பெண்களின் நகைகளுக்கு கணவன் ஜகாத் கொடுக்கவேண்டுமா?

பெண்களின் நகைகளுக்கு அப்பெண்கள் ஜகாத் கொடுக்க வேண்டுமா? கணவன் கொடுக்க வேண்டுமா?

திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா? மேலும் ஒருவருக்கு ஜகாத் கடமையாகி விட்டது. அவரிடம் ஜகாத்திற்குரிய தொகை இல்லை. எனவே அவர் கடனாகவோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தைக் கட்டலாமா?

பதில்

மனைவியின் உலகத் தேவைகளான உணவு, உடை, வசிப்பிடம், மருத்துவம் போன்ற தேவைகளுக்கு சக்தி உட்பட்டு செலவிடுவது தான் கணவன் மீதுள்ள கடமை.

வணக்க வழிபாடுகள் அவரவருக்குரிய கடமையாகும். ஒருவர் செய்ய வேண்டிய வணக்கம் மற்றவர் மீது சுமத்தப்படாது. ஜகாத் என்ற கடமை யாரிடம் செல்வம் உள்ளதோ அவர் மீது தான் கடமையாகும்.

தன் பெயரில் உள்ள வீடு வாசல் நகை, ரொக்கம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஆண் உரிமையாளராக இருந்தால் அந்த ஆண் மீது ஜகாத் கடமை; பெண் உரிமையாளராக இருந்தால் அந்தப் பெண் மீது ஜகாத் கடமையாகும்

கணவன் சொத்துக்களுக்கு மனைவியோ, மனைவியின் சொத்துக்களுக்கு கணவரோ ஜகாத் கொடுக்கும் அவசியம் இல்லை.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ لِلرِّجَالِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبُوا وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا (32)4

சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:32

பெண்களின் சொத்துக்களுக்கு பெண்களே உரிமையாளர் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. எனவே உரிமையாளர்களான பெண்கள் மீது தான் அவர்களின் செல்வத்துக்கான ஜகாத் கடமையாகும்.

மனைவிக்காக கணவன் தானாக விரும்பி ஜகாத் கொடுக்க முன் வந்தால் மனைவி அதைப் பெற்றுக் கொண்டு ஜகாத் கொடுக்கலாம். கணவன் தான் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

நகைகள் வைத்திருப்பவர் ஜகாத் கொடுக்க பணம் இல்லாவிட்டால் அதற்காக கடன் வாங்குவது கூடாது.

ஏனெனில் நகைகளை உடனடியாக பணமாக ஆக்கிக் கொள்ளலாம். ஜகாத கொடுக்க வேண்டிய அளவுக்கு உரிய நகைகளை விற்று பணமாக்கி ஜகாத் கொடுக்கலாம். அல்லது ஜகாத் கொடுக்க வேண்டிய அளவு நகையையே ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.

நகை எனும் செல்வம் கைவசம் இருக்கும் போது கடன் வாங்குவது முறையல்ல.