நபிகளும் அல்லாஹ்வும் ஒருவரா? அத்வைதத்தின் அறியாமை

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்)

எனவே அவர்களை நீங்கள் சொல்லவில்லை. எனினும், அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். (முஹம்மதே) நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும் அல்லாஹ் தான் எறிந்தான்; நம்பிக்கையாளர்களை அழகிய முறையில் சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்.

திருக்குர்ஆன்: 8:17

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த முதல் போர்க் களம் பத்ருப் போர் என்பதை நாம் அறிவோம்.

இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்ட இப்போரில் இறைவன் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி முஸ்லிம்களுக்கு வெற்றியை வழங்கினான்.

எதிரிகளை விட எண்ணிக்கையில் மூன்றில் இரு மடங்கு குறைவாக முஸ்லிம்கள் இருந்தனர். ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற சாதனங்களும் முஸ்லிம்களிடம் இருந்ததை விட எதிரிகளிடம் பல மடங்கு அதிகமாக இருந்தன.

இரு படையினரையும் யார் எடை போட்டுப் பார்த்தாலும் முஸ்லிம்கள் நிச்சயமாகத் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தான் கணிக்க முடியும். அந்த அளவுக்கு பலவீனமான நிலையில் முஸ்லிம்கள் இருந்தனர். ஆனாலும் இறைவன் – முஸ்லிம்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கினான்.

* ஆயிரம் வானவர்களை இறைவன் களத்தில் இறக்கினான். (8:9)

* சுறுசுறுப்புடன் போரிடுவதற்காக அதற்கு முன் சிறிய தூக்கத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் இதயங்களை அமைதிப்படுதினான். (8:11)

* அன்றிரவு மழையை இறக்கி அவர்களைத் தூய்மைப்படுத்தியதுடன் அவர்களின் பாதங்களையும் உறுதிப்படுத்தினான். (8:11)

* வானவர்களும் களத்தில் இறங்கிப் போரிட்டனர்.

* எதிரிகளின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்தினான். (8:12)

இந்த அற்புதங்களுடன் சேர்த்து நிகழ்த்திய மற்றொரு அற்புதத்தைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பொடிக் கற்களில் ஒரு கைப்பிடியை எனக்கு எடுத்துவா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அவர் எடுத்துக் கொடுத்தார். அதை எதிரிகளின் முகங்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) எறிந்தனர். எதிரிக் கூட்டத்தின் ஒவ்வொருவர் கண்களிலும் அது படாமல் இருக்கவில்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் “நீர் எறிந்த போது நீர் எறியவில்லை. எனினும், அல்லாஹ் தான் எறிந்தான்” என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: தப்ரானி)

ஒரு கூட்டத்தை நோக்கி யாரேனும் ஒருவர் பொடிக் கற்களை வீசி எறிந்தால் அவற்றுள் சில கற்கள் சிலர் மீது படலாம். அனைவர் மீதும் அதுவும் குறி வைத்து வீசியது போல் அனைவரின் கண்கள் மீதும் அது படும் எனக் கூற முடியாது.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீசிய பொடிக் கற்கள் குறி வைத்து வீசப்பட்டது போல் எதிரிகளின் கண்களைப் பதம் பார்த்தது. இதைத் தான் மேற்கண்ட வசனத்தில அல்லாஹ் கூறுகிறான்.

மனிதர்கள் கற்களை வீசினால் என்ன விளைவு ஏற்படுமோ அது போன்ற விளைவு ஏற்படாமல் இறைவனே விசினால் எத்தகைய விளைவுகள் ஏற்படுமோ அத்தகைய விளைவுகள் ஏற்பட்டது மற்றொரு அற்புதமாகும்.

இத்தகைய அற்புதங்களால் தான் வெற்றி பெற முடிந்ததே தவிர போரில் பங்கெடுத்தவர்களின் ஆற்றலினால் அல்ல என்பதை உணர்த்தவே இறைவன் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வளவு தெளிவான வசனத்தையும் சில வழிகேடர்கள் தங்களின் தவறான கொள்கைக்கு ஆதாரமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றியவர்கள் தாம் இந்த வழிகேடர்கள். இவர்கள் நபிகள் நாயகத்தை நேசிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு வரம்பு மீறி அவர்களைப் புகழலானார்கள். இதன் உச்சகட்டமாக “அல்லாஹ் தான் ரசூல், ரசூல் தான் அல்லாஹ்” என்றும் கூறத் துணிந்தார்கள்.

அல்லாஹ் வேறு, நபிகள் நாயகம் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்றெல்லாம் உளற ஆரம்பித்தார்கள். ஏராளமான கட்டுக் கதைகளையும் இதற்கேற்ப இவர்கள் உருவாக்கினார்கள்.

ஈஸா நபி விஷயத்தில் கிறிஸ்தவர்கள் வரம்பு மீறியதையும் இவர்கள் மிஞ்சினார்கள்.

குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸ்களையோ வளைத்து தங்களின் உளறலை நியாயப்படுத்த முடியுமா? என்று தேடியவர்களுக்கு மேற்கண்ட வசனம் மிகப் பெரிய சான்றாகத் தென்பட்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதராக இருந்தால் இப்படி எறிய முடியுமா? அல்லாஹ்வாக இருந்தால் தானே எறிய முடியும்? அவர்கள் எறிந்ததை அல்லாஹ், தான் எறிந்ததாக அல்லவா கூறுகிறான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் ஒருவரே என்று இந்த மூடர்கள் உளறலானார்கள்.

இவ்வசம் கூறுவது என்ன என்பதை விளங்காத சில மூடர்களும் இவர்களது வாதத்தில் மயங்கினார்கள். எந்த மார்க்கம் இணை வைத்தலின் வாசலைக் கூட இறுக்கமாக அடைத்ததோ அந்த மார்க்கத்திலேயே இவர்கள் விளையாடலானார்கள். எந்த மார்க்கம் மனிதன் ஒருக்காலும் கடவுளாக முடியாது என அறைகிறதோ அந்த மார்க்கத்திலேயே மனிதரைக் கடவுளாக்கினார்கள்.

ஆனால் இந்த வசனம் அவர்களது வாதத்துக்கு நேர் எதிரானதாகும்.

“நான் கல்லை வீசினால் போதும்! எதிரிகள் ஓட்டமெடுப்பார்கள் என்று முஹம்மதே நீர் நினைத்து விடக் கூடாது. மாறாக குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் நீர் கல்லை வீசிய போது எனது வல்லமையால் அதைப் பரவச் செய்தேன்” என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இது தான் இவ்வசனத்தின் கருத்து என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் போக வேண்டியதில்லை. இவ்வசனத்திலேயே இதற்கான காரணம் அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொடிக் கற்களை வீசியதைக் கூறுவதற்கு முன் நபித்தோழர்கள் போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்தியதை அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான்” என்று குறிப்பிடுகிறான்.

நபித்தோழர்கள் தமது வாள்களாலும், வேல்களாலும் தான் எதிரிகளை வெட்டி வீழ்த்தினார்கள். நபித்தோழர்களின் கரத்தால் செய்யப்பட்ட இந்த தீரச் செயலுக்கு அல்லாஹ் சொந்தம் கொண்டாடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எறிந்தது பற்றிப் பேசும் போது பயன்படுத்தியது போன்ற வாசக அமைப்பையே இங்கேயும் பயன்படுத்துகிறான். நபிகள் நாயகம் மட்டுமல்ல, பத்ருப் போரில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களுமே அல்லாஹ்வாக இருந்தார்கள் என்று இவர்கள் வாதிட வேண்டுமல்லவா?

அல்லாஹ் தான் நபி, நபி தான் அல்லாஹ் என்று இவர்கள் கூறியது போல் அல்லாஹ் தான் நபித்தோழர்கள். நபித்தோழர்கள் தான் அல்லாஹ் எனவும் கூற வேண்டிய நிலை ஏற்படும்.

பத்ருப் போரில் பல நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் கிறுக்குத் தனமான வாதப்படி அல்லாஹ் தான் கொல்லப்பட்டான் என்று கூறும் நிலை ஏற்படும்.

இந்த வெற்றிக்கு நபிகள் நாயகமோ நபித் தோழர்களோ சொந்தம் கொண்டாடி விடக் கூடாது என்பதற்காகத் தான், தான் நடத்திய அற்புதங்களை இதற்கு முந்தைய வசனங்களில் அல்லாஹ் நினைவுபடுத்துகிறான்.

நானும் உங்களைப் போன்ற மனிதனே என்று தெளிவாக அவர்களை அல்லாஹ் கூறச் சொல்கிறான். (திருக்குர்ஆன் 18:110)

தெளிவான இந்தப் பிரகடனத்தை அலட்சியம் செய்துவிட்டு சம்பந்தமில்லாத உளறலை நியாயப்படுத்த எண்ணுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்டது, பருகியது, அவர்கள் மலஜலம் கழித்தது, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டது, மற்றவர்களைப் போல் தாய், தந்தையருக்குப் பிறந்தது, மனைவி-மக்களை இழந்து கவலைப்பட்டது, சித்ரவதைக்கு ஆளானது, நாடு கடத்தப்பட்டது, தமது மனைவியின் மீது எதிரிகள் பழி கூறிய போது உண்மை நிலையை அறியாமல் இருந்தது, ஒரு கூட்டத்தாரின் அழைப்பை ஏற்று அனுப்பிய எழுபது நபித் தோழர்கள் அவர்களால் கொல்லப்படுவார்கள் என்பதை முன்பே அறியாமல் இருந்தது, வறுமையில் உழன்றது,

என ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் தாம் ஒரு மனிதர் என்பதை நிரூபித்துச் சென்ற பிறகும் இப்படி உளறுபவன் அறிவுடையவனாக இருக்க முடியாது.

நபிகள் நாயகத்துக்கும் நபித்தோழர்களுக்கும் மட்டுமல்ல காஃபிர்கள் உள்ளிட்ட எல்லா மனிதர்கள் விஷயத்திலும் கூட இறைவன் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான்.

நீங்கள் விவசாயம் செய்கிறீர்களே! அதைப் பற்றிக் கூறுங்கள்! நீங்கள் தான் அதை விவசாயம் செய்கிறீர்களா? அல்லது நாம் விவசாயம் செய்கிறோமா? (திருக்குர்ஆன் 56:63,64) என்று அல்லாஹ் கூறுகிறான்.

நாம் விவசாயம் செய்வதைக் கூறி விட்டு உண்மையில் நீங்கள் விவசாயம் செய்யவில்லை. நாமே விவசாயம் செய்கிறோம் என்கிறானே! விவசாயிகள் அனைவரும் அல்லாஹ்வா? இந்த மூடர்கள் சிந்திக்க வேண்டாமா?

நீங்கள் விந்துத் துளியாகச் செலுத்துகிறீர்களே! அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமோ? எனவும் அல்லாஹ் கேட்கிறான். (திருக்குர்ஆன் 56:58,59)

நாம் தான் விந்துத் துளியைத் செலுத்துகிறோம். ஆனாலும், அதைக் குழந்தையாக ஆக்குவதும், ஆக்காது விடுவதும் அவனது கட்டளைப்படி நடப்பது என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.

நாம் தான் விதைகளை விதைக்கிறோம். ஆனாலும் விதைத்ததை முளைப்பிக்கச் செய்து ஒன்றுக்கு நூறாக இன்னும் அதிகமாக ஆக்குவது அவனது வல்லமையின் பாற்பட்டது என்று இதையும் விளங்கிக் கொள்கிறோம்.

அது போல் தான் மேற்கண்ட வசனத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்தால் இவர்களது வாதம் எந்த அளவுக்கு அபத்தமானது என்பது எளிதில் விளங்கும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என இரண்டு சொற்றொடர்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. நீர் எறிந்த போது எனக் கூறும் போது எறிந்தவர் நபிகள் நாயகம் என்று அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான். எதை ஒப்புக் கொண்டானோ அதையே நீர் எறியவில்லை எனக் கூறி உடனே மறுக்கவும் செய்கிறான்.

அல்லாஹ்வின் வார்த்தையில் நிச்சயமாக முரண்பாடு இருக்கவே முடியாது. “நான் சாப்பிட்ட போது நான் சாப்பிடவில்லை” என்று ஒருவன் கூறினால் அதை நாம் அபத்தம் என்போம்.

ஆனால் இறைவன் எப்படி முரண்பட்டுப் பேசுவான் என்பதைச் சிந்திப்பார்களானால் இதன் சரியான பொருளை விளங்கிக் கொள்வார்கள். இப்படி உளறிக் கொட்ட மாட்டார்கள்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகத்தை நேரடியான பொருளில் நாம் எடுத்துக் கொள்வது கிடையாது. முரண்பட்ட இரண்டுக்கும் இரு வேறு அர்த்தங்களையே நாம் கருத்தில் கொள்வோம்.

நாம் பயிரிடும் போது நாம் பயிரிடுவதில்லை. அல்லாஹ் தான் பயிரிடுகிறான் என்று கூறினால் பயிரிடுதல் என்பதற்கு இரு வேறு இடங்களில் இரு வேறு அர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்கிறோம்.

நாம் பயிரிடும் போது என்ற சொற்றொடருக்கு தானியத்தை மண்ணில் புதைக்கும் போது நீர் பாய்ச்சும் போது என்று பொருள் கொள்கிறோம்.

நாம் பயிரிடுவதில்லை என்று அடுத்துக் கூறுகிறோம். இந்த இடத்திலும் அதே பொருளைக் கொண்டால் அது உளறலாகி விடும். நாம் முளைக்கச் செய்வில்லை என்று வேறு பொருள் கொள்கிறோம். இப்போது முரண்பட்டதாகவோ உளறலாகவோ ஆகாது.

அதாவது நாம் (பயிரிடும் போது) விதையைப் புதைக்கும் போது நாம் அதைப் (பயிரிடுவது இல்லை) முளைக்கச் செய்வதில்லை என்ற கருத்து வரும்.

இது போல் தான் மேற்கண்ட வசத்திலும் பொருள் கொள்ள வேண்டும்.

நீர் எறிந்த போது

நீர் எறியவில்லை

என்று முரண்பட்ட இரண்டு சொற்றொடர்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீ எறிந்த போது அதாவது பொடிக் கற்களை வீசிய போது,

நீர் எறியவில்லை அதாவது ஒவ்வொருவர் முகத்திலும் நீர் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை

என்று பொருள் கொண்டால் தான் முரண்பாடில்லாத வாசகமாக அது அமையும்.

இது போன்ற வார்த்தைப் பிரயோகம் அனைத்து மொழி இலக்கியங்களிலும் மக்களின் உரையாடல்களிலும் காணக் கூடியது தான். குர்ஆனுக்கு மட்டும் உரிய இலக்கணம் இல்லை.

பன்னீர் செல்வம் பேசிய போது, பன்னீர் செல்வம் பேசவில்லை. ஜெயலலிதா தான் பேசினார் என்று இப்போதும் நாம் கூறலாம்.

ஆனால் இரண்டு இடத்திலும் வெவ்வேறு பொருளைக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் அது உளறல் தவிர வேறு இல்லை.

பன்னீர் செல்வம் பேசவில்லை. அதாவது கருத்து அவருடையதல்ல என்று பொருள் கொண்டால் தான் இந்த வாசக அமைப்பு சரியானதாகும்.

இந்த விதியின் அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்குப் பொருள் கொண்டால் எறிந்தது நபிகள் நாயகம். அதைச் சேர்த்து வைத்தது அல்லாஹ் என்ற கருத்து வரும். அல்லாஹ் செய்தது வேறு! அவன் தூதர் செய்தது வேறு. அல்லாஹ் வேறு! அவன் தூதர் வேறு என்பது இதன் மூலம் உறுதியாகும்.