கிறோம் என்று கூறுவதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்டச் சொல்லுங்கள்!

அல்லது உள்ளங்காலை வைக்காமல் இருப்பிடத்தை தீக்கங்கில் வைத்து பத்து விநாடி உட்காரச் சொல்லுங்கள்! மாரியம்மன் அருள் தான் காரணம் என்றால் அதையும் செய்து காட்டத் தான் வேண்டும். இதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். நெருப்பில் வைத்து விட்டு உடனே எடுத்து விடும் நிகழ்ச்சி தான் தீமிதிப்பதில் உள்ள சூட்சுமம்.

நீங்கள் தீ மிதிக்கத் தயாரா? என்று அவர் அறை கூவல் விடுத்தால் அதையும் செய்து காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் பின்னர் அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம் கேட்டு எழுதுங்கள்!

அல்லது நாம் கூறியவாறு தீயில் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எழுந்து காட்டட்டும். நாம் நமது கருத்தை மாற்றிக் கொள்வோம். சரி தானே!

11. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

கேள்வி 1: ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்று நிரூபித்துள்ளார். இதற்கு மாற்றமாக இஸ்லாம் கூறுவது அமைந்துள்ளது என எனது பிற மத நண்பர் கேட்கிறார்!

– எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ், சேந்தங்குடி.

கேள்வி 2: உலகம் இயற்கையாகவே தோன்றியது. முதலில் புழு பூச்சிகள் உண்டாயின. அவற்றில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு ஒரு வித குரங்குகள் தோன்றின. அக்குரங்குகள் மேலும் வளர்ச்சியடைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சி பெற்றன என்று எனது பிற மத நண்பர் கூறுகிறார். இது சரியா?

– பி.எஸ். இப்ராஹீம், சீர்காழி.

பதில்:

பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன் தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம்.

கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் கொள்கையைச் சிலர் ஏற்றிப் போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமேயாகும்.

சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை!

எந்தக் குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் நிச்சயமாக இல்லை.

குரங்குக்கும், மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம்.

அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத்தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் குரங்கு, மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம். ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம்.

மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை.

பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துடன் அதிக அளவு பொருந்திப் போகிறது. அநேகமாக எதிர்காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தாலும், அவ்வாறு செலுத்த முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமாகவுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு, மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்தத்திலிருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்தக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

உருவ அமைப்பை வைத்து எதிலிருந்து பிறந்தான் என்று முடிவு செய்வதை விட அறிவியல் பூர்வமான இந்தக் காரணத்தின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.

இன்றைக்கும் கூட தகப்பனின் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ. சோதனை மூலம் இவன் தான் தந்தை என்று முடிவு செய்கிறோம். வடிவத்தைக் கணக்கில் கொள்வதில்லை.

டார்வின் காலத்தில் இரத்தங்களின் மூலக்கூறுகளை வகைப்படுத்தும் அறிவு இல்லாத போது ஊகமாக அவன் சொன்னதை மன்னிக்கலாம். அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் அதைத் தாங்கிப் பிடிப்பது சரி தானா?

இருதய மாற்று அறுவையிலும் இன்று மனிதன் முன்னேறி வருகிறான். இதயம் செயல்பாடில்லாமல் போனால் செயற்கை இதயம் பொருத்தக்கூடிய அளவுக்கு முன்னேறி விட்டான்.

வேறு பிராணிகளின் இதயம் மனிதனுக்குப் பொருந்துமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பொருந்தினால் எத்தனையோ இதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.

ஒவ்வொரு பிராணியின் இதயத்தையும் ஆராய்ச்சி செய்த போது குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இதயமும் மனித உடலுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டறிந்தனர். ஆச்சரியமாக பன்றியின் இதயம், மனிதனின் இதயத்துடன் பெருமளவு ஒத்துப் போவதைக் கண்டுபிடித்துள்ளனர். பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தும் நிலை ஏற்பட்டாலும், அது சாத்தியமற்றது என கண்டுபிடிக்கப்பட்டாலும் மற்ற பிராணிகளின் இதயத்தை விட பன்றியின் இதயம் மனித இதயத்துக்கு நெருக்கமாக இருப்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

மனிதன் எந்தப் பிராணியிலிருந்தாவது பரிணாமம் பெற்றான் என்று கூறுவதாக இருந்தால் பன்றியிலிருந்து பரிணாமம் பெற்றான் என்று கூறுவதே அதிகப் பொருத்தமாகும்.

டார்வின் கூறுவது போல் உடலமைப்பை அடிப்படையாகக் கொள்வதை விட உள்ளுறுப்புகளின் அமைப்பை அடிப்படையாகக் கொள்வது அறிவியலுக்கு அதிக நெருக்கமுடையதாகும்.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையிலும் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டான்.

குரங்கின் மரபணுக்களையும், மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப்பட்டிருந்தாலோ, வேறு எந்தப் பிராணியின் மரபணுவும் மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை.

இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டுபிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் தான் என்பதைக் கண்டுபிடித்து விட்டனர்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குரங்குகள் மனிதர்களாக மாறின என்பது டார்வினின் தத்துவம்.

முழு மனிதனுக்கும் ஒரே தாய் தான் என்ற கண்டுபிடிப்பு டார்வினின் கொள்கையைச் சவக்குழிக்கு அனுப்பி விட்டது.

மனிதன் ஒரு தாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவன் என்ற தத்துவம் உலக சகோதரத்துவத்தை ஏற்படுத்த உதவும். குலம், இனம், நிறத்தின் பெயரால் மனிதனுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதைத் தடுக்கும். ஆனால் டார்வினின் தத்துவத்தைத் தாங்கிப் பிடிப்பது மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கும்.

என்னுடைய முதல் தந்தையும் உன்னுடைய முதல் தந்தையும் வேறு வேறு எனக் கூறி இன்று நிலவும் வேறுபாட்டை நியாயப்படுத்த முடியும்.

எனவே உலகுக்குக் கேடு விளைவிக்கும் உளறலே டார்வின் தத்துவம்.

இதையெல்லாம் விட உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையை மனிதன் பெறவில்லை. பகுத்தறிவால் தான் அந்தப் பெருமையைப் பெறுகிறான்.

உடல் வளர்ச்சிக்கும், உடலமைப்பில் மாறுதலுக்கும் தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறான். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் – நிர்ப்பந்தம் எது என்று டார்வின் கூறவே இல்லை.

ஆடு, மாடுகளுக்கு இருப்பது போன்ற கழுத்தைத் தான் ஒட்டகச்சிவிங்கி பெற்று இருந்ததாம்! அதற்குத் தேவையான உணவுகள் உயரமான இடத்தில் இருந்ததால் கழுத்தை நீட்டி, நீட்டி வந்ததாம்! இதனால் படிப்படியாக கழுத்துப் பெரிதாகி பல கோடி வருடங்களில் இப்போது நாம் காண்பது போல் ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டதாம்! டார்வினிஸ்டுகள் உளறுகின்றனர்.

உலகில் உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்த நிலையில் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம்.

இந்த வாதத்தின் படி உயிர் வாழ்வதற்கு நீண்ட கழுத்து அவசியம் என்ற நிர்ப்பந்தத்தால் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டு விட்டது.

ஆனால், பகுத்தறிவு இல்லாத ஜீவன் உயிர் வாழவே முடியாது என்ற நிர்ப்பந்தம் எப்போதாவது இருந்ததா? உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு தேவையே இல்லை. எனவே பகுத்தறிவு இல்லாத ஜீவன் பகுத்தறிவுள்ள ஜீவனாக மாறுகின்ற எந்த நிர்ப்பந்தமும் எந்தக் காலக் கட்டத்திலும் இருந்ததில்லை. உயிர் வாழ்வதற்கு பகுத்தறிவு அவசியம் இல்லை என்னும் போது பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறிவு என்பது வரவே முடியாது. இந்தச் சாதாரண அறிவு கூட டார்வினுக்கு இருக்கவில்லை.

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து நீண்டதற்கு டார்வின் கூறும் காரணத்தையும் நாம் ஏற்க முடியாது.

யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

யானை மூக்கை நீட்டியதால் தும்பிக்கையாகி விட்டது என்பார்களா?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா? பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்?

தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்; அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை?

இதற்கும் டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை.

மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கின்றது.

மனிதனின் இரத்தம், இதயம், ஈரல், சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகளும், மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும். எந்த இனத்திலிருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.

12. மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

கேள்வி: மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? Molecular Biology வளர்ந்து குளோனிங் மூலம் ஒரு மனிதனைப் போன்று இன்னொரு மனிதனை உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.ஏ. வரிசையை மாற்றியமைத்து ஐன்ஸ்டீன் போன்று அறிவுடைய, ஜஸ்வர்யாராய் போன்ற அழகுடைய மனிதனை உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்பதை எவ்வாறு நம்ப முடியும்? விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டா? என எனது பிற மத நண்பர் கேட்கிறார்?

– ஏ. சம்சுதீன், அருப்புக்கோட்டை.

பதில்: உங்கள் பாணியிலேயே கூறுவது என்றால் நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிறோம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் தலை சிறந்தது கம்ப்யூட்டர் தான்.

இதில் படம் பார்க்கலாம்! எழுதலாம்! வாசிக்கலாம்! ஏராளமான நூல்களைப் பதிவு செய்யலாம்! பேசலாம்! வரையலாம்! வடிவமைக்கலாம்! உலகை எல்லாம் வலையில் இணைக்கலாம்! இருந்த இடத்திலிருந்து கொண்டே விற்கலாம்! வாங்கலாம்! இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்!

அதன் உறுப்புகளைப் பல வகைகளில் வகைப்படுத்தலாம்!

அதன் ஜீவனாக இருக்கின்ற சிலிக்கானும் இன்ன பிற பாகங்களும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா?

இப்போது மண் வடிவத்தில் அவை இல்லாவிட்டாலும் மண்ணிலிருந்து அவை தோன்றியதை மறுக்க முடியுமா?

நீங்கள் வாசிக்கின்ற பேப்பர் தனி ஒரு பொருள் என்றாலும், அதுவும் மண் தான் என்பதை மறுக்க முடியுமா? மரக்கூழிலிருந்து இது தயாரிக்கப்பட்டாலும் மரம் மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட சக்தியால் தான் வளர்ந்தது.

எனவே மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை மறுக்க முடியாது.

இப்போது உலகில் 600 கோடிப் பேர் இருக்கிறோம். ஒவ்வொருவரும் தலா 50 கிலோ என்று வைத்துக் கொள்வோம். 30,000 கோடி கிலோ மொத்த எடையாகிறது.

ஒரு மனிதனும் இல்லாத போது பூமியின் மொத்த எடை எவ்வளவோ அதே அளவு எடை தான் 600 கோடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.

600 கோடி மக்கள் இப்பூமியில் அதிகமான போதும் 30 ஆயிரம் கோடி கிலோ எடை அதிகமாகவில்லை. 600 கோடி மக்களையும் சேர்த்து பூமியின் எடை எவ்வளவோ அதே எடை தான் ஒரு மனிதனும் படைக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 30 ஆயிரம் கோடி கிலோவை மனிதனாக மாற்றியுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாம் உண்ணுகிற உணவுகள் மண்ணின் சத்தினால் உருவானதாகும். எனவே நாம் உண்மையில் மண்ணைத் தின்று தான் உடல் வளர்க்கிறோம். இதனால் தான் நம்மால் பூமியின் எடை அதிகரிக்கவில்லை.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும் போதும் 50 கிலோ எடை பூமிக்கு அதிகமானால் பூமியின் எடை அதிகரித்து வேறு கோள்களுடன் மோதி பூமி சிதறிப் போய் விடும்.

எனவே முதல் மனிதர் மட்டும் அல்ல. நீங்களும், நானும் கூட மண் தான் என்பதை பூமியின் எடை நிரூபிக்கிறது.

நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைத் தோண்டிப் பார்த்தால் போதுமே! எதிலிருந்து படைக்கப்பட்டார்களோ அதுவாகவே அவர்கள் மாறியிருப்பதைக் காணலாம்!

ஈரக் களிமண்ணால் படைக்கப்பட்டவன் தான் முதல் மனிதன். அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து படைக்கப்பட்டவன். உங்கள் உடம்பில் இவை தாம் உள்ளன. கார்பன் அது இது என்றெல்லாம் வகைப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுவோம்.

முதல் மனிதன் நேரடியாக மண்ணிலிருந்தே படைக்கப்பட்டான் என்பதும், அவனது வழித்தோன்றல்கள் மறைமுகமாக மண்ணிலிருந்து தான் பிறப்பெடுக்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதன் பொருள்.

அறிவியல் பூர்வமாக விளக்கம் கேட்கிறீர்கள்.

மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அடங்கியுள்ள மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன. 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரி மனித உடலை விஞ்ஞான முறையில் பகுப்பாய்வு செய்த போது, உடலின் மூலப்பொருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் படைக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்தை அறிவியல் உலகம் மெய்ப்பித்தது.

ஜான் நம்ஸ்லே எழுதியுள்ள க்ளாரென்டன் பதிப்பகம், ஆக்ஸ்போர்டு வெளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் பொருட்கள் பற்றிய ஆய்வுத் தகவலை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்

2. கார்பன் 16 கிலோ கிராம்

3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்

4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்

5. கால்சியம் 1.0 கிலோ கிராம்

6. பாஸ்பரஸ் 780 கிராம்

7. பொட்டாசியம் 140 கிராம்

8. சோடியம் 100 கிராம்

9. குளோரின் 95 கிராம்

10. மக்னீசியம் 19 கிராம்

11. இரும்பு 4.2. கிராம்

12. ஃப்ளோரின் 2.6 கிராம்

13. துத்தநாகம் 2.3 கிராம்

14. சிலிக்கன் 1.0 கிராம்

15. ருபீடியம் 0.68 கிராம்

16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்

17. ப்ரோமின் 0.26 கிராம்

18. ஈயம் 0.12 கிராம்

19. தாமிரம் 72 மில்லி கிராம்

20. அலுமினியம் 60 மில்லி கிராம்

21. காட்மியம் 50 மில்லி கிராம்

22. செரியம் 40 மில்லி கிராம்

23. பேரியம் 22 மில்லி கிராம்

24. அயோடின் 20 மில்லி கிராம்

25. தகரம் 20 மில்லி கிராம்

26. டைட்டானியம் 20 மில்லி கிராம்

27. போரான் 18 மில்லி கிராம்

28. நிக்கல் 15 மில்லி கிராம்

29. செனியம் 15 மில்லிகிராம்

30. குரோமியம் 14 மில்லி கிராம்

31. மக்னீசியம் 12 மில்லி கிராம்

32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்

33. லித்தியம் 7 மில்லி கிராம்

34. செஸியம் 6 மில்லி கிராம்

35. பாதரசம் 6 மில்லி கிராம்

36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்

37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்

38. கோபால்ட் 3 மில்லி கிராம்

39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்

40. வெள்ளி 2 மில்லி கிராம்

41. நியோபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்

43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்

44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்

45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்

46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்

47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்

48. தால்வியம் 0.5 மில்லி கிராம்

49. இண்டியம் 0.4 மில்லி கிராம்

50. தங்கம் 0.4 மில்லி கிராம்

51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்

52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்

53. வாளடியம் 0.11 மில்லி கிராம்

54. தோரியம் 0.1 மில்லி கிராம்

55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்

56. சமாரியம் 50 மில்லி கிராம்

57. பெல்யம் 36 மில்லி கிராம்

58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.

மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

13 மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?

கேள்வி: ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது மனித சமுதாயம் ஆதம், ஹவ்வா எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்?

– எஸ். ஷாஹுல் ஹமீது, அய்யம்பேட்டை.

பதில்:

இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும்.

ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும்.

இதற்குப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும்.

ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வ சாதாரணமாக நாம் பார்க்கிறோம்.

அவர்களின் புறத்தோற்றம் மட்டுமின்றி பண்பாடு, பழக்க வழக்கம், குணாதிசயம் போன்றவையும் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் இரண்டு சகோதரர்களின் இரத்தங்களும் கூட ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்காது.

நேரடிப் பிள்ளைகள் மத்தியிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும் போது, பல தலைமுறைகள் கடக்கும் போது ஏன் வித்தியாசம் இருக்காது என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்த வேற்றுமைகளை விட முக்கியமான ஒரு ஒற்றுமையையும் நீங்கள் சுட்டிக் காட்டலாம்.

ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், தோற்றத்திலும் இருந்தாலும் அவை ஒரே மரத்தில் உருவான ஒரு இனத்தைச் சேர்ந்த காய்கள் என்று கூறுகிறோம்.

அது போல் பகுத்தறிவு என்னும் அம்சத்தில் ஐரோப்பியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

இதை விட முக்கியமாக, இக்கொள்கையை உலகம் ஏற்பதால் உலகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும்.

எல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவரும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும்.

குலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.

முஸ்லிம்கள் இதை நம்புவதால் தான் அவர்களிடம் தலித் முஸ்லிம், நாடார் முஸ்லிம் என்றெல்லாம் சாதி வேற்றுமை இல்லாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.

14. முஸ்லிம்களுக்கிடையில் பிரிவுகள் ஏன்?

கேள்வி 1 : இஸ்லாம் மார்க்கத்தில் சன்னி, ஷியா, ஷேக், சையத் போன்ற பல பிரிவுகள் உள்ளன. இஸ்லாத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்திருப்பதின் நோக்கம் என்ன? இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் பின்பற்றுவதாக இது அமைந்துள்ளதே? உ.பி.யிலும், பாகிஸ்தானிலும் சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சண்டைகள் நடப்பது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விடையளிப்பது?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

கேள்வி 2: முஸ்லிம்களிடத்திலும் ஜாதிப் பிரிவுகள் இருப்பதாக என் இந்து நண்பர் கூறினார். மற்ற பிரிவுகளுக்கு விளக்கம் சொல்லும் என்னால் ஷியா-சன்னி பிரிவுக்கு விளக்கம் தர முடியவில்லை?

கௌதியா ஹாஜா, அதிரை.

கேள்வி 3 : முஸ்லிம்களிடையே சாதிப் பிரிவுகள் இல்லை என்று கூறுகின்றீர்கள். ஆனால், திருமண விளம்பரங்கள் வெளியிடும் போது மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்ற பிரிவுகளின் பெயரிலே வெளியிடுகின்றனரே எதனால்?

அமல்ராசன், எழுவை-628 617.

பதில்:

இஸ்லாம் மார்க்கத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் கூறுவது தவறாகும்.

முஸ்லிம்களிடம் ஏன் இந்தப் பிரிவுகள் என்று தான் கேள்வி அமைந்திருக்க வேண்டும்.

இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள நான்கு வர்ணங்களைப் போன்றதாக முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவை ஒப்பிட எந்த நியாயமும் இல்லை.

வர்ணம் அடிப்படையிலான பிரிவுகள் மனிதனின் பிறப்பின் அடிப்படையில் கிடைக்கக் கூடியவை.

முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகள் மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் மூலம் ஏற்பட்டவை.

தலித் சமுதாயத்தில் பிறந்தவர் என்ன தான் முயன்றாலும் ஒருக்காலும் ஐயராக முடியாது; முதலியாராக முடியாது; செட்டியாராக முடியாது.

ஆனால் ஷியாப் பிரிவில் இருந்தவர் அக்கொள்கையிலிருந்து விலகி எந்த நிமிடத்திலும் சன்னி பிரிவில் சேர்ந்து விட முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்தவர் அப்பிரிவில் அவருக்கு விருப்பமில்லா விட்டால் எந்த நிமிடமும் ஷியாப் பிரிவில் சேர முடியும்.

ஆன்மீகத் தலைவரிடம் பைஅத் (தீட்சை) பெறுதல்

சமாதிகளை வழிபடுதல்

நபிகள் நாயகத்தின் வாரிசுகள் மட்டுமே ஆள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என நம்புதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ தான் நபிகள் நாயகத்துக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என நம்புதல்

இவை ஷியாக் கொள்கையில் சில.

இக்கொள்கைகளை ஏற்றவர்கள் ஷியா எனவும், ஏற்காதவர்கள் சன்னி எனவும் அழைக்கப்பட்டனர். இன்றைக்கும் கூட, ஷியாப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தனது கொள்கை தவறானது என உணர்ந்து சன்னிப் பிரிவில் சேரலாம். யாரும் தடுக்க முடியாது.

இது போன்ற சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனரே தவிர பிறப்பின் அடிப்படையில் அல்ல.

இது வர்ணாசிரமத்துக்கும், முஸ்லிம்களிடம் காணப்படும் பிரிவுகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடு.

மேலும் வர்ணாசிரம தர்மம் என்பது தீண்டாமையை நிலைநாட்டுவதற்காகவும், உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.

சன்னிகள், ஷியாக்களைத் தீண்டத் தகாதவர்கள் என்று கருதுவதில்லை. அது போல் ஷியாக்களும் கருதுவதில்லை. தவறான கொள்கையில் உள்ளனர் என்று ஒருவர் மற்றவரைப் பற்றி கருதுகிறார்களே தவிர பிறப்பால் தாமே உயர்ந்தவர்கள் என்று எந்தப் பிரிவும் கருதுவதில்லை.

அடுத்து முஸ்லிம்கள் ஏன் தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற கேள்விக்கு வருவோம். பொதுவாக மனிதர்களிடையே எப்படியெல்லாம் சண்டைகள் நடக்கின்றன என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு சரியான விடை காணலாம்.

ஒரே மொழி பேசக் கூடியவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.

ஒரே ஊரைச் சேர்ந்தவர்களிடையே சண்டைகள் நடக்கின்றன.

ஒரே குடும்பத்தவரிடையேயும் சண்டைகள் நடக்கின்றன.

ஒரு தாய்க்குப் பிறந்த இரண்டு சகோதரர்களுக்கிடையே சண்டைகள் நடக்கின்றன.

ஒரு மொழி பேசக்கூடிய மக்களிடையே சண்டைகள் நடக்க அம்மொழி எப்படி காரணமாக இல்லையோ, ஒரு மாநிலத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அம்மாநிலம் எப்படிக் காரணமாக இல்லையோ, ஒரு குடும்பத்தவரிடையே ஏற்படும் சண்டைகளுக்கு அக்குடும்பம் எப்படிக் காரணமாக இல்லையோ அது போல் தான் ஒரு மதத்தவரிடையே நடக்கும் சண்டைகளுக்கும் அம்மதம் காரணம் இல்லை.

இன்னும் சொல்வதானால் இவர்களிடையே சண்டைகள் நிலவிடக் காரணம் இஸ்லாத்தின் போதனைகளை அவர்கள் கைவிட்டது தான்.

கொள்கை சார்ந்து அல்லாமல் தொழில் சார்ந்தும் சில பிரிவுகள் முஸ்லிம்களிடம் ஏற்பட்டன.

மரைக்காயர் என்பது மரக்கலாயர் என்ற சொல்லின் திரிபாகும். மரக்கலாயர் என்றால் மரக்கலம் (படகு) சார்ந்த தொழில் செய்பவர் என்று பொருள்.

ஒரு காலத்தில் கடல் வழியாக வாணிபம் செய்வதில் முஸ்லிம்கள் முன்னணியில் இருந்தனர். மரக்கலம் வழியாக சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்ததால் அவர்கள் மரக்கலாயர் என்று குறிப்பிட்டுள்ளனர். பின்னர் இது மரைக்காயர் என்று ஆகிவிட்டது.

மரக்கலம் சார்ந்த தொழில் செய்தவர்கள் மரைக்காயர் என்று தம்மைக் குறிப்பிட்டதை நாம் ஏற்றுக் கொள்வோம். அந்தத் தொழில் செய்யாதவர்களும் தம்மை மரைக்காயர் என்று குறிப்பிட்டுக் கொள்வதால் இது சாதியைப் போல் தோற்றமளிக்கிறது.

யானையைப் பயிற்றுவிப்பவர் மாவுத்தர் என்று குறிப்பிடப்படுவது போல குதிரையைப் பயிற்றுவிப்பவர் ராவுத்தர் என்று குறிப்பிடப்படுவார்.

அன்றைய முஸ்லிம்களில் பலர் அரபு நாட்டுக் குதிரைகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயிற்றுவித்து பாண்டிய மன்னர்களிடம் விற்று வந்தனர். இதனால் அவர்கள் ராவுத்தர் எனப்பட்டனர்.

ஆனால் குதிரையுடன் எந்தத் தொடர்புமில்லாதவர்கள் தம்மை ராவுத்தர் எனக் குறிப்பிடுவதால் இதுவும் ஒரு சாதியைப் போல் தோற்றம் ஏற்பட்டு விட்டது.

தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இம்மண்ணில் பிறந்தவர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

ஆயினும் மிகக் குறைந்த அளவில் சிலர் அரபு நாடுகளிலிருந்து வந்து நமது நாட்டைத் தங்கள் தாயமாகக் கொண்டு இங்கேயே பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கிவிட்டனர்.

ஆரம்பத்தில் அவர்கள் ஒருவரை மற்றவர் அழைக்கும்போது லப்பைக் (வந்து விட்டேன்) என்று அரபு மொழியில் குறிப்பிட்டு வந்தனர். இதனால் அவர்களின் பெயரே லப்பை என்று ஆகிவிட்டது.

பல நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்று லப்பைகள் எனப்படுவோர் அரபு மொழியில் பேசுவதில்லை. அவர்களுக்கு அம்மொழி தெரியாது. இப்போதும் அவர்கள் லப்பை என்று கூறிக் கொள்வதால் இதுவும் சாதியைப் போல் தோற்றமளிக்கிறது.

எனவே முஸ்லிம்கள் இதை ஒரு பட்டம் போல் பயன்படுத்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதே சமயத்தில் முஸ்லிம்கள் மரைக்காயர், இராவுத்தர், என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொள்வதை சாதிப் பிரிவுடன் ஒப்பிடக்கூடாது.

ஏனெனில், அனைவரும் ஒரே வழிபாட்டுத் தலத்தில் ஒரே வரிசையில் நின்று தொழுவார்கள்.

ஒரே தட்டில் மரைக்காயரும், இராவுத்தரும் சாப்பிடுவார்கள்.

திருமண சம்பந்தமும் செய்து கொள்வார்கள்.

ஒரே அடக்கத்தலத்தில் தான் அனைவரும் அடக்கம் செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கிடையே தீண்டாமையோ, பாரபட்சமோ பிறப்பால் உயர்வு, தாழ்வோ கிடையாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயினும், இஸ்லாத்தில் சாதிகள் உள்ளன என்று பலரும் கருதுவதற்கு இது இடமளிப்பதால் இதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரை கூறியும் வருகிறோம்.

15. முஸ்லிம்கள் பழமைவாதிகளாக சித்தரிக்கப்படுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவது ஏன்? முஸ்லிம்கள் தங்களது எதிரிகளை இனங்கண்டு கொள்ளாதது ஏன்? அனைத்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை இந்துக்கள் என நினைத்து அவர்கள் எதிரிகளாகக் கருதுவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளியாகும் தலித் வாய்ஸ் இதழில் ஒரு வாசகர் கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்:

முஸ்லிம்கள் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டால் தான் இஸ்லாத்தின் பால் மற்றவர்கள் கவனத்தைத் திருப்ப மாட்டார்கள் என்பதற்காக திட்டமிட்டு இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனிதனைப் பலியிடுதல், ஜோதிடம் பார்த்தல், விதவை விவாகம் மறுத்தல், பெண் சிசுக்களைக் கொல்லுதல், தீண்டாமையைக் கடைபிடித்தல், போன்ற எல்லா விதமான பழமை வாதத்திலிருந்தும் முஸ்லிம்கள் முற்றிலும் விடுபட்டுள்ளனர்.

மாயம், மந்திரம், புரோகிதம் போன்ற பித்தலாட்டங்களிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்ட சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருவது கண்கூடாகத் தெரிந்த பின்பும் பழமைவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இஸ்லாம் வளர்ந்து விடக்கூடாது என்ற ஒரே நோக்கம் தான்.

தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் முஸ்லிம்கள் பகைவர்களாகக் கருதுகிறார்கள் என்பதும் தவறாகும்.

பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துத்துவ சிந்தனை இல்லாத மேல் ஜாதி இந்துக்களையே முஸ்லிம்கள் எதிரிகளாகக் கருதாத போது தங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களைப் பகைவர்களாகக் கருத மாட்டார்கள்.

ஆயினும் சிலரது சதியின் காரணமாக ஒரு சில பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பகைமை இருக்கிறது.

இத்தகைய மோதல்கள் குறைவான அளவே உள்ளன என்றாலும் இத்தகைய நிலைமை தாழ்த்தப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு பெரிய தடையாக உள்ளது என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். தங்கள் சுமூகமான நடவடிக்கை மூலம் இத்தகைய எண்ணத்தை நீக்கப் பாடுபட வேண்டும்.

16. ஒரு குர்ஆனை நம்பும் முஸ்லிம்கள் நூறு பிரிவுகளானது ஏன்?

கேள்வி: சென்ற 27-11-2001 hindu நாளிதழில் open page என்ற பக்கத்தில் islam at the crossrods என்ற தலைப்பில் m.riaz hassan என்ற இங்கிலாந்தில் இருப்பவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் உள்ள ஒரு சில விசயங்கள் பற்றிய விளக்கம் தேவை.

அக்கட்டுரையில் சிறு தலைப்பில் slow decline மெதுவாக அழிகிறது என்று எழுதியிருக்கின்றார். அதில் அவர் முன் வைக்கும் வாதம் முகமது நபி (ஸல்) அவர்கள் 72 பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிவார்கள் என்று கூறினார்கள். ஆனால், இப்போதோ 100க்கும் மேற்பட்ட பிரிவுகள் ஏற்பட்டுள்ளன என்றும், அனைவரும் தேர்வு செய்து இருப்பது ஒரே குர்ஆன் தான் என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் விளக்கம் என்ன?

மேலும் indian muslims என்கிற தலைப்பில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தவர்கள் இப்போது 53 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அங்கு அகதிகளாகவே உள்ளனர் எனக் கூறியுள்ளார். உண்மை தானா? ஏன்?

இதே கேள்வி ஒன்றைத் தான் எனது இந்து நண்பர் கேட்டார். நீங்கள் முஸ்லிம் என்று சொல்லி பாகிஸ்தான் சென்றால் உங்களைச் சேர்க்க மாட்டார்கள். பின்பு ஏன் சகோதரத்துவம் என்ற முறையில் பாகிஸ்தானை ஆதரிப்பதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் ஏன் அனுமதிக்கப்படுவது இல்லை. இதைப் பற்றிய விளக்கம் தேவை.

பதில்: இதெல்லாம் அறிவீனர்களின் வாதமாகும்.

ஒரு நாட்டுக்கு ஒரே ஒரு அரசியல் மற்றும் குற்றவியல் சட்டம் தான் உள்ளது.

அந்தச் சட்டத்தின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.

மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியில்லை என்று மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் பெஞ்சுகள் தள்ளுபடி செய்கின்றன. உச்ச நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்கின்றது. உச்சநீதிமன்ற பெஞ்ச் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கின்றது.

இப்படி உலகின் எல்லா நாடுகளிலும் இதுபோன்ற முரண்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம்.

அனைவருமே ஒரே சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்பளிக்கின்றனர்.

இதை அந்த மேதாவி எழுத்தாளர் குழப்பம் என்பாரா? விமர்சனம் செய்வாரா? நிச்சயம் செய்ய மாட்டார். சட்டம் ஒன்றாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வதில் தவறிழைக்கலாம். முக்கியமான பாயின்டுகளை ஒருவர் கவனிக்க மறுக்கலாம்.

இது போல் குர்ஆன் ஒன்று என்றாலும் அதைப் புரிந்து கொள்வதில் வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையானது தான். இந்த எழுத்தாளரின் கட்டுரையையே பலரும் பல விதமாகப் புரிந்து கொள்வார்கள்.

ஆயினும் இஸ்லாமிய சமுதாயத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் ஒன்றிரண்டு பிரிவினரைத் தவிர மற்றவர்களுக்கிடையே அடிப்படையான விஷயங்களில் எந்த வேறுபாடும் கிடையாது.

நி அல்லாஹ் ஒருவன். வேறு கடவுள் இல்லை.

#முஹம்மது நபி இறைத்தூதரும் இறுதித் தூதரும் ஆவார்கள்.

# வானவர்கள் உள்ளனர்.

# ஷைத்தான்கள் உள்ளனர்.

# உலகம் அழிக்கப்படும்.

# அழிக்கப்பட்டவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

# விசாரணை நடக்கும்.

#சொர்க்கம் நரகம் உண்டு.

# மது, சூது, லாட்டரி, விபச்சாரம், மோசடி, கலப்படம், திருட்டு போன்றவை குற்றச் செயல்கள்.

என 95 சதவிகிதம் விஷயங்களில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு ஏதுமில்லை. வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் முறைகளில் ஓரிரண்டு விஷயங்களில் மாறுதல் உள்ளன. இது போன்று வேறு சில சட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் உள்ளன.

அடிப்படையிலேயே மாறுபட்ட கருத்துகள் மற்ற மதங்களில் உள்ளன. எனவே அவரது விமர்சனம் அறியாமையின் வெளிப்பாடு. அவருடைய நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடு.

அடுத்து பாகிஸ்தான் பற்றி அவர் கூறுவதும் அவரது அறியாமையை எடுத்துக் காட்டுகிறது.

பாகிஸ்தானை இங்குள்ள முஸ்லிம்கள் ஆதரிப்பதாகக் கூறுவது திட்டமிட்ட அவதூறாகும். இங்குள்ள முஸ்லிம்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை.

நாட்டின் இரகசியங்களைக் காட்டிக் கொடுத்தவர்களின் பட்டியலில் முஸ்லிம்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் முஸ்லிமல்லாதவர்கள் தான்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான். இந்திய முஸ்லிம்கள் அல்லர்.

மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த பல போர்களில் முஸ்லிம்கள் மற்றவர்களை மிஞ்சும் வகையில் நாட்டுக்காகப் போராடியுள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் இன்னொரு முக்கியமான விஷயத்தை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியக் குடிமக்களில் முஸ்லிம்கள் மட்டுமே தமக்கு வைக்கப்பட்ட பரீட்சையில் தேறி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். வேறு எந்தச் சமுதாயத்துக்கும் இது வரை பரீட்சை ஏதும் வைக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்காக ஒரு நாடு உருவாகி யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அழைப்பு விடப்பட்ட போதும், ஆசை வார்த்தை காட்டப்பட்ட போதும் இங்கேயே தங்கியவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

தமக்கென ஒரு நாடு உருவாகும் போது எந்தச் சமுதாயத்தினரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவே செய்வார்கள். ஆனால் இந்தியாவில் தங்கிய முஸ்லிம்கள் மட்டும் தான் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு இங்கேயே தங்கி தங்கள் தேசப்பற்றை நிரூபித்துக் காட்டினார்கள்.

எனவே நாட்டைப் பிரித்துக் கொண்டு சென்றவர்களின் செயலுக்காக, இங்கே தங்கி தங்கள் உறுதிப்பாட்டை நிரூபித்தவர்கள் மீது பழிபோடுவதை விட மிகப் பெரிய அநீதி ஏதும் இருக்க முடியாது.

அடுத்து பாகிஸ்தானில் முஹாஜிர்கள் மரியாதையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வருவோம்.

முஹாஜிர்கள் என்றால் யார் என்பதைப் புரிந்து கொள்ள பாகிஸ்தான் பூகோள அடிப்படையில் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவின் இரண்டு மாநிலங்களை இரண்டிரண்டாகப் பிரித்தே பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி மேற்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. இன்னொரு பாதி பஞ்சாப் மாநிலமாக இந்தியாவில் உள்ளது.

அது போல் வங்காள மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாதி கிழக்கு பாகிஸ்தானாக ஆக்கப்பட்டது. மறு பாதி மேற்கு வங்க மாநிலமாக இந்தியாவில் உள்ளது.

கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வாங்காளம் இன்று பங்களாதேஷ் என்ற தனி நாடாக ஆகிவிட்டது.

மேற்கு பாகிஸ்தானாக இருந்த பாதி பஞ்சாப் மட்டுமே தற்போது பாகிஸ்தானாக உள்ளது.

நாடு பிரிக்கப்பட்ட போது பஞ்சாப்பில் இருந்த மக்கள் தங்கள் மண்ணோடு தான் பிரிந்து கொண்டார்கள்.

வங்காள மக்களும் அப்படியே பிரிந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம்களையும் பாகிஸ்தான் வருமாறு அன்று அழைப்பு விடப்பட்டது. இந்த அழைப்பை 99 சதவிகித முஸ்லிம்கள் நிராகரித்து விட்டனர். ஒரு சதவிகிதம் முஸ்லிம்கள் தான் உருவாகவுள்ள பாகிஸ்தானுக்குப் போனார்கள். இவர்கள் தான் முஹாஜிர்கள்.

பஞ்சாப், வங்காள மாநிலத்திலிருந்து நிலப்பரப்போடு பிரிந்தவர்களுக்கு வீடு வாசல், சொத்து சுகமெல்லாம் இருந்தன. வேறு மாநிலங்களிலிருந்து சென்றவர்களுக்கு அங்கே ஏதும் இல்லை.

எனவே தான் வீடு வாசல் அற்ற அகதிகளாக முஹாஜிர்கள் இருக்கின்றனர்.

இது மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நிலை அல்ல. உள்ளூர் வாசிகள், வந்தேறிகள் பிரச்சினையாகும்.

இன்னும் சொல்வதென்றால் பாகிஸ்தான் இஸ்லாத்திற்காகப் பிரிக்கப்படவில்லை. இன்றைய பாகிஸ்தான் மக்களிடமும், தலைவர்களிடமும் உள்ள மார்க்கப்பற்றில் கால்வாசி கூட அன்றைய மக்களுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவில்லை. இஸ்லாமிய அடைப்படையில்லாமல் பிரிந்ததால் தான் வந்தேறிகள் ஒரு விதமாகவும், உள்ளூர் வாசிகள் வேறு விதமாகவும் நடத்தப்படுகின்றனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் நடத்தப்படும் விதத்துக்கு என்ன காரணமோ அதே காரணத்துக்காகத் தான் பாகிஸ்தானில் இந்த நிலை.

எனவே பாகிஸ்தானை மேற்கோள் காட்டி இஸ்லாத்தை விமர்சிப்பதை ஏற்க இயலாது.

17. ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?

கேள்வி: நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காத நீங்கள், உங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி மதரஸாக்களுக்கு அனுப்புவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எவ்வாறு விடையளிப்பது.

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்: என்ன தான் படித்தாலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர் கல்வி கற்பதற்கு தனி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு இல்லாததால் பணம் கொடுத்துத் தான் இடம் பிடிக்கும் நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் தான் முஸ்லிம்கள் நவீன கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை.

அந்த நிலையும் சமீபகாலமாக மாறி வருவதைக் காண்கிறோம்.

வெள்ளையர்களை வெறுக்கிறோம் என்ற பெயரில் தேச பக்தி முற்றிப் போய் ஆங்கிலக் கல்வி படிக்கக் கூடாது என்று அன்றைய முஸ்லிம் அறிஞர்கள் அன்று அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று முஸ்லிம்கள் படிப்பை நிறுத்தினார்கள். காயிதே மில்லத் போன்றவர்களே படிப்பை பாதியில் விட்டனர்.

வெள்ளையர் காலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் தேசப் பற்றின் காரணமாக முஸ்லிம்கள் கல்வியைப் புறக்கணித்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் அளித்து வந்த இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.

முன்னோர்கள் தேசப்பற்றின் காரணமாக கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.

18 இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாதது ஏன்?

கேள்வி: கிறித்துவத்தைப் போன்று, இஸ்லாத்தில் சேவை மனப்பான்மை இல்லாத காரணத்தினாலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சேவைக்கு அவசியம் இல்லாததினாலும், ஒடுக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவத்தை நோக்கிச் செல்கின்றார்களாமே?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்:

இஸ்லாம் மார்க்கம் சேவைகள் புரிவதை வலியுறுத்தினாலும் கூட முஸ்லிம்கள் பின் தங்கியே உள்ளனர் என்பது உண்மை தான்.

இது போன்ற சேவைகள் செய்வதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படுகிறது. கிறித்தவ நாடுகள் அதிகமாக உதவுவது போல் முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை. இங்குள்ள முஸ்லிம்களுக்கும் வசதிகள் இல்லை. இதனால் இது போன்ற பணிகளில் குறைவாகவே முஸ்லிம்கள் ஈடுபடுகின்றனர்.

மேலும், இது போன்ற சேவைகளைக் காட்டி அறியாத மக்களை மதத்தின் பால் ஈர்ப்பதை இஸ்லாம் ஆர்வமூட்டவில்லை. கொள்கையை விளங்கி இணைவதையே இஸ்லாம் விரும்புகிறது. கிறித்தவ மிஷினரிகளுக்கு இத்தகைய காரியங்கள் மூலம் மதமாற்றம் செய்ய அனுமதி உள்ளது.

19. பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி ஏன்?

கேள்வி: பணக்கார முஸ்லிம்களுக்கும், ஏழை முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கின்றதே ஏன்?

பதில்:

பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையே இடைவெளி என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டு எங்குமே உள்ளது தான்.

ஆனால் மற்ற சமுதாயத்துப் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை விட முஸ்லிம் பணக்காரர்களுக்கும், முஸ்லிம் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைவாக உள்ளதே தவிர அதிகமாக இல்லை.

ஏழைகளுக்காக வாரி வாரி வழங்கக்கூடியவர்கள் முஸ்லிம்களில் தான் அதிகமாகவுள்ளனர்.

ஏழை முஸ்லிம்களிடம் விசாரணை நடத்தினால் இந்த உண்மையைச் சந்தேகமற அறியலாம்.

20. முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

கேள்வி: இன்றைய உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் முழுவதும் காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர் தான். இவர்களால் உலகில் சில தீமைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை விடப் பன்மடங்கு நன்மைகளை உலகிற்குச் செய்துள்ளனர். இன்று அரபு தேசங்களில் மக்கள் வசதியாக வாழ்வதற்கு வழி வகுத்தவர்கள் மேற்கத்திய நாட்டினர். எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல் நீரைக் குடிநீராக மாற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். ஆனால், முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றவில்லை. மாறாக, உலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு – தானும் அழிந்து கொண்டு, மற்ற நாட்டினரையும் அழித்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் செய்து கொண்டு இந்த உலகத்தை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி உலகத்திற்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்?

இன்று உலகில் கிறிஸ்தவர்கள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் ஆரம்பித்து தொண்டாற்றி வருகிறார்கள். அப்படி இந்த உலகத்திற்கு சேவை செய்த, கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என பிற மத நண்பர் கேட்கிறார். இதற்கு விரிவான பதில் அளிக்கவும்.

– அபூ மஸ்ஹாத், நெல்லிக்குப்பம்.

பதில்:

நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை நாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம்.

வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்…

(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)

அல்குவாரிஸ்மி 780-850 கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)

அல் ராஜி 844-946 மருத்துவம் (ரேஜஸ்)

அல் ஹைதம் 965-1039 கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)

அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு

இப்னு சீனா 980-1037 மருத்துவம் (அவிசென்னா)

அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்)

இப்னு ருஸ்து 1126-1198 மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)

ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்)

அல் தபரி 838 மருத்துவம்

அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்)

அல் மசூதி 957 புவியியல்

அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)

இப்னு ஹல்தூண் 1332 வரலாறு

இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)

இன்றைய சூழ்நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரி தான்.

இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.

மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.

மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.

முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரிய அளவில் ஊக்குவித்தனர்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களோ சுகபோகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை. ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

அந்த நண்பரின் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும்.

நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்களையும், மருத்துவ மனைகளையும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.

ஆனாலும், இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.

ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போராட்டங்களில் கல்வியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.

எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன. ஆனால், முஸ்லிம்களோ முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.

ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல்களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.

இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.

(காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)

கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம் என்று கூறினார்கள்.

இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதலைப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.

வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.

வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,

நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்கள்,

மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி

போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.

ஆனால், நாடு விடுதலையடைந்த பிறகு தான் அடிப்படைக் கல்வியிலிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.

ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.

சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.

இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்!

தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.

1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி

2) புதுக்கல்லூரி, சென்னை

3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி

4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை

5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்

6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி

7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்

8) காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்

9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை

10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்

11) முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு

12) மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்

13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை

14) கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)

15) சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை

உட்பட 18 கலைக்கல்லூரிகள்,

5 பெண்கள் கலைக் கல்லூரிகள்,

12 பொறியியல் கல்லூரிகள்,

8 பாலிடெக்னிக்குகள்

மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப் பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.

இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அந்த நண்பர் கூறுவது மீடியாக்களின் மூளைச் சலவையால் ஏற்பட்ட பாதிப்பு. உண்மை நிலை என்னவென்றால் மற்ற சமுதாயத்தில் தீவிரவாதிகள் சிலர் இருப்பது போல் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் வெறும் தீவிரவாதிகள் என்றோ, போராளிகள் என்றோ மீடியாக்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால், ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால் மட்டும் அவர்களது நடவடிக்கையுடன் இஸ்லாம் சேர்க்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று தவறாமல் மீடியாக்கள் குறிப்பிடுகின்றன.

இஸ்ரேல் பயங்கரவாதிகள் கூட யூதத் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதில்லை. இந்தப் பாதிப்பின் காரணமாகவே அவர் இவ்வாறு கருதுகிறார். தக்க சான்றுகளை முன் வைத்து அவரது தவறை உணரச் செய்யுங்கள்.

21. முஸ்லிம் பண்டிகைகள் நாட்டிற்கு நாடு மாறுபடுவது ஏன்?

கேள்வி: முஸ்லிம் பண்டிகைகள் மட்டும் நாடுதோறும் மாறுபடுவதேன்? சரியான கணிப்பு உங்களிடம் கிடையாதா? என வினவுகிறார் எனது கிறித்தவ மத சகோதரி. தாங்கள் தக்க விளக்கம் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

– ஏ. ஜம்ரூத் அஜீஸ், கொடுங்கையூர்.

பதில் : முஸ்லிம் பண்டிகைகள் மட்டுமின்றி மற்ற பண்டிகைகளும் கூட நாடுகள் தோறும் மாறுபட்டே வரும். அது தான் உலக அமைப்பாகும். உலகில் ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு நேரமாக இருப்பதை நாம் அறிவோம். இந்தியாவில் பகலாக இருக்கும் போது உலகின் பாதிப் பகுதிகளில் இரவாக இருக்கும்.

நாம் பகலில் கொண்டாடும் விழாவை நாம் மறு நாளுக்குள் நுழைந்த பிறகு தான் அவர்கள் கொண்டாட முடியும். உலகம் முழுவதும் ஒரே நேரமாக இருந்தால் மட்டுமே அனைவரும் ஒரே நேரத்திலும், ஒரே நாளிலும் எந்த விழாவையும் கடைபிடிக்க முடியும்.

சரியான கணிப்பு கிடையாதா? என்ற கேள்விக்கும் இது தான் விடையாகும்.

இஸ்லாம் கணிக்குமாறு நமக்குக் கூறவில்லை. பிறை பார்த்துத் தான் பண்டிகைகளைக் கொண்டாடுமாறு கூறுகிறது.

கிறித்தவ சகோதரி கூறுவது போல் கணிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போதும் உலகம் முழுவதும் ஒரே நாளில் எந்த விழாவையும் கொண்டாட முடியாது.

கணிப்புப்படி நமக்கு இன்று காலையில் பண்டிகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் இரவுப் பொழுதை அடைந்த அமெரிக்கா போன்ற நாட்டவர் மறு நாள் காலையில் தான் அந்தப் பண்டிகையைக் கொண்டாட முடியுமே தவிர நாம் கொண்டாடும் அதே நேரத்தில் கொண்டாட முடியாது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாத வகையில் தான் இந்த உலகம் அமைந்துள்ளது. பூமிக்கு எதிரும் புதிருமாக இரண்டு சூரியன்களை நிறுத்தினால் மட்டும் தான் இது சாத்தியப்படும். அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாது. அப்படிக் கொண்டாடுவதும் இல்லை.

மனிதர்களாகப் போட்டுக் கொண்ட டேட்லைன் காரணமாக இரண்டையும் ஒரே தேதி என்ற நாம் கூறிக் கொள்கிறோமே தவிர உண்மையில் அடுத்தடுத்த நாட்களில் தான் இந்தக் கொண்டாட்டம் நடக்கிறது.

நள்ளிரவு 12 மணிக்கு அமெரிக்காவில் புத்தாண்டு பிறக்கிறது என்றால் அதே நேரத்தில் பட்டப்பகலில் இருக்கும் நாம் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை.

இதைப் புரிந்து கொண்டால் முஸ்லிம்களின் பண்டிகைகள் வேறு வேறு நாட்களில் அமைவதைக் குறை கூற மாட்டார்கள்.

22. முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஏன் சண்டையிட்டுக் கொள்கின்றன?

கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே! என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார்.

– ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ.

பதில்:

இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான்.

முஸ்லிம் நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான சகோதரத்துவத்தைக் கடைபிடித்தால், ஒருவருக்கொருவர் உதவுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நாம் இருந்தால் அந்த நாடுகளின் நடவடிக்கைக்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நாம் கூறுவதை அவர்கள் நம்புவார்கள்.

எனவே முஸ்லிம் சமுதாயம் இது போன்ற கேள்விகளிலிருந்து மற்றவர்கள் நம்மை எந்த அளவுக்குக் கவனிக்கிறார்கள்? நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது நம்மவருக்குக் கூற வேண்டிய செய்தியாகும்.

முஸ்லிம்கள் என இன்று உலகில் வாழ்பவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து, இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.

மாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.

அதாவது இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு ஏற்காதவர்களே பெரும்பாலான முஸ்லிம்களாகவுள்ளதால் தான் அந்த நண்பர் சுட்டிக் காட்டுகிற நிலைமை இருக்கிறது. அதிலும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நிலைமை இதை விட மோசமாகவுள்ளது

அவர்களில் பலர் பெயரளவுக்குத் தான் முஸ்லிம்களே தவிர முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாச்சாரத்தின் அடிமைகளாகவே அவர்கள் உள்ளனர். எனவே தான் நாடு பிடிப்பதற்கும், இன்னபிற நோக்கத்திற்கும் அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதை நண்பருக்கு விளக்குங்கள்!

முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய இன்னும் கடுமையாக நாம் உழைத்தால் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்க முடியாமல் செய்யலாம்.

23. இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தோற்று விட்டது எனக் கருதலாமா?

கேள்வி: இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தனி மனிதனிடம் ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்துவதில்லை. ஒரு மதம் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களை அது அவனின் முன் ஜென்ம வினை (ஊழ்வினை) என்று ஒதுங்கிக் கொள்கிறது. மற்றொரு மதமோ என்ன தவறு செய்துவிட்டாலும் பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் போதும் என்கிறது. எனவே, இம்மதங்கள் தோற்றுப் போகவோ, அழியவோ வழியில்லை.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் தனி மனிதனுக்கு ஒழுக்க நெறிகளையும், நேர்மைப் பண்புகளையும் கடைபிடிக்க கடுமையாக வலியுறுத்துகிறது. ஆனால் அதை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மிக மிகச் சொற்பமாக இருக்கலாம். மற்றவர்கள் முஸ்லிம் வேடதாரிகளே. முஸ்லிம்களில் மிகப் பெரும்பாலோர் முஸ்லிம் பெயர் தாங்கிகளே.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் அடிப்படையில் தோற்று விட்டது எனக் கருதலாமா?

எம்.எஸ். இஸ்மாயீல் ஹுஸைன், கருங்கல்பாளையம்..

பதில்: எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு சித்தாந்தத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. அது அறிவுடைமையும் அல்ல.

மாறாக, அது ஏற்படுத்தும் விளைவுகளின் அடிப்படையில் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க வேண்டும்.

பலவித நோய்களையும் நீக்கக்கூடிய அருமருந்து ஒன்று உள்ளது என வைத்துக் கொள்வோம்.

இம்மருந்தை பலரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை;

வேறு சிலர் இம்மருந்தை வாங்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தாமல் உள்ளனர்;

இன்னும் சிலர் அதைப் பயன்படுத்தினாலும் அரைகுறையாக ஏனோ தானோ என்று பயன்படுத்துகிறார்கள்; மிகச் சிலர் மட்டும் அம்மருந்தைப் பயன்படுத்த வேண்டிய முறையில் பயன்படுத்துகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

இவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தாலும் இம்மருந்தைப் பயன்படுத்தியதால் மற்றவர்களை விட ஆரோக்கியமாக இவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மருந்து தோற்று விட்டது என்று நாம் கூற மாட்டோம். மாறாக அதன் மகத்துவத்தை உணராத மனிதர்கள் தோற்று விட்டார்கள் என்றே கூறுவோம்.

இது போல் தான் இஸ்லாம் என்னும் மருந்தை முழுமையாகவும், சரியாகவும் பயன்படுத்துகின்றவர்களிடம் நேர்மை, நாணயம், ஒழுக்கம், சிறந்த பண்பாடுகள், வீரம், துணிவு, பொது நலநோக்கு என்று பல சிறப்புத் தகுதிகள் காணப்படுகின்றன.

அரைகுறையாகப் பயன்படுத்தக் கூடியவர்களிடம் கூட மற்றவர்களிடம் காணப்படுகின்ற அளவுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.

மற்ற சமுதாயத்தின் பண்டிதர்கள் கூட தீண்டாமையை ஊக்குவிக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் உள்ள பாமரனும் கூட அதைத் தவறு என்று உணர முடிகின்றது.

இப்படி ஆயிரமாயிரம் நன்மைகளை இம்மார்க்கம் மக்களிடம் உருவாக்கியுள்ளது. அந்த அடிப்படையில் தான் இஸ்லாத்தை எடை போட வேண்டும். எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்ற அடிப்படையில் எடை போடக் கூடாது.

இந்த அளவுகோல் இஸ்லாத்திற்கு மட்டுமில்லை. எந்தக் கொள்கைக்கும் இதைத் தான் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

இப்போது நீங்கள் ஒரு கோணத்தில் கேள்வி கேட்கிறீர்கள். இப்படிக் காரண காரியத்துடன் கேள்வி கேட்பவர்கள் உலகில் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் உங்கள் கேள்வியோ அல்லது நீங்களோ தோற்று விட்டீர்கள் என்று கூற முடியாது. எனவே சரியான அளவுகோலில் எடை போட்டால் இஸ்லாம் மாபெரும் வெற்றி பெற்று விட்டது என்ற முடிவுக்குத் தான் வர முடியும்.

24. இஸ்லாம் மார்க்கமா? மதமா?

கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆகையால், இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம், கிறித்தவ மதம், சீக்கிய மதம், பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால், இஸ்லாமிய மதம் என்று கூறாமல், இஸ்லாம் மார்க்கம் என்று கூறுவது ஏன்?

– டி. பாலு, கோவை.

பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை.

மார்க்கம் என்றால் பாதை, வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்? என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம்.

மலஜலம் கழித்தல் முதல், மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல், பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள், விசாரணைச் சட்டங்கள், உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும், புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத் தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

மதம் என்பது வெறி என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. (உம்: மதம் பிடித்த யானை) இதன் காரணமாகவும் முஸ்லிம்கள் இவ்வார்த்தையைத் தவிர்க்கின்றனர்.

25. முதலில் தோன்றிய மதம் எது?

கேள்வி: உலகில் மதம் மாற்றப்படும் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், அவர்களுக்கு மதங்கள் போதிக்கப்படுவதில்லை என்றும், புத்த மதம் உலகில் தோன்றிய முதல் மதம் என்றும், பின்பு கிறித்தவம். அதன் பின்பு இஸ்லாம் வந்தது என்றும் இவையனைத்திற்கும் முன்பு தோன்றியது இந்து மதம் என்றும் முஸ்லிமல்லாத என் நண்பர் கேட்கிறார்.

ராஜா கவுஸ், அல் படாயா, சவூதி அரேபியா.

இந்து மதத்தின் தோற்றம் எப்போது என்பதற்கு வரலாற்றுக் குறிப்பு இல்லை. இஸ்லாம், கிறித்தவம், புத்தம் ஆகிய மதங்களின் தோற்றத்துக்கு வரலாற்றுக் குறிப்பு உண்டு.

எனவே தான் இம்மதங்கள் தோன்றுவதற்கு முன் இந்து மதம் தான் இருந்தது என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இந்து மதம் என்று ஒரு மதமே இல்லை என்பது தான் வரலாற்று உண்மை.

இந்து மதம் என்றால் என்ன என்று அவரிடம் இலக்கணம் கேளுங்கள்! அவர் கூறும் இலக்கணத்தை 99 சதவிகிதம் இந்துக்கள் மறுப்பார்கள். ஆம். இந்து மதம் எது என்பதற்கு நூற்றுக்கணக்கான இலக்கணங்கள் உள்ளன. ஒவ்வொரு இலக்கணத்திற்கும் ஒவ்வொரு காரணம் கூறுகின்றனர்.

யார் முஸ்லிம் இல்லையோ, யார் கிறித்தவர் இல்லையோ அவர் தான் இந்து என்று எதிர் மறையாகத் தான் இந்துக்களுக்கு இந்திய அரசு இலக்கணம் கூறுகிறது.

இந்து மதம் என்ற பெயர் இம்மதத்திற்குரியது அல்ல என்று காஞ்சிப் பெரியவாள் கூட கூறியுள்ளார்.

எனவே, நூற்றுக்கணக்கான மதங்களை ஒருங்கிணைப்பதற்காகத் தான் இப்பெயர் பிற்காலத்தில் சூட்டப்பட்டது. சைவம், வைணவம், ஜைனம், சமணம் என்று பல நூறு மதங்களுக்கும் பொதுப் பெயராக இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.

இவற்றில் எது முதல் தோன்றியது என்பதில் அவர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு உள்ளது.

ஆனால், அகில உலகுக்கும் ஒரு கடவுள் என்ற கொள்கை முதல் மனிதரிலிருந்தே இருந்து வருகிறது. இந்து மதத்தின் முக்கிய நூல்களிலும் கூட ஓரிறைக் கொள்கை குறித்த குறிப்புகள் இன்றளவும் கிடைக்கின்றன. இக்கொள்கையின் பெயர் தான் இஸ்லாம்.

எனவே, கடவுள் ஒரே ஒருவன் தான் என்ற கொள்கை தான் முதல் கொள்கை. இக்கொள்கையில் இஸ்லாம் மட்டும் அறவே சமரசம் செய்து கொள்ளாமல் கடைபிடித்து வருகிறது என்பதை அவருக்கு விளக்குங்கள்!

26. திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?

கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டு, விட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனை, ஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்? என்று பிற மத நண்பர்கள் கேட்கிறார்.

– எஸ்.எம்.ஹெச். கபீர், கீழக்கரை.

பதில்:

மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 14:4

ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்.

அரபு மொழி தான் தேவமொழி என்பதோ, அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது.

மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியையும் ஒரு வழிகாட்டி நெறியையும் கொடுத்து அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டி நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு மொழியைத் தேர்வு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ, மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்கு தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

அரபு மொழி பேசுபவன் வேறு மொழி பேசும் மக்களை விட சிறந்தவன் அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் செய்ததே இதற்குப் போதிய சான்றாகும்.

நூல்: அஹ்மத் 22391

27. முஹம்மது நபி, இயேசுவை விட சிறந்தவரா?

கேள்வி: என்னுடன் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் கிறிஸ்தவ நண்பர்கள்

(1) இயேசு திரும்பி வருவார்; முஹம்மது வர மாட்டார் எனவும்

(2) இயேசு இறைவனுடன் (மகனாக) இருக்கின்றார்; உங்கள் முஹம்மது ஏன் மரணித்தார்? இயேசு போல் ஏன் மேலே செல்லவில்லை?

எனவே இயேசு இறைவனின் மகன். அவரும் எங்கள் கடவுள் என்று கூறுகின்றனர். இவர்களுக்கு எவ்வாறு விளக்கம் தரலாம்.

– ஜெ. அபூபக்கர், ஜித்தா.

பதில்:

தந்தையின்றி அவர் பிறந்தது, இன்றளவும் உயிருடன் இருப்பது போன்ற காரணங்களைக் கூறித் தான் இயேசுவை இறை மகன் என்று நம்புகின்றனர்.

ஆனால் இந்தத் தன்மைகள் இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கும் இருந்ததாக பைபிளே கூறுகிறது.

கடவுளுக்கு என்று சில தன்மைகள் அவசியம் என்று பைபிள் கூறுகிறது. அதே பைபிள் இயேசுவிடம் அந்தத் தன்மைகள் இல்லை எனக் கூறுகிறது.

இது போன்ற வசனங்களை நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.

யாத்திராகமம் 4:22, சங்கீதம் 2:7, இரண்டாம் சாமுவேல் 7:14, எரேமியா 31:9, சங்கீதம் 68:5, உபாகமம் 14:1, மத்தேயு 6:14,15, 5:9, 23:9, லூக்கா 6:35, அப்போஸ்தலர் 17:29, ரோமர் 8:16 ஆகிய வசனங்களில் இயேசு மட்டுமின்றி இன்னும் பலரும், முழு மனித சமுதாயமும் கடவுளின் குமாரர்கள் என்று கூறப்படுகின்றது.

இதிலிருந்து குமாரன் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

மத்தேயு 8:20, 9:6, 9:8, 16:13, 16:27, 17:12, 17:22, 19:28, 20:18, 20:28, 26:24, 26:45 ஆகிய வசனங்கள் இயேசு மனுஷ குமாரன் தான் என்று பிரகடனம் செய்கின்றன.

லூக்கா 3:38, ஆதியாகமம் 2:21,22, எபிரேயர் 7:3,4 ஆகிய வசனங்களில் இன்னும் பலரும் இயேசுவைப் போல தந்தையின்றி பிறந்ததாக பைபிள் கூறுகிறது.

ஆதியாகமம் 5:24, எபிரேயர் 11:5, இரண்டாம் ராஜாக்கள் 2:11 ஆகிய வசனங்கள் இயேசுவைப் போலவே வேறு சிலரும் இன்று வரை உயிருடன் இருப்பதாகக் கூறுகின்றன.

எசக்கியேல் 28:9, சங்கீதம் 121:4, மத்தேயு 3:13, 4:1, 4:12, 8:20, 8:24, 15:17, 17:27, 19:28, 23:33, 26:38, 26:67, 27:29, யோவான் 1:18, 8:59, 13:5, 19:28, லூக்கா 2:21, 11:27, 24:38, 24:39, 24:40, 24:42, மார்க்கு 14:33, 14:34 ஆகிய வசனங்களும், இன்னும் பல வசனங்களும் இயேசுவிடம் கடவுள் தன்மை எதுவுமில்லை; அவரிடம் மனிதத் தன்மைகள் தான் முழுக்க முழுக்க இருந்தன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகின்றன.

இன்னும் பைபிளின் எண்ணற்ற வசனங்களில் இயேசு கடவுளின் அடிமை தான்; தூதர் தான்; நிச்சயமாக மகனில்லை என்று கூறுகின்றன.

இது குறித்து விரிவாக அறிய

இயேசு இறைமகனா

என்ற நமது நூலை வாசிக்கவும்.

28, காட்டுவாசிகளின் நிலை என்ன?

கேள்வி: இஸ்லாத்தை ஏற்காதவர்களுக்கு நரகம் எனக் கூறுகிறீர்கள். அப்படியானால் இஸ்லாமிய போதனைகள் சென்றடையாத காட்டுவாசிகள் போன்றோரின் நிலை என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கின்றனர்.

எஸ். சீனி சலாபுதீன், எம். ராஜா முஹம்மது, எம். சாஹுல் ஹமீது, டி. சீனிநைனா, எஸ். சித்தீக், பி. அப்துல் ரஹ்மான் ஷாஹிது கூல்பார், பெரிய கடை வீதி, மண்டபம்.

பதில் :

மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் கேள்வியைத் தான் அவன் மூஸா நபியிடம் கேட்டான்.

முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன? என்று அவன் கேட்டான். அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான் என்று அவர் கூறினார். (பார்க்க திருக்குர்ஆன் 20:51, 52)

இப்போது தான் நீர் ஒரே ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்? என்பது இக்கேள்வியின் கருத்து.

அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவு எடுக்க மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான் என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள். அவர்கள் நரகவாசிகள் என்றோ, சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன் முடிவை இறைவனிடம் விட்டு விட்டார்கள். நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.

யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.

எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக உங்களை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிலோடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.

29. 1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?

கேள்வி: திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்பதற்கான ஆதாரம் என்ன? என்று பிற மத சகோதரர் கேட்கிறார்.

– ஆஸிப் இப்ராஹீம், புதுக்கோட்டை-1.

பதில்:

முஹம்மது நபியவர்கள் கற்காலத்தில் வாழ்ந்தவரல்லர். வரலாறுகள் எழுதப்படுகிற காலத்தில் வாழ்ந்தவர். முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலம், அவர்களது பிரச்சாரம், சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் இவ்வரலாற்றைப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக் கணக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆனுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்பூல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றைக்கும் காட்சிக்குக் கிடைக்கின்றன.

திருக்குர்ஆனை சில வருடங்களுக்கு முன்னால் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பந்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

30. இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

கேள்வி : இஸ்லாம் மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் வீடு, கடைகள் அமைக்கின்றார்களே? இஸ்லாம் எப்படி அறிவுபூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கம் தரவும்.

மு. ஷேக்மைதீன், தென்காசி.

பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது. இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.

கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்ப வேண்டும்.

நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள். அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.

உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள். மாற்றி அமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால் இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறை கழன்று விட்டது எனக் கூறுவோம். உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான் நிறுத்துகின்றனர்.

ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை – தீமைகளை இறைவன் நிர்ணயம் செய்கிறான். இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம் செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால், வீட்டின் அமைப்பை மாற்றுவதால், அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள் என்று இறைவன் நினைத்து ஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?

இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விட நாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.

ஐயா! என் பெயரை மாற்றிக் கொண்டு, அதிர்ஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால் என்னைத் தண்டிக்காதீர்கள்! என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால் தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இது போன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?

நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.

உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புகிறார். அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படி அடைக்கிறீர்கள். உங்களுக்கென அனுப்பப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல் திரும்பி விடுவாரா? பணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.

சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போது, இறைவனுக்கு இது விளங்காது; ஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!

நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமான சாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரம் உண்மை என்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.

வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாக உள்ளது.

வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். ஒரு கட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாரா? நிச்சயமாக இல்லை. எவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களை நம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான். உலகில் தான் முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனை விபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான். அறியாத முஸ்லிம்கள் இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.

31. இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா?

கேள்வி : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், கலீஃபாக்களாக அபூபக்கர் (ரலி), அலீ (ரலி) மற்றும் ஹசன் (ரலி) ஆட்சி பொறுப்பேற்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு இல்லாததால் தான் முறையே மாமனார், மருமகன், பேரன் என பொறுப்பேற்க முடிந்ததா? இஸ்லாம் வாரிசு அரசியலை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் என்ன பதில் கூறுவது. விளக்கம் தரவும்.

-கா.ஷபீயுல்லாஹ், ஏரிப்புதூர்

பதில்: ஒருவரிடம் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்படுவதற்கு வாரிசுரிமை ஒரு காரணமாக ஆகாது. எந்தப் பணியையும் அதற்குத் தகுதி உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனார் என்ற அடிப்படையில் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நிச்சயமாக அப்பதவி வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப் போனால் அப்பதவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்கரிடம் வழங்கிச் செல்லவில்லை. யாரையும் நியமனம் செய்யாமல் தான் மரணித்தார்கள்.

நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என்பதில் நபித்தோழர்களிடையே மிகப்பெரிய கருத்து மோதல் எல்லாம் ஏற்பட்டது. அபூபக்கருக்கும் உள்ளூர் வாசிகளின் தலைவரான சஅது அவர்களுக்கும் கடும் போட்டியும் நிலவியது.

மக்களின் அதிகப்படியான ஆதரவின் காரணமாக அபூபக்கர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவரிடம் அந்தத் தகுதி இருந்ததை மக்கள் கண்டதால் தான் பொறுப்பை ஒப்படைத்தனர்.

ஒரு மனிதனின் சொத்துகளை அவனது வாரிசுகள் அடைவார்கள் என்று உலகுக்குச் சட்டம் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் விட்டுச் சென்ற சொத்துகள் எதற்கும் தனது குடும்பத்தார் வாரிசு இல்லை; அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் எனப் பிரகடனம் செய்தார்கள்.

தமக்கு உடமையான சொத்துகளையே அரசுக் கருவூலத்தில் சேர்க்குமாறு வலியுறுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு உடமையாக இல்லாததைத் தமது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருப்பார்களா?

திருக்குர்ஆனின் போதனையும், நபிகள் நாயகத்தின் அறிவுரைகளும் குலம், கோத்திரத்தின் அடிப்படையில் ஒருவரும் சிறப்படைய முடியாது என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றன.

அதே சமயத்தில் ஒரு ஆட்சித் தலைவரின் வாரிசுக்கு அதற்கான தகுதி இருந்து அந்தத் தகுதியின் காரணமாக அப்பதவியைப் பெற்றால் அதை இஸ்லாம் எதிர்க்காது என்று கூறலாம். இதனால் தான் அலீ (ரலி) அவர்களுக்குப் பின் அவர்களின் மகன் ஹஸன் (ரலி) அவர்களிடம் மக்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள்.

32. அசையும் பூமியை அசையாத பூமி என்று குர்ஆன் கூறுவது ஏன்?

கேள்வி : …உங்களுடைய பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுவினான்.

திருக்குர்ஆன் 16:15

என்று இறைவசனம் கூறுகின்றது. ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. சுற்றுவதும் அசைவுகளால் நிகழ்வது தானே. ஆனால் இறைவன் அசையாதிருப்பதற்காக மலைகளை நிறுத்தியுள்ளோம் என இறை வசனத்தில் வருகிறதே! குழப்பமாக உள்ளது. விளக்கம் தரவும்.

-ஜீ. முஹம்மது ஜலீல், நாகப்பட்டினம்

பதில் : திருக்குர்ஆன் வசனம் 16:15-க்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழாக்கம் தவறானதாகும். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக என்று பொருள் கொள்ள முடியாது. உங்களைப் பூமி ஆட்டம் காணச் செய்யாதிருக்க என்பது தான் அதன் சரியான அர்த்தமாகும்.

நாம் வாழ்கின்ற இப்பூமி பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கும் ஒரே அளவுடைய தாகவோ, ஒரே கனம் உடையதாகவோ இல்லை. மேலடுக்கு மென்மையாகவும் கீழடுக்கு கடினமாகவும் உள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஒரு உருண்டையை பூமி சுற்றும் வேகத்திற்கு சுற்றினால் மென்மையான பகுதி வேகமாகவும், கடினமான பகுதி குறைந்த வேகத்திலும் சுற்றும். இதனால் மேல் பகுதி மையப் பகுதியுடன் உள்ள ஈர்ப்பு சக்தியை இழந்து விடும். மேலே உள்ள பொருட்கள் பறக்க ஆரம்பித்து விடும்.

ஒரு பலகையின் மீது ஒரு அட்டையை வைத்து அப்பலகையை வேகமாகத் தள்ளினால் பலகைக்கு எதிர் திசையில் அட்டை பறந்து வந்து விழுவதை நீங்கள் காணலாம். இரண்டும் சமமான கனமுடையதாக இல்லாததும் இரண்டுக்கும் இடையே இணைப்பு இல்லாததுமே இதற்குக் காரணம்.

பலகைக்கு மேல் வைக்கப்பட்ட அட்டையையும், பலகையையும் இணைக்கும் வகையில் நான்கு ஆணிகளை அறைந்து இணைத்து விட்டு பலகையை எவ்வளவு வேகமாகத் தள்ளிவிட்டாலும் பலகையின் வேகத்திலும், திசையிலும் அட்டையும் சேர்ந்து செல்லும்.

அது போல் தான் பூமியின் மென்மையாக பகுதியையும், கடினமான பகுதியையும் இணைக்கும் வகையில் ஆணிகளைப் போல் மலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதனால் தான் அனைத்து அடுக்குகளும் ஒரே சீராகச் சுழல முடிகிறது.

மலைகள் இல்லாவிட்டால் பூமியின் மேற்பகுதி, பூமியின் கீழ்ப்பகுதிக்கு எதிர்த் திசையிலும், மையப் பகுதியின் பிடிப்பை விட்டு விலகியும் தாறுமாறாகச் சுற்றும். நாமெல்லாம் பந்தாடப்படுவோம். இந்த மாபெரும் அறிவியலைத் தான் அவ்வசனம் கூறுகிறது.

33. ஏன் தத்து எடுக்கக் கூடாது?

கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாமல் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் குழந்தைகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக திகழலாம். இது கூடாது என்பதினால் இதை விட மோசமான டெஸ்ட் டியூப் பேபி என்ற முறையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்று கேட்டதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை. விளக்கம் தரவும்.

எம்.எஸ். முஹம்மது ஹபீபுல்லாஹ் சீர்காழி

பதில் : குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்களின் குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இவ்வாறு எடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளைப் பெற மாட்டார்கள் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை அவர் மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனில்லை. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துகளுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல் வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் இல்லை.

உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும் போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம்.

ஒருவனை நாம் எடுத்து வளர்க்கிறோம். நம் வீட்டில் நமது உடன் பிறந்த சகோதரிகள் உள்ளனர். இவர்களுக்கும் வளர்க்கப்பட்டவனுக்கும் எந்த விதமான உறவும் கிடையாது. எனவே அன்னிய ஆண்களுடன் நடந்து கொள்ள வேண்டிய வகையில் தான் அவனுடன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இரத்தம் சம்பந்தம் இல்லாததால் தந்தையின் சகோதரிகள் என்று அவர்களை அவன் கருத மாட்டான். இதனால் விபரீதங்கள் ஏற்படலாம்.

வளர்க்கப்பட்டவனிடம் நீ என் மகன் தான் என்று கூறி ஏமாற்றுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஒவ்வொருவரையும் அவரது தந்தையின் பெயரிலேயே அழைக்க வேண்டும்.

எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான்.

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:4,5

நீ இன்னாரின் மகன் தான்; எனக்குக் குழந்தையில்லாததால் உன்னை எடுத்து வளர்க்கிறேன் என்று தான் அவனிடம் கூற வேண்டும். உலகத்துக்கும் இப்படித் தான் கூற வேண்டும். இன்னொருவருக்குப் பிறந்தவனை தனக்குப் பிறந்தவன் எனச் சொந்தம் கொண்டாடுவதை இஸ்லாம் தடுக்கிறது.

குழந்தைகளை எடுத்து வளர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை.

34. புத்தர் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?

கேள்வி: புத்தர் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன? என்று புத்த மத நண்பர் கேட்கிறார். அவருக்கு எப்படி விளக்கம் கூறுவது?

– இலங்கை எம்.ஜே.எம். நிஜாம்தீன், ஜித்தா

பதில்:

குர்ஆன், உலகத்தில் வந்த ஒவ்வொருவரையும் பற்றிக் குறிப்பிடும் வரலாற்றுப் புத்தகமல்ல. அவ்வாறு எழுதப்படுவதாக இருந்தால் இப்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு பெரிதாக குர்ஆன் ஆகி விடும்.

மனிதன் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தால் அது நன்மை தரும் என்பதை மட்டுமே குர்ஆன் கூறும். அது தான் மனிதனுக்குத் தேவையானது. ஒரு சிலருடைய வாழ்க்கையில் மனித குலம் பெற வேண்டிய படிப்பினைகளை மட்டும் குர்ஆன் அவ்வப்போது சுட்டிக் காட்டும்.

எனவே தான் குர்ஆனில் புத்தர் பற்றிக் கூறப்படவில்லை. கூறப்படாததால் எந்தக் குறையும் இல்லை.

அதே சமயம் புத்தர் பற்றி எத்தகைய முடிவை மேற்கொள்வது என்று சிந்தித்தால் அதற்கான விளக்கம் இஸ்லாத்தில் உண்டு.

புத்தர் ஒரு காலத்தில் பிறந்தார். பின்னர் இறந்து விட்டார். இவ்வுலகம் படைக்கப்பட்டு இலட்சோப லட்சம் வருடங்கள் கடந்து விட்டன. அவற்றுள் சுமார் நூறு வருடங்களுக்குள் மட்டுமே புத்தர் வாழ்ந்திருப்பார். இத்தகைய ஒருவர் கடவுளாக இருக்க முடியாது. நம்மைப் போலவே வாழ்ந்து மறைந்தவரை வழிபட முடியாது; வணங்க முடியாது.

அவர் கடவுளாக இருந்தார் என்றால், உலகம் தோன்றி பல இலட்சம் வருடங்களாக அவர் இல்லாமல் இருந்தாரே அப்போது இவ்வுலகத்தை யார் நிர்வகித்தார்? என்றெல்லாம் திருக்குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு புத்தரை ஆய்வு செய்யலாம். அவரை வழிபடுவது தவறு எனக் கூறலாம்.

அது போல் அவரது புலால் உண்ணாமை என்ற கொள்கை எக்காலத்துக்கும் பொருந்தாது. மனித குலத்துக்கு நன்மை தராது என்று ஆய்வு செய்வதற்கான வாசலை திருக்குர்ஆன் திறந்து வைத்துள்ளது.

எனவே புத்தரானாலும், ராமரானாலும், கன்பூஷியஸ் ஆனாலும் நேற்று தோன்றிய ரஜ்னீஷ் ஆனாலும் இன்றைக்கு இருக்கிற சாய்பாபாக்கள் ஆனாலும் அவர்களைப் பற்றி எத்தகைய முடிவுக்கு வரலாம் என்று ஆராயப் புகுந்தால் திருக்குர்ஆனில் மிகத் தெளிவான விடை உள்ளது. இவர்களது பெயர்கள் தான் குர்ஆனில் இருக்காதே தவிர இவர்களது நடவடிக்கைகள் குறித்து என்னென்ன முடிவெடுக்கலாம் என்பதற்கு விடை இருக்கிறது. அதை உங்கள் புத்த மத நண்பருக்குக் கூறுங்கள்.

35. பிற மதத்தவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா?

கேள்வி : பிற மத நண்பர்கள் இருவர் நோன்பு வைத்தும், தொழுதும் வந்தார்கள். அதை நமது சகோதரர் ஒருவர் நீங்கள் நோன்பு நோற்பதும், தொழுவதும் பாவம். அதனால் இனி நோன்பு வைக்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அவர்களிடம் நீங்கள் சுன்னத் செய்யவில்லை. கலிமா சொல்லவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவர்கள் நோன்பு வைக்கலாமா? தொழலாமா? அவர்களுக்கும் நன்மை கிடைக்குமா?

குடவாசல் எம். கமால் பாட்சா, மயிலை.

பதில் :

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நாம் இத்தகையோரைத் தடுக்கலாமா? என்பது முதல் விஷயம்.

இதனால் அவருக்குப் பயன் ஏற்படுமா? என்பது இரண்டாவது விஷயம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இஸ்லாத்தை ஏற்காத சிலர் முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழுகையிலும், இன்ன பிற வணக்கங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இன்னும் சொல்லப் போனால் போர்க் களத்திற்குக் கூட நபிகள் நாயகத்துடன் சென்றனர்.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. சுயநலனுக்காகவும், உலக ஆதாயம் கருதியும் இப்படிச் சிலர் நடிக்கிறார்கள் என்று குர்ஆன் மூலம் நபிகள் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் அவர்களில் ஒருவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடைசிக் காலம் வரையிலும் இத்தகையோர் இருந்தனர்.

நீங்கள் சுட்டிக் காட்டுவோர் அவ்வாறு நடிக்கின்ற சந்தர்ப்பவாதிகள் அல்லர். இஸ்லாத்தில் சில காரியங்கள் அவர்களுக்கு உண்மையாகவே பிடித்துள்ளன. அதில் கவரப்பட்டு அதைக் கடைப்பிடிக்கும் போது இன்னும் பல அம்சங்களை அவர்கள் உள்ளூர விரும்பலாம்.

முஸ்லிமுக்குப் பிறந்து விட்டு சமாதிகளை வணங்குவோரை விட இவர்கள் மேலானவர்கள் எனலாம்.

வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கும், சுன்னத் செய்வதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சுன்னத் செய்வது என்பது விரும்பத்தக்க நன்மை பயக்கும் ஒரு காரியமாகத் தான் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. கட்டாயக் கடமையாக கூறப்படவில்லை. சுன்னத் என்ற சொல்லுக்கு கட்டாயக் கடமையில்லாத நிலையில் விரும்பத்தக்க நபி வழி என்பதே பொருள்.

இஸ்லாமியக் கொள்கை முழக்கமான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நம்பிக்கை கொண்டு வாயால் மொழிவது அவசியம் தான்.

அவர் நம்பிக்கை கொண்டவரா? இல்லையா? என்பதற்கு நாம் யாரும் சான்றிதழ் கொடுக்க முடியாது. ஆனால் தொழுகை, நோன்பு மூலம் நம்பிக்கை இருப்பதை வெளிப்படுத்துகிறார்.

யார் நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை உண்கிறாரோ அவர் முஸ்லிம் ஆவார். முஸ்லிமுக்கு உரிய எல்லா உரிமையும் அவருக்கு உண்டு என்பது நபி மொழி.

(நூல்: புகாரி 378)

எனவே இத்தகையோரைத் தடுக்கக் கூடாது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வெகு வேகமாக இஸ்லாம் பரவுவதைக் கேள்விப்பட்டு பூரிப்படைகிறோம்.

பெரும்பாலும் எவ்வாறு பரவுகிறது?

பள்ளிவாசலுக்கு வந்து ஓரிரு நாட்கள் முஸ்லிம்களின் தொழுகை முறையைப் பார்ப்பார்கள். பிறகு அவர்களும் முஸ்லிம்கள் செய்வதைப் போல் உளூச் செய்து சேர்ந்து தொழுவார்கள். அதில் கிடைக்கும் மன நிறைவால் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள். வேறு வகையிலும் இஸ்லாம் பரவினாலும் இப்படித் தான் அதிக அளவில் பரவுகிறது.

எனவே, இத்தகையோரை விரட்டியடிக்காது ஒழுங்குகளைச் சொல்லிக் கொடுத்தால் நமக்கே அறிவுரை கூறும் அளவுக்கு உயர்வார்கள்.

இது தடுப்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.

தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைச் சிரமப்பட்டு நிறைவேற்றும் அந்தச் சகோதரர்கள் மறுமையில் அதற்கான பலனை அடைய வேண்டுமானால் வேறு கடவுள் வழிபாடுகளை அவர்கள் விட்டு விட வேண்டும். பல கடவுள் நம்பிக்கையும், ஒரு கடவுள் நம்பிக்கையும் ஒரு உள்ளத்தில் இருக்கக் கூடாது என்பது இறைவன் கவனிக்கும் முதல் விஷயமாகும்.

ஒரே ஒரு கடவுள் தான் உலகிற்கு இருக்க முடியும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்பதையும் நம்புவார்களானால் இந்தச் செயல் அர்த்தமுள்ளதாக அமையும்.

36. பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது ஏன்?

கேள்வி: பிற மதத்தவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று குர்ஆனில் உள்ளதே! ஆதலால் எங்களை நண்பர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று பிற மத நண்பர் கேட்கிறார்.

ஏ.கே. அப்துல் சலாம், நாகர்கோவில்

பதில் : திருக்குர்ஆனின் 3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23 ஆகிய வசனங்களில் நீங்கள் சுட்டிக் காட்டுகின்ற கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.

இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணுகின்றனர். இவ்வாறு எண்ணுவது தவறாகும்.

திருக்குர்ஆனின் வசனங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அருளப்பட்டவை. சில வசனங்களைச் சரியாக புரிந்து கொள்ள அது அருளப்பட்ட சந்தர்ப்பத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள்.

எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது.

இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 5:57)

உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 60:2)

உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு, உங்களையும், நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 60:1)

மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும் நபிகள் நாயகத்தையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 60:8-9)

வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 3:118)

அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

(பார்க்க : திருக்குர்ஆன் 5:82)

ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 5:2, 5:8)

உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்!

(பார்க்க : திருக்குர்ஆன் 9:4)

முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.

பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் முஸ்லிமல்லாதவர்களில் போர்ப் பிரகடனம் செய்யாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் பலர் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர்.

(பார்க்க : புகாரி 1356)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர்.

(பார்க்க: புகாரி 2916, 2068)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர்.

(பார்க்க: புகாரி 2617)

யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர்.

(பார்க்க: புகாரி  2412,2417)

இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள்.

இன்னும் சொல்லப்போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது. போர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் மேற்கண்ட வசனங்கள்.

37. பிற மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

கேள்வி : எனது பிற மத நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார்.

எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி

பதில் :

பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஅபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான். அவர்களின் பொருட்செலவில் தான் கஅபா புதுப்பிக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதில் அதற்காக மண் சுமந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியை நிறுவி கஅபா ஆலயத்தையும் கைவசப்படுத்திய போது முஸ்லிமல்லாதவர்களின் பொருட்செலவில் கட்டப்பட்டதால் அதை இடித்துவிட்டு கட்டவில்லை. இடித்துவிட்டு கட்ட நினைத்தால் அது அவர்களுக்கு மிக எளிதாகவே சாத்தியமாகியிருக்கும்.

முஸ்லிமல்லாதவர்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அங்கு தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

கஅபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டவும் அவர்கள் சிந்தித்ததுண்டு, அதற்கு இப்ராஹீம் நபி அவர்கள் கட்டிய வடிவில் கஅபாவை அவர்கள் கட்டவில்லை என்பதைத் தான் காரணமாகக் கூறினார்களே தவிர முஸ்லிமல்லாதவர்களின் பொருட்களால் கட்டப்பட்டதைக் காரணமாகக் கூறவில்லை.

உலகின் மிகச் சிறந்த ஆலயமே முஸ்லிமல்லாதவர்களின் பொருளுதவியால் கட்டப்பட்டிருந்து, அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியிருக்கும் போது மற்ற பள்ளிவாசல்களுக்கு பிற மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை.

நன்கொடை கொடுத்ததால் இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களைப் பள்ளிவாசலில் செய்ய நிர்பந்தம் செய்வார்கள் என்றிருந்தால் மட்டும் அந்தக் காரணத்திற்காக தவிர்க்கலாம்.

நோன்புக் கஞ்சி ஒரு உணவு தான். அது ஒரு புனிதமான உணவு கிடையாது. மற்றவர்கள் தரும் உணவுப் பொருட்களை எவ்வாறு சாப்பிடலாமோ அவ்வாறு அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சினால் அதையும் உண்ணலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்த நண்பர் இவ்வாறு உதவினால் மறுமையில் பயன் கிடைக்குமா என்பது தனி விஷயம்.

அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பதை நம்பாமல், யார் எந்த நல்லதைச் செய்தாலும் அதற்கான பலன் இவ்வுலகில் கிடைக்குமே தவிர மறுமையில் சொர்க்கத்தைப் பெற முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் என்று நம்பாவிட்டால் அந்த ஒரு கடவுளிடம் ஏதும் கிடைக்காது.

38. மற்ற மதங்களை விமர்சிக்கக் கூடாதா?

கேள்வி: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால், திருக்குர்ஆனே பல இடங்களில் ஏனைய மதங்களையும், ஏனைய மதங்களின் கடவுள் கொள்கையைப் பற்றியும் விமர்சிக்கின்றதே? ஏன் இந்த முரண்பாடு?

– ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.

பதில்: ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்.

திருக்குர்ஆன் 6:108

ஏசுவதற்கும், விமர்சிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

முஸ்லிமல்லாதவர்களால் கடவுளர்களாக மதிக்கப்படுவோரின் தனிப்பட்ட நடத்தைகள் போன்றவற்றைக் கேலி செய்வதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதும் தான் ஏசுதல் என்பதன் பொருளாகும்.

கொள்கை, கோட்பாடு மற்றும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் இது தான் சரியானது என்று வாதிடுவதையும், மற்ற கொள்கைகள் தவறானவை என்று கூறுவதையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

குர்ஆனில் அதிகமான இடங்களில் அறிவுபூர்வமான இத்தகைய வாதங்களும், விமர்சனங்களும் காணப்படுகின்றன. ஆனால் ஒரு இடத்திலும் பிற மதத்தினரால் கடவுளர்களாக மதிக்கப்படுவோர் ஏசப்படவே இல்லை.

ஈஸா நபியைக் கிறித்தவர்கள் கடவுளின் மகன் எனக் கூறுவதை இஸ்லாம் மறுக்கிறது. அதற்கான காரண காரியங்களையும் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட ஈஸா நபியைப் பற்றி தரக் குறைவான ஒரு சொல்லையும் குர்ஆன் பயன்படுத்தவில்லை.

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். தனக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

திருக்குர்ஆன் 4:171

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன் 5:75

லாத், உஸ்ஸா போன்ற பெண் பாத்திரங்களைக் கடவுளின் புதல்விகள் என்று மக்காவில் வாழ்ந்தவர்கள் நம்பி வந்தனர். உங்களுக்கு மட்டும் ஆண் மக்கள்! அல்லாஹ்வுக்கு மட்டும் பெண் மக்களா! என்று குர்ஆன் கேள்வி எழுப்பியது. இறைவனுக்கு மனைவியும், மக்களும் அறவே இல்லை என்பதையும் கூறியது. லாத், உஸ்ஸா பற்றி அவர்கள் நம்பி வந்த கட்டுக் கதைகளின் அடிப்படையில் கீழ்த்தரமாக விமர்சிக்க முடியும். அப்படி எந்த விமர்சனமும் குர்ஆனில் இல்லை.

இந்துக்கள் கடவுளர்களாக மதிக்கும் இராமன், கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், விஷ்ணு போன்றவர்கள் குறித்து முஸ்லிம்கள் குறை கூறக் கூடாது. அதைத் திருக்குர்ஆன் தடை செய்கிறது.

அதே நேரத்தில் ஒரு கடவுள் தான் இருக்க முடியும். பல கடவுள்கள் இருக்க முடியாது என்று வாதம் செய்யலாம். பல கடவுள் கொள்கையை நம்புவதால் ஏற்படும் கேடுகளைப் பட்டியலிட்டு கொள்கைப் பிரச்சாரம் செய்யலாம். மற்றவர்கள் கடவுளர்களாக மதிக்கக்கூடியவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமலேயே இத்தகைய பிரச்சாரத்தைச் செய்ய முடியும்.

அறிவுபூர்வமான வாதங்களின் அடிப்படையில் இவ்வாறு பிரச்சாரம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இத்தகைய பிரச்சாரத்தால் சமூக நல்லிணக்கத்திற்கு எந்தக் கேடும் ஏற்படாது. எனவே ஏசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதும் அறிவுபூர்வமாக விமர்சனம் செய்யலாம் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல.

39. இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?

கேள்வி : எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும், மனிதனை மனிதன் கொன்று குவிப்பதையும், பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதையும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறுவதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும்.

– எம். முஹம்மது மூஸா, மதுரை.

போர் செய்யுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன.

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை, அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

போர் குறித்த வசனங்களும் இது போல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

4:75 வசனத்தில் பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது? என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொணாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.

ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்கு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் போரிடுமாறு அந்தப் பலவீனர்களுக்குத் தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

8:60 வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.

இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது.

எதிரிகளின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்குதான் போதுமான படை பலமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

(பார்க்க :திருக்குர்ஆன் 8:65)

பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச்செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது தான் குர்ஆனின் கட்டளை.

(பார்க்க : திருக்குர்ஆன் 8:66)

படை பலம் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?

இதனால் மிகப்பெரிய இழப்புகள் தான் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத் தான் கடைபிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்ட போது தான் போர் செய்தனர்.

இதை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கி தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.

இதன் பிறகும் மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சியிருந்தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.

எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் நாட்டுடன் கடைபிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை மேற்கொண்டது.

கொல்லுங்கள்! வெட்டுங்கள் என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித் தான் நடக்க வேண்டும்.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்!

(பார்க்க : திருக்குர்ஆன் 2:190, 9:13)

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!

(பார்க்க : திருக்குர்ஆன் 2:191, 22:40)

போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை!

(பார்க்க : திருக்குர்ஆன் 2:192)

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்!

(திருக்குர்ஆன் 4:75, 22:39-40)

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை!

(பார்க்க : திருக்குர்ஆன் 8:61)

மதத்தைப் பரப்ப போர் இல்லை!

(பார்க்க : திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6)

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.

சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது.

போரை முதல் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது.

(பார்க்க : திருக்குர்ஆன் 2:190, 9:12,13)

40. பெண் நபி ஏன் இல்லை?

கேள்வி : ஏராளமான நபிமார்களாக ஆண்களை மட்டும் தேர்ந்தெடுத்து இவ்வுலகத்திற்கு இறைவன் அனுப்பியுள்ளான் என்கிறது உங்கள் மதம். நபியாக ஒரு பெண்ணைக் கூட தேர்ந்தெடுக்கவில்லையே ஏன்? அல்லது ஒரு பெண் நபியாக வருவதில் உங்கள் இறைவனுக்கே உடன்பாடில்லையா? இப்படியிருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு உங்கள் மதத்தில் தான் சம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? என்று வாதிடுகிறார் பிற மத நண்பர்.

எஸ். சீனி சலாப்தீன், மண்டபம்.

பதில் :

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

திருக்குர்ஆன் 16:43, 22:07

இவ்விரு வசனங்களும் ஆண்கள் தாம் நபிமார்களாக அனுப்பப்பட்டனர் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வார்த்தைகளால் அறிவிக்கின்றன.

12:109 வசனமும் இதே கருத்தைக் கூறுகின்றது.

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

எனவே பெண் நபிமார்கள் அனுப்பப்படாததன் காரணங்களை அறிந்து கொள்வதற்கு முன் ஆன்மீகத்தில் பெண்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண்களில் நபிமார்கள் – இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை மட்டம் தட்டுவது தான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

பல்வேறு மதங்களில் ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை அடைவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பொருத்த வரை இத்தகைய பாரபட்சம் ஏதும் இல்லை என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது.

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்ற தைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.

(பார்க்க : திருக்குர்ஆன் 40:40

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 4:124

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச்செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.

திருக்குர்ஆன் 16:97

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.)

திருக்குர்ஆன் 3:195

நல்லறங்கள் மூலம் உயர் நிலையை அடைவதிலும் அதற்கான பரிசுகளை இறைவனிடம் பெறுவதிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே இறைவன் எந்தப் பாரபட்சமும் பார்ப்பதில்லை என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.

குறைவான நல்லறம் செய்த ஆணை விட நிறைவான நல்லறம் செய்த பெண் இறைவனிடம் உயர்ந்தவளாவாள். ஆணா பெண்ணா என்று கவனித்து மறுமையில் பரிசுகள் வழங்கப்படுவதில்லை. நடத்தைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எனவே ஆன்மீக நிலையில் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதற்காக பெண்களில் நபிமார்கள் அனுப்பப்படுவது தவிர்க்கப்படவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

திருக்குர்ஆன் 33:35

இதற்கு நிகரான ஒரு பிரகடனம் உலகில் எந்த மதத்தின் வேத நூல்களிலும் காண முடியாது. ஆண் பெண் என அல்லாஹ் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதற்கு இதுவும் சான்றாகவுள்ளது.

இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதற்கும், இறைச் செய்தி கொண்டு வரும் வானவரைச் சந்திப்பதற்கும் பெண்கள் தகுதியற்றவர்கள் என்பதால் இறைவன் பெண்களில் நபிமார்களை அனுப்பாமல் இருந்திருப்பானோ என்றால் அதுவும் இல்லை.

மூஸா நபியின் தாயாருக்கு ஒரு செய்தியைத் தன் புறத்திலிருந்து இறைவன் அறிவித்துள்ளான் என்பதை 20:38, 28:7 ஆகிய குர்ஆன் வசனங்களில் காணலாம்.

ஈஸா நபியின் தாயார் மர்யம் (அலை) அவர்களிடம் ஜிப்ரீல் எனும் வானவர் வந்ததையும் இறைக் கட்டளையைத் தெரிவித்ததையும் திருக்குர்ஆன் 19:17 வசனத்தில் காணலாம்.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஒருவன் உண்மையான முஸ்லிமாக வாழ விரும்பினால் அவன் கடந்த காலத்தில் வாழ்ந்த இரண்டு நபர்களைப் போல் வாழ வேண்டும். அவ்விருவர் தான் முஸ்லிம்களுக்குரிய முன் மாதிரிகளாவர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவ்விருவரும் பெண்களாவர்.

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக! என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான். இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன் உதாரணமாகக் கூறு கிறான்) அவர் தமது கற்பைக் காத்துக் கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

திருக்குர்ஆன் 66:11,12

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஆன்மீகத்தில் முன்மாதிரிகளாக இரண்டு பெண்களையே இறைவன் குறிப்பிடுகிறான் என்றால் பெண்கள் ஆன்மீகத்தில் ஆண்களுடன் போட்டியிட்டு அவர்களையும் மிஞ்ச முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அப்படியானால் பெண்கள் நபிமார்களாக அனுப்பப்படாதது ஏன்? இக்கேள்விக்கு விடை மிக எளிதானது.

இறைத்தூதர்கள் என்ற பொறுப்பை, தகுதியை நிர்ணயிக்கும் விவகாரமாக மட்டும் பார்க்கிறார்கள். உண்மையில் இறைத்தூதுப்பணி என்பது மிகவும் கடினமான பொறுப்பாகும். இப்பொறுப்பை நிறைவேற்றுவது ஆண்களில் கூட அனைவராலும் சாத்தியமாகாது.

இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் அன்றைய சமூகத்தில் இருந்த அத்தனை கொள்கை கோட்பாடுகளையும் தனியொருவராக நின்று எதிர்க்க வேண்டும்.

அவ்வாறு எதிர்க்கும் போது கொல்லப்படலாம்!

நாடு கடத்தப்படலாம்.

கல்லெறிந்து சித்ரவதை செய்யப்படலாம்!

ஆடையைக் கிழித்து நிர்வாணப்படுத்தப்படலாம்.

இன்னும் சொல்லொண்ணாத் துன்பங்களை அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும்.

பெண்களாக இருந்தால் இவை அனைத்துக்கும் மேலாக அவர்களிடம் பாலியல் பலாத்காரம் செய்து மேலும் துன்புறுத்துவார்கள்!

ஒட்டுமொத்த சமுதாயத்தையே தன்னந்தனியாக களத்தில் நின்று எதிர்ப்பதால் ஏற்படும் சிரமங்களை எந்தப் பெண்ணாலும் நிச்சயம் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இன்றைக்குக் கூட உடலுக்கு அதிக வேதனை தராத பணிகளில் தான் பெண்கள் நாட்டம் கொள்கிறார்களே தவிர பாரம் இழுக்கவோ, மூட்டை தூக்கி இறக்கவோ பெண்கள் போட்டியிடுவதில்லை. விரும்புவதுமில்லை. இறைத்தூதர்கள் என்ற பணி இதை விட பல ஆயிரம் மடங்கு கடினமான பணியாகும்.

பெண்களை இழிவு செய்வதற்காகத் தான் இப்பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது முற்றிலும் தவறு என்பதை மேலே நாம் எடுத்துக்காட்டிய சான்றுகள் சந்தேகமற நிரூபிக்கும்.

41 ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி: திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார்.

. – அப்துல் முனாப், அல்-அய்ன்.

பதில் :

கொடுப்பது எப்போதுமே கஷ்டமானது தான். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மனைவிக்குச் சோறு போடுவதும், உடைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்துக் கொடுப்பதும் கூட ஆண்களுக்குக் கஷ்டமானது தான்.

அதற்காக ஆண்கள் மீது அந்தச் சுமையைச் சுமத்தக் கூடாது என்று அந்த நண்பர் கூற மாட்டார்.

இதில் கஷ்டத்தைக் கவனத்தில் கொள்வதை விட நியாயத்தைத் தான் கவனத்தில் கொள்ள வேண்டும். சைக்கிள் வாங்குவதை விட கார் வாங்குவது கஷ்டமானது என்பதால் நாம் கார் வாங்காமல் இருப்பதில்லை. கார் மூலம் கிடைக்கும் கூடுதல் வசதி மற்றும் சொகுசுக்காகக் கஷ்டத்தைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறோம்.

அது போல் தான் திருமண வாழ்க்கையின் மூலம் ஆண்கள் அதிக வசதியையும், சொகுசையும், இன்பத்தையும் அனுபவிக்கிறார்கள்.

சிறிது நேரம் இருவரும் இன்பத்தை அனுபவிப்பதில் மட்டும் சமமாகவுள்ளனர். பின்விளைவுகளைச் சுமப்பதில் சமமாக இல்லை.

இவனது கருவைச் சுமப்பதால் அவள் படும் சிரமங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிரசவிக்கும் சிரமம், குடும்பத்தாருக்கு சேவை செய்யும் சிரமம் என ஏராளமான துன்பங்களைப் பெண்கள் தான் சுமக்கிறார்கள். ஆணுக்குச் சுகம் மட்டுமே கிடைக்கிறது. எனவே மஹர் கொடுப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தாலும் அவன் கொடுக்க வேண்டும் என்ற நியாயத்தைப் புறக்கணிக்க முடியாது.

இது முதலாவது காரணம்.

பெண் மீது வரதட்சணை சுமை சுமத்தப்பட்டால் அதை அவளது தந்தை தான் தனியாகச் சுமக்க வேண்டும். ஆனால் ஆண் மீது அந்தச் சுமையைச் சுமத்தினால் தந்தையுடன் அவனும் சேர்ந்து உழைக்க முடியும். இந்த விஷயத்தில் கஷ்டத்தைத் தாங்கும் வலிமை ஆண்களுக்குத் தான் அதிகமாகவுள்ளது என்பது இரண்டாவது காரணம்.

பொதுவாக உலகில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் பிறக்கிறார்கள். ஆண்களை விட பத்து வருடத்திற்கு முன்பே திருமணத்துக்கு தயாராகவும் ஆகிவிடுகிறார்கள்.

திருமணத்துக்குத் தகுதியான பெண்கள் என்று கணக்கிட்டால் அவர்கள் அத்தனை பேருக்கும் கணவர்கள் கிடைக்க வேண்டுமானால் பத்து வருடங்களுக்கு ஆண்களாக மட்டுமே பிறக்க வேண்டும்.

பிறப்பில் பெண்கள் அதிகமாகவுள்ளதாலும், திருமணத்துக்குத் தயாராவதில் ஆண்கள் பத்து வருடம் பின்தங்கியுள்ளதாலும் ஆண்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே தான் பெண்கள் மிக மிக கணிசமான அளவுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.

ஆண்கள் மஹர் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகும் போது பெண்கள் தாறுமாறாகக் கேட்க மாட்டார்கள். எண்ணிக்கையில் மலிந்து கிடப்பதால் அற்பமான தொகையைப் பெற்றுக் கொண்டே வாழ்வு கிடைத்தால் போதும் என்ற முடிவுக்கு வருவார்கள்.

வரதட்சணை பத்து லட்சம், இருபது லட்சம் என்ற அளவுக்குப் போனாலும் மஹர் கொடுத்து மணம் முடிப்பவர்கள் சில ஆயிரங்களில் தான் இன்றளவும் நிற்கிறார்கள். இது ஆண்களுக்கு தாங்கக்கூடிய கஷ்டமே. பெண்கள் கொடுக்க வேண்டும் என்றால் இதை விடப் பல மடங்கு அதிகமாக அவர்களிடம் கேட்பார்கள். கேட்டு வருகிறார்கள்.

இந்த வித்தியாசங்களைப் புரிந்து கொண்டால் ஆண்கள் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை அந்த நண்பர் ஒப்புக் கொள்வார்.

42 குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா அவசியமா?

கேள்வி: மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவிகள் இவர்களுக்கு இத்தா அவசியமா!

-பாட்சா பஷீர், அல்-ஜூபைல்.

பதில்: இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

கணவன் இறந்த சில நாட்களில் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவள் கருவில் குழந்தை வளரவில்லை என்பது உறுதியாகத் தெரிந்து விடும். ஆனாலும், இஸ்லாம் கூறும் சட்டத்தின்படி உடனே அவள் மறுமணம் செய்ய முடியாது. நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழிந்த பிறகு தான் மறுமணம் செய்ய முடியும்.

அவளது கருவறையில் முதல் கணவனின் கரு வளரவில்லை என்பது மாதவிடாய் வந்த உடனேயே தெரிந்துவிடும். அப்படி இருந்தும் நான்கு மாதமும் பத்து நாட்களும் அவள் ஏன் காத்திருக்க வேண்டும்? கரு வளரவில்லை என்பது அவளுக்கு மட்டும் தெரிந்தால் போதாது; உலகம் அறியும் வகையில் வெளிப்படையாக அது நிரூபிக்கப்பட வேண்டும் என அல்லாஹ் விரும்புவதாலேயே இவ்வாறு கூறியிருக்க முடியும்.

இவ்வாறு வெளிப்படையாக நிரூபிக்க வேண்டும் என்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

# ஒரு பெண் தனது கருப்பையில் குழந்தை வளரவில்லை என்பதை மாதவிலக்கு வருவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், மாதவிடாய் வராமலேயே மாதவிடாய் தனக்கு வந்து விட்டதாக ஒரு பெண் பொய் கூறி உடனடியாக மறுமணம் செய்ய நினைக்கலாம்.

இவ்வாறு செய்தால் இரண்டாம் கணவன் ஏமாற்றப்படுகிறான்.

# மறுமணம் செய்து குறுகிய கால கட்டத்தில் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவன், தனது குழந்தை இல்லையெனக் கருதுவான். தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி அவளையும் வெறுப்பான். இது அவளது எதிர்காலத்துக்கே கேடாக முடியும்.

எனவே தான் தனது வயிற்றில் குழந்தை இல்லை என்பதை அனைவருக்கும் தெரியும் வகையில் அவள் நிரூபிக்க வேண்டும். நான்கு மாதமும் பத்து நாட்களும் கடந்த பின் அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகாவிட்டால் அவள் வயிற்றில் முதல் கணவனின் வாரிசு இல்லை என்பதற்கு அவளை அறிந்த அனைவரும் சாட்சிகளாக இருப்பார்கள்.

இதனால் தான் நான்கு மாதமும் பத்து நாட்களும் என்ற அதிகப்படியான காலத்தை இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது.

மாதவிடாய் வராமலே வந்து விட்டதாகப் பொய் கூறுவது போல் தனது கர்ப்பப்பை எடுக்கப்பட்டு விட்டதாகவும் பொய் கூறலாம்.

குடும்பக் கட்டுப்பாடு செய்த பலருக்கு அதன் பிறகும் குழந்தை பிறக்க சாத்தியம் உள்ளது. அவ்வாறு சில நேரங்களில் பிறந்தும் இருக்கிறது.

மாதவிடாய் பருவம் முடிந்த பிறகும் அரிதாக குழந்தை பெற்ற பெண்கள் உள்ளனர்.

எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாக நிரூபிப்பது தான் இரண்டாம் கணவன் சந்தேகப்படாமல் மகிழ்ச்சியுடன் அவளை நடத்த துணை செய்யும்.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மருத்துவ சோதனை மூலம் உறுதி செய்ய முடியும் அல்லவா? அந்த முடிவின் அடிப்படையில் உடனே அவள் மறுமணம் செய்யலாமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

மருத்துவர்களும் மனிதர்கள் தான். அந்தப் பெண் பொய் செல்வது போல் மருத்துவர்களும் பொய் சொல்வார்கள். அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு பொய் சொல்ல மாட்டார்கள் எனினும் பொய் சொல்லக் கூடிய மருத்துவர்களும் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களும் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

விதிவிலக்காக நீங்கள் சுட்டிக் காட்டியவர்களும் அரிதாகக் கருவுறுவதும் நடக்கக் கூடியது தான்.

விதவை விவாகத்தை இன்றைக்கும் மறுக்கக் கூடியவர்கள் உள்ள நிலையில் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவைகள் மறுமணத்திற்கு வழிகாட்டியது மட்டுமின்றி இரண்டாம் திருமணத்தால் அவளுக்கு சங்கடங்கள் ஏதும் விளைந்து விடாமல் தக்க ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்துள்ளது. அது தான் இத்தா.

43. விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய கேவலமான நிபந்தனை ஏன்?

கேள்வி: இஸ்லாமிய முறைப்படி ஒரு மனிதன் தன் மனைவியை மூன்றாவது தடவையாக விவாகரத்து செய்து விட்டால் மீண்டும் அவளைத் திருமணம் செய்ய முடியாது; அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமென்றால், அந்தப் பெண் வேறொருவனைத் திருமணம் முடித்து, அவன் அந்தப் பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொண்டு அவளை விவாகரத்து செய்த பின்பு தான் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று முஸ்லிமல்லாத நண்பர் என்னிடம் கேட்டார். நான் ஆமாம் என்று சொன்னேன். அதற்கு பிற மத நண்பர், இது மிகவும் கேவலமான செயலாகவும், பெரிய அநியாயமாகவும் இருக்கிறதே என்று கேட்டார். விளக்கம் தரவும்.

பி.ஏ. ரஃபீக், நெல்லிக்குப்பம்

பதில்:

தனது மனைவியை இன்னொருவன் மணந்து அவனும் விவாகரத்துச் செய்த பிறகு தான் தன்னால் மணந்து கொள்ள முடியும் என்பது அவருக்கு மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு கேவலமாகத் தான் தோன்றும்.

மூன்றாவது தடவையாக மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் அவளுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு பறிபோய் விடும்; அல்லது கேவலமான நிலைக்கு ஆளாகித் தான் மணக்க வேண்டும் என்பதை மனிதன் உணரும் போது மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்யத் துணிய மாட்டான்.

அவசர கோலத்தில் இரண்டு தடவை விவாகரத்துச் செய்து விட்டு சாதாரணமாகச் சேர்ந்து கொண்டது போல் இனிமேல் நடந்து விடக் கூடாது என்று உணர்ந்து தொடர்ந்து வாழ்க்கை நடத்துவான். அவர்களின் திருமண உறவு இதனால் நீடிக்கும்.

மூன்றாவது தடவையாக விவாகரத்துச் செய்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான் இந்தக் கேவலத்தைச் சுட்டிக் காட்டி இறைவன் எச்சரிக்கிறான். இதனால் நன்மையே ஏற்படுகிறது.

நீ இந்தத் தப்பு செய்தால் செருப்பால் அடிப்பேன் என்று ஒருவரிடம் கூறுகிறோம்.

செருப்பால் அடிபடுவது கேவலம் என்று மட்டும் பார்க்கக் கூடாது. செருப்பு அடிக்குப் பயந்து அந்தத் தவறை அவன் செய்யாமல் இருப்பான் என்பதையும் பார்க்க வேண்டும்.

இது போன்ற எச்சரிக்கை தான் இந்தச் சட்டம்.

ஒவ்வொருவரும் மூன்றாவது தடவையாக மனைவியை விவாகரத்துச் செய்து விட்டு இன்னொருவனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து அவன் விவாகரத்துச் செய்த பின் அவளை மணந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிடப்படவில்லை.

மாறாக இந்த நிலை ஏற்படும் என்பதற்கு அஞ்சி மனைவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துங்கள் என்பதே இந்தச் சட்டத்தின் உள்ளர்த்தம்.

எந்த இடத்தில் தட்டினால் ஆண்களுக்கு நன்றாக உறைக்குமோ அந்த இடத்தில் அல்லாஹ் தட்டியிருக்கிறான்.

44. முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?

கேள்வி : முத்தலாக் போன்ற விவகாரங்களின் மூலம் இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கின்றதே? என்று முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கிறார்களே?

சாஜிதா ஹுஸைன், சென்னை.

பதில்:

விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்.

விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லாவிட்டால் அந்த உரிமையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான்.

இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியை விட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியைக் கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்துச் செத்ததாக உலகை நம்ப வைக்கிறான்.

விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் மனைவியைக் கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.

இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்து கொண்டு காலமெல்லாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்படுகிறது. அவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைப்படுகிறது. எளிதாக விவாகரத்துச் செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது.

வேறு சில கயவர்கள் விவாகரத்துப் பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களைச் சுமக்க வேண்டும்? என்று நினைத்து பெயரளவிற்கு அவளை மனைவியாக வைத்துக் கொண்டு சின்ன வீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர். இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்தக் கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்கு கணவனைப் பிடிக்கா விட்டால் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கணவனைக் கொலை செய்கிறாள். உணவில் விஷம் கலந்தோ, அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனைத் தீர்த்துக் கட்டுகிறாள்.

அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்து விடுகிறாள். அல்லது கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே.

அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர் களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுத்து விடு என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 5273, 5275, 5277

மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.

ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம் முறையிட வேண்டும். அந்தத் தலைவர், அவள் கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர் தொகையைத் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக் கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்; திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்து அறியலாம்.

பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் முறையிடுவதற்கு நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் தொகை பெற்றிருப்பதாலும், அதைத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்களே ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

பெண்கள் விவாக ரத்துப் பெற இதை விட எளிமையான வழி உலகில் எங்குமே காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உரிமையை இஸ்லாம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.

இவ்வாறு பெண்கள் விவாக விடுதலை பெற மிகப்பெரிய காரணம் ஏதும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலே கண்ட செய்தியில் அப்பெண்மணி கணவர் மீது எந்தக் குறையையும் கூறவில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றே கூறுகிறார்.

அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் கேட்கவில்லை. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அதைப் பற்றி விசாரித்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசாரிக்காமலேயே விவாகரத்து வழங்கியதிலிருந்து இதை உணரலாம்.

இஸ்லாம் திருமணத்தைப் பிரிக்க முடியாத பந்தமாகக் கருதவில்லை. மாறாக வாழ்க்கை ஒப்பந்தமாகவே அதைக் கருதுகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர் களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.

திருக்குர்ஆன் 2:228

ஆண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் இஸ்லாம் பெண்களுக்கும் உரிமை வழங்கியுள்ளது என்பதற்கு இவ்வசனங்களும் சான்றாகின்றன.

விவாகரத்து என்பதை முஸ்லிம்களின் பிரச்சனையாகப் பார்க்கிறார்கள். ஆனால் எல்லாச் சமுதாயங்களிலும் விவாகரத்து உள்ளது. எல்லா நாடுகளிலும் சட்டப்படி விவாக ரத்து வழங்கப்படுகிறது. அப்படியானால் அந்தச் சட்டங்களின் படி விவாரத்து செய்யப்பட்ட பெண்கள் பதிக்கப்பட மாட்டார்களா? இனிமேல் இந்தியாவில் விவாகரத்து கிடையாது என்று சட்டம் இயற்றிவிட்டு முஸ்லிம்கள் விவாகரத்துச் செய்யலாமா என்று கேட்க வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் இயற்ற முடியாது.

மற்ற சமுதாயத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டு விவாகரத்து பெறுகின்றனர். முஸ்லிம்கள் தம்பதிகள் நலனில் அக்கரை உள்ள ஜமாஅத்தில் முறையிட்டு தலாக் கொடுக்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

நீதிமன்றப் படியேறி பல ஆண்டுகள் அலைந்து வழக்கறிஞருக்காக பணத்தைக் கொட்டிக் கொடுத்து அல்லல் படுவதை விட அந்த ஆணையும் பெண்ணையும் நன்றாக அறிந்து வைத்துள்ள, அவர்களுடன் எந்த வகையிலாவது உறவினராக உள்ள ஜமாஅத்தார்களை நாடுவதே மேலானது என்பதை உணர வேண்டும்.

இனி முத்தலாக் விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களுக்கு தலாக் கூறும் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை விவாகரத்து செய்து விட்டு பின்னர் சேர்ந்து வாழலாம். பின்னர் மீண்டும் விவாகரத்துச் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம். மூன்றாம் முறை விவாகரத்து செய்தால் தான் மீண்டும் சேர முடியாது.

மூன்றாம் முறை விவாகரத்து செய்த பின் இன்னொருவனுக்கு அவள் வாழ்க்கைப்பட்டு அவனும் விவாகரத்து செய்தால் மட்டுமே முதல் கணவன் அவளை மணக்க முடியும்.

அவசரப்பட்டு விவாகரத்து செய்தவர்கள் பின்னர் திருந்தி சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஒரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரே சமயத்தில் மூன்று தலாக் எனக் கூறினால் ஒரு தலாக் ஆகவே அது கருதப்படும் என்பது தான் சரியான கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் என்பது மொத்தமாகவே கருதப்பட்டது

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் கூறுவது என்பது இஸ்லாத்தில் இல்லை. முஸ்லிம்களில் சிலரது அறியாமை காரணமாக இது போன்ற கேள்விகளை நாம் எதிர் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.

ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியரை அந்த நிறுவனத்திண் உரிமையாளர் பணி நீக்கம் செய்யும் போது

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

உன்னை நீக்கி விட்டேன்

என்று சொன்னால் மூன்று முறை நீக்கினார் என்று நாம் சொல்வோமா?

மீண்டும் அந்த ஊழியரைப் பணியில் அமர்த்திய பிறகு நீக்கினேன் என்று சொன்னால் இரண்டாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

மீண்டும் அவரைப் பணியில் அமர்த்தி விட்டு மீண்டும் நீக்கியதாகக் கூறினால் அப்போது தான் மூன்றாம் முறை நீக்கியதாகச் சொல்வோம்.

விவாகரத்தும் இது போல் நீக்குதல் தான்.

மூன்று தடவை தலாக் என்று சொன்னாலும் அவளை மீண்டும் சேர்த்துக் கொள்ளாமல் இரண்டாவது, மூன்றாவது தலாக் கூற முடியாது.

45. திருமணத்திற்கு இரண்டு சாட்சிகள் போதுமா?

கேள்வி : என்னுடைய இந்து நண்பர் அல்குர்ஆன் தமிழாக்கம் படித்து வருகிறார். அவர் அத்தியாயம் 24:13 படித்து விட்டு ஆயிஷாவை குற்றம் கூறியவர்களைப் பார்த்து இறைவன் நான்கு சாட்சிகள் கேட்கிறான். ஆனால் நான் பல முஸ்லிம் திருமணங்களில் பெண் வீட்டார் ஒரு சாட்சி மாப்பிள்ளை வீட்டார் ஒரு சாட்சி ஆக இரண்டு சாட்சிகளுடன் திருமணம் முடிக்கிறார்களே இது கூடுமா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்.

-எம். திவான் மைதீன், பெரியகுளம்

பதில் :

இஸ்லாமியச் சட்டப்படி கொடுக்கல்-வாங்கல், இன்ன பிற உடன்படிக்கைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும்.

இதைத் திருக்குர்ஆன் 2:282, 5:106 ஆகிய வசனங்களில் காணலாம்.

திருமணம் என்பதும் ஒரு ஒப்பந்தமாக இருப்பதால் குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகளே அதற்குப் போதுமானது தான்.

ஆனால் ஒரு பெண்ணுடைய கற்புக்கு எதிராகக் குற்றம் சுமத்துவது சாதாரண ஒப்பந்தம் போன்றது அல்ல. அவதூறு சுமத்தப்பட்ட பெண்ணின் எதிர்காலம் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். விபச்சாரம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மிகவும் கடுமையானது. இரண்டு நபர்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இவ்வளவு கடுமையான தண்டனை வழங்க முடியாது.

எனவே தான் பெண்களுக்கு எதிராகக் குற்றம் சுமத்துவோர் குறைந்த பட்சம் நான்கு சாட்சிகளைக் கொண்டு சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க வேண்டும். ஆணுக்கு எதிராக விபச்சாரக் குற்றம் சுமத்தினாலும் நான்கு சாட்சிகள் நேரடியாகப் பார்த்ததாகக் கூற வேண்டும், என்று இஸ்லாம் கடுமை காட்டுகிறது.

அது மட்டுமின்றி நான்கு சாட்சிகள் இல்லாத நிலையில் இது பற்றி யாரேனும் பேசினால் அவ்வாறு பேசியவர்களுக்கு எண்பது கசையடி வழங்க வேண்டும் என்றும், நீங்கள் சுட்டிக்காட்டும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பெண் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை ஒருவரோ, இருவரோ கண்டால் கூட அதைப் பரப்பத் தடை விதிக்கப்படுகிறது. நான்கு பேரும் நேரடியான சாட்சிகளாக இருக்க வேண்டும்.

இதில் கணவனுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கிறது. தன் மனைவியைத் தகாத நிலையில் பார்க்கும் கணவன் நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் அதன் பின்னர் அவன் அவளுடன் வாழத் தயங்குவான். எனவே பிரிந்து விட அவன் விரும்பினால் நான்கு தடவை சத்தியம் செய்து கூறி பிரிந்து விட வேண்டும்.

கற்பு விஷயத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர் குற்றம் சுமத்துவதில் மிகவும் அஞ்ச வேண்டும் என்பதற்காகவும், பெண்களின் மானத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அற்புதமான சட்டத்தை இஸ்லாம் உலகுக்கு வழங்கியது.

எந்த நாட்டிலும் இத்தகைய அற்புதமான சட்டம் இருபதாம் நூற்றாண்டில் கூட இல்லை. சர்வசாதாரணமாக கிசுகிசுக்கள் பரப்பப்படுகின்றன.. இத்தகைய ஒரு சட்டம் உலகில் நடைமுறைப் படுத்தப்பட்டால் பல பெண்களின் வாழ்வு பாதுகாக்கப்படும்.

46 சிந்திப்பது இதயமா? மூளையா?

இரட்டை வேடம் போடுபவர்களைக் குறிப்பிடும் போது, அவர்கள் செவியிருந்தும் கேளாதவர்கள்; பார்வை இருந்தும் குருடர்கள்; இதயம் இருந்தும் சிந்திக்க மாட்டார்கள் என்று ஓர் இடத்திலும்

(இந்த) குர்ஆனை அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்களின் மீது பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா? (47:24) என்று ஓர் இடத்திலும்

குர்ஆன் கூறுகின்றது. இந்த வசனங்களைப் பிற மதத்தவர்கள் படிக்கும் போது, சிந்திப்பது மூளை தானே? அல்லாஹ் இதயத்தைக் குறிப்பிடுகிறானே? இதயத்தின் வேலை சிந்திப்பது இல்லையே? என்று கேட்கிறார்கள். எனவே, இதற்குச் சரியான விளக்கத்தைக் கூறவும்.

– எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி.

பதில் :

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வந்தது.

சிந்திப்பது, மகிழ்ச்சியடைவது, இரக்கம் காட்டுவது, பொறாமை கொள்வது உள்ளிட்ட எல்லாக் காரியங்களும் இதயத்தில் தான் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை ஒரு கால கட்டத்தில் இருந்தது. நாடு, மொழி அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் இப்படித் தான் நம்பி வந்தது.

பின்னர், அறிவு சம்பந்தப்பட்டது மூளையிலும் ஆசை சம்பந்தப்பட்டது இதயத்திலும் நிகழ்வதாக ஒரு கருத்துக்கு உலகம் வந்தது. இன்றைய விஞ்ஞானிகள் வேறு முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இன்றைக்கும் சாதாரண மக்களின் கருத்து இதுவாகத் தான் உள்ளது.

ஒருவன் படிப்பில், சிந்தனையில் குறைவாக இருக்கும் போதும், குறைந்த மதிப்பெண் வாங்கும் போதும், மூளை இருக்கிறதா? என்று கேட்கிறோம்.

ஒருவன் கொடியவனாக, இரக்கமற்றவனாக, பேராசை பிடித்தவனாக இருந்தால் அவனுக்கு இதயம் உள்ளதா என்று கேட்கிறோம்.

சிந்திப்பது மூளையின் வேலை எனவும், கவலைப்படுவது போன்றவை இதயத்தின் வேலை எனவும் மக்கள் நினைப்பதை இதிலிருந்து அறியலாம்.

இடைப்பட்ட காலத்தில் உலக மக்களின் கருத்து இதுவாகத் தான் இருந்தது. அது தான் இன்று வரை சாதாரண மக்களிடம் நீடிக்கிறது.

இரத்தத்தை முழு உடலுக்கும் விநியோகம் செய்வது மட்டுமே இதயத்தின் பணி; இதைத் தவிர வேறு எந்தப் பணியும் அதற்கு இல்லை என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

சிந்திப்பது சம்பந்தமான விஷயங்களும், ஆசை சம்பந்தமான விஷயங்களும் மனித உடலின் முழு இயக்கமும் மூளையில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. சிந்திப்பதும், கவலைப்படுவதும், மகிழ்ச்சியடைவதும், பேராசைப்படுவதும், கோபப்படுவதும் மூளையின் வேலை தான். அனைத்து செயல்களையும் மூளை தான் தீர்மானிக்கிறது.

இதயத்தில் உனக்கு இடம் இல்லை என்பது போன்ற வார்த்தைகளை இன்றைய விஞ்ஞானம் கேலிசெய்கிறது. மூளையில் உனக்கு இடமில்லை என்றுதான் கூற வேண்டும். ஒருவரை நேசிப்பதும், பகைப்பதும் கூட மூளையின் பணி தான்.

இனி நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம்.

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்திப் போகும்.

ஆனால், இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள்.

இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுகிறானே எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது.

குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு இதயம் எனக் கூறினால் அவர்கள் நிராகரிக்க மாட்டார்கள்.

ஆனால், மூளை தான் சிந்திக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாழும் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். இன்றைய அறிவியல் உலகம் அதை உண்மை என ஏற்காது. இதையே காரணம் காட்டி குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று வாதிடும்!

எனவே, அந்த இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது. இதயம் என்றும் குறிப்பிட முடியாது. ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது? நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம். அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் கூறவல்லவன்.

அரபு மொழியில் கல்ப் என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது.

அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டையும் குறிக்கக்கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச்சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக்குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள்.

மூளை தான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக்காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்பொருளும் அச்சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான்.

5:25, 7:179, 9:87, 9:93, 17:46, 18:57, 63:3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்புபடுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச்சொல் இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக்கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.

எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ, அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற உண்மையை அறிந்தவனால் தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப்பட முடியாமல் காப்பாற்றி – உண்மை கண்டறியப்படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப்படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தான் இறைவேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாகவுள்ளது.

47 இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாமிய ஷரீஅத் அனுமதிக்கிறதா? கூடுமா?

ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உடல் உறுப்புகளை அமானிதமாக வழங்கியுள்ளான். அந்த அமானிதத்தை முழுமையாக அவனிடத்தில் சேர்ப்பது மனிதனின் கடமையாகும்.

மறுமையில் அல்லாஹ்வுடைய சந்நிதானத்தில் நாம் முழுமையான உடலுறுப்புகளுடன் நிறுத்தப்பட்டு கேள்வி கணக்கு கேட்கப்படுவோம் என்பதற்கு குர்ஆனுடைய வசனங்கள் சான்று பகர்கின்றன.

ஹாமீம் ஸஜ்தா என்ற அத்தியாயத்தில் 20, 21, 22 வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

இறுதியாக நரகமாகிய அதன் பால் அவர்கள் வந்தடைந்து விடுவார்கள். பாவம் செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவியும், அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி கூறும்…

மேலும், தாஹா என்ற அத்தியாயத்தில் 125, 126 ஆயத்துக்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அந்த மனிதன் என் ரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்வையுடையவனாக இருந்தேனே என்று கேட்பான். (அதற்கு) அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை மறந்து விட்டாய். (நீ மறந்த) அவ்வாறே இன்றைய தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய் என்று (அல்லாஹ்) கூறுவான்.

மேலும், மார்க்கச் சட்ட மேதைகள் ஒருவன் குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிப்பதற்கு முன்னால் அவனுடைய நகங்களையோ, மீசை போன்ற முடிகளையோ அகற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அந்த நகங்களும், முடிகளும் தீட்டுடன் அவன் முன் கொண்டு வந்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

உடல் உறுப்புகள் பற்றி மறுமையில் அவற்றின் நிலை பற்றி தெளிவாகக் கூறியிருக்கும் போது, அதை உலகிலே எப்படி தானம் செய்யலாம்?

– மவ்லவி ஹாபிழ் எஸ். அபூபக்கர் சித்தீக் பாகவி, மண்டபம்.

பதில்:

நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்கள் எடுத்துக் கொண்ட தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல.

மறுமையில் இறைவன் நம்மை எழுப்புவது குறித்துக் கூறும் வசனங்களாகும்.

நமது உடல் உறுப்புகளைத் தானம் செய்யக் கூடாது என்றோ, அவ்வாறு செய்தால் அவ்வுறுப்புகள் இல்லாமல் எழுப்பப்படுவார்கள் என்றோ அவ்வசனங்கள் கூறவில்லை. மறைமுகமாகவும் அந்தக் கருத்து அவ்வசனத்திற்குள் அடங்கியிருக்கவில்லை.

நீங்கள் சுட்டிக்காட்டிய தாஹா 125, 126 வசனங்களை எடுத்துக் கொண்டால் அது உங்களது வாதத்துக்கு எதிராக அமைந்துள்ளதைக் காணலாம்.

கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.

கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போல இறைவனைக் காண்பான்.

எனவே நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் இறைவன் செய்யும் ஏற்பாட்டை அதற்குத் தொடர்பு இல்லாத காரியத்துடன் பொருத்தக் கூடாது.

மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் – புகாரி 3349, 3447, 4635, 4740, 6524

சுன்னத் மூலம் நம்மிடமிருந்து அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது?

இவ்வுலகில் எந்த உறுப்புக்களை இழந்தான் என்பதற்கும் மறுமையில் எழுப்பப்படும் கோலத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை இது உணர்த்தவில்லையா?

சில முகங்கள் மறுமையில் கறுப்பாக இருக்கும். சில முகங்கள் வெண்மையாக இருக்கும் எனவும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும், ஆப்பிரிக்கர்களின் முகம் கறுப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.

மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்ரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். ஜார்ஜ் புஷ் இப்படியே மரணித்தால் கறுத்த முகமுடையவராக வருவார் என்பதே இதன் கருத்தாகும்.

இவ்வுலகின் தோற்றத்துக்கும், மறுமைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம்.

கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை.

சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.

மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் இல்லை.

அடுத்தது நமது உறுப்புகள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும்.

நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும்.

ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும்.

இறைவன் தடை செய்த காரியங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது.

நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது.

அது போல் தான் நமது உறுப்புகளை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள்.

குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320)

உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும்.

பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை.

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான்.

மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும்.

குளிப்புக் கடமையானவர்கள் முடியையோ, நகங்களையோ வெட்டக்கூடாது என்று சில அறிஞர்கள் கூறினாலும் அதற்கு குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எந்த ஆதாரமும் இல்லை. எனவே தான் வேறு சில அறிஞர்கள் ஆதாரமற்ற இக்கருத்தை நிராகரித்துள்ளனர்.

எனவே உறுப்புகள் தானம் பற்றி தடை செய்யும் ஏற்கத்தக்க ஆதாரங்கள் வேறு இருந்தால் தெரிவியுங்கள். நாம் பரிசீலிக்கத் தயாராகவுள்ளோம்.

48. குளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா?

கேள்வி : பிற மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா? என்று கேட்கிறார். விளக்கம் தரவும்!

-எஸ். ராஜா முஹம்மது, காயல்பட்டணம்

பதில்:

இறைவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.

மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒரு உயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது.

நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர படைக்கவில்லை.

உயிரணுவும், மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எப்படி உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுள் வேலையைச் செய்தான் எனக் கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் ஆகாது.

எனவே குளோனிங் மூலம் படைக்கப்பட்டவர்களும் இறைவனால் தான் படைக்கப்படுகின்றனர் என்பதால் அவர்களும் இறைவனை வணங்கியாக வேண்டும்.

49. கருவளர்ச்சி காலம் பற்றி குர்ஆன் கூறுவது சரியா?

கேள்வி : மனித வளர்ச்சியில் கருவறையின் காலம் சராசரி பத்து மாதங்கள். குர்ஆனில் 2:233-வது வசனம் பால்குடியின் காலம் 2 வருடம் எனக் கூறுகிறது. இவை இரண்டும் சேர்ந்தால் மொத்த மாதங்கள் முப்பத்து நான்கு ஆகிறது. இப்படியிருக்க, அல்குர்ஆனின் 46:15-வது வசனத்தில் கருவறை மற்றும் பால்குடியின் கால அளவு 30 மாதங்கள் எனக் கூறுகிறது. இரண்டும் முரண்படுகிறதே! என்ற என்னுடைய மற்றும் என் தோழருடைய கேள்விக்கு விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

– எம்.ஏ. பக்கீர் முஹம்மது, தென்காசி.

பதில்:

2:233-வது வசனத்தில் மட்டுமின்றி 31:14 வது வசனத்திலும் பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு வருடங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனால், 46:15-வது வசனத்தில் பாலூட்டும் காலத்தையும், கர்ப்ப காலத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் போது மொத்தம் முப்பது மாதங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அதில், பாலூட்டும் காலங்கள் என்று இறைவன் கூறிய இரண்டு வருடங்களை (24 மாதங்களை) கழித்தால் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று ஆகிறது.

ஒரு குழந்தையின் கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று எந்தக் காலத்திலும் எவரும் கூறியதில்லை. ஏறத்தாழ பத்து மாதங்கள் என்று இன்றைய சமுதாயம் விளங்கி வைத்துள்ளது போலவே திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்து மக்களும் விளங்கி வைத்திருந்தனர்.

கர்ப்ப காலம் பத்து மாதம் என்று அனைத்து மனிதர்களும் விளங்கி வைத்திருக்கும் போது, கர்ப்ப காலம் ஆறு மாதம் என்று குர்ஆன் கூறுகிறது என்றால் வேண்டுமென்றே தான் அவ்வாறு கூறுகிறது. இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடுவது தான் பொருத்தமானதாகும்.

இறைவன் வேண்டுமென்றே அனைவரும் தெரிந்து வைத்துள்ள நிலைக்கு எதிராகக் கூறுகிறான் என்றால் இதற்கு ஆழமான பொருள் இருக்கும் என்று சிந்தித்து, கரு வளர்ச்சியை ஆராயும் போது இவ்வசனம் இறை வார்த்தை என்பதை தனக்குத் தானே நிரூபிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம்.

மனிதனுக்கு என்று தனியான வித்தியாசமான வடிவம் உள்ளது. மற்ற விலங்கினங்களுக்கு என்று தனியான வடிவம் இருக்கிறது. மனிதன் கருவில் விந்துத் துளியாகச் செலுத்தப்படுகிறான். பின்னர் கருவறையின் சுவற்றில் ஒட்டிக் கொண்டு வளர்கிறான். அதன் பின்னர் சதைக் கட்டியாக ஆகின்றான். இந்தக் காலக்கட்டங்களில் மனிதன் தனக்கே உரிய வடிவத்தை எடுப்பதில்லை. தாயின் கருவறையில் இருக்கும் ஆடு எவ்வாறு ஒரு இறைச்சித் துண்டு போல் கிடக்குமோ அது போலவே மனிதனும் இருக்கிறான். கைகளோ, கால்களோ எதுவுமே தோன்றியிருக்காது.

கருவறையில் இந்த நிலையை அடைந்த இறைச்சித் துண்டைப் பார்த்து இது மனிதனுக்குரியது. இது இன்ன பிராணிக்குரியது என்றெல்லாம் கூட கூற முடியாது. ஆய்வும், சோதனைகளும் நடத்திப் பார்த்தாலும் அதில் மனிதனுக்குரிய அம்சம் ஏதும் இருக்காது.

இந்த நிலையைக் கடந்த பின் தான் மனிதனிடம் உள்ள செல்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றன. அதன் பின்னர் தான் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய தன்மைகளுடனும் உறுப்புகளுடனும் அது வளரத் துவங்குகிறது.

மனிதனுக்கே உள்ள சிறப்புத் தகுதிகளுடனும், மனித உருவத்திலும் கருவில் வளரும் மாதங்கள் மொத்தம் ஆறு தான். அதற்கு முந்திய கால கட்டத்தில் மனிதன் என்று சொல்லப்படுவதற்குரிய எந்தத்ன் தன்மையும் அடையாளமும் இல்லாத இறைச்சித்துண்டு தான் கருவில் இருந்தது.

நீங்கள் சுட்டிக் காட்டிய வசனத்தில் கருவளர்ச்சி என்று கூறாமல் மனிதன் – இன்ஸான் – என்ற சொல்லை இறைவன் பயன்படுத்தி விட்டு இன்ஸானை (மனிதனை) அவள் சுமப்பது ஆறு மாதம் என்று அற்புதமாக கூறுகிறான்.

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

பின்னர் மற்றொரு படைப்பாக அதை நாம் ஆக்கினோம் என்பது எவ்வளவு அற்புதமான சொல்!

இந்த நிலையை அடையும் வரை கருவில் எல்லாப் படைப்பும் ஒன்று தான். அதன் பின்னர் ஆடு ஆடாகவும், மாடு மாடாகவும் மனிதன் மனிதனாகவும் வேறுபடும் நிலை உருவாகிறது. எனவே அதை மற்றொரு படைப்பு என்று இறைவன் கூறுகிறான். இதையே தான் மனிதனை தாய் ஆறு மாதம் சுமந்தாள் என்ற வசனமும் கூறுகிறது.

இந்த மாபெரும் உண்மை, படைத்த இறைவனுக்குச் சாதாரண விஷயம் என்பதால் தான் மக்கள் விளங்கி வைத்திருந்ததற்கு மாற்றமாக வேண்டுமென்றே மனிதனைத் தாய் சுமந்தது ஆறு மாதம் என்கிறான். கருவின் வளர்ச்சி காலம் எனக் கூறவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

50. நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா?

கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமா, தீயதையும் ஏவுமா? காரல் மார்க்ஸ் வாதிகள் மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமே; மற்ற எந்த நம்பிக்கையும் வீண் என்கிறார்கள். கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல் கொள்கிறார்கள். விளக்கவும்!

-ஜுலைஹா புதல்வி, தருமபுரம், காரைக்கால்

பதில் :

மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. பல விஷயங்களை அறிவு சரியாகவே கண்டுபிடித்து விடும். ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்து விடுவதும் உண்டு.

பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்துவிட்டாலும் அறிவின் கண்டு பிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும் இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையா? எனக் கேட்டால் அதில் உள்ள கேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார். அவரது அறிவு புகை பிடிப்பதைத் தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்? தவறு எனக் கண்டுபிடித்தவுடன் அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லை? எனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரிய ஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.

திருடுபவன், மது அருந்துபவன், கொலை செய்பவன் எனப் பல்வேறு தீமைகளில் மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவு உணர்த்துகின்றது. உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் எடுத்துக் கொள்கிறான்.

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும், ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம் மனிதனின் அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.

பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார். அந்த வழியில் மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லை. ஒரு சர்வாதிகாரி ஒரு உத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.

இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத பள்ளிக் கூட வாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.

எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு கூறுகிறது. ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லை. அறிவு மூலம் நன்மையைக் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த முடியவில்லை.

காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் கூடாகத் தெரிகிறது. நாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.

அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையான ஒரு சக்தியை நம்ப வேண்டும். தவறு, தீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால் நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப் பெற்றுத் தரும்.

இது முதல் விஷயம்.

எல்லா விஷயத்திலும் நன்மையையும், தீமையையும் அறிவு கண்டுபிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக் கொள்கின்றனர். இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளது.

புதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது என வாதிடுவோரும், தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர். மாபெரும் மேதைகள் தான் முரண்பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.

இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாது. ஏதோ ஒன்று தான் இதில் உண்மையாக இருக்க முடியும். அப்படியானால் ஒரு தரப்புடைய அத்தனை அறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்டவில்லை என்பது தெளிவு.

வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும், வட்டி ஒரு வணிகமே எனக் கூறுவோரும் அறிவாளிகள் தாம். முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது என வைத்துக் கொண்டாலும் ஒரு சாராரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லை என்பது உறுதி.

அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உடைய விஷயங்கள் ஆயிரமாயிரம் உள்ளன. இதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்.

அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயை! மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது? மார்க்ஸுக்குச் சரி எனப்பட்டது அவர் வழி வந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்? என்றெல்லாம் சிந்தித்தால் அறிவு மமதையிலிருந்து விடுபட்டு, ஆன்மீக நெறியின் மூலம் மனிதன் தன்னை பக்குவப்படுத்துவதன் அவசியத்தை உணரலாம்.

51 உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா?

கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும்.

பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி.

பதில் :

ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா? வலியை உணருமா? உணராதா? என்பது அவர்களின் வாதமா?

இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நாம் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு, மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும்.

வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள்.

அப்படியென்றால் வலியை உணர்வது பற்றி எடுத்துக் கூறி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது.

இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான்.

இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.

இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது.

தாவரம் என்ற உயிரை – அது வலியை உணரா விட்டாலும் – அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது.

இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது.

உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைபிடிக்கின்றனர்.

சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்கின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்கின்றனர்.

மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் – அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் – திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது. இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.

பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது.

அப்படிச் செய்யும் போது தலைக்கு இரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியிலிருந்து வெளிக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து இரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன.

இதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய முறை பிராணிகளை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர்.

அவர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்ற தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1-முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2 – அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3 – உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடையப் பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4 – அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5 – மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6 – பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G. மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G. மூளையின் நிலையையும், E.C.G. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1- இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G. ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2-மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3 – மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கோ, அல்லது வதைக்கோ ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4 – மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும், உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:

1 -இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2 – அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G. பதிவு காட்டியது.

3 – அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை.

இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள்.

நூல் : முஸ்லிம்: 3615

வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம்.

அவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும்.

நாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களைச் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும். ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா? முட்டை சாப்பிடுவார்களா? செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா? சாப்பிட மாட்டார்கள். இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்?

52. அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும் முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு மரத்தில் (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்ற அரபி பதம் தெளிவாக தெரியும் வகையில் அமைந்த புகைப் படங்களும் உள்ளன. இது போன்ற விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தோடு நானும் இணைகிறேன். என்றாலும் மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் இந்த விஷயத்தை நம்பி பெரிதாக எடுத்துக் கொண்டு மற்றவர்களிடமும் இதைப் பெரிய அளவில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (திருக்குர்ஆன் 41:53)

என்ற வசனத்தை எடுத்துக்காட்டி இது அல்லாஹ்வின் அற்புதம் தான் என்றும் இதை மறுத்தால் இந்த வசனத்தையே மறுத்தது போல் ஆகும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இதை எல்லாம் அற்புதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது என்றும் கேட்கிறார்கள்?

எம்.ஹுசைன், யூ.ஏ.இ.

பதில்: ]

இறைவன் தனது அத்தாட்சிகளைக் காட்டுவான் என்பதிலோ, அவற்றை நம்ப வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மாயையையும், மாயத் தோற்றங்களையும் அத்தாட்சிகள் என்று கூறுவோர் தான் இவை அத்தாட்சி என்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

தற்செயலாக அமைந்த இது போன்றவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என வாதிட்டால் எல்லா மதத்தவர்களிடமும் இதுபோன்ற அத்தாட்சிகள் அதிகமதிகம் உள்ளன.

சிலுவை, மேரி வடிவத்தில் பல்லாயிரம் பொருட்கள் உள்ளன. எல்லா மதத்தினரும் தற்செயலாக அமைந்து விட்ட இது போன்ற காட்சிகளைக் காட்டுகின்றனர். உங்கள் நண்பர்கள் வாதப்படி இவையும் அத்தாட்சிகள் தாமா?

இதோ வணக்கம் செய்யும் மரம் என்று நீங்கள் கூறினால் கும்பிடுவது போல தோற்றமளிக்கும் மரங்களை அவர்கள் காட்டுவார்கள்.

அல்லாஹ் என்ற அரபு எழுத்து எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் காட்டினால் இல்லை சூலம் தான் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுவார்கள்.

இறைவனின் அத்தாட்சிகள் இவ்வளவு பலவீனமாக, வலிமையற்றதாக ஒருக்காலும் இருக்க முடியாது.

அத்தாட்சிகள் என்பன, ஒரே இறைவன் இருக்கிறான் என்பதைத் தெளிவாக அறிவிக்கும். நீங்கள் கூறுபவற்றை எல்லாம் அத்தாட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் பல கடவுள் உள்ளனர் என்பதற்கும் இது போன்ற அத்தாட்சிகளை (?) மற்றவர்கள் காட்டுவார்கள்.

அல்லாஹ்வைப் பற்றிய அறிவும், அவனது அத்தாட்சிகள் பற்றிய அறிவும் இல்லாதவர்கள் தான் மாயைகளை அத்தாட்சிகள் என்பர்.

மூஸா நபி இலேசாகப் பாறையில் தட்டியவுடன் தண்ணீர் பீறிட்டு அடித்தது. இது போல் எவரும் செய்ய முடியாது என்பதால் இதை அத்தாட்சி எனலாம்.

வானங்கள், பூமி, சூரியன், கோள்கள், மழை மேகங்கள், விண்மீன்கள், காற்று, பயிர்கள் முளைப்பது, கருவில் மனிதன் வளர்வது, மனிதனுக்குள்ளே அமைக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் அற்புதங்கள் என கோடானு கோடி அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிக் கொண்டே தான் இருக்கிறான்.

இத்தகைய பிரம்மாண்டமான மலைக்கச் செய்யும் அத்தாட்சிகளை விட்டு விட்டு அற்பமானவைகளை அத்தாட்சி என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.

கோடி கோடியாக செல்வம் வைத்திருப்பவன் செல்லாத காலணாவைப் பெரிதாக நினைப்பது போலவே இவர்களின் நிலைமை அமைந்துள்ளது.

இத்தகைய அற்பமான தற்செயலானவற்றை அத்தாட்சி என்று கூற ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் தோற்று விடுவீர்கள்! இது போன்ற செல்லாக் காசுகள் உங்களை விட மற்றவர்களிடம் மூட்டை மூட்டையாகக் குவிந்துள்ளன.

அல்லாஹ்வுடைய வசனத்தைத் தவறான இடத்தில் பயன்படுத்தாதீர்கள்!

இவை அத்தாட்சி இல்லை என்று நம்மிடம் ஆதாரம் கேட்கக் கூடாது. யார் அத்தாட்சி என்று வாதிடுகிறார்களோ அவர்கள் தான் இது போன்றவைகளை அத்தாட்சிகளாக இறைவன் கூறியிருக்கிறான் என்ற ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.

53. மறு பிறவி உண்டா?

கேள்வி : என்னுடைய ஒரு இந்து நண்பன் மறு பிறவி இல்லையென்பதை நிரூபித்தால் நான் இஸ்லாத்தில் வந்து விடலாம் எனக் கூறியுள்ளான். எனவே தயவு செய்து பதில் தந்தால் அந்த நண்பனின் சந்தேகம் தீர்க்க வாய்ப்பாக அமையும்.

ஹெச்.ஜாஃபர் சாதிக், கேரளா.

பதில் :

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம்.

அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும், மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவுபடுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும், நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபந்நியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள்.

இன்றைக்கு உலகில் 700 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும்.

அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை.

உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது. ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 90 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.

அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன?

இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.

ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை.

பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.

இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது!

என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது.

அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு ஒருவன் எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

54 பட்டிமன்றம் நடத்தலாமா?

கேள்வி: எமது நாட்டில் அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரணையுடன் வாரம் தோறும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ஹாரூன் ரஷீதுடைய காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்று சொல்லிக் கொண்டு பல தலைப்புகளிலும் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பட்டிமன்றம் போலவே இதன் முறை அமைந்திருக்கின்றது. இதற்கு நடுவராக இந்தியர் ஒருவரே இருக்கின்றார். இந்தியத் தமிழ் பட்டிமன்றம் போன்று இது அமைந்திருப்பதும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இது இருந்திருக்கின்றது, பின்னர் தான் இது விடுபட்டுப் போயுள்ளது என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக உள்ளது போன்று தோன்றுகிறது. குர்ஆன், ஹதீஸை வைத்து இரு சாராரும் ஒட்டியும் வெட்டியும் பேசுவதைக் கேட்கும் போது எனக்கு அசிங்கமாகத் தோன்றுகிறது.

இதையொரு தவறான போக்காகக் காணும் எனக்கு அதைப் பற்றி போதுமான விளக்கம் என்னிடத்தில் இல்லை. எனவே தங்களிடத்தில் இதற்குரிய விளக்கத்தை வேண்டுகிறேன்.

பதில்:

பட்டிமன்றங்களை இரண்டு வகைகளாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒன்று மார்க்கம் சம்பந்தப்பட்ட கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டங்கள் பற்றியவை. இவற்றைப் பட்டிமன்றமாக ஆக்கக் கூடாது.

இஸ்லாம் வலியுறுத்தும் இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு இரண்டில் எது முக்கியம் என்று வாதிடுவது, இது தான் முக்கியம் என்று வலியுறுத்துவதற்காக இன்னொன்றை குறைத்துப் பேசுவது, பொய் என்று தெரிந்து கொண்டே பொய்க்காக வாதிடுவது போன்றவை மாபெரும் குற்றமாகும்.

ஹாரூன் ரஷீதே இதை நடத்தியிருந்தாலும் மார்க்கத்தில் விளையாட எவருக்கும் அதிகாரம் இல்லை.

விதியைக் குறித்து வருகின்ற மாறுபட்ட இரு வகையான வசனங்களை எடுத்துக் கொண்டு எதிரெதிராக நபித்தோழர்கள் வாதிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டதால் தான் முந்தைய சமுதாயத்தினர் அழிக்கப்பட்டனர் என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் 6381)

இதன் மூலம் இத்தகைய பட்டிமன்றம் பற்றி தெளிவான தீர்ப்பைத் தந்து விட்டனர்.

மற்றொன்று சமுதாயப் பிரச்சனைகள்! இவற்றில் இரண்டு பார்வைகள் இருக்கலாம். இது போன்ற விவகாரங்களைப் பட்டிமன்றமாக்கினால் பிரச்சனையின் ஆழம் புரியலாம்.

நி வரதட்சணைக்கு ஆண்கள் அதிகம் காரணமா? பெண்களா?

நி சமுதாயச் சீர்கேட்டுக்குக் காரணம் மத குருக்களா? தலைவர்களா?

போன்ற தலைப்புகளில் வாதிடும் போது குர்ஆன் ஹதீஸ்களில் மோதல் ஏற்படுத்தும் நிலை ஏற்படாது. ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் எப்படிக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை ஒருசாரார் ஆய்வு செய்வர்.

பெண்கள் எப்படிக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுசாரார் ஆய்வு செய்வார்கள்.

இதனால் அந்தத் தீமை நன்கு மனதில் பதியும்.

உங்கள் நாட்டு பட்டிமன்றங்கள் மார்க்கத்தில் தலையிடாமல் சமுதாயப் பிரச்சனைகளை அலசுவதாக இருந்தால் அதைத் தடுக்க எந்த ஆதாரமும் நமக்குத் தெரியவில்லை.

55 பாபரி மஸ்ஜிதைக் காக்க அபாபீல் பறவை வராதது ஏன்?

கேள்வி: இறைவன் தனது ஆலயமான கஅபாவை அழிக்க வந்தவர்களைச் சிறு பறவைகள் மூலம் அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கினான் என்கிறீர்கள். ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இது போன்ற நிகழ்வுகள் ஏன் நடைபெறவில்லை என்ற என் நண்பரின் கேள்விக்கு எவ்வாறு பதில் கூறலாம்?

– ஹெச். முகைதீன், சென்னை-113.

பதில்:

இரண்டு காரணங்களால் இந்தக் கேள்வியே தவறானது என்பதை அவருக்குப் புரிய வையுங்கள்! திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஅபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை அல்ல.

கஅபாவும் அதைச் சுற்றியுள்ள புனித எல்லையும் இறைவனால் அபய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கஅபாவை எவரும் தகர்க்க முடியாது; அன்னியர்கள் கைப்பற்றவும் முடியாது என்று திருமறைக் குர்ஆன் உறுதி மொழி அளிக்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 28:57

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபய மளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

திருக்குர்ஆன் 29:67

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3:97

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக் குர்ஆன் 14:35

யுக முடிவு நாளின் போது கால்கள் சிறுத்த ஒரு கூட்டத்தினர் கஅபாவை அழிப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன் அறிவிப்பு உள்ளது.

(நூல் : புகாரி 1591, 1596)

அதற்கு முன் எவரும் கஅபாவை அழிக்க முடியாது. இத்தகைய உத்தரவாதம் இருப்பதால் தான் அபாபீல் பறவைகளை அனுப்பி கஅபாவை இறைவன் பாதுகாத்தான். நாளை யாரேனும் கஅபாவைத் தகர்க்க முயன்றால் யானைப் படைக்கு ஏற்பட்டது போன்ற கதியை அவர்கள் அடைவார்கள்.

மற்ற எந்தப் பள்ளிவாசலுக்கும் இத்தகைய எந்த உறுதிமொழியையும் இறைவன் தரவில்லை. மாறாக மற்ற பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்பதைத் திருக்குர்ஆன் கூறியுள்ளது.

எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

திருக்குர்ஆன் 22:40

பாபரி மஸ்ஜிதோ, ஏனைய மஸ்ஜிதுகளோ இடிக்கப்படுமானால் அதைத் தடுக்கும் பொறுப்பு நம் மீது தான் சுமத்தப்பட்டுள்ளது. அபாபீல் பறவைகளை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எந்த உத்தரவாதமும் எந்தப் பள்ளிவாசலுக்கும் இல்லை.

56 நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?

கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு பிற மத சகோதரி கூறுகிறார்! இதற்கு என்ன விளக்கம்?

– சி. முஹம்மது வாசிம், கொள்ளுமேடு

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தான் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டார்கள். அவர்களின் நாற்பதாம் வயது முதல் மரணிக்கும் வரை உள்ள வாழ்க்கையில் தான் முஸ்லிம்களுக்கு முன் மாதிரி இருக்கிறது.

இந்த அடிப்படையை அவருக்கு முதல் புரிய வையுங்கள். கதீஜா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தி ஐந்தாம் வயதில் தான் மணந்தார்கள். அழகுக்காகவும், பாரம்பரியத்திற்காகவும், செல்வத்திற்காகவும், நன்னடத்தைக்காகவும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளப்படுகிறார்கள். நீ நன்னடத்தையுடையவளை மணந்து வெற்றி பெறு என்பது இறைத்தூதராக ஆன பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழி.

(நூல்: புகாரி 4700)

இவ்வாறு கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணத்திற்காக கதீஜா (ரலி) அவர்களை மணந்திருக்க முடியாது. கதீஜா (ரலி) அவர்களின் நன்னடத்தைக்காகத் தான் மணந்திருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மேலும் பணத்திற்காக மணந்திருந்தால் பணத்தைக் கட்டிக் காக்க அவர்கள் முயன்றிருப்பார்கள்.

ஆனால் அனைத்தையும் மக்களுக்கு வாரி வழங்கினார்கள். எஞ்சியவற்றைத் துறந்து நாட்டை விட்டு அகதியாக வெளியேறத் துணிந்தார்கள். அடைமானம் வைக்கப்பட்ட தமது கவச ஆடையை மரணிக்கும் போது கூட மீட்க முடியாத வறிய நிலையில் மரணித்தார்கள்.

பணத்திற்காக ஒரு பெண்ணை மணந்த யாரும் இப்படி நடக்கவே முடியாது என்பதையும் விரிவாக விளக்குங்கள்

57 குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் சிறப்புத் தகுதி?

கேள்வி: நபிகள் நாயகத்திற்குப் பிறகு வரும் ஆட்சித் தலைவர்கள் குரைஷி என்ற (நபியவர்களின்) வம்சத்தைச் சார்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்பது நபி வாக்கு. குரைஷி வம்சத்திற்கு மாத்திரம் ஏன் இந்த சிறப்புத் தகுதி? மற்றவர்களால் ஆட்சி செய்ய முடியாதா? என்று பிற மத சகோதரர் கேட்கிறார்.

– ஹெச்.எம். ஹில்மி, அக்கூரன, இலங்கை.

பதில்:

குரைஷி என்னும் குலத்துக்குத் தான் சிறப்புத் தகுதி என்ற அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. இது குறித்து வருகின்ற எல்லா ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது முன் அறிவிப்பாகவே இதைக் கூறிச் சென்றார்கள் என்பதை அறியலாம்.

தஜ்ஜால் வருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதால் அவன் சிறந்தவன் என்று கூற மாட்டோம்.

பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள். அனைவரும் குரைஷிகளாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : புகாரி: 7223)

தமக்குப் பின் பன்னிரெண்டு பேர் தொடர்ந்து குரைஷிக் குலத்தவராகவே ஆட்சியில் இருப்பார்கள் என்பது நடக்கவுள்ள நிகழ்ச்சியை அறிவிப்பதற்காகக் கூறப்பட்டதே தவிர சிறப்புச் சேர்ப்பதற்கு அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) கூறியவாறு உமர்பின் அப்துல் அஸீஸ் வரை 12 குரைஷியர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்தனர்.

அவர்களில் கெட்டவர்களும், அநியாயக்காரர்களும் இருப்பார்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

(நூல் புகாரி: 3605, 7057)

ஆட்சிக்கு வரும் குரைஷியர்களால் சமுதாயத்திற்கு அழிவும் ஏற்படும் என்பதையும் சேர்த்தே நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள்.

எனவே மனித குலத்தில் குரைஷிக் குலத்துக்கோ, வேறு குலத்துக்கோ எந்தத் தனிச் சிறப்பும் இல்லை

58. தாடி வைப்பது எதற்கு?

கேள்வி: ஒரு பிறமத நண்பர், முஸ்லிம்களில் ஆண்கள் தாடி வைக்கின்றார்கள். அது எதனால் என்றும், ஆண்களுக்கும் – பெண்களுக்கும் முகத்தில் வேறுபாடு காண்பிப்பதற்கு என்று கூறினால், நவீன யுகத்தில் ஆடை மூலமோ அல்லது பெண்களிடம் உள்ள மற்ற வேறுபாடுகள் மூலமோ அறிந்து கொள்ளலாமே என்று கூறுகிறார்.

– முஹம்மது அலி, தென்காசி

விளக்கம்: வேறுபாடு காட்டுவதற்காக என்று கூறுவது இதற்கான முழுமையான பதிலாக ஆகாது.

ஆண் என்பவன் தன்னை முழு அளவில் ஆண் என்று வெளிப்படுத்த வேண்டும். பெண் என்பவள் தன்னை முழு அளவில் பெண் என வெளிப்படுத்த வேண்டும். இரண்டுமே அவரவரைப் பொருத்த வரை பெரும் பாக்கியமாகும்.

40 மார்க் வாங்கினால் பாஸ் ஆகி விடலாம் என்றாலும், நூறு மார்க் வாங்கவே அனைவரும் ஆசைப்படுகிறோம்.

மாதம் பத்தாயிரம் ரூபாய் போதும் என்றாலும் வண்ணக் கனவுகள் எல்லாம் நிறைவேறும் அளவுக்கும், அதை விட அதிகமாகவும் கிடைக்க வேண்டும் என முயற்சிக்கிறோம்; ஆசைப்படுகிறோம்.

ஆண்மை எனும் பாக்கியத்தைக் காட்டிக் கொள்வதில் மட்டும் தான் இந்தப் போதுமென்ற மனநிலை இருக்கிறது.

முகத்தில் முடி இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ இல்லறத்திற்கு முக்கியமானது இல்லை என்ற நிலையிலும் இறைவன் ஆணுக்கு மட்டும் முடி வளரச் செய்து பெண்களுக்கு வளரச் செய்யாமல் விட்டுள்ளான்.

ஆடைகளைப் பொருத்த வரை ஆண்கள் அணியும் ஆடையைப் பெண்களும் அணிந்திட முடியும். ஆனால் பெண்களால் தாடி வைக்க முடியாது.

எனவே அனைத்திலும் முழுமையை விரும்பும் ஆண்களும் – பெண்களும், ஆண்மையிலும் – பெண்மையிலும் முழுமையை விரும்ப வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

தாடியை வைக்க பெரிய அளவில் பொருளாதாரச் செலவும் ஏற்படாது. எடுப்பதற்குத் தான் செலவு ஏற்படும்.

எளிதில் கடைபிடிக்க இயன்ற ஒரு கம்பீரத்தை தானாகவே ஆண்கள் இழந்து விட வேண்டாம் என்பது தான் இஸ்லாத்தின் விருப்பம்.

59. ரஹ், அலை, ஸல், ரலி – என்றால் என்ன?

கேள்வி: முன் சென்றவர்களின் பெயருக்குப் பின்னால் ஸல், அலை, ரலி, ரஹ் என்றெல்லாம் முஸ்லிம்களாகிய நீங்கள் குறிப்பிடுவதன் கருத்து என்ன என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். எப்படி விளக்கம் கூறுவது?

– தஸ்லீம், சென்னை.

பதில்:

ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கமாகும்.

எழுத்தில் ஸல் என்று கூறப்பட்டாலும் வாசிக்கும் போது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும். அவர் மீது அல்லாஹ் சிறப்பருள் புரியட்டும். சாந்தியை வழங்கட்டும் என்பது இதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்படும் போது அவர்களுக்காக இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி வலியுறுத்தியுள்ளனர். எனவே, முஹம்மது நபியவர்களைப் பற்றிக் கூறும் போது, அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்பதையும் சேர்த்துக் கூறுகிறோம்.

ஒவ்வொரு சமுதாயமும் தங்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட நபிமார்களைக் கடவுளர்களாக ஆக்கி விட்ட நிலையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடவுளாக ஆக்காமல் இந்த அடைமொழி தடுத்து வருகிறது.

நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர்களுக்கு நாம் பிரார்த்தனை செய்கிறோமே தவிர அவர்களிடம் பிரார்த்தனை செய்ய மாட்டோம் என்ற தெளிவை முஸ்லிம் சமுதாயத்துக்கு இது உருவாக்கியுள்ளது.

அலை என்பது அலைஹிஸ்ஸலாம் அல்லது அலை ஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்பதன் சுருக்கமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) தவிர மற்ற நபிமார்களைப் பற்றிக் கூறும் போது இவ்வாறு பயன்படுத்தி வருவது வழக்கமாகவுள்ளது. அவர் மீது இறைவனின் சிறப்பருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

அதாவது ஸல்லஸ்லாஹு அலைஹி வஸல்லம் என்பதற்கு என்ன பொருளோ அது தான் அலைஹிஸ் ஸலாத்து வஸ்ஸலாம் என்பதற்கும் பொருளாகும்.

நபிகள் நாயகம் (அலை) மூஸா (ஸல்) என்று பயன்படுத்தினால் அதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால நூல்களில் இப்படியும் பலர் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனாலும் ஸல் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அலை என்பதை மற்ற நபிமார்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக ஆக்கி விட்டனர்.

(அலை) என்பதை நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் பயன்படுத்தினால் அதில் மார்க்க அடிப்படையில் தவறு இல்லை. அவர்கள் மீது சாந்தியும் அருளும் ஏற்படட்டும் என்பது இதன் பொருள். இது யாருக்கு வேண்டுமானாலும் செய்யத் தக்க துஆ தான்.

ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு என்பதன் சுருக்கமாகும். அவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

இதை எந்த இறை நம்பிக்கையாளருக்கும் பயன்படுத்தலாம். எல்லோருக்கும் இறைவனின் பொருத்தம் தேவையானது தான்.

ஆனாலும், இதை நபித்தோழர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கமாகி விட்டது. நபித்தோழர் அல்லாத மற்றவர்களுக்கும் ரலி என்பதைப் பயன்படுத்துவது மார்க்கச் சட்டப்படி குற்றமல்ல.

உங்களைக் கூட தஸ்னீம் (ரலி) எனக் கூறலாம். ஆனாலும் ரலி என்பது அதன் அர்த்தத்தைக் கடந்து நபித்தோழர்களின் அடையாளமாகவே இன்று ஆகிவிட்டது. மற்றவர்களுக்கு ரலி என்று பயன்படுத்தினால் அவர்கள் நபித்தோழர்களாக இருப்பார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.

இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களுக்கு இதைப் பயன்படுத்தாமல் தவிர்க்கலாம்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக என்பது இதன் பொருள்.

எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம். ஏனெனில் அனைவருக்குமே அல்லாஹ்வின் அருள் தேவை தான். ஆனால், இறந்தவர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

அதுவும் பிரபலமானவர்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனக்கோ, உங்களுக்கோ இதைப் பயன்படுத்தினால் நாம் எந்தக் காலத்திலோ வாழ்ந்து மடிந்தவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். இதை எவருக்கும் பயன்படுத்தலாம். மார்க்க ரீதியாக இதற்குத் தடை இல்லை.

60. இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?

கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் இறங்குவதை உலக மக்கள் அனைவரும் பார்ப்பார்களா? என்றும் கேட்கிறார். என்ன விளக்கம் அளிக்கலாம்?

எஸ்.ஏ. ஜம்ஸாத் அலி, திருப்பத்தூர்

பதில் :

நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு நீங்களே பதில் கூற முடியும்.

ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் கூட கண்டுபிடிக்கும் ரேடார் கருவிகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் நிறுத்தப்பட்டு பூமியைப் படம் பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

இத்தகைய யுகத்தில் ஒரு மனிதர் எவ்விதக் கருவிகளின் துணையுமின்றி பூமியை நோக்கி வருகின்றார் என்றால் அந்த வினாடியே அது உலகுக்குத் தெரிந்து விடும்.

அதிசயமான முறையில் இறங்கும் அவரை நோக்கி உலகத்தின் அனைத்துத் தொலைக்காட்சி கேமராக்களும் திரும்பி விடும். வீட்டிலிருந்தபடியே அவர் இறங்கி வருவதை உலகின் ஒவ்வொரு மனிதனும் காண்பான்.

அதிசயமான முறையில் இறங்கி வருவதே பெரிய சான்றாக இருப்பதால் நான் தான் ஈஸா என்று அவர் கூறினால், அதற்கு உலகத்தில் யாருமே சான்று கேட்காமல் நம்புவார்கள். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது. நானும் இறைவனின் மகன் அல்ல என்று அவர் கூறும் போது இதை உலகமே ஏற்கும் நிலை உருவாகும்.

முழு உலகும் அவரது தலைமையை ஏற்கும் என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு குறித்து நூறு வருடத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். இன்றைக்கு அத்தகைய கேள்விக்கே இடமில்லை.

(இதற்கு முந்தைய இதழ்களை நீங்கள் வாசிக்காதவராக இருந்தால் ஈஸா நபி மரணிக்கவில்லை என்ற தொடர் கட்டுரையில் இதை நாம் நிரூபித்திருப்பதைப் பார்வையிடுக.)

61. ஈஸா நபி பிறந்த தினத்தை ஏன் கொண்டாடக் கூடாது?

கேள்வி : ஏசு என்னும் ஈஸா நபியை இறைத் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அப்படியானால் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் நீங்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை ஏன் கொண்டாடக் கூடாது? என்று பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.

எஸ். செய்யது அலி ஜின்னா, மும்பை – 72

பதில் :

முஸ்லிம்கள் செய்யும் ஒரு தவறு இன்னொரு தவறை நியாயப்படுத்த உதவாது. இஸ்லாத்தில் மீலாது விழா என்பது கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறந்த நாள் கொண்டாடவில்லை. நான்கு கலீஃபாக்களும் கொண்டாடவில்லை. நான்கு இமாம்கள் உள்ளிட்ட ஏராளமான இமாம்களும் மீலாது விழா கொண்டாடவில்லை.

அப்துல்லாஹ்வின் மகனாகப் பிறந்த முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்டதைத் தான் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் அருளப்பட்டு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த இரவு லைலத்துல் கத்ர் எனப்படுகிறது. அந்த இரவு தான் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று இஸ்லாம் கூறுகிறது.

முஹம்மது நபி அவர்கள் பிறந்து இறைத்தூதராக நியமிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு இந்த வரலாறு இருந்திருக்காது.

ஈஸா நபியின் பிறந்த நாள் கொண்டாடுவதும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் கொண்டாடுவதும், மற்ற எவருடைய பிறந்த நாள் கொண்டாடுவதும் இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாதது.

பிறந்த நாளுக்கு ஏதாவது மதிப்பு இஸ்லாத்தில் இருந்திருந்தால் இஸ்லாமிய வரலாறு நபிகள் நாயகத்தின் பிறப்பிலிருந்து ஆரம்பித்திருக்கும். ஆனால் இஸ்லாமிய ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53-ஆம் வயதிலிருந்து உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகிறது.

அதாவது அவர்கள் பிறந்த ஊரைத் துறந்து மதீனாவுக்குப் புறப்பட்டது தான் ஹிஜ்ரி ஆண்டின் ஆரம்பம். இதிலிருந்தே பிறந்த நாளுக்கு இஸ்லாம் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை என்பதை அறியலாம்.

62 ஈஸா நபியின் தோற்றம் ஏது?

கேள்வி : இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஈஸா நபி (இயேசு) திரும்பி வருவார். அப்படி வரும் போது கிறித்தவர்கள் ஈஸா நபியின் உருவத்தை தற்போது வைத்துள்ளது மாதிரி தான், ஈஸா நபியின் (இயேசுவின்) உருவம் இருக்குமா? அல்லது வேறு மாதிரியாக இருக்குமா?

-எம். கண்ணன், அபுதாபி

பதில்:

ஈஸா நபியின் உருவமாக இன்று அறிமுகமாகியிருக்கும் உருவத்திற்கும், ஈஸா நபிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இயேசு நாதரின் சீடர்கள் யாரும் இயேசு நாதரை வரையவும் இல்லை. இயேசுநாதர் காலத்திற்குப் பின்பு பல நூறு ஆண்டுகள் கழித்துத் தான் இயேசுநாதர் வடிவம் கற்பனையாக உருவாக்கப்பட்டது.

ஒரு காலத்தில் அவர் தாடியில்லாத தோற்றத்தில் வரையப்பட்டார். ஒரு மரியாதை ஏற்படுவதற்காக ஞானியின் தோற்றம் அவருக்கு வழங்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த உருவம் உருவாக்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த திருவள்ளுவரின் இன்றைய சிலைக்கும், திருவள்ளுவருக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இது போல் தான் இயேசுவின் உருவமும்.

63, பிராணிகளுக்கு சுவர்க்கம் -நரகம் உண்டா?

கேள்வி: இறைவன் மறுமையில் மனிதனை எழுப்பி கேள்வி கேட்பான் என்றால், உலகத்தில் வாழும் விலங்குகள், பறவைகள், புழு, பூச்சிகள் இறந்து விட்டாலும், அதையும் மறுமையில் எழுப்பி கேள்வி கேட்பானா? அதற்கும் சுவர்க்கம் – நரகம் உண்டா? என்று என்னிடம் பிற மத அன்பர் கேட்கிறார்.

– எம். முஹம்மது முஸ்தபா, சிவகாசி.

பதில்: அவற்றுக்கும் விசாரணை உண்டு. ஆயினும், மனிதர்களுடைய விசாரணையிலிருந்து அது வித்தியாசமானது.

மனிதர்களுக்கு பகுத்தறிவு இருப்பதால் அவர்களுக்கு மட்டுமே நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு சொர்க்கம், நரகம் என்ற பரிசோ, தண்டனையோ அளிக்கப்படும்.

ஏனைய உயிரினங்களுக்கு பகுத்தறிவு இல்லாததால் அவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அவற்றை இறைவன் மனம் குளிரச் செய்வான்.

நியாயத் தீர்ப்பு நாளில் (பறித்த) உரிமைகளை உரியவர்களிடம் நீங்கள் வழங்கியாக வேண்டும். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆட்டிடம் கணக்குத் தீர்க்கப்படும் என்பது நபிமொழி.

(நூல்: முஸ்லிம் 4679)

ஒரு ஆடு இன்னொரு ஆட்டை முட்டித் தாக்கியிருந்தால் முட்டப்பட்ட ஆடு முட்டிய ஆட்டைத் தாக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குவான். இது போன்ற பாதிப்புகளுக்கு நியாயம் வழங்கப்படுவதுடன் அவை அழிக்கப்பட்டு விடும்.

64 ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?

கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.

– எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம்.

பதில்:

ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

எந்த ஒரு காரியமும் குற்றமாக எப்போது ஆகும்? இறைவன் தடுத்தால் அது குற்றமாகும். தடுக்காவிட்டால் அது குற்றமாக ஆகாது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மதுபானமும், வட்டியும் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் மதுபானம் அருந்தியவர்களாகவும், வட்டி வாங்கியவர் களாகவும் யாரேனும் மரணித்திருந்தால் அவர்கள் இறைவனிடம் குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள். ஏனெனில், தடை செய்யப்பட்ட பின் அக்காரியங்களை அவர்கள் செய்யவில்லை.

இது பக்தியின் அடிப்படையில் கற்பிக்கும் நியாயம் அல்ல. அறிவுப் பூர்வமாக ஏற்கத்தக்க காரணமே.

பான்பராக் விற்கக் கூடாது என்று ஒரு அரசு சட்டம் போடுகிறது. இந்தச் சட்டம் போடப்படுவதற்கு முன்னால் அதை விற்பனை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. மாறாக, இச்சட்டம் அமுலுக்கு வந்த பிறகு விற்பனை செய்பவர்கள் தாம் குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப் பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்த போது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

இன்று அவ்வாறு செய்வதைத் தடை செய்து விட்டான். அதை அனுமதிப்பதற்கு எந்த அவசியமும் இருக்கவில்லை. தடை செய்யப்பட்ட பிறகு அதைச் செய்தால் தான் அது குற்றமாகும்.

தடை செய்யப்படுவதற்கு முன் செய்யப்பட்ட காரியத்தை தடை செய்யப்பட்ட பின் முன் மாதிரியாகக் கொள்வதை அறிவுடைய யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

65 இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார்.

இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை.

பதில் :

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

இது மார்க்க ரீதியான காரணம்.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம் என்பதற்காக இறைவன் இதைத் தடுத்திருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீன்களில் அந்த நிலைமை கிடையாது.

66. பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு வேலையில்லாமல் போய் விடுமே? விளக்கம் தரவும்.

சுரேஷ், திருக்குறுங்குடி

பதில் :

பெண்களைப் போகப் பொருளாக்கி ஆண்கள் ரசிக்கவே நீங்கள் குறிப்பிடும் நாட்டியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பரிணாம வளர்ச்சியாக சினிமாவும், நீலப்படங்களும் உருவாகியுள்ளன.

பெண்கள், கண்டவர்களும் ரசித்து, அனுபவிக்கும் போகப் பொருட்கள் என்பதை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது.

அங்க அசைவுகளையும், உடல் திரட்சியையும் மற்றவர்களுக்குக் காட்டுவது கலை என்றால் அந்தக் கலையில் இஸ்லாத்திற்கு உடன்பாடு கிடையாது.

வேலை வாய்ப்பு என்று வாதிடுவது என்றால் கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் அனைத்தையும் அனுமதிக்க வேண்டும். இதுவும் பலருக்கு வேலை வாய்ப்பாகத் தான் உள்ளது.

67. மறுமை என்பது உண்மையா?

கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் உள்ளதா? மரணத்திற்குப் பின்பு மனித உடல் மட்கியவுடன் எவ்வாறு அவை திரும்ப எழுப்பப்படும்? எரிக்கப்படுபவர் அல்லது மீன் விழுங்கி மரணம் அடைந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்? மண்ணறையில் வேதனை நடைபெற்றால் மண்ணறையைத் தோண்டிப் பார்க்கும் போது அவ்வாறு எந்த மண்ணறையிலும் நடைபெறவில்லையே ஏன்? உங்களால் நடந்ததாக நிரூபணம் செய்ய முடியுமா? என்றும் பல கேள்விகள் கேட்டார்.

– ஜே. ரியாஸ் கான், கீழக்கரை.

பதில்:

மறுமையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இப்போது நாம் வாழும் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்வது நல்லது. ஏனெனில், ஒரு பொருளை முதலில் படைப்பது தான் சிரமமானது. அதை அழித்து விட்டு மறுபடியும் உருவாக்குவது அவ்வளவு சிரமமானதல்ல. இது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதியாகும்.

ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க எத்தனையோ ஆண்டுகள் தேவைப்பட்டன. உருவாக்கிய பின் அது போல் இலட்சக்கணக்கில் உருவாக்குவது எளிதாகி விட்டது.

நூறு வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இவ்வுலகில் இருக்கவில்லை. வேறு எங்கேயும் இருக்கவில்லை. எந்தப் பொருளாகவும் நீங்கள் இருக்கவில்லை. ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இறைவன் படைத்திருப்பதை நம்பும் முஸ்லிம்களுக்குப் படைக்கப்பட்டவைகளை அழித்து விட்டு மீண்டும் படைப்பதை நம்புவது எளிதானதாகும்.

மேலும், கடவுள் இருப்பதை முஸ்லிம்கள் நம்பும் போது அவன் சர்வ சக்தியுள்ளவன் என்று நம்புகின்றனர். மனிதனைப் போல் பலவீனமானவனாக கடவுளை முஸ்லிம்கள் நம்புவதில்லை.

மட்கிப் போனவைகளை உருவாக்குவது உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இயலாத ஒன்று தான். கடவுளின் நிலையும் அது தான் என்றால் அப்படி ஒரு கடவுள் தேவையே இல்லை.

நமக்கெல்லாம் முடியாததை எவனால் செய்ய முடியுமோ அவன் தான் கடவுள் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

எனவே, மறுமை பற்றி கேள்வி கேட்பது பொருத்தமில்லாதது.

கடவுளைப் பற்றி விவாதித்து முடிவுக்கு வந்து விட்டால் மறுமை, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் நம்புவதற்கு மிகச் சாதாரணமானவை.

மண்ணறையில் வேதனை என்பது ஒரு அடையாளத்திற்காகச் சொல்லப்படும் வார்த்தையாகும். மண்ணறையைத் தோண்டிப் பார்த்தால் மனிதர்கள் யாரும் வேதனை செய்யப்படுவதை பார்க்க முடியாது. இதைச் சரியான முறையில் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும்.

நல்லவர் கெட்டவர் அனைவரும் மண்ணறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. குறிப்பாக, கெட்டவர்கள் மண்ணறை வேதனையிலிருந்து தப்பவே முடியாது என்பதற்கும் இஸ்லாத்தில் ஆதாரங்கள் உள்ளன.

கெட்டவர்கள் பலர் தீயிட்டு சாம்பலாக்கப்படுகின்றனர். அவர்களின் சாம்பல்கள் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. இவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. மாறாக நாட்டின் பல பகுதிகளிலும் இவர்களின் சாம்பல்கள் பரப்பப்பட்டுள்ளன. இவர்களுக்கு மண்ணறையே இல்லை என்பதால் மண்ணறை வேதனை கிடையாது எனக் கூறினால் அனைவரும் மண்ணறை வேதனையைச் சந்திப்பார்கள் என்ற ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டு விடும்.

அது போல் ஒரு மனிதனைக் காட்டு விலங்குகள் அடித்துச் சாப்பிட்டு விடுகின்றன; அல்லது கடலில் மூழ்கிச் செத்தவனை மீன்கள் உணவாக உட்கொண்டு விடுகின்றன. இவர்களுக்கெல்லாம் மண்ணறை ஏது?

அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தான் – அந்த மண்ணுக்குள் தான் வேதனை நடக்கிறது என்று நாம் நம்பினால் உலகில் பெரும் பகுதியினருக்கு மண்ணறை வேதனை இல்லாமல் போய்விடும்.

இறந்தவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய இறைவன் நம்மால் காண முடியாத உலகில் வைத்து தண்டிக்கிறான் என்பது தான் இதன் பொருளாக இருக்க முடியும்.

குறிப்பிட்ட சில மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) சுட்டிக் காட்டியிருப்பதாக ஹதீஸ்கள் உள்ளன. அவை இறைத் தூதர் என்ற வகையில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதாகும் என்று கருத வேண்டும்.

எரிக்கப்பட்டவர்களுக்கும், மிருகங்களுக்கு உணவாகிப் போனவர்களுக்கும் மண்ணறை வாழ்க்கை கிடையாது என்ற விபரீதமான நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மண்ணறை வாழ்க்கை பற்றி இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும்.

மண்ணறை வாழ்வு இது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால் உங்கள் நாத்திக நண்பரின் கேள்விக்கு விடையளிக்கலாம். மண்ணுக்குள் தோண்டிப் பார்த்து வேதனை செய்யப்படுவதைக் காட்ட முடியுமா? என்றெல்லாம் அவர் கேள்வி கேட்க முடியாது.

25.11.2009. 9:36 AM