பெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா?

பெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா?

பி.அன்வர் பாஷா, பேர்ணாம் பட்டு 

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.

1350 : أن أبا طلحة دعا رسول الله صلى الله عليه و سلم إلى عمير بن أبي طلحة حين توفي فأتاهم رسول الله صلى الله عليه و سلم فصلى عليه في منزلهم فتقدم رسول الله صلى الله عليه و سلم و كان أبو طلحة وراءه و أم سليم وراء أبي طلحة و لم يكن معهم غيرهم رواه الحاكم

தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னாலும், அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும் நின்றார்கள். அபூதல்ஹா (ரலி)க்குப் பின்னால் அவர்களது மனைவி உம்மு ஸுலைம் (ரலி) நின்றார்கள். இவர்களுடன் வேறு யாரும் இல்லை.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபிதல்ஹா

நூல்: ஹாகிம்

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அபூதல்ஹா (ரலி)யும், அவர்களுக்குப் பின்னால் உம்மு சுலைம் (ரலி)யும் நின்றதாகக் கூறப்படுகின்றது. பெண்கள் வீட்டிலேயே ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான சான்றாகும்.

ஒரு ஜனாஸாவிற்குப் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் ஜனாஸாத் தொழுகை நடத்த ஹதீஸ்களில் நேரடியாக ஆதாரம் இல்லாவிட்டாலும் இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் தடை ஏதுமில்லை.

இன்றைய தமிழக முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகையில் பெண்கள் பங்கெடுக்க அனுமதிப்பதில்லை. தந்தைக்காக மகளோ கணவனுக்காக மனைவியோ கூட ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்ற நிலை உள்ளது.

பெற்ற மகளை விட வேறு யார் தந்தைக்கு சிறப்பாக துஆ செய்ய முடியும்? தனது தந்தைக்காக நடக்கும் ஜனாஸா தொழுகையில் அவரது மகள் கலந்து கொள்ள வாய்ப்பு மறுக்கப்பட்டால் வீட்டிலேயே ஜனாஸாவுக்காக தொழுகை நடத்தும் உரிமையை யாரும் பறிக்க முடியாது.

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் மரணித்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அந்த நபித்தோழருக்கு தனியே ஜனாஸாத் தொழுகை தொழுதுள்ளனர். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி அல்ல என்பதால் இதை ஆதாரமாக நாம் குறிப்பிடவில்லை.

இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து பிற்காலத்தில் மாற்றப்பட்டது என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறோம்.

صحيح مسلم

2297 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ عَبْدِ الْوَاحِدِ عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ أَنَّهَا لَمَّا تُوُفِّىَ سَعْدُ بْنُ أَبِى وَقَّاصٍ أَرْسَلَ أَزْوَاجُ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنْ يَمُرُّوا بِجَنَازَتِهِ فِى الْمَسْجِدِ فَيُصَلِّينَ عَلَيْهِ فَفَعَلُوا فَوُقِفَ بِهِ عَلَى حُجَرِهِنَّ يُصَلِّينَ عَلَيْهِ

ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த போது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு வருமாறும், தாங்கள் அவருக்கு தொழப் போவதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டு வந்து, அவர்கள் தொழுது கொள்வதற்காக வைக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம்