காதுகளில் அடித்தோம் என்பதன் பொருள்?
கேள்வி
உங்கள் திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் சூரா கஹஃபில் 11 வது வசனத்தை எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள். இதே நேரம் ஜான் ட்ரஸ்ட் தர்ஜமாவில் ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம் என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். எது சரி?
உங்கள் மொழியாக்கத்தில்
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ
என்ற அரபி வாசகத்திற்கான மொழியாக்கம் இல்லை. فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا என்ற வாசகத்திற்கு மாத்திரம் தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தவறுதலாக விடுபட்டதா? அல்லது வேறு விளக்கங்களுக்காக விட்டீர்களா? என்பதைத் தெளிவுபடுத்துமாறு அன்பாய் வேண்டுகிறேன்.
ரஸ்மின், இலங்கை
எல்லா மொழிகளிலும் நேரடிப் பொருள் அல்லாமல் வேறு பொருளில் சில சொற்கள் பயன்படுத்தப்படும். மொழி பெயர்க்கும் போது எல்லா இடங்களிலும் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்காது. எந்த இடத்தில் அப்படியே மொழி பெயர்த்தால் சரியான கருத்து கிடைக்குமோ அந்த இடத்தில் மட்டும் தான் அப்படியே அர்த்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லாத இடங்களில் அதன் கருத்து என்னவோ அதைத்தான் குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக வள்ளல் தன்மையைக் குறிக்க கை நீளமானவன்
الاطول يدا
என்று சொல்வார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர்.
باب حدثنا موسى بن إسماعيل حدثنا أبو عوانة عن فراس عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها أن بعض أزواج النبي صلى الله عليه وسلم قلن للنبي صلى الله عليه وسلم أينا أسرع بك لحوقا قال أطولكن يدا فأخذوا قصبة يذرعونها فكانت سودة أطولهن يدا فعلمنا بعد أنما كانت طول يدها الصدقة وكانت أسرعنا لحوقا به وكانت تحب الصدقة
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ‘உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்களுள் கை நீளமானவரே!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்த போது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகு தான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 1420
கை நீளமானவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது நேரடிப் பொருளில் அல்ல என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
இதற்கு வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் தவறான அர்த்தமாகி விடும்.
ஏனெனில் இச்சொல் தமிழ் மொழியில் திருடனைக் குறிப்பதற்கே பயன்படுத்தப்படும்.
அவன் ஒரு சிங்கம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.
இந்த இடத்தில் சிங்கம் என்பது வீரனைக் குறிக்கும். அரபு மொழியில் மட்டும் இது வீரனைக் குறித்து தமிழ் மொழியில் அப்படி குறிக்காவிட்டால் வீரன் என்று தான் இங்கே மொழி பெயர்க்க வேண்டும்.
ஆனால் சிங்கம் என்ற சொல்லை வீரனுக்கும் பயன்படுத்துவது தமிழ் மொழியிலும் உள்ளது. அரபி மொழியிலும் உள்ளது. எனவே அவன் ஒரு சிங்கள் என்றே நாம் மொழி பெயர்க்கலாம். தமிழ் கூறும் மக்கள் வீரன் என்று சரியாக புரிந்து கொள்வார்கள். கை நீளமானவன் என்பது அரபியில் வள்ளல் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். தமிழ் கூறும் மக்கள் திருடன் என்ற கருத்தில் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற இடங்களில் கை நீளமானவன் என்று மொழி பெயர்த்தால் வள்ளல் என்று விளங்காமல் திருடன் என்று தான் விளங்குவார்கள். எனவே கை நீளமானவன் என்று பொருள் கொள்ளாமல் வள்ளல் என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். மக்கள் சரியாகப் புரிந்து கொள்வது தான் முக்கியம்.
இது போல் தான் காதுகளில் அடித்தல் என்பது அரபு மொழியில் தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்துவார்கள். ஆனால் தமிழ் மொழியில் காதுகளில் அடித்தல் என்பதை தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தும் வழக்கம் இல்லை.
இந்த நிலையில் காதுகளில் அடித்தோம் என்று நாம் இச்சொல்லுக்கு மொழி பெயர்த்தால் காதுகளில் அல்லாஹ் அடித்தான் என்று தான் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள். அரபியர்கள் தூங்கச் செய்தோம் என்று புரிந்து கொள்வார்கள்.
எனவே தான் காதுகளில் அடித்தோம் என்பதை எந்த அர்த்தத்தில் அரபுகள் பயன்படுத்துகிறார்களோ அந்த அர்த்தத்தையே நாம் செய்துள்ளோம்.
இதற்கு ஆதாரமாக பிரபலமான மூன்று தப்சீர்களை எடுத்துக் காட்டியுள்ளேன்.
تفسير الطبري
: فضربنا على آذانهم بالنوم في الكهف : أي ألقينا عليهم النوم،
تفسير ابن كثير
فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا أي ألقينا عليهم النوم حين دخلوا إلى الكهف، فناموا سنين كثيرة
تفسير القرطبي
عِبَارَةٌ عَنْ إِلْقَاءِ اللَّهِ تَعَالَى النَّوْمَ عَلَيْهِمْ. وَهَذِهِ مِنْ فَصِيحَاتِ الْقُرْآنِ الَّتِي أَقَرَّتِ الْعَرَبُ بِالْقُصُورِ عَنِ الْإِتْيَانِ بِمِثْلِهِ
குர்துபீ, இப்னு கஸீர், தபரி ஆகிய மூன்று தப்ஸீர்களிலும் இதன் கருத்து தூங்கச் செய்தோம் என்பது தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் மற்றவர்கள் நேரடி அர்த்தம் செய்யப் போய் அவர்களுக்கே திருப்தி இல்லாமல் பிராக்கெட்டில் தூங்குமாறு என்று போட்டுள்ளனர்.
மேலும் மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் ஆதானிஹிம் என்பதற்கு காதுகள் என்று நேரடி அர்த்தம் செய்து விட்டு லரப்னா என்பதற்கு அடித்தோம் என்று பொருள் செய்யாமல் தடை ஏற்படுத்தினோம் என்று மறைமுகமான அர்த்தத்தைத் தான் செய்துள்ளனர். அதாவது அவர்களும் பாதிக்கு நேரடி அர்த்தம் செய்து மீதிக்கு வேறு அர்த்தம் செய்துள்ளனர்.