பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா

ஒருவர் மரணித்து விடுகிறார். அவரது இருமகன்களில் ஒருவர் அவரைக் கவனிக்கவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பே தனிக்குடித்தனம் போய் விட்டார். இன்னொரு மகன் தான் தந்தையைக் கவனித்து வந்தார். இந்த நிலையில் தந்தையைக் கவனிக்காத மகனுக்கு சொத்துரிமை உண்டா?

பதில்

பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகள் மீது கடமையாகும். பெற்றோரைக் கவனிக்காத பிள்ளைகள் இது குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.

ஆனால் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதால் சொத்துரிமையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பெற்றோரைக் கவனித்த மகனுக்கும், கவனிக்காத மகனுக்கு சமமான உரிமை உள்ளது.

ஒரு மகன் தான் தந்தையின் சொத்தைப் பெருக்குவதில் பங்கெடுக்கிறார். இன்னொரு மகனுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்றாலும் சொத்துரிமையில் எந்த மாற்றமும் வராது.

பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும் கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது

சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும், உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது.

உயிருடன் இருக்கும் போதே ஒரு மகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இனொரு மகன் தறுதலையாகத் திரிகிறான் என்றால் பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை உயிருடன் இருக்கும் போது எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது.

உழைப்பவன் உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். அப்படிச் செய்யாமல் சொத்துக்கு உரியவர் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள குறித்த சதவிகிதம் சமமாக கிடைக்கும்.