அய்யூப் நபி உடல் முழுதும் புழு வைத்து இருந்ததா?
இறைத்தூதர் அய்யூப் (அலை) அவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவர்களின் உடல் முழுவதும் புழுக்கள் பரவியது என்றும் சில புழுக்கள் உடலிலிருந்து கீழே விழுந்தால் அவர்கள் அவற்றை எடுத்து மீண்டும் தன் உடலுக்குள் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகின்து. இது உண்மையா?
ரனீஸ் முஹம்மத்
பதில்:
சில ஆலிம்கள் இப்படியொரு பொய்யான கதையை உரைகளில் கூறி வருகின்றனர். சில தஃப்ஸீர் நூற்களில் இந்தக் கதை கூறப்பட்டுள்ளது.
ஆனால் அய்யூப் (அலை) அவர்களுக்கு இது போன்று நடந்ததாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கு எந்தச் சான்றும் ஹதீஸ் நூற்களில் இடம் பெறவில்லை.
அய்யூப் (அலை) அவர்களுக்கு குஷ்ட நோய் இருந்ததாக இப்னு மாஜாவில் பதிவாகியுள்ள 3478 வது செய்தி கூறுகின்றது.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உஸ்மான் பின் மத்தர் என்பவரும் ஹசன் என்பவரும் தொடர்ந்து இடம் பெறுகின்றனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அய்யூப் (அலை) அவர்களுக்கு இறைவன் ஏதோ ஒருவிதமான நோயை வழங்கியிருந்தான். அந்த நோயிலிருந்து தன்னைக் குணப்படுத்துமாறு அவர்கள் இறைவனிடம் மன்றாடினார்கள். இறைவன் அந்த நோயைக் குணப்படுத்தினான். அய்யூப் (அலை) அவர்களின் நோயைப் பற்றி இந்த அளவிற்குத் தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ (41) ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ (42)38
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
அவருக்கு அவரது குடும்பத்தினரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் வழங்கினோம். இது நம்மிடமிருந்து கிடைக்கப் பெறும் அருளும், அறிவுடையோருக்கு அறிவுரையுமாகும்.
உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
திருக்குர்ஆன் 38:41
அய்யூப் (அலை) அவர்களுக்கு நோய் ஏற்பட்டவுடன் அந்த நோயைக் குணப்படுத்துமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. ஆனால் நீங்கள் கூறிய கதை கீழே விழுந்த புழுக்களை எடுத்து மீண்டும் தன் உடலுக்குள் செலுத்தி அய்யூப் (அலை) நோயை அதிகப்படுத்திக் கொண்டார்கள் எனக் கூறுகின்றது.
உடலை அரித்து அழிக்கக்கூடிய புழக்களை அகற்ற வேண்டும் என்று நினைப்பதே மனித இயல்பு. நோயால் உடல் பாதிக்கப்பட்டால் மருத்துவம் செய்து உடல் நலத்தைப் பேண வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அய்யூப் (அலை) அவர்களின் பிரார்த்தனையும் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.
ஆனால் மேற்கண்ட சம்பவம் இந்த அடிப்படைகளுக்கு மாற்றமான கருத்தைக் கொடுக்கின்றது. இது பொய்யான கட்டுக்கதை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
02.08.2011. 16:05 PM