தாய்ப்பாலை நிறுத்துப்பார்த்து முடிவு செய்யும் நவீன விஞ்ஞானம்

சமீபகாலமாக பின்வரும் செய்தி முகநூலில் அதிகம் உலா வருகிறது. இச்செய்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முக நூலில் பரவி ஓய்ந்து போனது. தற்போது அதை யாரோ பரப்ப மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது.

அந்தச் செய்தி இதுதான்.

அல்குர்ஆனின் தீர்ப்பு

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது. ஒன்று ஆண், மற்றொன்று பெண். செவிலியரின் தவறினால் குழந்தைகள் மாறிவிட்டன. ஆண் குழந்தை தன்னுடையது என்று இரண்டு பெண்களும் வாதிட்டார்கள். 

அங்கு பணிபுரியும் முஸ்லிம் மருத்துவரிடம் சக மருத்துவர்கள், எல்லாவற்றிருக்கும் குர்ஆனில் தீர்வு இருக்கிறது என்று சொல்வாயே? இதற்கு குர்ஆன் சொல்லும் தீர்வு என்ன? என்று கிண்டலாகக் கேட்டனர்.

அந்த முஸ்லிம் மருத்துவர் எகிப்தில் உள்ள அல்அஜ்ஹர் பல்கலைக்கழக மார்க்க அறிஞர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அந்நிஸா அத்தியாயத்தில் இதற்கான விடை இருக்கிறது ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்னார்கள்.

மருத்துவர் ஆராய்ந்து பார்த்த போது, உங்கள் மக்களில் ஓர் ஆணிற்கு இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும்

அல்குர்ஆன்4:11

எனும் அல்லாஹ்வின் வாக்கிற்கு ஏற்ப இரண்டு பெண்களின் தாய்ப்பாலின் மாதிரியை எடுத்து ஆராய்ச்சி செய்தார்.

ஒரு தாயின் பாலின் எடையும் கொழுப்பு சக்தியும் மற்றைய தாய்ப் பாலின் எடையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனடிப்படையில் எந்தத் தாயின் பாலிலுள்ள கொழுப்பு சக்தி அதிகம் உள்ளதோ ஆண் குழந்தை அந்தத் தாயிற்கு உரியது என்று முடிவெடுத்தார். அண்மைக் கால ஆராய்ச்சிகளும் இதை உறுதிபடுத்துகின்றன.

இந்த தகவலின் விஞ்ஞானக் கருத்தை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால் சர்வதேச இணையத்ததளமான www.Wikipedia.org இல் “ஆண், பெண் குழந்தைகளின் தாய்ப்பாலுக்கு இடையிலான வித்தியாசம்” எனும் கருத்தைத் தேடி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

“இறுதிநாள் வரை மக்களுக்கு தேவையான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குர்ஆனில் தீர்விருக்கிறது. ஆனால் அதை ஆராய்ந்தறியும் அறிஞர்கள் தாம் தேவை” இது தான் அந்தச் செய்தி.

இஸ்லாத்துக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற இயல்பின் காரணமாக இதை முஸ்லிம்கள் பரப்பி வருகின்றனர். திருக்குர்ஆனில் பல அறிவியல் கருத்துக்கள் முன்னரே சொல்லப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அத்துடன் பொய்யான செய்திகளைக் கலக்கும் போது மெய்யான செய்திகள் மீதும் சந்தேகம் ஏற்பட்டு விடும். இதைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து உண்மை தானா என்பதை உறுதி செய்த பின்பே எதையும் பரப்ப வேண்டும்.

பொய்களை ஆதாரமாக ஆக்கக் கூடாது என்பதை மேலும் அறிய அத்தாட்சிகளை மறுக்கலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.

மேற்கண்ட செய்தியில் இஸ்லாம் கூறும் விஞ்ஞானக் கருத்துடன் ஒரு கதையும் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானக் கருத்து பற்றி விளக்குவதற்கு முன் இதில் சொல்லப்பட்ட கதையை ஆராய்வோம்.

ஃப்ரான்ஸ் நாட்டு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு குழந்தை பிறந்தது என்று இந்தக் கதை ஆரம்பிக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் உண்மையாக இருந்தால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லப்படாது. அப்படிச் சொல்லப்பட்டால் அது பொய்யாகவே இருக்கும்.

பிரான்ஸ் நாட்டில் எந்த ஊரில் இது நடந்தது? அந்த மருத்துவமனையின் பெயர் என்ன? மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் யார்? அந்த முஸ்லிம் டாக்டர் யார்? அந்த தம்பதிகள் யார்? இது எந்த ஆண்டு நடந்தது? இந்த அபூர்வமான செய்தி எந்த ஊடகத்தில் முதன் முதலில் வந்தது? உள்ளிட்ட எந்த விபரமும் இதில் இல்லை. ஒரு ஊரில் ஒரு ராஜா என்ற பாட்டி கதை போல் உள்ள இதை எப்படி அறிவுடைய மக்கள் பரப்பலாமா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணாமல் இதைப் பரப்புவது பொய்யைப் பரப்பியதாகவே ஆகும்.

இது அல்லாத இன்னும் பல கேள்விகளும் இதில் எழும்.

பிரான்ஸ் நாடு தனக்கென சட்டத்தை வகுத்துக் கொண்டு செயல்படும் நாடு. அந்த நாட்டில் இது போல் ஒரு பிரச்சனை வந்தால் அந்த நாட்டுச் சட்டப்படி தான் தீர்ப்பு அளிக்கும். எகிப்தில் பத்வா கேட்டு முடிவு செய்யப்படாது என்ற அடிப்படை அறிவுக்கு முரணாக உள்ளது.

டி என் ஏ டெஸ்ட் மூலம் தான் பிரான்ஸ் நாட்டில் இதற்கு தீர்ப்பு அளிக்கப்படும். தாய்ப்பாலின் எடையை வைத்து அல்ல.

எகிப்து பல்கலைக் கழகம் ஒரு பத்வா கொடுத்தால் அதற்கான ஆதாரம் வேண்டும்? யார் பெயரில் பத்வா கேட்கப்பட்டது? எந்தத் தேதியில் பத்வா கேட்கப்பட்டது? அந்த பத்வா எண் எது? அந்த ஃபத்வாவின் காப்பி எங்கே? என்றெல்லாம் சிந்தித்தால் இதைப் பரப்புவார்களா?

எகிப்தின் மேற்படி பல்கலைக்கழகத்தில் தாய்ப்பால் எடையை வைத்து யாருடைய குழந்தை என்று தீர்மானிக்கலாம் என்று எந்த பத்வாவும் எந்தக் காலத்திலும் கொடுக்கப்படவில்லை. எகிப்து உள்ளிட்ட எந்த இஸ்லாமிய நாட்டிலும் தாய்ப்பாலின் எடையை வைத்து பெற்றோரை முடிவு செய்யும் சட்டம் இல்லை.

ஆக ஒரு அடிப்படையும் இல்லாமல் எவனோ கற்பனை செய்து பரப்பிய இச்செய்தி இறக்கை கட்டி பறக்கிறது என்பது தெளிவாக தெரிகின்றது.

அடுத்து அந்த வசனத்தில் இந்தக் கருத்து உள்ளதா? சாதாரணமாகப் பார்த்தாலே அப்படி இல்லை என்பது பளிச்சென்று தெரியும். சொத்துரிமை சம்மந்தமாக இவ்வசனம் பேசுகிறது. ஒருவனது பிள்ளைகளில் பெண்ணுக்கு ஒன்று ஆணுக்கு இரண்டு எனப் பங்கிட வேண்டும் என்பது தான் இதில் சொல்லப்பட்டுள்ளது. தாய்ப்பாலின் எடையைப் பற்றி இவ்வசனம் பேசவே இல்லை. நேரடியாகவும் பேசவில்லை. மறைமுகமாகவும் பேசவில்லை.

விஞ்ஞானத்தில் இப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக பரப்புவோர் விக்கி பீடியாவில் உள்ளது என்று சேர்த்துக் கூறுகின்றனர். ஆனால் விக்கி பீடியா விஞ்ஞானத் தளம் இல்லை. அதன் உறுப்பினரான யாரும் எதையும் எழுதக் கூடிய தளம். மேலும் இதில் கூட இப்படி எழுதப்படவில்லை. தாய்ப்பால் என்று அடித்து தேடினால் இதில் கூறப்பட்ட விஷயம் காணப்படவில்லை.

தாயின் போஷாக்கின் அடிப்படையில் தான் தாய்ப்பாலின் எடை அமைந்திருக்கும். இது தான் உண்மை.

இரட்டைக் குழந்தை பெற்றால் ஒரு மார்பில் எடை அதிகமான பாலும் மறு மார்பில் எடை குறைவான பாலும் சுரக்கும் என்று சொல்வார்கள் போலும்.

ஒரு வாதத்துக்காக விஞ்ஞானத்தில் அப்படி இருந்தாலும் அதை இந்த வசனம் கூறவில்லை என்பதே உண்மையாகும். இது திருக்குர்ஆனுடன் விளையாடும் நிலையாகும்.

பிள்ளைகளின் சொத்து தொடர்பாகத் தான் ஆணுக்கு இரண்டு பெண்ணுக்கு ஒன்று என்று இவ்வசனம் கூறுகிறது. மரணித்த ஒருவருக்கு பிள்ளைகளும் தாய் தந்தையும் இருந்தால் தாய் த்ந்தை இருவருக்கும் தலா ஆறில் ஒன்று என்று சமமான சொப்த்துரிமையஏ உள்ளது. இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை.

ஆணாகிய தந்தைக்கும் பெண்ணாகிய தாய்க்கும் சமமாக ஆறில் ஒரு பாகம் என்று உள்ளதால் ஆண் பெண் தாய்ப்பாலின் எடை சமமாக இருக்கும் என்று ஏன் ஆராயமல் விட்டார்கள்?

அது போல் தான் அல்லாஹ்வின் வசனம் தவறான கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை இஸ்லாத்தின் பெயரல் பரப்பும் போக்கை கைவிடுவோமாக!