தற்கொலைத் தாக்குதல் கூடுமா?

தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

صحيح البخاري

1364 – وَقَالَ حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الحَسَنِ، حَدَّثَنَا جُنْدَبٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فِي هَذَا المَسْجِدِ فَمَا نَسِينَا وَمَا نَخَافُ أَنْ يَكْذِبَ جُنْدَبٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: ” كَانَ بِرَجُلٍ جِرَاحٌ، فَقَتَلَ نَفْسَهُ، فَقَالَ اللَّهُ: بَدَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الجَنَّةَ “

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் தனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்துப் (ரலி)

நூல் : புகாரி 1364

صحيح البخاري

1365 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الَّذِي يَخْنُقُ نَفْسَهُ يَخْنُقُهَا فِي النَّارِ، وَالَّذِي يَطْعُنُهَا يَطْعُنُهَا فِي النَّارِ»

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கி, தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1365

தற்கொலை செய்து கொண்டால் நிரந்தர நரகம் என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே தற்கொலை கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

தற்கொலைத் தாக்குதல்

ஆனால் போரில், எதிரிகளை அழிப்பதற்காக தற்கொலை செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தற்கொலை அல்ல! இது போரின் வழிமுறைகளில் ஒன்று தான் என்றும் கூறுகின்றனர். எனவே இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஒரு காரியம் நிரந்தர நரகத்தில் சேர்க்கும் என்று தெரிந்த பின்னால் அதில் விழுந்து விடாமலிருக்க மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தற்கொலைத் தாக்குதல் கூடும் என்று வாதிட்டால் அதற்கான தெளிவான நேரடியான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அது போன்ற நேரடியான ஆதாரம் எதையும் இவர்கள் காட்டுவதில்லை. இன உணர்வைத் தவிர வேறு எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை!

போர் என்பதே தற்கொலை தான், எத்தனையோ நபித்தோழர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்; இதுவெல்லாம் தற்கொலையா? என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்.

போருக்கும் தற்கொலைத் தாக்குதலுக்கும் வேறுபாடு உள்ளது.

போரில் பங்கெடுக்கும் போது வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. தவறினால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இரண்டையும் ஒருசேர எதிர்பார்த்துத் தான் போரில் களம் இறங்குவர். வெற்றி பெற்று சத்தியம் மேலோங்க வேண்டும் என்பது தான் அவரது முதன்மை நோக்கமாக இருக்கும்.

ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இதில் உயிரோடு திரும்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை. உயிரை மாய்ப்பது மட்டுமே இங்கு உள்ளது. இதையும் போரில் வீர மரணம் அடைவதையும் சமமாகக் கருத முடியாது.

போர் கடமையாவதற்குரிய படை பலத்தை அல்லாஹ் நிர்ணயித்துள்ளான். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

நபியே! நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏகஇறை வனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் கட்டளைப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 8:65,66

எதிரிகளின் பலத்தில் பாதி இருந்தால் தான் இஸ்லாமிய அரசுக்கு போர் கடமையாகும். அதை விடக் குறைவாக இருந்தால் கடமையாகாது.

எதிரிகளை வெல்வது தான் போரின் முதன்மை நோக்கம் என்பதால் தான் படைபலத்துக்கு ஒரு எல்லையை அல்லாஹ் அறிவித்து தந்துள்ளான்.

ஷஹீத் ஆக சாவது தான் முதன்மை நோக்கம் என்று இருந்தால் நீங்கள் நூறு பேர் இருக்கும் போது ஆயிரம் எதிரிகள் இருந்தாலும் போர் செய்து வீர மரணம் அடையுங்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பான்.

எனவே போரில் என்பது வெற்றி பெறுவது தான் முதன்மையானது. கொல்லப்பட்டால் பொருந்திக் கொள்வது இரண்டாம் நிலையாகும்.

நம்மை எதிரிகள் கொன்று விடுவார்களோ என்று அஞ்சி பலவீனமாக நபித்தோழர்கள் இருந்த போது அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்த எண்ணிக்கையை அல்லாஹ் வரையறுத்துள்ளான்.

எனவே முற்றிலும் உயிரை மாய்க்கும் செயலைப் போருடன் ஒப்பிடுவது அறிவீனமாகும்.

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை புகாரியின் 2898, 3062 போன்ற ஹதீஸ்களில் காணலாம்.

2898 حَدَّثَنَا قُتَيْبَةُ ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا، فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ، وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ، وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً وَلَا فَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ، فَقَالَ : مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ “. فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : أَنَا صَاحِبُهُ. قَالَ : فَخَرَجَ مَعَهُ، كُلَّمَا وَقَفَ وَقَفَ مَعَهُ، وَإِذَا أَسْرَعَ أَسْرَعَ مَعَهُ. قَالَ : فَجُرِحَ الرَّجُلُ جُرْحًا شَدِيدًا، فَاسْتَعْجَلَ الْمَوْتَ، فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ بِالْأَرْضِ وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ، ثُمَّ تَحَامَلَ عَلَى سَيْفِهِ فَقَتَلَ نَفْسَهُ. فَخَرَجَ الرَّجُلُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَشْهَدُ أَنَّكَ رَسُولُ اللَّهِ. قَالَ : ” وَمَا ذَاكَ ؟ ” قَالَ : الرَّجُلُ الَّذِي ذَكَرْتَ آنِفًا أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَأَعْظَمَ النَّاسُ ذَلِكَ، فَقُلْتُ : أَنَا لَكُمْ بِهِ، فَخَرَجْتُ فِي طَلَبِهِ، ثُمَّ جُرِحَ جُرْحًا شَدِيدًا فَاسْتَعْجَلَ الْمَوْتَ فَوَضَعَ نَصْلَ سَيْفِهِ فِي الْأَرْضِ، وَذُبَابَهُ بَيْنَ ثَدْيَيْهِ ثُمَّ تَحَامَلَ عَلَيْهِ فَقَتَلَ نَفْسَهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ : ” إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ “.

2898 சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், நான் அவருடன் இருக்கப்போகிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்த) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி அவர் நரகவாசி’ என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப் பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 2898

போரில் கூட தற்கொலை செய்யக் கூடாது என்றால் தற்கொலைத் தாக்குதல் கூடுமா என்று சிந்திக்க வேண்டும்.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்த இவர்கள் மற்றொரு வாதத்தையும் எடுத்து வைக்கின்றனர்.

ஒருவன் வாழ முடியாத நிலையில் செய்வது தான் தற்கொலை. ஆனால் தற்கொலைத் தாக்குதல் என்பது அவ்வாறல்ல! இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுவோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்யவில்லை. எதிரிகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றனர். எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி கிடைக்கும் என்ற அடிப்படையில் தற்கொலைத் தாக்குதல் அனுமதிக்கப்பட்டது தான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் தான் கூலி என்பதற்கு தவறான வியாக்கியானம் கொடுத்து இதை நியாயப்படுத்த நினைக்கின்றனர்.

எண்ணத்தின் அடிப்படையில் கூலி என்பது அனுமதிக்கப்பட்ட விஷயங்களில் தான். தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நல்ல எண்ணத்தில் செய்கின்றேன் என்று கூறி யாரும் நியாயப்படுத்த முடியாது.

போரையே எடுத்துக் கொள்வோம். போரில் காயம் ஏற்படும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஒருவர் மது அருந்தினால் அது குற்றமில்லை என்று கூற முடியுமா? அவருக்குப் போதையில் இருக்க வேண்டும் என்பது நோக்கமல்ல! வலி தெரியாமல் மேலும் மேலும் வீரியமாகப்  போரிட வேண்டும் என்பதற்காகத் தான் குடிக்கின்றார். இதற்காக அல்லாஹ் அவருக்கு நன்மையை வழங்கி விடுவான் என்று யாரும் வாதிட மாட்டார்கள்.

விபச்சாரம் என்ற நோக்கம் இல்லாமல், எதிரிகளின் குடும்பத்தை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டு அவர்களின் பெண்களைக் கற்பழிக்கலாம் என்று கூற முடியுமா?

அல்லது இஸ்லாத்தின் விரோதிகள் என்பதால் அவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளையடிக்கலாம்; திருடலாம் என்று வாதிட முடியுமா? நோக்கம் நல்லதாக இருந்தாலும் செயல் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவையே போதுமான உதாரணங்கள்.

தற்கொலைத் தாக்குதல்கள் கூடும் என்று வாதிப்பவர்கள் இந்தப் பிரச்சனையை மார்க்க அடிப்படையில் சிந்திக்காமல் உணர்வுப்பூர்வமாக மட்டுமே சிந்திக்கின்றார்கள்.

உலகெங்கும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், நேருக்கு நேர் மோத முடியாத அளவுக்குள்ள எதிரியின் ஆயுத பலம், இன உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்சியை அமைக்கும் வரை பட்ட துன்பங்களுடன் ஒப்பிட்டால் நமது துன்பம் அற்பமானவையே. அப்படி இருந்தும் ஆட்சி அமையும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயுதம் தாங்கவில்லை என்பதைச் சிந்தித்தால் தெளிவு பிறக்கும்.

ஒரு முஸ்லிம் எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், என்ன நியாயம் அவனிடம் இருந்தாலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டுமே நடக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து விடக் கூடாது. இதை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காது.

இதைக் கவனத்தில் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய்ந்தால் உலகின் பல பகுதிகளில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம்.

உலகில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யாருக்கு எதிராக நடத்தப்படுகின்றன என்று பார்த்தால், அதில் பலியாவோர் பொதுமக்களாக இருப்பதைக் காண முடியும்.

பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள், இரயில்கள், விமான நிலையங்கள், கடைவீதிகள், வணிக வளாகங்கள் போன்றவை தான் தற்கொலைத் தாக்குதல்களின் முக்கிய இலக்குகளாக உள்ளன.

போர்க் களத்தில் எதிரிகளுடன் நேருக்கு நேர் நின்று மோதும் போது எதிரிகளைக் கொல்வதை யாரும் கொலை என்று கூற மாட்டார்கள். ஆனால் இத்தகைய போர்க்களங்களில் கூட பணிவிடை செய்வதற்காக வந்துள்ள பெண்களையும், சிறுவர்களையும் கொல்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற செய்தி புகாரி 3014, 3015 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

3014 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، أَخْبَرَنَااللَّيْثُ ، عَنْ نَافِعٍ ، أَنَّ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبَرَهُ، أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ.

3014 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

புகாரியில் 3012, 3013 ஆகிய ஹதீஸ்களில், பெண்களும், குழந்தைகளும் அவர்களைச் சேர்ந்தவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த ஹதீஸ் இதுதான்:

3012 حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ ، حَدَّثَنَاسُفْيَانُ ، حَدَّثَنَا الزُّهْرِيُّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَرَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ : مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْأَبْوَاءِ – أَوْ بِوَدَّانَ – وَسُئِلَ عَنْ أَهْلِ الدَّارِ يُبَيَّتُونَ مِنَ الْمُشْرِكِينَ، فَيُصَابُ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ، قَالَ : ” هُمْ مِنْهُمْ “. وَسَمِعْتُهُ يَقُولُ : ” لَا حِمَى إِلَّا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ “.

3012 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்வா என்னுமிடத்தில் அல்லது வத்தான் என்னுமிடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும், குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே என்று பதிலளித்தார்கள். மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை என்று கூற நான் கேட்டிருக்கின்றேன்.

இதை ஆதாரமாகக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் மூலம் பொதுமக்களைக் கொல்வது தடையில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

அப்பாவிகளை இலக்கு வைத்து கொல்வதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகாது.

யாருடன் போர்ப்பிரகடனம் செய்யப்பட்டதோ அவர்களுடன் போர் செய்யும் போது குழந்தைகள், சிறுவர்களை அவர்கள் கேடயமாகக் கொள்ள இடமளிக்கக் கூடாது என்பதை அனைத்து நாட்டு அரசுகளும் ஒப்புக் கொள்கின்றனர். ஆட்சி அதிகாரம் இல்லாத பொதுமக்களால் இதைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தாலும் இது சரியான நடவடிக்கை என்பதை அரிவுடையோர் ஒப்புக் கொள்வார்கள்.

ஒரு நாட்டுடன் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டால் அந்த நாடு வெற்றியடையாமல் இருக்க எல்லா வழிகளையும் கையாள வேண்டும்.

எதிரி நாட்டில் பெண்கள், குழந்தைகள் உள்ளனர் என்று காரணம் கூறி ஒரு நாடு அமைதி காத்தால் எதிரி நாடு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். எதிரி நாட்டவர் நம் நாட்டில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும் கவனத்தில் கொண்டு அமைதி காக்க மாட்டார்கள். அவர்கள் வலிமை இதனால் கூடும். நமது அமைதி அவர்களை வெற்றியடையச் செய்துவிடும்.

இதனால் நமது நாடு ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விடும்.

இப்படி நடக்கக் கூடாது என்றால் எதிரிகள் மீது போர் தொடுக்கும் போது பெண்கள், குழந்தைகள் உள்ளனர் என்று கருதி போர் நடவடிக்கைகளில் குறை வைக்கக் கூடாது.

பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதை எதிரிகள் அறிந்து தங்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்வது எதிரி நாட்டவரின் பொறுப்பாகும்.

அரசு என்ற கோனத்தில் சிந்தித்தால் நம்மை முற்றாக எதிரிகள் அழித்து விடாமல் இருக்க போரில் இந்த நிலைபாட்டைத் தான் எடுக்க வேண்டும்.

அதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஆனால் தற்கொலைப் படைத் தாக்குதல் என்பது முற்றிலும் அப்பாவிகளே இலக்காக ஆக்கப்படுகிறார்கள். நம்மை எதிர்த்துப் போரிடும் ஒருவர் கூட அதில் இருக்க மாட்டார்கள்.

எதிரிகளைப் போர்க்களத்தில் சந்திக்கும் போது மட்டும் இதில் விதி விலக்கு என்று தான் இரண்டு வகை ஹதீஸ்களையும் இணைத்து புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு மாற்றமாக சிறுவர்கள், பொதுமக்கள், பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் போருக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிகளை இலக்காக வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதே இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்யும் போது இது போன்ற விளைவுகளைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆனால் தற்கொலைத் தாக்குதலுக்கு அனுமதி இல்லை என்பதால் இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இங்கு நாம் குறிப்பிட வேண்டியுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுவதைக் காணும் முஸ்லிமல்லாதவர்கள், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் வெறுப்புடன் பார்க்கத் துவங்குகின்றனர். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதல்களை நியாயப்படுத்துவோரில் பலர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத போது, அதாவது தொலைவான பகுதிகளில் நடக்கின்ற போது மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால் அதே சமயம் தாங்கள் வாழும் பகுதியில் நடந்து, அதனால் தமது குடும்பமோ, சொத்துக்களோ பாதிக்கப்படும் போது அதைக் கண்டிக்கின்றார்கள்.

மார்க்க அடிப்படையிலும் சரி! இதுபோன்ற தர்க்க ரீதியிலான காரணங்களாலும் சரி! தற்கொலைத் தாக்குதல்களுக்கு அனுமதி இல்லை என்பது தான் உண்மையாகும்.