இஸ்லாத்தின் பார்வையில் சகுனம்
வீட்டில் குளவி கூடு கட்டினால் குழந்தை பிறக்குமா?
இப்படி ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதனால் இது நடக்கும் என்று நம்புவதாக இருந்தால் இரண்டுக்கும் சம்மந்தம் இருக்க வேண்டும்.
வானம் இருட்டிக் கொண்டு வரும் போது, கருமேகம் சூழும் போது மழை வரலாம் என்று முடிவு செய்தால் அதில் அறிவு உள்ளது.
கார் ஹாரன் சப்தத்தைக் கேட்டு பின்னால் ஒரு கார் வருகிறது என்று முடிவு செய்தால் அதில் அர்த்தம் உள்ளது.
இப்படி இல்லாமல் இது நடந்தால் அது நடக்கும் என்று கூறுவது மடமையாகும். மூட நம்பிக்கையாகும்
காகம் கத்தினால் விருந்தினர் வருவார்கள் என்று நம்புவதாக இருந்தால் இதை எதனடிப்படையில் யார் கண்டு பிடித்தார்கள்? எந்த அடிப்படையில் ஆராய்ச்சி செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? எவனோ உளறிக் கொட்ட அதை நம்பிவிட்டார்கள்.
இஸ்லாம் மார்க்க நம்பிக்கைப்படி எதிர்காலத்தில் நடக்கவுள்ள எந்த ஒன்றையும் அறியும் ஆற்றலை எந்த மனிதனுக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. எந்த படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை.
இது நடந்தால் அது நடக்கும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான ஞானமாகும்.
மனிதருக்கும் மனிதனல்லாத படைப்புகளுக்கும் இந்த ஞானம் உள்ளதாக நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கொடிய பாவமாகும்.
மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
திருக்குர்ஆன் 6:59
“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 27:65
யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
திருக்குர்ஆன் 31:34
சகுனங்கள் யாவும் மறைவானவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் வகையில் உள்ளன. அதை நம்புவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானதாகும்.
குளவிகளுக்கு இந்த ஞானம் உண்டா? ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்தை அறிந்து இந்த மனிதனுக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று குளவியால் எப்படி அறிய முடியும்?
குளவிகள் இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது?
மனிதனல்லாத சில உயிரினங்கள் பூகம்பம் போன்ற பேரிடர்களை அது ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அறிந்து கொள்ளும் என்பதற்கு அறிவியல் ரீதியாக சான்று உண்டு. பூகம்பம் ஏற்படும் முன்பு இலேசாக ஏற்படும் அதிர்வுகளை சில உயிரினங்களால் உணர முடியும்.
ஆனால் இந்த வீட்டில் உள்ள இந்தத் தம்பதிக்கு குழந்தை பிறக்க உள்ளது என்பது குளவிக்கு எப்படித் தெரியும்? குளவிக்கு அல்லாஹ்வுடய ஞானம் உள்ளதாகத் தான் இதற்கு அர்த்தம்.
அந்தக் குளவி இதற்காகத் தான் கூடு கட்டுகிறது என்ற ஞானம் மனிதனுக்கு எதில் இருந்து கிடைத்தது.
எனவே எல்லா விதமான சகுனங்களும் இஸ்லாமின் அடிப்படயைத் தகர்த்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் குற்றம் என்பதையும் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் என்பதையும் உணர்ந்து இது போன்ற மூட நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும்.
நபிமார்கள், வானவர்கள், ஜின்கள் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
- வானவருக்கு மறைவான ஞானம் இல்லை – 2:,30,31,32, 16:77
- ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 34:14
- நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 5:109
- ஆதம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 2:36, 7:20, 7:22, 7:27, 20:115, 20:120,121
- நூஹ் நபிக்கு மறைவான ஞானம் இல்லை -. 11:31, 11:42, 11:46,47
- இப்ராஹீம் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 9:114, 11:69,70, 15:53, 15:54, 37:104, 51:26
- ஈஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 5:116, 5:117
- லூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 11:77, 11:81, 15:62
- ஸுலைமான் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 27:20, 27:22
- யாகூப் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 12:11-15, 12:66
- தாவூத் நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 38:22-24
- மூஸா நபிக்கு மறைவான ஞானம் இல்லை – 7:150, 20:67, 20:86, 28:15
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை – 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43
இவர்களுக்கு இல்லாத மறைவான ஞானம் நமக்கு எங்கிருந்து கிடைத்தது? குளவிக்கு எப்படிக் கிடைத்தது?
முஸ்லிமல்லாத மக்கள் சகுன சாஸ்திரம் என்று எழுதி வைத்துள்ளது தான் முஸ்லிம்களிடம் இந்த அம்பிக்கை பரவுவதற்காக காரணம் ஆகும்.
எவை எல்லாம் சகுமனாக கருதப்படுகிறது என்ற விபரத்தைக் காணுங்கள்!
சுப சகுனமாகக் கருதப்படுபவை
- கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
- பிணம் எதிரே வருதல்.
- அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
- தாயும் பிள்ளையும் வருதல்.
- கோயில் மணியடித்தல்.
- சுமங்கலிகள் வருதல்.
- கருடனைக் காண்பது.
- திருவிழாவைக் காணல்.
- எருக் கூடையைக் காணல்.
- யானையைக் காண்பது.
- நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
- பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
- கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
- காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
- கழுதை கத்துதல்.
- பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
- அணில் வீட்டிற்குள் வருதல்
- மேலும் மலர், மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, புலி, யானை, இரட்டை பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், தேர், தாமரை மலர் போன்றவைகளைக் காணுதலும் நல்ல சகுனங்களாம்.
- பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியம் வெற்றியடையுமாம்.
- எருமை, ஆடு, பன்றி, கரடி, நாய், குரங்கு, கீரிப்பிள்ளை ஆகியன இடப்பக்கமாக வந்தால் நல்ல சகுனங்களாம்.
அப சகுனமாக கருதப்படுபவை
- பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
- ஒற்றைப் பிராமணனைக் காணல்.
- விதவையைக் காணல்.
எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.
விறகுடன் வருபவரைக்காணல்.
மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.
தும்மல் ஒலி கேட்டல்.
ஆந்தை அலறல்.
கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.
காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.
நாய் குறுக்கே செல்லுதல்.
போர் வீரனைக் காணுதல்.
நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.
அம்பட்டனைக் காணல்.
வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.
பாய் விற்பவரைக் காணல்.
அரப்பு விற்பவரைக் காணல்
விலக்குமாறு விற்பவரைக் காணல்.
முக்காடிட்டவரைக் காணல்.
தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.
பயணத்தை மேற்கொள்ளும் போது கோடாரி, சுத்தி, கடப்பாரை, வீட்டிற்கு தூரமான மங்கை, பாம்பு, குரங்கு, ஆடு, கழுதை, நெருப்பு, நோயாளி, விறகுச் சுமை, ஏணி முதலியவற்றைக் காண்பது கெட்ட சகுனங்களாம்.
பல்லி விழும் சகுனம், பறவை சகுனம், உடும்பு சகுனம் என்று இவற்றில் ஏராளமான உட்பிரிவுகளை வைத்துள்ளனர்.
இது போன்ற சகுனங்களை நம்பி அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகத்தில் இருந்து விடுபடுவோமாக.