நோன்பின் நிய்யத்

صحيح البخاري

1 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: புகாரி 1

தொழுகையானாலும், நோன்பானாலும், இன்ன பிற வணக்கங்களானாலும் நிய்யத் மிகவும் அவசியமாகும்.

நிய்யத் என்றால் என்ன? இதைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறியாதவர்களாக உள்ளனர்.

குறிப்பிட்ட சில வாசகங்களை வாயால் மொழிவது தான் நிய்யத் என இவர்கள் நினைக்கின்றனர். பல காரணங்களால் இவர்களது நினைப்பு தவறானதாகும்.

நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.

ஒருவருக்குக் காலையில் எழுந்தது முதல், இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய நேரம் முழுவதும் எதையும் உண்ணாமல் பருகாமல் குடும்ப வாழக்கையில் ஈடுபடாமல் இருந்துள்ளார். ஆனால் நோன்பு வைப்பதாக இவர் எண்ணவில்லை. ஏதாவது கிடைத்தால் சாப்பிட்டிருப்பார். நோன்பாளியைப் போலவே இவர் எதையும் உட்கொள்ளா விட்டாலும் நோன்பு நோற்கும் தீர்மானம் எடுக்காததால் இவர் நோன்பு வைக்கவில்லை.

இவ்வாறு மனதால் முடிவு செய்வது தான் நிய்யத் எனப்படுகிறது.

ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக நான்கு மணிக்கு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக இந்த நேரத்தில் சாப்பிடுகிறார். நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதன் காரணமாகவே இவர் இப்படி நடந்து கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்து விட்டார். இன்னும் சொல்வதாக இருந்தால் இரவில் படுக்கும் போதே ஸஹருக்கு எழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படுக்கிறார்.

இது தான் நிய்யத்!

இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. நோன்பு நோற்பதாக மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே சரியானதாகும்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவது தான் நிய்யத் என்ற நம்பிக்கை நடைமுறையில் உள்ளது.

நவைத்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா

என்பது தான் அந்தக் குறிப்பிட்ட வாசகம்.

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று தமிழாக்கமும் செய்து அதையும் கூற வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? இல்லவே இல்லை.

அவர்களிடம் பாடம் கற்ற நான்கு கலீபாக்களோ, ஏனைய நபித் தோழர்களோ இவ்வாசகத்தைக் கூறினார்களா? என்றால் அதுவும் இல்லை.

நான்கு இமாம்களாவது இவ்வாறு கூறியுள்ளார்களா? என்றால் அது கூட இல்லை. உலகில் எல்லா நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எங்கேயும் இந்த வழக்கம் இல்லை. இந்தியாவிலும், இந்தியர்கள் போய்க் கெடுத்த இலங்கை போன்ற நாடுகளிலும் தவிர வேறு எங்கும் இந்த வழக்கம் இல்லை.

நிய்யத் என்பதன் பொருள் மனதால் நினைத்தல் என்பதாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கற்றுத் தராததாலும் இதை விடடொழிக்க வேண்டும்.

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால் அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம்

மேலும் நிய்யத் என்ற பெயரில் சொல்லித் தரப்படும் வாசகத்தின் பொருளைச் சிந்தித்தால் கூட அது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதாகவே உள்ளது.

ரமாளன் மாதத்தின் பர்லான நோன்பை அதாவாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்பது இதன் பொருள்.

இஸ்லாமிய அடிப்படையில் ஒரு நாள் என்பது மக்ரிபிலிருந்து ஆரம்பமாகிறது. இஸ்லாம் பற்றிய அறிவு பெரிய அளவில் இல்லாதவர்கள் கூட நாளை வெள்ளிக்கிழமை என்றால் வியாழன் பின் நேரத்தை வெள்ளி இரவு என்றே கூறும் வழக்கமுடையவர்களாக உள்ளனர்.

ஒருவர் ஸஹர் நேரத்தில் நாளை பிடிப்பதாக நிய்யத் செய்கிறார். ஆனால் உண்மையில் இன்று தான் நோன்பு நோற்கிறாரே தவிர நாளை அல்ல! ஏனெனில் ஸஹரைத் தொடர்ந்து வரக் கூடிய சுபுஹ் இன்று தானே தவிர நாளை அல்ல!

இதைச் சிந்தித்தால் வாயால் நிய்யத் சொல்வது மார்க்கத்தில் உள்ளது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே இது போன்ற நவீன கண்டுபிடிப்புகளை விட்டுவிட்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த முறைப்படி மனதால் நோன்பு நோற்பதாக உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே நிய்யத் எனப்படும்.

நிய்யத் செய்யும் நேரம்

நோன்பு நோற்கும் நிய்யத்தை, அதாவது முடிவை எப்போது எடுக்க வேண்டும்?

கடமையான நோன்புக்கும், கடமையல்லாத நோன்புக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.

ரமளான் அல்லாத நோன்பாக இருந்தால் நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் சுபுஹ் தொழுத பின்பு கூட எடுத்துக் கொள்ளலாம்.

காலையில் சுபுஹ் தொழுது விட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டில் உண்பதற்கு எதுவும் இல்லை. பட்டிணியாகத் தான் அன்றைய பொழுது கழியும் போல் தெரிகிறது. அப்போது நோன்பு நோற்பதாக முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் சுபுஹ் நேரம் வந்தது முதல் எதுவும் உண்ணாமல் இருந்திருக்க வேண்டும்.

صحيح مسلم

2770 – وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى بْنِ عُبَيْدِ اللَّهِ حَدَّثَتْنِى عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ – رضى الله عنها – قَالَتْ قَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ذَاتَ يَوْمٍ « يَا عَائِشَةُ هَلْ عِنْدَكُمْ شَىْءٌ ». قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا عِنْدَنَا شَىْءٌ. قَالَ « فَإِنِّى صَائِمٌ ». قَالَتْ فَخَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ – أَوْ جَاءَنَا زَوْرٌ – قَالَتْ – فَلَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ – أَوْ جَاءَنَا زَوْرٌ – وَقَدْ خَبَأْتُ لَكَ شَيْئًا. قَالَ « مَا هُوَ ». قُلْتُ حَيْسٌ. قَالَ « هَاتِيهِ ». فَجِئْتُ بِهِ فَأَكَلَ ثُمَّ قَالَ « قَدْ كُنْتُ أَصْبَحْتُ صَائِمًا ». قَالَ طَلْحَةُ فَحَدَّثْتُ مُجَاهِدًا بِهَذَا الْحَدِيثِ فَقَالَ ذَاكَ بِمَنْزِلَةِ الرَّجُلِ يُخْرِجُ الصَّدَقَةَ مِنْ مَالِهِ فَإِنْ شَاءَ أَمْضَاهَا وَإِنْ شَاءَ أَمْسَكَهَا.

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்பதற்கு) ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம். அப்போது அவர்கள், நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்று கூறினார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், ஹைஸ் எனும் (நெய், மாவு, பேரீச்சம்பழம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஒரு வகை) உணவு அன்பளிப்பாக வந்துள்ளது என்று கூறினோம். அதற்கவர்கள், நான் நோன்பு நோற்றுள்ளேன். இருந்தாலும் கொண்டு வா என்று கூறி விட்டுச் சாப்பிடலானார்கள். கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்பவர் போலாவார். விரும்பினால் செய்யாமலும் இருக்கலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம்

கடமையில்லாத நோன்பைப் பொறுத்த வரை காலையில் கூட அது குறித்து முடிவு செய்யலாம் என்பதையும், விருப்பமான உணவு தயாராக இருந்தால் கடமையில்லாத நோன்பை முறிக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆனால் கடமையான நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் எடுக்கக் கூடாது. ஏனெனில் அது நமது விருப்பத்தின் பாற்பட்டது அல்ல. சுபுஹ் முதல் மக்ரிப் வரை நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சுபுஹ் முதலே நோன்பாளியாக நாம் இருக்க வேண்டும் என்றால் சுபுஹுக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவை நாம் எடுத்து விட வேண்டும்.