தாயம், பகடை, லுடோ விளையாடலாமா?

பதில்

தாயக்கட்டைகள் மூலம் காய் நகர்த்தும் விளையாட்டு தாயம் பகடை மற்றும் பல பெயர்களில் சொல்லப்படுகிறது.

இது பல வகைகளில் அமைந்துள்ளது

சோவி எனும் கடல் சிற்பிகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எடுத்துக் கொள்வார்கள். அதைக் குலுக்கிப் போடுவார்கள். அவை கவிழ்ந்து விழுந்தால் அதற்கு ஒரு எண், மல்லாக்க விழுந்தால் அதற்கொரு எண் என முடிவு செய்து வைத்து இருப்பார்கள். இராமநாதபுரம் மாவட்டத்தில் இதைச் சோவி விளையாட்டு என்பார்கள்.

சில பகுதிகளில் புளியங்கொட்டைகளைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எடுத்து அவற்றின் ஒரு பகுதியை கல்லில் தேய்த்து பாதியாக ஆக்குவார்கள். குலுக்கிப் போடும் போது தேய்க்கப்பட்ட பகுதிகள் மேல் நோக்கி இருந்தால் அதற்கு ஒரு எண்ணை முடிவு செய்து வைத்திருப்பார்கள். கவிழ்ந்து விழுபவைகளுக்கு மற்றொரு எண்ணை வைத்து இருப்பார்கள்.

அல்லது ஆறு கோணம் உள்ள ஒரு கட்டை அல்லது பிளாஸ்டிக் தயாரித்து ஒரு பக்கத்தில் ஒரு புள்ளி, இன்னொரு பக்கம் இரு புள்ளிகள் இப்படி ஆறு பக்கங்களுக்கும் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என புள்ளிகள் அமைத்துக் கொள்வார்கள். அதை உருட்டிக் கீழே போடும் போது இரு புள்ளிகள் உள்ள பகுதி மேல் நோக்கி இருந்தால் இரண்டு என்று கருதுவார்கள். தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட தாயங்களையும் வைத்துக் கொள்வார்கள்.

இன்னும் பல வகைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஒரே அம்சம் தான் உள்ளது.

ஒருவர் தனக்கு உள்ள வாய்ப்பில் குலுக்கும் போது அவருக்குக் கிடைக்கும் எண்ணுக்கு ஏற்ப தாய அட்டையில் காய்களை நகர்த்தலாம்.

இதைப் பல வகைகளில் விளையாடலாம்.

அல்லது பாம்பு ஏணி ஆட்டம்

இன்னும் பல வகைகளில் ஆடலாம்.

இருவர் விளையாடும் போது யார் இலக்கை முதலில் அடைகிறார்களோ அவர் வெற்றி பெறுகிறார்.

16 ஆம் கட்டத்தை யார் முதலில் அடைவது என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் ஒவ்வொரு தடவை கட்டையை உருட்டும் போது நான்கு நான்கு என்று வந்தால் அவர் நாலு தடவை உருட்டிப்போட்டு இலக்கை அடைவார். மற்றொருவர் போடும் போதெல்லாம் ஒன்று இரண்டு தான் வந்தால் அவர் இதை விட அதிகமாக உருட்ட வேண்டும். இவர் தோற்று விடுவார்.

பகடி தாயம் குறித்த அடிப்படையான விஷயத்தை மட்டும் சொல்லி உள்ளோம், எல்லா விதமான பகடை விளையாட்டுகளும் இந்த அடிப்படையில் தான் உள்ளன.

இப்படியான விளையாட்டு மார்க்கத்தில் கூடுமா?

கூடாது என்று சொல்பவர்கள் முஸ்லிம் அபூதாவூத் ஆகிய நூல்களில் உள்ள ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح مسلم

10 – (2260) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்)  விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும், இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4549.

அத்தியாயம் : 41. கவிதை

இது ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம்

பகடைக்காய் ஆடுவது மிகப் பெரிய குற்றச் செயலாக இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. பகடைக்காய் என்பதும், தாயம் என்பதும், சோவி விளையாட்டு என்பது எல்லாமே ஒன்று தான்.

எனவே தாயக் கட்டைகளை வைத்து விளையாடுவது ஹராம் என்று மிக மிக அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக இந்த ஹ்தீஸையே காட்டுகிறார்கள்.

இந்த ஹதீஸ் தாயக்கட்டைகளை வைத்து விளையாடுவதைத் தான் குறிக்கிறது என்றால் அவர்களின் முடிவில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்படி ஹதீஸில் உள்ளதா?

இதை முதலில் நாம் ஆராய்வோம்.

மேற்கண்ட ஹதீஸில் நர்த ஷேர் (نَّرْدَشِير) என்ற விளையாட்டை விளையாடுகிறாரோ ….. என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் சொல் அரபிச் சொல் அல்ல. இது அரபுகளின் விளையாட்டும் அல்ல. இது ஃபாரசீக மொழிச் சொல்லாகும்.

இந்தப் பெயர் ஃபார்சி மொழியில் விளையாட்டைக் குறிக்கும் சொல்லும் அல்ல. ஷேர் என்றால் ஃபார்சி மொழியில் சிங்கம் என்று பொருள். ஷேரே காஷ்மீர் (காஷ்மீர் சிங்கம்) என்று ஷேக் அப்துல்லா குறிப்பிடப்படுவது இந்தச் சொல்லால் தான். ஷேர் ஷாஹ் சிங்கம் போன்ற மன்னர் என்று ஒருவர் இருந்துள்ளார்.

நர்த ஷேர்  என்றால் நர்து எனும் சிங்கம் என்பது தான் இதன் நேரடிப் பொருளாகும்.

நர்து என்ற பெயரில் ஒரு வீரன் இருந்திருக்கலாம். அதனால் அவன் நர்து சிங்கம் என அவன் அழைக்கப்பட்டிருக்கலாம். அவன் உருவாக்கிய ஒரு விளையாட்டு அவன் பெயரில் பரவிவிட்டது.

நர்த ஷேர் என்பவன் உருவாக்கிய நர்த ஷேர் எனும் விளையாட்டை விளையாடக் கூடாது என்று இந்த ஹதீஸ் சொல்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்து விட்டதால் அப்போதே அந்த விளையாட்டு வழக்கொழிந்தும் போய் விட்டது.

அப்படியானால் அது எந்த விளையாட்டைக் குறிக்கிறது என்று நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்?

ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர்களோ, அல்லது அந்த விளயாட்டை அறிந்து வைத்துள்ள நபித்தோழர்களோ நர்த் ஷேர் என்பது தாயம் அல்லது பகடை தான் என்று சொல்லி இருந்தால் அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் காலத்தில் இந்த விளையாட்டு இருந்துள்ளதால் அவர்கள் சொலவது தான் அதன் பொருளாக இருக்க முடியும். அப்படி எந்த விளக்கமும் அந்த விளையாட்டை அறிந்த மக்களால் கொடுக்கப்படவில்லை

அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முந்திய நூல்களில் இது பற்றிக் கூறப்பட்டு இருந்தால் அதை நாம் ஆதாரமாக எடுக்கலாம். முன்னரே இருந்து பின்னர் இல்லாமல் போய்விட்ட எல்லா விஷயங்களுக்கும் இப்படித் தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஆனால் முந்தைய இலக்கியங்களில் அப்படி எந்தக் குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. எந்த அறிஞரும் அப்படி ஒரு குறிப்பை முன்வைத்து இவ்வாறு பொருள் கொள்ளவில்லை. ஒரு ஆதாரமும் இல்லாமல் தான் பகடை என்று முடித்துக் கொள்கிறார்கள்.

நர்த ஷேர் என்பது தாயம், மற்றும் பகடை என்று விளக்கம் சொல்பவர்கள் யார்?

அல்காமூஸுல் முஹீத் எனும் அகராதியில் பகடை என்று பொருள் சொல்லப்பட்டுள்ளது. இவர் நபிகள் காலத்துக்கு 800 ஆண்டுகளுக்குப் பிந்தியவர் ஆவார்.

பிற மொழிச் சொல்லாகவும், பிற மொழியினரின் விளையாட்டாகவும் இருந்த நர்த ஷேர் எனும் விளையாட்டு என்ன என்று தெரியாமல் அழிந்த பிறகு பின்னால் உருவாக்கப்பட்ட பகடை எனும் ஒரு விளையாட்டுக்கு அந்தப் பெயரைச் சூட்டுவது அறிவார்ந்தது அல்ல.

அடுத்து ஷவ்கானியும் இதைக் கூறுகிறார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு 1250 ஆண்டுகளுக்குப் பிந்தியவர். அதாவது நமக்கு 200 ஆண்டுகள் முந்தியவர் ஆவார்.

இல்லாமல் ஒழிந்து விட்ட வேற்று மொழிப் பெயர் கொண்ட ஒரு விளையாட்டு இதுதான் என்று அவர் சொல்ல முடியுமா? அவர் சொல்வதற்கு மாற்றமாக இன்று ஒருவர் வேறு விளக்கம் சொன்னால் நாம் அவரிடம் ஆதாரம் கேட்க மாட்டோமா?

அது போல் இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதிய நவவி அவர்கள்

شرح النووي على مسلم  – قال العلماء النردشير هو النرد فالنرد عجمي معرب وشير معناه حلو

நர்து என்பது வேற்று மொழிச் சொல்லாகும். ஷேர் என்பது இனிப்பு என்பது பொருளாகும் என்கிறார். இப்படி உலமாக்கள் சொன்னதாக கூறுகிறார்.

ஷேர் என்பதற்கு இனிப்பு என்று இவர் பொருள் செய்ததை ஃபாரசிக மொழி அறிந்த உலமாக்கள் அப்போதே மறுத்து உள்ளனர். ஷேர் என்றால் சிங்கம் என்பது தான் பொருள்

நவவி அவர்கள் இந்த விளையாட்டின் அமசம் என்ன? இது என்ன விளையாட்டைக் குறிக்கிறது என்று கூறவில்லை.

இது பகடையைத் தான் குறிக்கிறது என்று கூறும் அறிஞர்கள் ஹிஜ்ரி 600க்குப் பிந்தியவர்கள்.

இந்தப் பொருளை இவர்கள் முந்தைய அகராதிகள் மற்றும் இலக்கியங்களில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிடவில்லை.

அல்லது அந்த விளையாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது என்ற ஆதாரத்தையும் காட்டவில்லை.

அல்லது பாரசீக இலக்கியங்களில் இருந்தாவது இது தான் தற்போது பகடை எனக் கூறப்படுகிறது என்று காட்ட வேண்டும். அப்படியும் காட்டவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்படியே கட்டுப்பட்ட முஸ்லிம்கள் தடை செய்யப்பட்ட அந்த விளையாட்டை விட்டொழித்து விட்டனர். நபிகள் மரணித்து குறுகிய காலத்தில் பாரசீகர்களும் இஸ்லாத்தை ஏற்று விட்டதால் அந்த விளையாட்டு அவர்களிடமும் இல்லாமல் போய் விட்டது.

எனவே நர்த ஷேர் என்ற சொல்லுக்கு தாயம், பகடை என்று பொருள் கொள்வது ஏற்கமுடியாத வாதமாகும்.

இந்த இடத்தில் ருசிகரமான ஒரு தகவலைக் கூடுதல் தெளிவுக்காக குறிப்பிடுகிறோம்.

ملتقى أهل الحديث முல்தகா அஹ்லில் ஹதீஸ் என்ற வலைதளம் ஒன்று அரபு மொழியில் உள்ளது. அதில் உலகெங்கும் உள்ள பல ஆலிம்கள் உள்ளனர். ஒருவருக்கொருவர் ஏற்படும் சந்தேகங்களை அதில் பதிவு செய்வார்கள்.  தெரிந்தவர்கள் பதில் சொல்வார்கள். இப்படி அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் வலைதளமாகும்.

அதில் மஜ்தீ ஃபயாஸ் என்ற ஒரு அறிஞர் ஒரு கேள்வியைப் பதிவு செய்கிறார்.

நர்த ஷேர் என்பது தாயம், பகடை என்று பொருள் கொள்கிறீர்களே இது எந்த அடிப்படையில் என்பது தான் அந்தக் கேள்வி.

அதற்கு பல அறிஞர்கள் தங்கள் பதிலைப் பதிவு செய்கிறார்கள்.

இது தாயக்கட்டை தான் என்பதை இன்னின்ன அறிஞர்கள் கூறியுள்ளார்கள் என்று சிலர் பதில் போடுகிறார்கள்.

இவ்வாறு பொருள் செய்தவர்கள் எல்லாம் பிற்காலத்தவர்கள். இந்த விளையாட்டு முற்காலத்தில் இருந்த ஒரு விளையாட்டு. பிற்காலத்தில் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொண்டு அதற்கு நர்த் ஷேர் என்று சொல்ல என்ன ஆதாரம் என்று மீண்டும் அவர் கேட்கிறார்.

அதற்குப் பதில் அளித்த ஒரு அறிஞர் நர்த ஷேர் கூடாது என்று என்று சொல்லும் ஹதீஸ்களையும், பலரது கூறுக்களையும் பட்டியல் போடுகிறார். எனவே அது ஹராம் என்று போடுகிறார்.

இவர் விடுவதாக இல்லை. நர்த ஷேர் ஹராம் தான், அது என்ன என்பது தான் கேள்வி. என் கேள்விக்கு இது பதில் இல்லை என்கிறார்

அடுத்து சிலர் இவருக்கு பதில் சொல்கிறார்கள். இதை ஹராம் என்று சொன்னவர்கள் மக்ரூஹ் என்று சொன்னவர்கள் பலவிதமான விளக்கம் சொன்னவர்கள் என்று பட்டியலைப் போடுகிறார்கள்.

அவரும் விடாப்பிடியாக நர்த ஷேர் எனபதற்கு பகடை, தாயம் என்று பொருள் எப்படிச் செய்தீர்கள் என்று கேட்கிறார்

பதில் இல்லாமல் இக்கேள்வி கடைசியாக நிற்கிறது.

அந்த பதிவைக் காண

https://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=100009

அதில் மஜ்தீ ஃபயாஸ் பதிவு செய்யும் கேள்வி இதுதான்

لكن هل ترى ذلك التفسير ينطبق أخي الفاضل على كعاب الدومينو أو على زهر الطاولة ؟؟؟؟؟

أنا لا أجادل أن هناك من الكتب والمعاجم اللغوية فسرت النرد على كعاب الدومينو أو على زهر الطاولة لكن كل هذه الكتب والمعاجم مستحدثة ولعبة الطاولة والدومينو أيضا مستحدثة بينما النرد لعلبة قديمة جدا معروفة منذ زمن بعيد وظاهر تفسير الشوكاني يأبى أن يكون المراد كعاب الدومينو أو زهر الطاولة !!!!

هذا هو محل الإشكال

இவர் யார் என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்படி கேள்வி கேட்டும் எண்ணற்ற உலமாக்கள் உள்ள இந்த வலைதளத்தில் இவர் கேட்கும் ஆதாரத்தை ஒருவரும் போடவில்லை.

நர்த ஷேர் என்று ஒரு விளையாட்டு இருந்துள்ளது உண்மை.

அதில் இஸ்லாம் தடை செய்துள்ள அம்சங்கள் ஏதோ இருந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்பதும் உண்மை.

அந்த விளையாட்டு இப்போது இருந்தால் அது ஹராம் என்று தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதும் உண்மை.

அந்த விளையாட்டு இப்போது இருந்தால் எந்த அம்சத்தினால் இது தடுக்கப்பட்டது என்பதற்கும் விளக்கம் கிடைக்கலாம்.

ஆனால் அது பகடையைத் தான் குறிக்கிறது என்று கூறுவதாக இருந்தால் உரிய முறைப்படி நிருபித்து விட்டுத் தான் வாதிட வேண்டும்.

தாயம் தாயக்கட்டை என்பதே சூது என்று பலர் நினைக்கிறார்கள். தாயக்கட்டையைப் பயன்படுத்தி விளையாடும் எந்த விளையாட்டும் ஹராம் என்றும் ஃபத்வா கொடுக்கிறார்கள்.

ஆனால் தாயம் என்பதை மார்க்கம் தடுத்துள்ள விளயாட்டுக்குப் பயன்படுத்தினால் அந்தக் காரணத்துக்காக அதை ஹராம் என்று சொல்லலாம். தாயக்கட்டையைப் பயன்படுத்தியதற்காக அல்ல.

தாயக்கட்டையை மார்க்கம் தடுக்காத காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்கம் தடுத்துள்ள அம்சங்கள் எதுவும் இல்லாமல் விளையாடலாம்.

தாயம் விளையாடும் போது இருவரும் பணம் கட்டி ஜெயிப்பவர் அதை எடுத்துக் கொள்வார் என்று விளையாடினால் அது சூதாட்டம் என்பதால் அது ஹராமாகிறது. தாயக்கட்டையினால் ஹராமாக ஆகாது. அந்த விளையாட்டில் சூது உள்ளது என்பதால் தான் அது ஹராமாகிறது.

சூதாட்டம் என்பது பற்றி தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சூதாட்டம் என்பது தாயம் விளையாட்டில் மட்டுமல்ல எந்த விளையாட்டையும் சூதாட்டமாக ஆக்கலாம். சூதாட்டமில்லாமலும் ஆக்கலாம்.

இது குறித்து முன்னர் நாம் எழுதிய ஆக்கத்தை இங்கே இணைக்கிறோம், கூடுதல் விளக்கத்துக்காக

அந்த ஆக்கம் இதுதான்:

செஸ் விளையாடுதல்

சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும்.

சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.

அதாவது கபடிப் போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் பந்தயமாக பணத்தைக் கட்டி வெற்றி பெற்றவர் எடுத்துக் கொள்வது என்று சொன்னால் அது சூதாட்டமாக ஆகிவிடும்.

செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்.

அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவது பரிசு எனப்படும்.

செஸ் விளையாட்டு சூதாட்டம் அல்ல. ஆனால் அதை சூதாட்டமாகவும் ஆட முடியும்.

பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் அதைக் கூடாது என்று தான் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சூது எனும் காரணத்தை அவர்களும் கூறவில்லை. ஆனாலும் மார்க்கம் தடுக்காததால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை.

செஸ் விளையாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நாம் முன்னர் அளித்த பதில் இது.

தாயம் வைத்து மக்களின் பணத்தைச் சுரண்டும் இன்னொரு மோசடியும் உள்ளது.

ஆளுக்கு 100 ருபாய் பந்தயம் கட்டி ஒற்றை விழுந்தால் இந்தப் பணம் எனக்கு; இரட்டை விழுந்தால் உனக்கு என்று கூறி மோசடி செய்கிறார்கள்.

இது சூதாட்டம் என்பதாலும், மோசடி என்பதாலும் ஹராம் எனலாம். சூதாட்டம் என்பதால் தான் ஹராம். தாயக்கட்டையைப் பயன்படுத்தியதால் ஹராம் அல்ல.

தாயக்கட்டையை உருட்டுவதே ஹராம் என்று சிலர் கருதுகிறார்கள்.

இது முற்றிலும் அறிவீனமான கருத்தாகும்.

பொதுவாக சீட்டுக்கட்டு வைத்து பெரும்பாலும் சூதாடுகிறார்கள். அதாவது பந்தயம் கட்டி விளையாடி வென்றவர் எடுத்துக் கொள்வதால் இது ஹராம் எனலாம். இது சூதாட்டம் என்பதால் தான் ஹராமாகும். சீட்டுக்கட்டைப் பயன்படுத்தியதால் அல்ல. இதே சீட்டுக்கட்டுக்களைப் பயன்படுத்தி பொழுது போக்காக மேஜிக் செய்தால் அது ஹராமாக ஆகாது. அதன் மூலம் செய்யப்படும் செயலை வைத்தே ஹராமாகும்.

குதிரை ரேஸ் என்ற சூதாட்டம் பல நாடுகளில் நடக்கிறது. வெற்றி பெறும் குதிரையைக் கண்டறிவதற்காக ஓட விடுவது தவறா என்றால் தவறு இல்லை.

பணம் கட்டி பந்தயம் கட்டி விளையாடுவது தான் சூதாகும்.

குதிரை ரேஸ் என்ற விளையாட்டை நாம் சூது என்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி வைத்துள்ளார்கள்.

صحيح البخاري

2868 – حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «أَجْرَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنَ الخَيْلِ مِنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، قَالَ ابْنُ عُمَرَ: وَكُنْتُ فِيمَنْ أَجْرَى، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، قَالَ سُفْيَانُ: بَيْنَ الحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةَ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ

2868 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளை ஹஃப்யா’ எனுமிடத்திலிருந்து சனிய்யத்துல் வதா’ எனும் மலைக் குன்று வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளை சனிய்யத் துல் வதா’விலிருந்து பனூ ஸுரைக்’ பள்ளிவாசல் வரை (வேகப் பந்தயத்தில்) ஓடச் செய்தார்கள். நானும் பந்தயத்தில் (என் குதிரையுடன்) கலந்து கொண்டேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் சவ்ரீ அவர்கள், ஹஃப்யாவுக்கும் சனிய்யத்துல் வதாவுக்கும் இடையே ஐந்து அல்லது ஆறு மைல்கள் தூரம் இருக்கும். சனிய்யத்துல் வதாவுக்கும் பனூ ஸுரைக் பள்ளிவாசலுக்கும் இடையே ஒரு மைல் தூரம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்திய செய்தியை இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2868, 2869, 2870, 7336

குதிரை ரேஸ் கூடாது என்று சொல்லும் நாம் இந்தக் குதிரைப் பந்தயத்தை சூது என்று சொல்வோமா?

இரண்டிலும் குதிரைகள் தான் பயனப்டுத்தப்படுகின்றன.

இரண்டிலும் குதிரைகள் ஓடுகின்றன.

எந்தக் குதிரை வெற்றி பெறுகிறது என்று இரண்டிலும் முடிவு செய்யப்படுகிறது.

வித்தியாசம் என்னவென்றால் ஒன்றில் பந்தயம் உள்ளது; சூது உள்ளது. மற்றொன்றில் அது இல்லை.

இது போல் தாயக்கட்டையை வைத்து பொழுது போக்கு என்ற அடிப்படையில் பந்தயம் கட்டாமல் மோசடி ஏதும் இல்லாமல் அதிலேயே மூழ்கி இறைவனின் கடமைகளை அலட்சியம் செய்யாமல் விளையாடினால் அது குற்றமாகாது. சூதாட்டம் ஆகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலவிதமான போட்டிகளை நடத்தியுள்ளனர். அவை அனைத்திலும் ஒருவர் வெல்வார் மற்றவர் தோற்பார். ஆனாலும் பந்தயம் கட்டவில்லை என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றை அனுமதித்துள்ளனர்.

صحيح البخاري

2899 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ: سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ، فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ارْمُوا، وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ» قَالَ: فَأَمْسَكَ أَحَدُ الفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكُمْ لاَ تَرْمُونَ؟»، قَالُوا: كَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْمُوا فَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ»

வீதியில் அம்பு எறியும் போட்டியை அஸ்லம் கூட்டத்தினர் நடத்திக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே வந்தனர். இஸ்மாயீல் நபியின் சந்ததிகளே! நீங்கள் அம்பு எறியுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அவர்கள் அம்பு எறிபவராக இருந்தார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, இரு அணிகளாக இருந்தவர்களில் ஒரு அணியைக் குறிப்பிட்டு,நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன் என்று கூறி அந்த அணியில் சேர்ந்து கொண்டார்கள். எதிரணியில் இருந்தவர்கள் அம்பு எறிவதை நிறுத்தி விட்டார்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது, நீங்கள் இந்த அணியில் ஒருவராகச் சேர்ந்திருக்கும் போது உங்களுக்கெதிராக நாங்கள் எப்படி அம்பு எறிவோம்? என்று அவர்கள் விடையளித்தனர். அப்படியானால் நான் இரண்டு அணிக்கும் பொதுவானவனாக இருந்து கொள்கிறேன். இப்போது எறியுங்கள்! என்றார்கள்.

அறிவிப்பவர் : ஸலமா பின் அக்வவு (ரலி)

நூல் : புகாரி 2899, 3373, 3516

அடுத்து தாயக்கட்டையில் உள்ள ஒரு அம்சம் காரணமாக அதைக் கூடாது என்று சிலர் கூறலாம்.

தாயக்கட்டையை உருட்டிப் போடும் போது எந்த எண் வரும் என்பது தெரியாது, ஏறக்குறைய இது சோதிடம் போல் உள்ளது என்று சிலர் கருதலாம். அந்த அம்சம் இதில் அறவே இல்லை.

எட்டு தான் விழப் போகிறது என்று நினைத்து எதிர்பார்த்து உருட்டுவான். அப்படி விழாமல் போய்விடும். விழுந்தாலும் விழுந்த பின்னர் தான் அதை அறிவான். இதில் மறைவான ஞானத்துக்கு சொந்தம் கொண்டாடுதல் ஏதும் இல்லை

தாயக்கட்டையில் உள்ள அதே அம்சம் தான் சீட்டுக்குலுக்கி போடுவதிலும் உள்ளது இது போன்ற அம்சத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

ஒரு விளையாட்டு போட்டி நடக்கிறது. யார் முதலில் ஆரம்பிப்பது என்பதைத் தீர்த்து வைக்க காசைச் சுண்டி முடிவு செய்வார்கள். பூவா தலையா போட்டு பார்ப்பார்கள். பூ விழுந்தால் இவர் ஆரம்பிக்கட்டும் தலை விழுந்தால் அவர் ஆரம்பிக்கட்டும் என்று முடிவு செய்வார்கள்.

அதே தாயக்கட்டை அம்சம் தான் இதில் உள்ளது. ஆனால் இதைக் கூடாது என்று ஒருவரும் சொல்வதில்லை.

காசைச்சுண்டுவதற்குப் பதிலாக தாயக்கட்டையைக் கூட தூக்கிப் போடலாம். ஒற்றை விழுந்தால் இப்ராஹீம் ஆரம்பிக்கட்டும். இரட்டை விழுந்தால் இஸ்மாயீல் ஆரம்பிக்கட்டும் என்று முடிவு செய்தால் அது சூதாக ஆகாது. மோசடியாக ஆகாது.

இது குறித்தும் நாம் முன்னரே விளக்கியுள்ளோம்

அதைப் பார்க்கவும்

சீட்டு குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா?

முஹம்மத் நியாஸ்

பதில்:

சீட்டுக் குலுக்கிப் போடுதலில் இரு வகைகள் உள்ளன. மனிதர்களுக்கு மத்தியில் யாருக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்பதை முடிவு செய்யத் தகுந்த காரணம் இல்லாமல் இருந்தால் அப்போது சீட்டுக் குலுக்கிப் போட்டு ஒருவருக்கு முன்னுரிமை அளித்தல் ஒரு வகை.

இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

நாம் செய்ய நினைக்கின்ற இரண்டு காரியங்களில் எதைச் செய்யலாம் என்று குழப்பம் வரும் போது அதில் ஒன்றைத் தேர்வு செய்வதற்காக சீட்டுக் குலுக்கிப் போடுதல் மற்றொரு வகை.

இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும்.

இது குறிபார்த்தல் என்ற வகையில் அடங்கும். இது அப்பட்டமான இணை வைத்தலாகும். இரண்டில் இது தான் சரியானது என்று இறைவனே காட்டிவிட்டான் என்பது இதன் உள்ளர்த்தமாக இருப்பதால் இது ஹராமாகும்.

இரண்டில் எதை முடிவு செய்தாலும் அது நம் விருப்பத்தில் உள்ளதாகும். ஒன்றை முடிவு செய்தால் மற்றொன்று நம்மிடம் பிரச்சனைக்கு வராது.

ஆனால் இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் காரணம் இல்லாமல் ஒருவருக்கு முன்னுரிமை கொடுத்தால் மற்றவர் பிரச்சனைக்கு வருவார். எனவே பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க சீட்டுக் குலுக்குதல் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் இது அவசியமாகிறது.

ஆனால் இரண்டு காரியங்களில் ஒன்றை முடிவு செய்ய சீட்டுக் குலுக்காமல் நாமே முடிவு செய்ய முடியும்.

முதல் வகையான சீட்டுக் குலுக்குதல் மார்க்கத்தில் உள்ளது தான் என்பதற்கான ஆதாரங்கள் வருமாறு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து முடிவெடுத்துள்ளார்கள். இவையனைத்தும் மேற்கண்ட அடிப்படையில் உள்ளவையாகும்.

صحيح البخاري

615 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ وَالصَّفِّ الأَوَّلِ، ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاَسْتَهَمُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا»

பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும், முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ615

صحيح البخاري م

2661 – حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، وَأَفْهَمَنِي بَعْضَهُ أَحْمَدُ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَعَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِنْهُ، قَالَ الزُّهْرِيُّ: وَكُلُّهُمْ حَدَّثَنِي طَائِفَةً مِنْ حَدِيثِهَا، وَبَعْضُهُمْ أَوْعَى مِنْ بَعْضٍ، وَأَثْبَتُ لَهُ اقْتِصَاصًا، وَقَدْ وَعَيْتُ عَنْ كُلِّ وَاحِدٍ مِنْهُمُ الحَدِيثَ الَّذِي حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا زَعَمُوا أَنَّ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا، خَرَجَ بِهَا مَعَهُ، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزَاةٍ غَزَاهَا، فَخَرَجَ سَهْمِي، فَخَرَجْتُ مَعَهُ بَعْدَ مَا أُنْزِلَ الحِجَابُ، فَأَنَا أُحْمَلُ فِي هَوْدَجٍ، وَأُنْزَلُ فِيهِ،……

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்…. சுருக்கம்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி2661

صحيح البخاري

2674 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ اليَمِينَ، فَأَسْرَعُوا فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمِينِ أَيُّهُمْ يَحْلِفُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி2674

صحيح البخاري

1243 حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ العَلاَءِ، امْرَأَةً مِنَ الأَنْصَارِ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ: أَنَّهُ اقْتُسِمَ المُهَاجِرُونَ قُرْعَةً فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ، فَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا، فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ، فَلَمَّا تُوُفِّيَ وَغُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، فَشَهَادَتِي عَلَيْكَ: لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ قَدْ أَكْرَمَهُ؟» فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ يُكْرِمُهُ اللَّهُ؟ فَقَالَ: «أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ اليَقِينُ، وَاللَّهِ إِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَاللَّهِ مَا أَدْرِي، وَأَنَا رَسُولُ اللَّهِ، مَا يُفْعَلُ بِي» قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ أَبَدًا

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் எவரது வீட்டில் யார் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது…. சுருக்கம்

அறிவிப்பவர் : உம்முல்அலா (ரலி)

நூல் : புகாரி 1243

எனவே பலரில் யாரைத் தேர்வு செய்வது என்பது போன்ற பிரச்சனைகளுக்கே சீட்டுக் குலுக்கிப் பார்க்கலாம். இவ்வாறு செய்வதற்கு அனுமதியுள்ளதே தவிர இது கட்டாயமானதல்ல. இரு தரப்பும் வேறு வகையில் இணக்கமான முடிவுக்கு வந்தாலும் தவறில்லை.

இரண்டாம் வகை சீட்டுக் குலுக்குதல் கூடாது என்பதைப் பின்வரும் வசனங்களின் மூலம் அறியலாம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்5:3

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

திருக்குர்ஆன்5:90

நல்லது கெட்டதைச் சிந்தித்து நாமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்களில் சீட்டுக் குலுக்கிப் பார்த்து முடிவெடுப்பது கூடாது. மாறாக இப்பிரச்சனைகளுக்கு மார்க்கம் இஸ்திகாரா என்ற வேறு ஒரு வழியைக் காட்டியுள்ளது.

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நல்வழியைக் காட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு எது நமக்கு நல்ல முடிவாகத் தெரிகின்றதோ அதைத் தேர்வு செய்ய வேண்டும்.

நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் கீழ்க்காணும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள துஆவை ஓத வேண்டும்.

صحيح البخاري 1162

حدثنا  قتيبة ، قال : حدثنا  عبد الرحمن بن أبي الموالي ، عن  محمد بن المنكدر ، عن  جابر بن عبد الله  رضي الله عنهما، قال :  كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : ” إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني، ومعاشي، وعاقبة أمري ” أو قال : ” عاجل أمري وآجله، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري ” أو قال : ” في عاجل أمري وآجله، فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان، ثم أرضني “. قال : ” ويسمي حاجته “.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல எல்லாக் காரியங்களிலும் நல்லவற்றைத் தேர்வு செய்யக்கூடிய முறையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.” “உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர்,

அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பிஇல்மிக்க லஅஸ்தக்திருக்க பிகுத்ரதிக்க வஅஸ்அலுக மின் ஃபழ்லிகல் அளீம். ஃப இன்னக தக்திரு வலா அக்திரு வதஃலமு வலா அஃலமு வஅன்த அல்லாமுல் குயூப். அல்லாஹும்ம இன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபக்துர்ஹுலீ  வயஸ்ஸிர்ஹுலீ ஸும்ம பாரிக்லீ ஃபீஹி வஇன்குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன்லீ ஃபீதீனீ வமஆஷீ வஆகிபதி அம்ரீ ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ வஸ்ரிஃப்னீ அன்ஹு வக்துர்லியல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ழினீ பிஹி”

என்று கூறட்டும். தனது தேவையையும் குறிப்பிடட்டும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின்அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரீ1162

(பொருள் : இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன் மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்துக்கும் ஆற்றலுள்ளவன். நான் ஆற்றலுள்ளவன் அல்லன். நீ அனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவானவற்றையும் நீ அறிபவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் எனது மறுமைக்கும் சிறந்தது என நீ கருதினால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் பரகத் (விருத்தி) செய்! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும் கெட்டது என நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு! எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றுக்கு ஆற்றலைத் தா! பின்னர் அதில் எனக்கு திருப்தியைத் தா!)

இவ்வாறு நாம் முன்னரே தெளிவாக்கியுள்ளோம்.

மேலும் இது குறித்து திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் 136 வது குறிப்பிலும் இதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். அதையும் காண்க

136. திருவுளச் சீட்டுகூடுமா?

அம்புகள் மூலம் குறிபார்ப்பது கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90) சொல்லப்பட்டுள்ளது.

கடவுள் எனக் கருதும் சிலைகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்பது அரபுகளின் வழக்கமாக இருந்தது.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன், ‘செய்’ என்று ஒரு அம்பில் எழுதுவார்கள்; ‘செய்யாதே’ என்று மற்றொரு அம்பில் எழுதுவார்கள். கண்ணை மூடிக் கொண்டு அதில் ஒரு அம்பை எடுப்பார்கள். அதில் எழுதப்பட்டது தான் கடவுளின் கட்டளை என்று கருதிக் கொள்வார்கள்.

இவ்வசனங்களின் மூலம் அது தடை செய்யப்படுகின்றது.

அம்புகளைப் பயன்படுத்திக் குறி கேட்பது மட்டும் தான் தடை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த அடிப்படையில் அமைந்த அனைத்துக் காரியங்களும் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

‘பால்கிதாபு’ என்ற பெயரில் முஸ்லிம்களிடம் காணப்படும் மூட நம்பிக்கையும் இத்தடையில் அடங்கும். மனிதனுக்குக் கட்டளையிடுகின்ற அதிகாரத்தை மனிதனால் உருவாக்கப்பட்டவைகளுக்கு வழங்குவது தவறாகும்.

நாம் கண்ணை மூடிக் கொண்டு ஒரு சீட்டை எடுத்து விட்டு, கடவுளின் விருப்பம் இது தான் எனக் கூறுவது கடவுளின் மீது இட்டுக்கட்டுவதாகவும் அமையும். அல்லாஹ் மறைத்து வைத்திருப்பதை எங்களால் அறிந்து கொள்ள முடியும் என்ற அம்சமும் இதனுள் அடங்கியுள்ளது.

சில நேரங்களில் சீட்டுக் குலுக்கிப் போட்டு சில காரியங்களை நாம் முடிவு செய்வதுண்டு. அதையும், இதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இரண்டு நபர்களுக்கிடையே ஒருவரைத் தேர்வு செய்யும் போது இருவரும் சமமான நிலையில் இருந்தால் சீட்டுக் குலுக்கி ஒருவரைத் தேர்வு செய்கிறோம். இது மற்றவர் மனம் கோணாமல் ஒதுங்கிக் கொள்வதற்குரிய ஏற்பாடாகும்.

திருவுளச்சீட்டு, பால்கிதாபு என்பது, கடவுளின் நாட்டத்தை அறிந்து கொள்ளும் வழி என்று கருதப்படுவதால் அது தடுக்கப்படுகிறது. சமநிலையில் உள்ள இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும் போது இதுபோன்ற நம்பிக்கை இருப்பதில்லை.

ஒரு காரியத்தைச் செய்வதில் நன்மையா? தீமையா? என்று குழப்பம் ஏற்படும் போது ‘இஸ்திகாரா’ எனும் சிறப்புத் தொழுகை தொழுது, “இறைவா! இக்காரியம் நன்மை தரும் என்றால் அதில் என்னை ஈடுபடச் செய்! இல்லாவிட்டால் என் கவனத்தை அக்காரியத்திலிருந்து திருப்பி விடு!” என்று பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. (பார்க்க: புகாரீ 1166, 6382, 7390)

மேற்கண்ட சீட்டுக் குலுக்குதலுக்கு நாம் எந்தப் பொருளையும் பயன்படுத்தலாம். அது தாயக்கட்டையாகவும் கூட இருக்கலாம்.

இருவர் சம்மந்தப்பட்ட விஷயமாக காசைத் தூக்கிப் போட்டு பூவா தலையா பார்த்து முடிவுக்கு வரலாம்.

ஆறு பேரில் ஒருவரைத் தேர்வு செய்யும் விஷயமாக இருந்தால்  ஆறுமுகம் கொண்ட ஒரு தாயக்கட்டையைத் தூக்கிப் போட்டு ஒன்று வந்தால் இவர், இரண்டு வந்தால் …. இப்படி தாயக்கட்டையை உருடிப் போட்டு முடிவுக்கு வரலாம். தாயக்கட்டையைப் பயன்படுத்தியதால் அது ஹாராம் ஆகாது.