வாடகைக்கும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு?

பதில்

வீட்டை ஒத்திக்கு விடுவதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

வீட்டின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு தன் வீட்டை ஒத்திக்கு விடுகின்றார். வீட்டின் உரிமையாளர் அப்பணத்தை தன்னிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை பணத்தைக் கொடுத்தவர் வீட்டை விட்டு வெளியேற மாட்டார். வாடகையும் கொடுக்க மாட்டார்.

ஒப்பந்த காலம் முடிவடைந்த உடன் வீட்டின் உரிமையாளர் வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுப்பார். இதன் பின் பணம் கொடுத்தவர் தன் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு வீட்டைக் காலி செய்வார். இது ஒத்திக்கு விடுதல் என்று கூறப்படுகின்றது.

இது தெளிவான வட்டியாகும்.

பணத்தைக் கொடுத்துவிட்டு அப்பணம் தன்னிடம் திரும்பி வருகின்ற வரை பணம் வாங்கியவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குவது வட்டியாகும்.

மாத வாடகை 1000 ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை ஒத்திக்குப் பெற்றவர், ஒத்திக்குப் பணம் கொடுத்ததற்காக வாடகை செலுத்தாமல் வசிக்கின்றார். இதன் மூலம் பணம் பெற்றவரிடமிருந்து மாதம் மாதம் 1000 ரூபாய்களை வேறு வடிவில் பெறுகிறார்.

வீட்டின் உரிமையாளர் பணம் வாங்கிய காரணத்தாலே வாடகை வாங்காமல் வீட்டில் வசிப்பதற்கு அனுமதிக்கின்றார். அதாவது வாங்கிய பணத்துக்காக மாதம் மாதம் 1000 ரூபாய் செலுத்துகிறார். இது வட்டியாகும்.

ஆனால் வாடகை என்பது இது போன்றதல்ல. வீட்டைப் பயன்படுத்திவிட்டு அதற்குரிய கூலியாக குறிப்பிட்ட தொகையை வாடகைதாரர் வீட்டின் உரிமையாளரிடம் கொடுக்கின்றார். இங்கே வீட்டைப் பயன்படுத்தியதற்கான கூலி மட்டுமே வாங்கப்படுகின்றது. வாங்கப்பட்ட பணம் திருப்பித்தரப்பட மாட்டாது. இது வியாபாரமாகும்.

வாடகை விடுவதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

2722 حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ سَمِعْتُ حَنْظَلَةَ الزُّرَقِيَّ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ كُنَّا أَكْثَرَ الْأَنْصَارِ حَقْلًا فَكُنَّا نُكْرِي الْأَرْضَ فَرُبَّمَا أَخْرَجَتْ هَذِهِ وَلَمْ تُخْرِجْ ذِهِ فَنُهِينَا عَنْ ذَلِكَ وَلَمْ نُنْهَ عَنْ الْوَرِقِ رواه البخاري

அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். ஆகவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்கு விட்டு வந்தோம். சில வேளைகளில் ஒரு பகுதி விளைச்சலைத் தரும்; மற்றொரு பகுதி விளைச்சலைத் தராது. ஆகவே, அவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹம்களுக்குப் பகரமாக வாடகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.

அறிவிப்பவர் : ராஃபிஉ  பின் கதீஜ் (ரலி)

நூல் : புகாரி 2722

காசுகளை வாங்கிக் கொண்டு நிலங்களை வாடகைக்கு விடுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.

23.03.2011. 8:21 AM