இரத்தம் தடுக்கப்பட்டது என்பதன் பொருள்
தாமாகச் செத்தவை என்பதைத் தொடர்ந்து இரத்தத்தை இறைவன் குறிப்பிடுகிறான். உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியின் இரத்தமும் உண்ண அனுமதிக்கப்படாத பிராணியின் இரத்தமும் விலக்கப்பட்டவையாகும்.
தமிழகத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் ஆட்டு இரத்தத்தை சர்வ சாதாரணமாக உண்கின்றனர். முஸ்லிம் வியாபாரிகள் இரத்தத்தை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விரண்டும் கூடாததாகும்.
இந்த வசனத்தில் பன்றியின் மாமிசத்தையும் தடை செய்திருப்பதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு மதிப்பளித்து பன்றியின் மாமிசத்தை முஸ்லிம்கள் வெறுத்து வருகின்றனர். ஆனால் அதே தொடரில் தான் இரத்தம் தடை செய்யப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இந்தத் தடைக்கு முஸ்லிம்கள் மதிப்பளிக்காதது வேதனைக்குரியதாகும். பன்றியின் மாமிசத்தை உண்பதும் இரத்தம் உண்பதும் சம அளவிலான குற்றங்களே என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அதில் சிறிதளவு கூட உட்கொள்வது கூடாது! அதிக அளவு உண்பது எவ்வளவு குற்றமோ சிறிதளவு உண்பதும் அதே அளவு குற்றமாகும் என்பதை நாம் அறிவோம்.
இரத்தத்தைப் பொருத்தவரை இந்த பொது விதியைப் பயன்படுத்த முடியாது. மாமிசத்துடன் ஒட்டியிருக்கும் இரத்தம், மாமிசத்தின் உள்ளே உறைந்து போயிருக்கும் இரத்தம், ஆகியவற்றை நாம் தவிர்க்க வேண்டியதில்லை. சிவப்பு நிறம் மாறும் அளவுக்கு மாமிசத்தைப் பலமுறை கழுவ வேண்டியதில்லை. பிராணியை அறுத்த பின் இரத்தம் வெளியேறிவிட்டால் மாமிசத்தை கழுவாமலேயே உண்ணலாம். பின்வரும் வசனத்திலிருந்து இதை நாம் அறியலாம்.
ஓட்டப்பட்ட இரத்தம்
தாமாகச் செத்தவை, ஓட்டப்பட்ட இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை என்று (நபியே) கூறுவீராக!
அல்குர்ஆன் 6:145
நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் 2:173 வசனத்தில் இரத்தம் என்று பொதுவாக கூறப்பட்டாலும் 6:145 வசனத்தில் ஓட்டப்பட்ட இரத்தம் என்று கூறப்படுகின்றது. முந்தைய வசனத்தில் கூறப்படும் இரத்தம் என்பது ஓட்டப்பட்ட இரத்தத்தையே குறிக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ஓட்டப்பட்ட பின் மாமிசத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்தம், வேட்டை நாய்களால் உயிரற்ற நிலையில் பிடித்து வரப்படும் பிராணிகளுக்குள் உறைந்து போய்விட்ட இரத்தம் ஆகியவற்றுக்கு இந்தத் தடை பொருந்தாது.
அறுக்கப்பட்ட பின் பீறிட்டு வெளியேறும் இரத்தத்தையே இறைவன் தடை செய்திருக்கிறான் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஓட்டப்பட்ட இரத்தம் என்று இறைவன் கூறியிருக்க மாட்டான்.
கைவிரலில் வெட்டுப்பட்டு இரத்தம் வெளிப்பட்டால் பலரும் உடனே இரத்தம் வடியும் விரலை வாயில் வைத்துச் சூப்புகின்றனர். இவ்விரத்தமும் ஓட்டப்பட்ட இரத்தமே. எனவே அதைத் துப்பிவிட வேண்டும்.
இரத்தம் விலக்கப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் ஒரு ஐயம் தோன்றலாம். நாம் வாழுகின்ற நவீன காலத்தில் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இன்னொரு மனிதனின் இரத்ததைச் செலுத்திப் பிழைக்க வைக்கின்றனர். இதைச் செய்யலாமா? செய்தால் இறைவனின் கட்டளையை நாம் மீறியவர்களாக ஆவோமா?
நிர்பந்தமான நிலையில் இரத்தம் தடையில்லை என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதால் உயிர் காக்கும் அவசியம் காரணமாக இரத்த தானம் செய்தல் இரத்தம் செலுத்துதல் குற்றமில்லை.