அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுத்ததற்கும், பெயர் கூறி அறுத்ததற்கும் என்ன வித்தியாசம்?

பிராணிகளை அடித்து, கழுத்தை நெறித்து, தண்ணீரில் மூழ்க வைத்து சாகடித்து உண்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.

கூர்மையான கத்தியால் பிராணிகளின் கழுத்து நரம்பை வெட்டி இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அறுக்கப்பட்டதை மட்டுமே உண்ண வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இந்த முறை தான் சிறந்த முறை என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் தான் உண்ண வேண்டும் என்ற சட்டம் எதற்காக? அல்லாஹ்வின் பெயர் கூறாமல் முஸ்லிமல்லாத நாங்கள் முறைப்படி அறுப்பதை நீங்கள் ஏன் உண்ண மறுக்கிறீர்கள் என்று நடு நிலையான மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படி வேறுபடுத்துவதற்கு ஏற்கத் தக்க காரணம் ஏதும் உண்டா? என்றும் கேட்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் பெயர் கூறாமல் அறுத்தாலும் மாமிசத்தைப் பொருத்த வரை இரண்டும் ஒரே தரமுடையது என்றாலும் அல்லாஹ்வின் பெயர் கூறித் தான் அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதற்கு காரணங்கள் உள்ளன.‎

பொதுவாக எந்த உயிரினத்தையும் ‎யாரும் உருவாக்க ‎முடியாது. உலகமே ஒன்று ‎திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட ‎படைக்க முடியாது. அவ்வாறு ‎இருக்கும் போது அல்லாஹ் படைத்த ‎உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு ‎உரிமையில்லை.‎

ஆனால் எந்த அல்லாஹ் இந்த ‎உயிரினங்களைப் படைத்தானோ ‎அவனே அதை அறுத்து உண்ண நமக்கு ‎அனுமதி அளித்து விட்டால் அப்போது ‎நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படாது. ஒவ்வொரு உயிரினத்தை ‎அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக ‎வேண்டும்.‎

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் ‎என்று கூறுவதாகும். இதன் பொருள் ‎அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் ‎என்பதாகும்.‎

இதன் கருத்து என்னவென்றால் ‎இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் ‎கொன்று ஒழிக்க வேண்டும் ‎என்பதற்காக நான் இதை ‎அறுக்கவில்லை. நான் அந்த ‎அளவுக்குக் கொடூரமானவனல்லன். ‎இந்த உயிரைப் படைத்த நீயே இதை ‎எனக்கு அனுமதித்ததால் தான் இதை ‎அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் ‎உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது ‎இதன் கருத்தாகும்.‎

இந்த உறுதிமொழி தான் அறுப்ப தற்கான அனுமதியாகும். ‎அல்லாஹ்வின் பெயரால் தான் இதை ‎அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் ‎உயிரினங்களின் உண்மை ‎எஜமானனிடம் அனுமதி பெறாத ‎காரணத்தால் அதை அறுப்பதும், ‎உண்பதும் குற்றமாகி விடும்.‎

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை ‎நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் ‎என்பதை நாம் அறிவோம். அந்த ‎மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் ‎உரிமையாளன். உயிருக்கு ‎உரிமையாளனாகிய ‎அல்லாஹ்விடமும் அனுமதி பெற ‎வேண்டியது இதனால் அவசியமாகிறது.‎

கறுப்புப் பணத்துக்கும் வெள்ளைப் பணத்துக்கும் என்ன வித்தியாசம்? அதன் மதிப்பிலோ, அது அரசால் அச்சிடப்பட்ட பணம் என்பதிலோ இரண்டு பணத்துக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இந்த வகையில் இரண்டுக்கும் வேறுபாடு இல்லாவிட்டாலும் அதில் நுணுக்கமான வேறுபாடு உள்ளது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்துள்ள வரியைச் செலுத்தி விட்டு அந்தப் பணத்தை நாம் வைத்து இருந்தால் அது வெள்ளைப் பணம். வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவுக்கு பணம் வைத்திருந்து அதற்காக வரி செலுத்தாவிட்டாலும் அது வெள்ளைப் பணம் தான். ஏனெனில் அரசின் அங்கீகாரத்துடன் இது பயன்படுத்தப்படுகிறது.

அந்தப் பணத்துக்காக அரசாங்கம் விதித்திருக்கும் வரியைச் செலுத்தாமல் அந்தப் பணத்தை நாம் வைத்திருந்தால் அது கறுப்புப்பணமாக ஆகி விடுகின்றது.

இரண்டு பணத்துக்கும் புறத்தோற்றத்தில் மதிப்பில் எந்த வேறுபாடும் இல்லை என்றாலும் அரசின் அங்கீகாரம் பெறாத பணத்தை சட்ட விரோதமான பணம் என்று அரசாங்கம் சொல்கிறது.

இந்த வித்தியாசம் தான் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணிகளுக்கும் உள்ளது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் அறுக்க வேண்டும் அந்தப் பிராணிகளைப் படைத்த இறைவனின் கட்டளையை ஏற்று அவ்வாறு அறுத்தால் அது உரியவனிடம் அனுமதி பெற்று அறுக்கப்பட்டதாக ஆகின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதற்கும் பெயர் கூறாமல் அறுப்பதற்கும் இன்னொரு வேறுபாடு உள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கும் போது வன்முறைச் சிந்தனை வராமல் அது தடுத்து விடுகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து ‎இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் ‎யாரையும் மிரட்டி உருட்டி காரியம் ‎சாதிப்பவனாக, ரவுடியாக தலைஎடுத்து ‎விடுகிறான். அன்றாடம் ஆடுகளை ‎அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி ‎கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக ‎அலைவதில்லை. ‎

இதற்குக் காரணம் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்று ஒவ்வொரு அறுப்பின் போதும் பயன்படுத்தும் பிஸ்மில்லாஹ் ‎தான். ‎

அல்லாஹ்வின் அனுமதி ‎இருப்பதால் தான் நான் ஆட்டை ‎அறுக்கிறேன் என்று தினமும் ‎சொல்லியும், நினைத்தும் வருவதால் ‎மனிதனை அறுக்க அல்லாஹ் ‎அனுமதிக்கவில்லை என்ற கருத்து ‎அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து ‎விடுகிறது.‎

இதனால் இன்னொரு நன்மையும் ஏற்படுகிறது. பிராணிகளில் மனிதர்கள் விரும்பி உண்பவையும் உள்ளன. மனிதர்கள் விரும்பாத பிராணிகளும் உள்ளன. சிலர் விரும்பி, சிலர் விரும்பாத பிராணிகளும் உள்ளன.

ஒருவர் விரும்பாத பிராணியை அவருக்கு நாம் வழங்கினால் அது மிகப்பெரிய மோசடியாகும். காகத்தை அறுத்து அதை கோழி எனச் சொல்லி விற்பதையும், நாயை அறுத்து ஆட்டு இறைச்சி என விற்பதையும் நாம் பார்க்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் மாமிசத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவன் பெயரால் அறுக்கிறேன் என்று கூறி அறுக்கும் முஸ்லிம் ஆட்டை அறுத்து மாட்டிறைச்சி என்று சொல்ல மாட்டான். உண்ணக் கூடாது என்று தடுக்கப்பட்ட நாய், பன்றி காகம் ஆகியவற்றை அவன் அறுக்க மாட்டான்.

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதால் இந்த நன்மையும் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான் ‎பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க ‎வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும்போது ‎தெரிய வரும் காரணங்களாகும். இது ‎அல்லாத இன்னும் பல காரணங்களும் ‎இருக்கலாம்.‎