திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ
இவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
(இது தொடர்பான மற்றொரு செய்தியை 272வது குறிப்பில் பார்க்கவும்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் ஒரு மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ அந்த இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்?” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதில் தான் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
“அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விடை.
அதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொருவரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான். இது தான் நேரடியாக இவ்வசனம் சொல்லும் செய்தி.
இதில் இஸ்லாத்தின் முக்கிய கொள்கை விளக்கமும் அமைந்துள்ளது. “திருக்குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. திருக்குர்ஆன் அல்லாத வேறு இறைச்செய்தி கிடையாது” என்று கூறுவோருக்கு மறுப்பாக இவ்வசனம் அமைந்துள்ளது.
அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தது திருக்குர்ஆன் மட்டுமே என்ற வாதப்படி இந்தச்செய்தி திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் திருக்குர்ஆனில் இல்லை.
அதாவது இந்தச் செய்தியை திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.
திருக்குர்ஆன் தவிர வேறு இறைச்செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்கம் சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.
முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் திருக்குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச்செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.
திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். திருக்குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!