குர்ஆன் மட்டும் போதுமா?

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

முன்னுரை

எவ்விதத் தியாகமும், உழைப்பும் செய்யாமல் இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை வாரிசு முறையில் நாம் பெற்றுள்ளோம். இதனால் தானோ என்னவோ இம்மார்க்கத்தின் முக்கியத்துவத்தை நாம் முழுமையாக உணராதவர்களாக இருக்கிறோம். இஸ்லாத்தின் பெயரால் யார் எதைச் சொன்னாலும் சிந்திக்காமல் அல்லது சிந்திக்க வேண்டிய முறையில் சிந்திக்காமல் நம்பி விடுகிறோம்.

இவ்வுலகத்தின் பொருட்களையும், வசதி வாய்ப்புகளையும் தேர்வு செய்வதில் நாம் காட்டும் அக்கரையில் பத்தில் ஒரு பகுதி கூட மார்க்க விஷயத்தில் நாம் காட்டுவதில்லை.

நமது இந்த அலட்சியத்தைப் பயன்படுத்தித் தான் தர்கா வழிபாடு இச்சமுதாயத்தில் நுழைந்தது. மூட நம்பிக்கைகள் புகுந்தன. அனாச்சாரங்கள் தலை விரித்து ஆடின.

நமது இந்த அலட்சியத்தைப் பயன்படுத்தித் தான் இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் இஸ்லாத்தின் காவலர்கள் வேடம் போட முடிகிறது. இஸ்லாத்தைத் தகர்க்கும் கொள்கை கூட உண்மை இஸ்லாம் என்ற போர்வையில் உலா வருகிறது.

இது போன்ற கொள்கைகளில் ஒன்று தான் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கை. குர்ஆனை மதிக்கிறோம் என்ற போர்வையில் நபிவழியை மட்டுமின்றி குர்ஆனையும் இவர்கள் மறுக்கின்றனர் என்பதைச் சமுதாயத்துக்கு அடையாளம் காட்டுவதற்காக இந்த நூலை வெளியிடுகிறோம். இந்தக் கொள்கையுடையோர் விரல் விட்டு எண்ணத்தக்க அளவுக்குக் குறைவாக இருந்தாலும் இக்கொள்கையை ஏற்றுக் கொள்வது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் அளவுக்குப் பெருங்குற்றம் என்பதால் முக்கியத்துவம் கொடுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

இக்கொள்கைக்கு எதிராக சில அறிஞர்கள் அரபு மொழியில் சில நூல்களை எழுதி இருந்தாலும் அவை முழுமையானதாக இல்லை.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்று வாதிடுவோருக்கு மறுப்பு எழுதும் போது அவர்கள் ஏற்றுக் கொள்வதாகக் கூறிக் கொள்ளும் குர்ஆனிலிருந்து தான் ஆதாரம் காட்ட வேண்டும். ஆனால் இவர்களுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல்களில் நபி வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டி மறுப்பு எழுதியுள்ளனர். ஹதீஸைப் பின்பற்ற மாட்டோம் எனக் கூறுவோருக்கு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுவது எப்படி பயனளிக்கும்?

மேலும் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டத்தினர் கேட்கும் எதிர்க் கேள்விகளுக்கும் தக்க பதில் கூறும் வகையில் அவர்கள் எழுதிய மறுப்புகள் அமையவில்லை.

எனவே முற்றிலும் குர்ஆன் வசனங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்நூலில் நிலை நாட்டியுள்ளோம்.

ஹதீஸ் மறுப்பாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் வாய் திறக்க முடியாத அளவுக்கு அழுத்தமாக மறுப்பளித்துள்ளோம்.

மேலும் அவர்கள் கியாம நாள் வரை முயன்றாலும் பதில் அளிக்க முடியாத பல கேள்விகளையும் நூலில் எழுப்பியுள்ளோம்.

இஸ்லாத்தை விட்டு ஒரு முஸ்லிமை வெளியேற்றும் இந்தக் கொள்கையில் யாரும் விழுந்து விடக் கூடாது என்பதும், ஏற்கனவே விழுந்தவர்கள் அதிலிருந்து மீள வேண்டும் என்பதுமே இந்நூல் எழுதப்பட்டதன் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

குர்ஆன் மட்டும் போதுமா?

இஸ்லாம் தெளிவான மார்க்கம். உலகின் நவீனப் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்த மார்க்கத்தில் தீர்வு உண்டு. விஞ்ஞானத்திற்கு முரண்படாத ஒரு மார்க்கம் இன்று உலகில் உண்டு என்றால் அது இஸ்லாம் தான்.

இருந்தாலும் இஸ்லாத்திற்குள்ளேயே பல பிரிவுகள் இருப்பதைப் பார்க்கிறோம். இஸ்லாத்தை அரைகுறையாகப் புரிந்து கொள்வதால் கொள்கையின் அடிப்படையில் பல பிரிவுகளாக முஸ்லிம்கள் பிரிந்துள்ளார்கள். உலக ஆதாயங்களுக்காகவும், சுயநலனுக்காகவும் கூட சிலர் இஸ்லாத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவினரும் தங்களது கருத்துக்களை நிலை நாட்டுவதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த ஆதாரங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது அவர்களுடைய கருத்து நியாயமானதாகத் தோன்றினாலும் குர்ஆனை முழுமையாக முறைப்படி ஆராய்ந்தால் இஸ்லாத்தில் பிரிவுக்கு இடமில்லை என்பதை விளங்கலாம்.

இஸ்லாத்தின் மூல ஆதாரம் குர்ஆன் மட்டுமே என்ற கொள்கை இந்தப் பல்வேறு பிரிவுகளில் ஒன்றாகும். இந்தக் கொள்கை சரியானது தானா? என்று பார்ப்பதற்கு முன்னால் இந்தக் கொள்கை உருவானது எப்படி என்ற விபரங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இஸ்லாமியக் குடியரசின் தலைவராக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள் தலைநகரமான மதீனாவில் கொல்லப்பட்டார்கள். அதன் பின் அலீ (ரலி) அவர்கள் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான மக்களின் ஆதரவு அலீ (ரலி) அவர்களுக்கு இருந்தாலும் அவர்களை எதிர்ப்பவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களை எதிர்த்தவர்கள் ஒரே நிலைபாட்டில் இருக்கவில்லை. உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்பும், ஒத்துழைப்பும் இருந்தது என்பது சிலரது நிலைபாடாக இருந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் அலீ (ரலி) அவர்களுக்குத் தொடர்போ, உடண்பாடோ இல்லை; ஆயினும் கொலையாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதில் அலீ (ரலி) தயக்கம் காட்டுகிறார்; கொலையாளிகளிடம் கருணையுடன் நடந்து கொள்கிறார் என்பது மற்றும் சிலரின் நிலைபாடாக இருந்தது. ஆயிஷா (ரலி), முஆவியா (ரலி) போன்றவர்கள் இந்த நிலைபாட்டில் இருந்தனர்.

அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களின் நிலையும் ஒன்றுபட்டதாக இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்களின் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்களைத் தகுதியான தலைவர் என நம்பியவர்களும் அவர்களில் இருந்தனர். உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் சம்மந்தப்பட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆதரவாளர்களாக நடித்தவர்களும் இருந்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் உறவினரும், அவர்களால் சிரியாவின் ஆளுனராக நியமிக்கப்பட்டவருமான முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் தலைமையை ஏற்க மறுத்தார்கள். சிரியாவைத் தனி நாடாக்கி அதன் அதிபராகத் தம்மை அறிவித்துக் கொண்டார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் கீழ் உள்ள நிலப்பரப்புக்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்காக அலீ (ரலி) அவர்கள் போர் தொடுத்தனர். சிஃப்பீன் என்ற இடத்தில் இரு படையினருக்கும் இடையில் போர் நடைபெற்றது.

இப்போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனைக் கண்டு கவலை கொண்ட நல்லவர்கள் இரு தரப்பிலும் இருந்தனர். இரு தரப்பும் ஒன்றுபடுவதற்கான சமாதான உடன்படிக்கை செய்து போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் முயற்சி செய்தனர்.

இரண்டு தரப்பிலும் தலா ஒரு நடுவரை நியமித்து, அவ்விரு நடுவரும் பிரச்சனையை அலசி ஆராய்ந்து கூட்டாக நல்ல முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவை இரு தரப்பும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த சமாதானத் திட்டம். இத்திட்டத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

அதன் படி அலீ (ரலி) தரப்பில் அபூ மூஸா (ரலி) அவர்களும், முஆவியா (ரலி) தரப்பில் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் இருந்த நன்மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விட்டு அலீ (ரலி) அவர்கள் அணியில் கலந்திருந்த கொலையாளிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த ஒப்பந்தம் மூலம் சமுதாயம் ஒன்றுபட்டால் உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்ற நாம் தப்பிக்க முடியாது என அவர்கள் அஞ்சினார்கள். அதே நேரத்தில் சமாதான முயற்சியை நேரடியாக எதிர்த்தால் மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எனவே சமாதான முயற்சியை வேறொரு முகமூடி அணிந்து எதிர்க்கத் திட்டமிட்டார்கள்.

இஸ்லாமிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்கு கொள்கைச் சாயம் பூச வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சமாதான உடன்படிக்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்ற வாதத்தை எடுத்து வைத்து அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர இவர்கள் எதிர்க்கலானார்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் காரிஜிய்யாக்கள் (கலகக்காரர்கள்) எனப்படுகின்றனர்.

இந்த விஷக் கருத்துக்கு இவர்கள் எப்படி மார்க்கச் சாயம் பூசினார்கள் என்பதையும் விபரமாக அறிந்து கொள்வோம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை.

திருக்குர்ஆன் 6:57, 12:40, 12:67

இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு சமாதான உடன்படிக்கையை இவர்கள் எதிர்த்தனர். அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று குர்ஆன் கூறும் போது இரண்டு நடுவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களின் முடிவை ஏற்பது குர்ஆனுக்கு முரண் என்பது இவர்களின் வாதம்.

அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அதிகாரம் இல்லை என்று குர்ஆன் கூறுவது உண்மை தான். ஆனால் இவர்கள் திசை திருப்பும் கருத்தைத் தான் இவ்வசனங்கள் தருகின்றனவா என்றால் நிச்சயமாக இல்லை. எந்த அதிகாரம் தனக்கு உரியது என அல்லாஹ் உரிமை கொண்டாடுகிறானோ அந்த அதிகாரம் பற்றியே இவ்வசனங்கள் கூறுகின்றன. எந்த அதிகாரங்களை மக்களுக்கு வழங்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறானோ அந்த அதிகாரத்தை மக்களுக்கு வழங்குவது இவ்வசனங்களுக்கு முரணாகாது.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும் போது மற்ற மனிதர்கள் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதையும், தீர்த்து வைப்பதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான். பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் கூட இதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்களாக இருந்தனர்.

ஆயினும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள் இவ்வாறு வாதிட்டனர். இவர்களின் வாதம் மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்று சிலர் எண்ணி அவர்கள் பின்னே சென்றது தான் இதில் வேதனையான விஷயம். இவர்கள் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதைப் பின் வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.

அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ் அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:35

அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:58

அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம். அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 5:42

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.

திருக்குர்ஆன் 5:95

ஒரு சமுதாயத்தின் ஆடு (இன்னொரு சமுதாயத்தின்) விளை நிலத்தில் மேய்ந்த போது தாவூதும், ஸுலைமானும் தீர்ப்பளித்ததை நினைவூட்டுவீராக! அவர்களின் தீர்ப்புக்கு நாம் சாட்சியாக இருந்தோம்.

திருக்குர்ஆன் 21:78

வழக்குரைக்க வந்தோரின் செய்தி உமக்குத் தெரியுமா? தொழுமிடத்தைத் தாண்டி, தாவூதிடம் அவர்கள் வந்த போது அவர்களைக் கண்டு திடுக்குற்றார். பயப்படாதீர்! நாங்கள் ஒருவர் மீது மற்றவர் வரம்பு மீறிய இரண்டு வழக்காளிகள். எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவீராக! தவறிழைத்து விடாதீர்! நேரான வழியில் எங்களை நடத்துவீராக! என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 38:21, 22

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 49:9

மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும் போது சக மனிதர்கள் தலையிட்டு நீதியான முறையில் தீர்த்து வைப்பதை இவ்வசனங்கள் தெளிவாக அனுமதிக்கின்றன. ஆயினும் இவர்கள் தமது மனசாட்சிக்கு எதிராகவும், குர்ஆனுக்கு எதிராகவும் குர்ஆன் வசனத்தைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி மக்களை வழிகெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து குர்ஆன் மட்டும் போதும் என தங்களின் கொள்கையை விரிவுபடுத்திக் கொண்டனர். அலீ (ரலி) அவர்களையும், முஆவியா (ரலி) அவர்களையும் ஒரு சேர எதிர்த்த இவர்கள் ஹரூரா என்ற இடத்தில் தளம் அமைத்துக் கொண்டனர்.

அல்லாஹ்வின் தீர்ப்பைப் புறக்கணித்து மனிதர்களை நடுவர்களாக நியமித்த அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகிய இருவரும், இவ்விருவருடன் இருந்த மக்களும் காஃபிர்கள் எனவும் இவர்கள் ஃபத்வா கொடுத்தனர்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் காஃபிர்கள்.

திருக்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

திருக்குர்ஆன் 5:45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் 5:47

இந்த வசனங்களையும் தவறான இடத்தில் பயன்படுத்தி நன்மக்கள் அனைவரையும் காஃபிர்கள் என்றனர். அனைவரையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்ததுடன் காஃபிர்களுடன் போர் செய்ய வேண்டும்; காஃபிர்களைக் கொல்ல வேண்டும்; அலீ (ரலி), முஆவியா (ரலி) ஆகியோரைக் கொல்வது ஜிஹாத் என்றெல்லாம் அடுத்த நிலைபாட்டை எடுத்தனர். ஜிஹாத் பற்றிய வசனங்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டி இதை நியாயப்படுத்தினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இவர்கள் கூறுவது தவறு என்று அறிஞர்கள் விளக்கம் அளித்த போது குர்ஆன் மட்டுமே மார்க்க ஆதாரம் என்று கூறி ஹதீஸ்களை மறுக்கலானார்கள்.

இவர்கள் குர்ஆனுக்குத் தம் இஷ்டம் போல விளக்கம் கூறி ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம்களைக் கொல்லத் துணிந்ததால் ஹிஜ்ரீ 38 ஆம் ஆண்டில் அலீ (ரலி) அவர்கள் ஹரூராவின் மீது படையெடுத்துச் சென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினார்கள். பின்னர் முஆவியா (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்கள் மீது போர் தொடுத்து அவர்களை முற்றிலுமாக அழித்தார்கள்.

இவர்களைப் போல் ஒவ்வொரு கால கட்டத்திலும் குர்ஆன் மட்டும் போதும் என்ற கூட்டத்தினர் தோன்றிக் கொண்டும் அழிந்து கொண்டும் வருகின்றனர்.

காரிஜிய்யாக்கள் எவ்வாறு மடமையின் மீது தங்கள் அடித்தளத்தை அமைத்து, குர்ஆன் வசனங்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி வந்தார்களோ அந்த வழிமுறை மட்டும் மாறவில்லை. குர்ஆன் மட்டும் போதும் என்று இப்போது வாதிடுபவர்களும் குர்ஆன் வசனங்களைப் பொருத்தமற்ற இடத்தில் பயன்படுத்தி அதன் மீது தான் தங்களின் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் காணலாம்.

தங்களை வளர்த்துக் கொள்ள இந்தத் தீய கொள்கையைத் தீய நோக்கத்துடன் காரிஜிய்யாக்கள் பிரச்சாரம் செய்தது போலவே எப்போதெல்லாம் இத்தீய கொள்கையை யாரெல்லாம் தூக்கிப் பிடித்தார்களோ அவர்களும் தங்களை வளர்த்துக் கொள்ளவே இந்தத் தீய கொள்கையைப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற நிலைபாட்டை எடுத்தவர்கள் குர்ஆனை வாசிக்கும் போது அதன் முழு விளக்கம் குர்ஆனில் கிடைக்காமல் இருப்பதை உணர்கிறார்கள். நபி வழியின் துணையுடன் தான் குர்ஆணை விளங்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டாலும் அதை வெளிப்படையாக அறிவிக்க அவர்களின் சுய கவுரவம் தடுக்கிறது. எனவே சத்தியத்தை நோக்கித் திரும்பாமல் குர்ஆனையும், இஸ்லாத்தையும் புறக்கணித்து கடவுள் மறுப்பாளர்களாகி விடுகின்றனர்.

இவர்களில் சிலர் இஞ்சீலைப் பற்றி புகழ்ந்து பேசும் 3:65, 5:46, 5:66, 5:68, 9:111, 57:27 ஆகிய வசனங்களைப் படித்து விட்டு பைபிளைப் பின்பற்றுவதும் நமக்குக் கடமை எனக் கூறி தடம் புரண்டதை நாம் பார்த்துள்ளோம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை என்று கூறிய இவர்களை மத்தேயு, மாற்கு கூறியதை ஏற்கும் நிலைக்கு தள்ளி அல்லாஹ் இழிவுபடுத்தி விட்டான்.

குர்ஆன் மட்டும் போதும்; நபிவழி அவசியமில்லை என்ற கருத்து தற்போது அவ்வளவாக மக்களிடம் இல்லை என்றாலும் இந்தக் கருத்து இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால் இதைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கைக்கு குர்ஆனில் எள்ளளவும் சான்று இல்லை என்ற போதும் இக்கொள்கை உடையோர் குர்ஆனிலிரிருந்தே ஆதாரம் காட்டுவதாக எண்ணிக் கொள்கின்றனர்; அல்லது ஏமாற்றுகின்றனர். இவர்கள் காட்டும் ஆதாரங்களை நாம் கவனித்தால் காரிஜிய்யாக்கள் எப்படி ஆதாரம் காட்டினார்களோ அது போலவே அமைந்துள்ளதைக் காணலாம்.

இவர்கள் இரண்டு காரணங்களுக்காக ஆதாரமற்ற இக்கொள்கையைத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

நபிவழியைப் பின்பற்றுமாறு திருக்குர்ஆன் கூறுகின்ற அடிப்படையில் வாழ்வது சிலருக்குச் சிரமமாக இருக்கிறது. இஸ்லாம் என்ற சமூக அமைப்பிலிருந்து விலகாமலும் அதே நேரத்தில் இஸ்லாம் என்ற சாயம் பூசியும் இஷ்டப்படி வாழ அவர்கள் நினைக்கின்றனர். இதற்கு நபிவழி தடையாக இருக்கிறது. நபிகள் நாயகத்தின் விளக்கத்தைப் புறக்கணித்து விட்டு தமது மனம் போன போக்கில் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கூறினால் இஸ்லாம் கூறும் எந்த வணக்கத்தையும் செய்யாமல் முஸ்லிம்கள் என்ற வட்டத்தில் தாங்கள் இருப்பதாக மக்களை நம்ப வைக்கலாம் என்று இவர்கள் நினைக்கின்றனர்.

தொழுகையை நிலை நாட்டுங்கள் என்ற திருக்குர்ஆன் வசனத்துக்கு தினமும் ஐந்து வேளை குறிப்பிட்ட ஒழுங்குடன் நிலை நாட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். இந்த விளக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு தொழுகை என்றால் பிரார்த்தனை தான்; எனவே தேவைப்படும் போது பிரார்த்தனை செய்தால் போதும் என்று மனம் போன போக்கில் விளக்கம் கூறினால் தொழுகை எனும் கடமையை விட்டு விடலாம் என்று எண்ணுகிறார்கள்.

ஜகாத் என்பது நம்முடைய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை, குறிப்பிட்ட வழியில் செலவு செய்வது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். ஜகாத் என்றால் தூய்மைப்படுத்துதல் என்று மனம் போன போக்கில் விளக்கம் கூறி மனதைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் போதும் என்று உளறினால் ஜகாத் கொடுப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இது போல் அவர்களின் மனம் எதை விரும்புகிறதோ அதற்கேற்ப குர்ஆனுக்கு விளக்கம் என்று எதையாவது உளற முடியும். இதற்காகத் தான் நபிவழி தேவையில்லை எனக் கூறுகின்றனர்.

இஸ்லாத்தின் பெயரால் மனோ இச்சைப்படி நடக்க விரும்புவதே இவர்களின் அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

மற்றும் சிலர் வேறு காரணத்துக்காக நபிவழி தேவை இல்லை என மறுக்கின்றனர். இவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். ஓரளவு கற்றுக் கொண்டு மக்களுக்குப் பிரச்சாரமும் செய்வார்கள். மக்கள் மத்தியில் இவர்கள் மார்க்க அறிவு மிக்கவர்கள் என்ற எண்ணம் உருவாகி இவர்கள் மதிக்கப்படுவார்கள்.

ஆனால் குர்ஆன் முழுமையாகத் தமிழில் உள்ளதால் அதைப் படித்து ஓரளவு விபரங்களைத் தான் மக்களுக்கு இவர்களால் சொல்ல முடியும். ஹதீஸ் நூல்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் முழுமையாக மொழி பெயர்க்கப்படாததால் மக்களுக்குத் தெரியாத விஷயங்களை இவர்களால் சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

சில நேரங்களில் ஆதாரமற்ற ஹதீஸ்களைச் சொல்லிரி விட்டு அறிஞர்கள் சுட்டிக் காட்டும் போது இவர்கள் பெரிய அறிஞர்கள் என்ற மாயை சரிந்து விழுகின்றது. ஹதீஸ்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியாதது தான் இதற்குக் காரணம் என்பதால் இவர்களின் மமதை ஹதீஸ்களை மறுக்கத் தூண்டுகிறது.

ஹதீஸ் தேவை இல்லை; குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி இஷ்டம் போல் விளக்கம் கூறினால் ஹதீஸைப் பற்றி தங்களிடம் உள்ள அறியாமையை மக்களிடமிருந்து மறைத்து விடலாம்; எப்போதும் போல் தம்மை அறிஞர் என்று காட்டிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டுத் தான் ஹதீஸ்களை மறுக்கின்றனர்.

மேலும் ஹதீஸ் கலை என்பது அதிக உழைப்புச் செய்ய வேண்டிய பெரும் கலையாக உள்ளது. இதற்கான ஆற்றல் தமக்கு இல்லை என்று உணரும் இவர்களுக்கு ஹதீஸ்களை மறுப்பது கேடயமாகவும், தங்கள் அறியாமையை மறைக்கும் திரையாகவும் அமைந்து விடுகின்றது.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோரைக் கவனித்தால் அவர்கள் ஹதீஸ் நூல்களை மூல மொழியிலிருந்து வாசிக்கத் தெரியாதவர்களாகவும், ஹதீஸ்கள் பற்றி மேலோட்டமாகவே அறிவு உள்ளவர்களாகவும் இருப்பதைக் காணலாம். இன்னும் சொல்லப் போனால் குர்ஆனைக் கூட மூல மொழியிலிரிருந்து விளங்கும் திறனில்லாதவர்களாக இருப்பதையும் காணலாம்.

குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோரில் 95 சதவிகித்தினர் இவ்விரு வகைகளில் அடங்குவார்கள். மிகக் குறைந்த சதவிகிதத்தினர் நல்ல எண்ணத்துடன் தவறான முடிவுக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களை நாம் கணக்கில் கொள்ளவில்லை.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் என்ன? வாதங்கள் என்ன? அவை எப்படி அபத்தமாக உள்ளன என்பதை இனி காண்போம்.

குர்ஆன் தெளிவானது

திருக்குர்ஆனில் சில வசனங்கள் திருக்குர்ஆன் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ளன. குர்ஆன் தன்னை அறிமுகம் செய்யும் போது குர்ஆன் தெளிவானது எனவும், முழுமையானது எனவும் கூறுகிறது. இது போன்ற கருத்துள்ள வசனங்களைத் தமக்குச் சாதமான ஆதாரங்களாகக் காட்டி ஹதீஸ்களை மறுக்கின்றனர்.

குர்ஆன் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்கும் போது இன்னொன்று தேவை இல்லை என்பது இவர்களின் வாதம். அவர்கள் ஆதாரமாகக் காட்டும் அது போன்ற சில வசனங்களைப் பாருங்கள்.

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.

திருக்குர்ஆன் 2:2

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

திருக்குர்ஆன் 2:185

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 4:82

(இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

திருக்குர்ஆன் 11:1

இது வேதமாகிய தெளிவான குர்ஆனின் வசனங்கள்.

திருக்குர்ஆன் 15:1

அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.

திருக்குர்ஆன் 17:41

உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?

திருக்குர்ஆன் 21:10

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 29:49

உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.

திருக்குர்ஆன் 29:51

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

திருக்குர்ஆன் 47:24

இந்த வசனங்களும், இது போன்ற கருத்திலமைந்த வசனங்களும் குர்ஆனை விளங்குவது மிக எளிதான ஒன்று எனவும், குர்ஆன் மட்டும் போதும் எனவும் கூறுகின்றன. எனவே ஹதீஸ்கள் தேவை இல்லை என்று இவர்கள் வாதிடுகின்றார்கள்.

குர்ஆன் தெளிவானது; விளங்குவதற்கு எளிதானது என்று குர்ஆன் கூறுவது உண்மை தான்.

குர்ஆனை எவ்வாறு விளங்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றதோ அந்த முறைப்படி விளங்கினால் தான் குர்ஆன் தெளிவானதாக இருக்கும்.

ஒரு மருந்து குறிப்பிட்ட நோயைக் குணமாக்கும் என்றால் நம் இஷ்டத்துக்கு அந்த மருந்தை உட்கொள்ளலாம் என்பது அதன் பொருள் அல்ல. மாறாக அந்த மருந்தைக் கண்டு பிடித்தவன் எந்த முறையில் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறானோ அப்படிப் பயன்படுத்தினால் தான் அது அந்த நோயைக் குணப்படுத்தும். அந்த முறைக்கு மாற்றமாகப் பயன்படுத்தினால் நோயை நீக்குவதற்குப் பதிலாக மோசமான விளைவுகளை அம்மருந்தே ஏற்படுத்தி விடும்.

குர்ஆனில் கூறப்பட்ட எந்த விஷயத்தைப் பற்றி விளங்குவதாயினும் அது பற்றிக் கூறப்படும் ஒரு வசனத்தை மட்டுமோ, சில வசனங்களை மட்டுமோ பார்த்துவிட்டு முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த விஷயம் பற்றி குர்ஆன் முழுதும் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைத் திரட்டி எந்த வசனத்தையும் மறுத்து விடாமல் ஒன்றுடன் ஒன்றை இணைத்து முடிவுக்கு வர வேண்டும்.

இது குர்ஆனுக்கு மட்டும் உள்ள விதி அல்ல. எந்த நூலாக இருந்தாலும் இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டே அந்த நூலை விளங்க வேண்டும்.

இந்த அடிப்படையை மறந்து விட்டு, அல்லது புறக்கணித்து விட்டு ஒன்றிரண்டு வசனங்களை மட்டும் நுனிப்புல் மேய்வது போல் பார்த்துவிட்டு விளங்க முற்பட்டது தான் இவர்களின் குழப்பத்துக்குக் காரணம். இவர்கள் மேற்கண்ட வசனங்களை விளங்கியது போல் மற்ற வசனங்களை விளங்க ஆரம்பித்தால் என்னவாகும் எனப் பார்ப்போம்.

உதாரணமாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் யாரிடமும் எந்த உதவியும் தேட மாட்டோம் என்பது இதன் கருத்து. இதை மட்டும் மேலோட்டமாகப் பார்த்தால் என்ன முடிவுக்கு நாம் வர வேண்டும். எந்த மனிதனிடத்திலும் எந்த உதவியும் நாம் கேட்கக் கூடாது என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். யாரிடமாவது ஏதாவது நாம் உதவி கேட்டால் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற உறுதி மொழியில் நாம் பொய் உரைத்தவர்களாகி விடுவோம்.

குர்ஆன் தெளிவானது என்பதை மட்டும் பார்த்துவிட்டு ஹதீஸ் தேவை இல்லை என்று இவர்கள் விளங்கியது போல் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை விளங்குவதாக இருந்தால் இப்படித் தான் விளங்க வேண்டும்.

இந்த வசனத்தை விளங்கும் சரியான முறை என்ன? உதவி தேடுதல் பற்றி திருக்குர்ஆன் முழுதும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைத் தொகுத்துப் பார்த்து எந்த வசனத்தையும் நிராகரிக்காமல் அனைத்து வசனங்களுக்கும் மத்தியில் இணக்கமான முடிவைக் கண்டறிவதே சரியான முறையாகும்.

அவ்வாறு தொகுத்துப் பார்க்கும் போது மனிதர்களிடம் உதவி தேடுவதை அனுமதிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதைக் காணலாம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை அந்த வசனங்களுடன் இணைத்துப் பார்க்கும் போது இதன் சரியான பொருள் நமக்கு விளங்குகிறது.

கடவுள் என்ற நிலையில் வைத்துக் கேட்கப்படும் உதவிகளை அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வேண்டும். மனிதர்கள் என்ற நிலையில் வைத்து தேடப்படும் உதவிகளை மனிதர்களிடம் தேடுவது இவ்வசனத்துக்கு முரணாக ஆகாது என்று விளங்கிக் கொள்கிறோம்.

நிராகரிப்பவர்களைக் கொல்லுங்கள் என்ற கருத்தில் சில வசனங்கள் உள்ளன. இது போன்ற வசனங்களை மட்டும் பார்த்துவிட்டு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிமல்லாதவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்ததையும், இம்மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களையும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஏராளமான வசனங்களையும் ஒருங்கிணைத்து இவ்வசனம் அருளப்பட்ட நேரத்தையும் கருத்தில் கொண்டு விளங்கினால் போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மம் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இது போலவே குர்ஆன் தெளிவானது; முழுமையானது என்ற கருத்துடைய சில வசனங்களை இவர்கள் எடுத்துக் காட்டி வாதிடுகின்றனர். இந்த விஷயம் குறித்து அருளப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் தொகுத்து ஒருங்கிணைத்து விளங்க முயற்சி செய்திருப்பார்களானால் குர்ஆன் மட்டும் போதும்; நபிவழி அவசியம் இல்லை என்ற முடிவுக்கு இவர்கள் நிச்சயம் வந்திருக்க மாட்டர்கள்.

காரிஜிய்யாக்கள் போல் அரைகுறையாக குர்ஆனை அணுகுவதாலேயே நபிவழி அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுவதாக எண்ணிக் கொண்டனர்.

விளங்குவதற்கு குர்ஆன் எளிதானது என்பதன் சரியான பொருள் என்ன? எப்படி விளங்க வேண்டும் எனக் குர்ஆன் கூறுகிறதோ அப்படி விளங்கினால் தான் விளங்கிட எளிதானது. குர்ஆன் கூறும் வழிமுறைக்கு மாற்றமாக குர்ஆனை விளங்கினால் குர்ஆன் கூறாததைத் தான் விளங்குவார்களே தவிர குர்ஆனை விளங்கியவர்களாக மாட்டார்கள்.

குர்ஆனை எப்படி விளங்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குர்ஆன் 16:44

மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அருளியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். அதாவது குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.

குர்ஆன் வசனங்களை நாம் சிந்தித்து விளங்க வேண்டும்.

நமது சிந்தனைக்கு விளங்காத பட்சத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையுடன் விளங்க வேண்டும்.

இது தான் குர்ஆனை விளங்குவதற்கு அல்லாஹ் கற்றுத் தரும் சரியான முறையாகும்.

குர்ஆனில் இரு விதமான வசனங்கள் உள்ளன. சில வசனங்கள் வாசித்த உடன் விளங்கிவிடும். வாசித்தவுடன் விளங்காவிட்டாலும் கொஞ்சம் சிந்தனையைச் செலுத்தி வாசித்தால் விளங்கி விடும். இது ஒரு வகை.

இன்னும் சில வசனங்கள் வாசித்தவுடன் பொருள் விளங்கிவிடும் என்றாலும் அதன் கருத்து முழுமையாக விளங்காது; சிந்தனை வட்டத்துக்குள் அது வராது. அது போன்ற வசனங்களின் கருத்து என்ன என்பதை அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள். அவர்களின் விளக்கத்தின் துணையுடன் அவ்வசனங்களை விளங்கினால் தான் அதன் கருத்து முழுமையாக விளங்கும்.

இது நமது சொந்த ஊகம் அல்ல. மேற்கண்ட வசனத்துக்குள் அடங்கியுள்ள கருத்து இது தான். நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம் என்பதற்கு இதைத் தவிர வேறு பொருள் இருக்க முடியாது.

குர்ஆனை வாசித்தவுடன் அல்லது சிந்தித்தவுடன் முழுமையாக விளங்கிவிடும் என்றால் அதை மட்டும் அல்லாஹ் இங்கே கூறியிருப்பான். நீர் விளக்குவதற்காக என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வசனத்தின் கட்டளையை ஏற்று இவ்வேதத்துக்கு விளக்கம் அளித்தார்களா? இல்லையா?

விளக்கம் அளித்தார்கள் என்றால் அவ்விளக்கத்தை நாம் ஏற்றுச் செயல்பட வேண்டுமா? கூடாதா?

அவர்கள் விளக்கம் அளித்தார்கள் என்றால் அந்த விளக்கம் என்ன? அவர்கள் அளித்த விளக்கத்தை நாம் எப்படி அறிந்து கொள்வது?

நபிவழியை ஏற்றுக் கொண்டால் தவிர வேறு எந்த வழியிலும் அந்த விளக்கத்தை எடுத்துக் காட்டவே முடியாது.

இந்தக் கருத்தை மற்றொரு வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.

திருக்குர்ஆன் 16:64

நீர் விளக்குவதற்காக இதை அருளினேன் என்று கூறுவதை விட நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை என்பது அழுத்தம் நிறைந்ததாகும். நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது. நபிகள் நாயகத்தின் விளக்கம் எந்த அளவு முக்கியமானது என்பதற்கு இவ்வசனம் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.

திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன் அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால், நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை என்று அல்லாஹ் கூறியிருப்பானா? விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய வேண்டாத வேலையைச் செய்வானா?

எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையோடு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை விளங்கினார்களோ அதே விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும். விளங்க முடியும்.

இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வசனத்தை மட்டும் இந்த இடத்தில் எடுத்துக் காட்டுகிறோம்.

(இது போல் அமைந்த இன்னும் பல வசனங்கள் தனித் தலைப்பில் தரப்பட்டுள்ளது.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 9:36

இந்த வசனத்தில் கூறப்படும் பல விஷயங்கள் யாருடைய விளக்கமும் இல்லாமல் விளங்கி விடுகிறது.

மாதங்களின் எண்ணிக்கை 12 என்பது எளிதாக விளங்குகிறது.

நான்கு மாதங்கள் புனிதமானவையாக உள்ளதால் அம்மாதங்களில் போர் செய்யக் கூடாது என்பதும் விளங்குகிறது.

ஆனால் அந்தப் புனித மாதங்கள் எவை என்பது இந்த வசனத்திலிருந்து விளங்காது. வாழ்நாள் முழுதும் ஒருவர் சிந்தித்தாலும் அந்த மாதங்கள் யாவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இது சிந்தனை வட்டத்துக்குள் வரக் கூடியது அல்ல. எந்த இறைவன் அம்மாதங்களைப் புனிதமானவை என அறிவித்தானோ அவன் அறிவித்தால் தவிர அதை நம்மால் அறிய முடியாது.

அந்த நான்கு மாதங்கள் யாவை என்பது இந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் வேறு வசனங்களில் அது பற்றி கூறப்பட்டுள்ளதா என்றால் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நான்கு மாதங்களில் போர் செய்யக் கூடாது என்று கூறப்படுவதால் அந்த நான்கு மாதங்கள் யாவை என அறியும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் கியாம நாள் வரையிலும் அந்த நான்கு மாதங்களைக் குர்ஆனிலிரிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

குர்ஆன் முழுமையானது எனக் கூறுகிறீர்களே? அந்த நான்கு மாதங்கள் குர்ஆனில் கூறப்படாவிட்டால் குர்ஆன் முழுமையானது அல்ல என்று ஆகிவிடுமே? என்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை.

ஆனால் குர்ஆனில் சில விஷயங்கள் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள் என்று 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டார்கள். எனவே குர்ஆன் முழுமையானது தான் என்று நம்மால் பதில் சொல்ல முடியும்.

போர் செய்வதைத் தடை செய்யும் நான்கு மாதங்களைக் குர்ஆனிலிருந்து அவர்கள் எப்போது எடுத்துக் காட்ட முடியவில்லையோ அப்போதே அவர்களின் கொள்கை அறியாமை மீது நிறுவப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகி விடுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்று குர்ஆனே கூறிவிட்ட பிறகு ஹதீஸ்கள் தேவை இல்லை என்று யாராவது கூறினால் அவர்கள் ஹதீஸ்களை மட்டும் மறுக்கவில்லை. 16:44, 16:64 ஆகிய வசனங்களை மறுத்ததன் மூலம் குர்ஆனையே மறுக்கிறார்கள்.

சமுதாய மொழியே தூதரின் மொழி

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.

திருக்குர்ஆன் 14:4

குர்ஆன் மட்டும் போதும் நபிவழி அவசியம் இல்லை என்போரின் வாதத்துக்குள் வேதத்தைக் கொண்டு வந்து தருவதோடு இறைத் தூதர்களின் பணி முடிந்து விடுகிறது என்ற கருத்து உள்ளடங்கி இருக்கிறது.

வேதங்களைக் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத் தூதர்களின் பணி; விளக்கமளிப்பது அவர்களின் பணி அல்ல என்ற மடமைக்கு இவ்வசனம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இத்தகையோருக்கு மறுப்பு சொல்வதற்காகவே அருளப்பட்டது போல் ஒவ்வொரு வார்த்தையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்று நடக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக இவ்வசனமும் அமைந்துள்ளது.

ஒரு சமுதாயம் எந்த மொழியைப் பேசுகிறதோ அந்த மொழியைச் சேர்ந்தவரையே தூதராக அனுப்பியிருப்பதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அப்போது தான் தமக்கு அருளப்பட்ட வேதத்தை மக்களுக்கு அந்தத் தூதர் விளக்க முடியும் என்று இதற்கான காரணத்தையும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் நமக்கு ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தை நம்மிடம் கொண்டு வந்து தருபவருக்கு தமிழ் தெரியவில்லை என்றால் அக்கடிதத்தை நாம் விளங்குவதற்கு அது தடையாக அமையாது.

யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவருக்குக் கடிதத்தில் உள்ளது தானாகவே விளங்கி விடும் என்றால் கடிதத்தைக் கொண்டு செல்பவரின் மொழி பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.

ஆனால் அனுப்பப்படும் கடிதம் முழுவதுமோ, அல்லது கடிதத்தில் ஒரு பகுதியோ யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருக்கு விளங்காது என்ற நிலை இருந்தால் அந்த நிலையில் நாம் என்ன செய்வோம்? கடிதம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரது மொழியை அறிந்தவராகவும், நாம் எந்தக் கருத்தில் எழுதினோமோ அக்கருத்தைப் புரிந்து விளக்கம் சொல்லக் கூடியவராகவும் இருப்பவரைத் தேர்வு செய்து கடிதத்தைக் கொடுத்து அனுப்புவோம்.

இது போன்று தான் குர்ஆன் அருளப்பட்டதாக அதை அருளிய இறைவன் கூறுகிறான். குர்ஆனை என் இஷ்டப்படி தான் புரிந்து கொள்வேன்; அதைக் கொண்டு வந்தவரின் விளக்கம் எனக்குத் தேவை இல்லை என்று ஒருவர் கூறினால் அவர் குர்ஆனின் மேற்கண்ட வசனத்தைத் தான் மறுக்கிறார்.

சமுதாயம் பேசுகின்ற மொழி தூதருக்குத் தெரிந்திருந்தால் தான் அவரால் அந்த மக்களுக்கு வேதத்தை விளக்க முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். வேதத்தை விளங்கிட தூதரின் விளக்கம் அவசியம் என்று அல்லாஹ் கூறும் போது அல்லாஹ் கூறுவதை மறுக்கும் வகையில் குர்ஆன் மட்டும் போதும் என இவர்கள் வாதிடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.

வேதங்களை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அம்மக்களுக்கு அதில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் பொறுப்பும் தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை ஏற்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது.

உலகம் அழியும் வரை வருகின்ற மக்களுக்குத் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேதம் எவ்வாறு எல்லாக் காலத்தவர்களுக்கும் தேவையோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் உலகம் அழியும் நாள் வரை தோன்றுகின்ற அனைவருக்கும் தேவையாகும்.

வேதத்துக்கு இறைத் தூதர்கள் அளித்த விளக்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டும் கிடைத்து பின்னர் வருகின்ற சமுதாயத்திற்கு அவ்விளக்கம் கிடைக்காமல் போனால் அது அநீதியாகும். அல்லாஹ் எந்த மனிதருக்கும் நான் எள்ளளவும் அநீதி இழைப்பவன் அல்லன் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் தெரிந்து கொண்ட யாவும் உலகம் உள்ளளவும் வருகின்ற மக்களுக்கும் உரியதாகும்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறுவார்களேயானால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய எல்லா வசனங்களையும் அவர்கள் நிராகரிக்கின்றார்கள்.

இறைத் தூதர்கள், தாம் வாழ்ந்த காலத்தில் விளக்கமளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் – இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அளித்த விளக்கம் அந்தக் காலத்துடன் முடிந்து விட்டது என்று கூற எந்த வசனம் ஆதாரமாகவுள்ளது என்று எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு கூறக் கூடிய ஒரு வசனமும் திருக்குர்ஆனில் கிடையாது.

அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும்

குர்ஆன் தெளிவானது என்ற கருத்தில் அமைந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டியது போல் இறைச் செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் அமைந்த வசனங்களையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்றுங்கள் என்ற கருத்தில் பல வசனங்கள் உள்ளன. அது போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்ற வேண்டும்; அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் தான்; எனவே ஹதீஸ்களைப் பின்பற்றுவது இத்தகைய வசனங்களுக்கு முரணானது என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் எடுத்துக் காட்டும் அத்தகைய வசனங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அவர்களின் இந்த வாதம் எவ்வளவு தவறானது என்பதைக் காண்போம்.

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

திருக்குர்ஆன் 2:170

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்குச் சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!(எனவும் கூறினர்)

திருக்குர்ஆன் 3:53

எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:50

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

திருக்குர்ஆன் 6:106

இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!

திருக்குர்ஆன் 6:155

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 7:3

என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவாகவும், நேர் வழியாகவும், நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு அருளாகவும் உள்ளதுஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:203

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

திருக்குர்ஆன் 10:109

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 33:2

தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 46:9

அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும் எனவும், வேறு எதனையும் பின்பற்றக் கூடாது எனவும் இவ்வசனங்கள் அனைத்தும் தெளிவாக அறிவிக்கின்றன. அல்லாஹ் அருளியது என்பது குர்ஆனைத் தான் குறிக்கும்; குர்ஆன் அல்லாத நபிவழியைப் பின்பற்றுவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானது என்பது இவர்களின் வாதம்.

அல்லாஹ் அருளியதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் தான் என்ற இவர்களின் வாதம் தவறானது.

நபிகள் நாயகத்தின் விளக்கத்துடன் தான் குர்ஆனை விளங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே சிந்திக்கும் திறன் சிறிதளவு இருந்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் அல்லாஹ் அருளியது தான் என்று புரிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகத்தின் விளக்கத்தைப் பின்பற்றுவது அல்லாஹ் அருளியதை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் உள்ள வசனங்களுக்கு எதிரானதல்ல.

அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் அல்ல; குர்ஆன் அல்லாத இறைச் செய்திகளும் உள்ளன என்பதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

வஹீயின் வகைகள்

அல்லாஹ் தனது செய்திகளைத் தன்னுடைய தூதர்களிடம் அறிவிப்பதற்கு வஹீ என்று பெயர். இறைத் தூதர்கள் இந்த வஹீயின் மூலம் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட இறைச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொல்வார்கள். எனவே வஹீயைப் பற்றி மார்க்கத்தின் நிலை என்ன? என்பதைக் குர்ஆனிலிருந்தே நாம் ஆராய்வோம்.

வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 42:51

மூன்று வழிகளில் தனது தூதர்களிடம் அல்லாஹ் பேசுவான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.

வஹீயின் மூலம் பேசுவது

திரை மறைவிலிருந்து நேரடியாகப் பேசுவது

தூதரை அனுப்பி அவர் மூலம் செய்தியைத் தெரிவிப்பது

ஆகியவை அம்மூன்று வழிகளாகும்.

இதில் முதலாவதாகக் கூறப்படும் வஹீயைப் பற்றி (வஹீயின் மூலம் பேசுவது) பின்னர் விரிவாகப் பார்ப்போம். மற்ற இரண்டு வழிகளைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகின்றது என முதலில் ஆராய்வோம்.

மூஸா (அலை) அவர்களுடன் அல்லாஹ் நேருக்கு நேர் உரையாடியதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மூஸா (அலை) அவர்கள் இறைவனை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் கூறியதைத் தமது செவிகளால் கேட்டார்கள் என்பதைத் திருக்குர்ஆன் பல வசனங்களில் எடுத்துக் காட்டுகிறது.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

திருக்குர்ஆன் : 4:164

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அதற்கு (இறைவன்) என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம் என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்.. மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக! என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் : 7:143,144

இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவூட்டுவீராக! அவர் தேர்வு செய்யப்பட்டவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். தூர் மலையின் வலப் பகுதியிலிருந்து அவரை அழைத்தோம். (நம்மிடம்) பேசுவதற்காக அவரை நெருக்கமாக்கினோம்.

அல்குர்ஆன் : 19:51,52

அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.

திருக்குர்ஆன் : 28:30

அங்கே அவர் வந்த போது மூஸாவே! என்று அழைக்கப்பட்டார். நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் துவா எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர். நான் உம்மைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எனவே அறிவிக்கப்படும் தூதுச் செய்தியைச் செவிமடுப்பீராக!

திருக்குர்ஆன் 20:11,12,13

மூஸாவே என்று அழைத்து நான் தான் உம்முடைய இறைவன் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்தும், அதைத் தொடர்ந்து வரும் உரையாடல்களிலிருந்தும் இது அல்லாஹ்வின் நேரடிப் பேச்சு என்பதை விளங்கலாம்.

இது திரைக்கப்பாலிருந்து அல்லாஹ் பேசும் வகையைச் சேர்ந்த வஹீ ஆகும்.

ஒரு தூதரை அனுப்பிப் பேசுவான் என்பது இரண்டாவது வகை.

என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்! என்று எச்சரிக்குமாறு தனது உயிரோட்டமான கட்டளையுடன் வானவர்களை தான் நாடிய அடியார்களிடம் அவன் அனுப்புகிறான்.

திருக்குர்ஆன் : 16:2

வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் : 22:75

இறைவன் தான் கூற விரும்பும் செய்திகளை நேருக்கு நேர் கூறுவது போல், தான் கூற விரும்புவதை வானவர் மூலம் இறைவன் சொல்லி அனுப்பியுள்ளான் என்று திருக்குர்ஆன் பல இடங்களில் எடுத்துக் காட்டுகிறது.

ஜக்கரியா (அலை), மர்யம் (அலை) இப்ராஹீம் (அலை) ஆகியோருக்குக் குழந்தை பிறக்கவுள்ள செய்தியை வானவர் மூலம் அல்லாஹ் சொல்லி அனுப்பினான். லூத் (அலை) அவர்களின் சமுதாயம் அழிக்கப்படவுள்ள செய்தியை வானவர் மூலம் சொல்லி அனுப்பினான். பின்வரும் வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.

திருக்குர்ஆன் : 3:39

மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் : 3:42

மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் : 3:45

நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன் என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் : 19:19

அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்!என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.

திருக்குர்ஆன் : 51:28

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

திருக்குர்ஆன் : 11:69

அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம் என்றார். நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் : 15:52,53

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம் என்றனர்.

திருக்குர்ஆன் : 29:31

நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். இது மிகவும் கடினமான நாள்எனவும் கூறினார்.

திருக்குர்ஆன் : 11:77

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் : 15:61,62

வானவர் என்னும் தூதர் வழியாகத் தனது செய்திகளைச் சொல்லி அனுப்புதல் என்ற வகையில் தான் குர்ஆனும் சேரும். ஜிப்ரீல் எனும் வானவர் வழியாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் அருளப்பட்டது. திருக்குர்ஆனே இது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகிறது.

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

திருக்குர்ஆன் : 2:97

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

திருக்குர்ஆன் 26:193

53:56, 16:102, 81:19, 20:21 ஆகிய வசனங்களிலும் ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்பட்ட விபரம் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தூதரை அனுப்பிப் பேசுதல் எனும் இரண்டாவது வகையைச் சேர்ந்ததாகும்.

மனிதர்களுடன் அல்லாஹ் பேசுவதற்குரிய மூன்று வழிகளில் இரண்டு வழிகளைப் பார்த்தோம். நேரடியாகப் பேசுவது என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. வானவர்கள் வழியாகச் சொல்லி அனுப்புவதன் பொருளும் நமக்கு விளங்குகிறது. வஹீயின் மூலம் பேசுதல் என்பது மூன்றாவது வழியாக மேற்கண்ட 42:51 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக வஹீ எனும் சொல் இறைவன் புறத்திலிருந்து வழங்கப்படும் அனைத்து வகைச் செய்திகளையும் குறிக்கும் என்றாலும் இவ்வசனத்தில் அவ்வாறு பொதுவான கருத்தைக் கொடுக்க முடியாது.

இரண்டு வகையான வஹீயை வேறு வார்த்தைகளால் கூறிவிட்டு மூன்றாவதாக வஹீயின் மூலம்எனக் கூறப்பட்டுள்ளதால் அவ்விரண்டு வகையிலும் சேராத மற்றொரு வகை வஹீயை மட்டுமே இது குறிக்க முடியும். இவ்விரு வகை தவிர ஏதேனும் வஹீ இருக்கிறது என்றால் தான் கூற விரும்புவதைத் தனது தூதரின் உள்ளத்தில் இறைவன் பதிவு செய்தல் என்பது தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

வஹீயில் இப்படி ஒரு வகை உள்ளது என்பதைத் திருகுர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.

தேனீக்கள் எவ்வளவு தொலைவு பறந்து சென்றாலும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் தனது கூட்டுக்கு வந்து விடும் என்பதைப் பற்றி திருக்குர்ஆன் பேசும் போது 16:68 வசனத்தில் தேனீக்களுக்கு உமது இறைவன் வஹீ அறிவித்தான் என்று கூறுகிறது.

அதாவது தான் கூற விரும்பும் செய்தியைத் தேனீக்களுக்கு உள்ளுணர்வாக இறைவன் ஏற்படுத்தினான் என இவ்வசனம் கூறுகிறது. இது போன்ற வஹீ மூலமும் இறைவன் தனது தூதர்களிடம் பேசுவான். இது மூன்றாவது வகையாகும்.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் இறைவன் நேருக்கு நேராகப் பேசி அருளிய செய்தியை மறுக்கின்றனர்.

உள்ளுணர்வு மூலம் இறைவன் அறிவிக்கும் செய்தியையும் மறுக்கின்றனர்.

வானவர் எனும் தூதர்கள் வழியாக குர்ஆன் அருளப்பட்டாலும் வானவர் வழியாக குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் வந்திருக்கலாம். அவற்றையும் இவர்கள் மறுத்தவர்களாகின்றனர்.

இறைவன் அருளியதைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையில் இவர்கள் பெரும்பகுதியை மறுக்கின்றனர். ஹதீஸ்களைப் பின்பற்றுவோர் தான் அல்லாஹ் அருளியதை முழுமையாக நம்புகின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் ஏற்படலாம். மனிதர்களுடன் மூன்று வழிகளில் பேசுவான் என்பதன் கருத்து இம்மூன்று வழிகளிலும் ஒவ்வொருவருடனும் பேசுவான் என்பது அல்ல. இம்மூன்று வழிகளைத் தவிர வேறு வழிகளில் பேச மாட்டான் என்பது தான் இதன் பொருள். சில தூதர்களிடம் இறைவன் நேருக்கு நேர் பேசினாலும், சில தூதர்களிடம் உள்ளுணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பேசினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறைவன் பேசியது ஜிப்ரீல் (அலை) வழியாக மட்டுமே. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இம்மூன்று வழிகளிலும் இறைவன் செய்திகளை வழங்கினான் என்றால் அதற்குத் தெளிவான ஆதாரம் வேண்டுமே என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகம் முற்றிலும் சரியான சந்தேகம் தான். ஆனால் இதற்குக் குர்ஆனில் தக்க விடை உண்டு. மூன்று வழிகளில் தவிர இறைவன் எவரிடமும் பேச மாட்டான் என்பது 42:51 வசனமாகும். அதற்கு அடுத்த வசனத்தில் நமது கட்டளையில் உயிரோட்டமானதை இவ்வாறே உமக்கு நாம் வஹீயாக அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வாறே என்பதன் பொருள் என்ன? இதற்கு முந்தைய வசனத்தில் எவ்வாறு வஹீ அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டதோ அவ்வாறே உமக்கும் அறிவித்தோம் என்பதைத் தவிர வேறு பொருள் இருக்க முடியாது.

மனிதர்களிடம் இறைவன் பேசுவதற்குரிய மூன்று வழிகளிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இறைவன் பேசி இருக்கிறான் என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டது. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய மூன்று வகைச் செய்திகளில் இரண்டை இவர்கள் மறுக்கிறார்கள் என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் அல்ல. அது அல்லாத செய்திகளும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றாக உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ தான்

உங்கள் தோழர் (முஹம்மது) வழி தவறவில்லை. தவறாகப் பேசவும் இல்லை. மேலும் அவர் (தமது) மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அது வஹீயாக அறிவிக்கப்படும் இறைச் செய்தி தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன் 53:2, 3, 4

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி பேசுவதில்லை; அவர் பேசுவதெல்லாம் வஹீ என்னும் இறைச் செய்தி தவிர வேறில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் குர்ஆனையே குறிக்கிறது. குர்ஆன் வஹீ என்பது தான் இதற்கு விளக்கம் என்று இவர்கள் கூறுகின்றனர். குர்ஆன் வஹீயாக உள்ளது என்பதைக் கூறும் வகையில் இவ்வாசக அமைப்பு இல்லை.

இவர் மனோ இச்சைப்படி பேச மாட்டார்என்ற வாக்கியம் பொதுவாக அவர் பேசும் எல்லாப் பேச்சையும் எடுத்துக் கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது. மனோ இச்சைப்படி பேச மாட்டார் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் பேசுவதெல்லாம் வஹீ தவிர வேறில்லை என்றும் அல்லாஹ் கூறுவது மேலும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆன் கூறுவதைத் தான் ஆதாரமாகக் காட்ட வேண்டுமே தவிர குர்ஆன் கூறாத ஒன்றை இவர்களாகக் கற்பனை செய்து வாதிடக் கூடாது.

மனோ இச்சையைக் கலக்காமல் இந்த வசனத்தைப் படித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிய அனைத்தும் அவர்களது மனோ இச்சையின் உந்துதலால் பேசப்பட்டவையல்ல. மாறாக அவை இறைவனால் அறிவிக்கப்பட்ட வஹீ எனும் இறைச் செய்தி தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

குர்ஆன் எப்படி வஹீயாக அமைந்துள்ளதோ அது போலவே நபிகள் நாயகத்தின் பேச்சுக்களும் வஹீயாக உள்ளன என்று திருக்குர்ஆனே கூறிய பிறகு யாரேனும் நபிகள் நாயகத்தின் பேச்சுக்கள் தேவையில்லை என வாதிட்டால் – அந்தப் பேச்சுக்கள் வஹீ இல்லை என வாதிட்டால் – மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனத்தை அவர் நிராகரித்தவர் ஆகி விடுகிறார்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியவை எல்லாம் வஹீ என்றால் அவர்கள் செய்த சில கரியங்களை இறைவன் கண்டித்துள்ளானே? அது ஏன் என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகம் நியாயமானது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில முடிவுகளை இறைவன் மறுத்தது பற்றி குர்ஆனே பல இடங்களில் எடுத்துரைக்கிறது.

நான் இனிமேல் தேன் அருந்த மாட்டேன் என்று கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தேனை ஹராமாக்கிக் கொண்ட போது அதை அல்லாஹ் கண்டித்துள்ளான்.

திருக்குர்ஆன் 66:1

ஸைத் அவர்கள் தமது மனைவியை விவாக ரத்துச் செய்யப் போவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தில் இருந்த கருத்துக்கு மாற்றமாக அவருக்கு அறிவுரை கூறினார்கள். இதை இறைவன் கண்டித்துள்ளான்.

திருக்குர்ஆன் 33:37

முக்கியப் பிரமுகரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது ஒரு குருடர் வந்து ஸலாம் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அலட்சியம் செய்தார்கள். இதை இறைவன் கண்டித்துள்ளான்.

திருக்குர்ஆன் 80:1

இப்படி இன்னும் சில சம்பவங்கள் குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியது எல்லாம் வஹீ என்றால் அதை எப்படி அல்லாஹ் கண்டிப்பான்? என்பது தான் அந்தச் சந்தேகம்.

இது நியாயமான சந்தேகம் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ தான் என்பதைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள் இரண்டு நிலைகளில் இருந்தன.

ஒன்று இறைத் தூதர் என்ற முறையில் அமைந்தவை.

மற்றொன்று மனிதர் என்ற நிலையில் அமைந்தவை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசுவதெல்லாம் வஹீ என்றால் இறைத் தூதர் என்ற முறையில் அவர்கள் பேசியவை அனைத்தும் வஹீ என்பது தான் அதன் பொருள். மனிதர் என்ற முறையில் அவர்கள் பேசியவை அனைத்தும் வஹீ என்பது அதன் பொருள் அல்ல.

இது அனைவரும் உள்ளூர ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண உண்மை தான்.

ஒரு நாட்டின் பிரதமரை எடுத்துக் கொண்டால் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் பிரதமர் என்ற அடிப்படையில் அமைந்தவை என்று யாரும் கருதுவதில்லை.

அவர் உண்பது, பருகுவது, உறங்குவது போன்ற காரியங்களைச் செய்யும் போது அவை பிரதமர் என்ற அடிப்படையில் செய்தவை அல்ல என்று ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறோம். பிரதமர் உறங்கினார் என்று நாம் கூறினாலும் அவர் உறங்கியது பிரதமர் என்ற முறையில் அல்ல என்பது ஒவ்வொருவருக்கும் தெரிகிறது.

பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்; எதிர்க்கட்சியை விமர்சித்தார் என்ற செய்தியை நாம் அறியும் போது அவரது இந்த நடவடிக்கை கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலானது; பிரதமர் என்ற அடிப்படையிலானது அல்ல என்று நாம் பிரித்தறிகிறோம்.

அண்டை நாட்டின் மீது போர் தொடுப்போம்; பெட்ரோல் விலையைக் குறைப்போம்என்பது போன்ற அறிவிப்புகளைப் பிரதமர் செய்யும் போது அவை பிரதமர் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவை என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

எந்த மனிதனுக்கும் இது போன்ற இரண்டு நிலைகள் உள்ளன. அவன் ஏற்றுள்ள பணி மற்றும் பொறுப்பின் காரணமாக அவன் செய்பவை ஒரு நிலை. எந்தப் பொறுப்பும் இல்லாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் அவன் செய்பவை மற்றொரு நிலை.

இது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இரண்டு நிலைகள் இருந்தன.

அவர்கள் கோதுமை ரொட்டி சாப்பிட்டது, ஒட்டகத்தில் பயணித்தது, கோபப்பட்டது, கவலைப்பட்டது, அவர்களுக்குப் பசி எடுத்தது, சிரித்தது என்று பல காரியங்கள் இறைத் தூதர் என்ற அடிப்படையில் நடந்தவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

அவர்கள் தொழுதது, நோன்பு நோற்றது, இன்னபிற வணக்க வழிபாடுகள் செய்தது, வணக்க வழிபாடுகள் தொடர்பாகப் பேசியது போன்றவை வஹீ அடிப்படையில் அமைந்தவை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். இவ்வாறு வேறுபடுத்தி புரிந்து கொண்டால் மேற்கண்ட சந்தேகம் எழ வாய்ப்பு இல்லை.

வணக்க வழிபாடுகள் தொடர்புடையதாக இல்லாமல் அவர்கள் அளித்த அனுமதி அல்லது அவர்கள் செய்த தடை ஆகியவை மனிதர் என்ற முறையில் செய்ததா? இறைத் தூதர் என்ற முறையில் செய்ததா? என்று குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் உரிய முறையில் புரிந்து கொண்டால் இந்தக் குழப்பமும் வர வாய்ப்பில்லை.

அவர்கள் அனுமதி அளித்தது. தடை செய்தது போன்றவை இரண்டு வகைகளிலும் அமையும். அவர்கள் அனுமதித்தவைகளையும் தடை செய்தவைகளையும் இறைவன் கண்டிக்காமல் விட்டு விட்டால் அவை வஹீ அடிப்படையில் அமைந்தவை என்று நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களின் அனுமதியையோ, அல்லது தடையையோ அல்லாஹ் கண்டித்து விட்டால் அவை மனிதர் என்ற முறையில் செய்தவை, சொன்னவை என்று முடிவு செய்ய இயலும். எனவே இதிலும் குழப்பம் ஏற்பட வழியில்லை.

குர்ஆனில் கூறப்படாத பல விஷயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சட்டமாக்கிய போது அந்தச் சட்டங்களை இறைவன் தனது சட்டம் என்று அங்கீகரித்துள்ளான். (இது பின்னர் விபரமாக விளக்கப்பட உள்ளது)

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் பேசிய அனைத்தும் வஹீ என்பதற்கு இவையும் ஆதாரமாக அமைந்துள்ளன.

வேதமும் ஞானமும்

அல்லாஹ்விடமிருந்து வேதம் மட்டுமே அருளப்பட்டது என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. மாறாக வேதத்தையும், ஞானத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் : 2:129

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

திருக்குர்ஆன் : 2:151

அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் : 2:231

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் : 3:164

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும், அன்பும் உம் மீது இல்லாதிருந்தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். உமக்கு எந்தத் தீங்கும் அவர்களால் தர முடியாது. உமக்கு வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

திருக்குர்ஆன் : 4:113

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

திருக்குர்ஆன் : 33:34

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் : 62:2

நபிகள் நாயகத்துக்கு மட்டுமின்றி மற்ற இறைத் தூதர்களுக்கும் வேதத்துடன் ஞானமும் வழங்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

(பார்க்க திருக்குர்ஆன் : 3:48, 3:81, 4:54, 5:110)

இறைவன் எந்த ஒரு வார்த்தையையும் தேவையில்லாமல் பயன்படுத்த மாட்டான் என்று நம்பி, திருக்குர்ஆனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து மேற்கண்ட வசனங்களை நாம் ஆய்வு செய்தால் இறைவன் வேதத்தை மட்டும் நபிகள் நாயகத்துக்கு அருளவில்லை; வேதத்துடன் ஹிக்மத் எனும் ஞானத்தையும் சேர்த்து அருளி இருக்கிறான் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொள்ளலாம்.

இதற்குத் தக்க பதில் கூற முடியாதவர்கள் வேதத்தையும் ஞானத்தையும் என்ற சொற்றொடர் ஞானமுடைய வேதம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உளறுகின்றனர்.

ஞானமுடைய வேதம் என்பதை வேதத்தையும் ஞானத்தையும் போன்ற வார்த்தைகளால் மூளையுள்ள எவரும் கூற மாட்டார். ஞானமிக்க வேதம், ஞானம் நிரம்பிய வேதம் என்பது போன்ற வார்த்தைகளால் தான் இக்கருத்தைத் தெரிவிப்பார். வேதமும் ஞானமும் என்பது இரண்டு பொருட்களைத் தான் குறிக்கும் என்பது கூட இவர்களுக்கு விளங்கவில்லை.

மேலும் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சில சொற்களும் இவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.

குர்ஆனைப் பற்றிக் கூறும் போது குர்ஆனை இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுவது போல் 4:113 வசனத்தில் குர்ஆனையும் இறக்கினோம். ஞானத்தையும் இறக்கினோம் என்று கூறுகிறான். அப்படியானால் குர்ஆன் போலவே ஞானமும் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது என்பது தெளிவாகிறது.

வேதத்தை மட்டுமின்றி அதை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்துடனும் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இறைத் தூதர்கள் அளித்த விளக்கமும் மார்க்க ஆதாரம் என்பதற்கு மேற்கண்ட வசனங்களும் சான்றுகளாகவுள்ளன.

இறைத் தூதரின் நான்கு பணிகள்

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் தூதுப் பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. பின் வரும் அந்த வசனங்களும் நபிகள் நாயகத்தின் ஹதீஸ்கள் அவசியம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

திருக்குர்ஆன் 2:129

உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

திருக்குர்ஆன் 2:151

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் 3:164

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர்.

திருக்குர்ஆன் 62:2

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான்கு பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆனை ஓதிக் காட்டுவது

தூய்மைப்படுத்துவது,

மக்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது

மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது

ஆகியவை அந்த நான்கு பணிகள்.

இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.

வேதத்தை இறைவனிடம் பெற்று மக்களிடம் கொடுப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் இந்த நான்கு சொற்றொடர்களை இறைவன் கூறியிருக்க மாட்டான். வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்என்பதோடு நிறுத்திக் கொள்வான்.

வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியவுடன் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அம்மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஆனால் வேதத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது வசனங்களை ஓதிக் காட்டுவார்; வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்றுவேதம் தொடர்பாக இரண்டு பணிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இவ்வசனங்களில் கூறுகிறான்.

ஓதிக் காட்டுதல் என்றால் வசனங்களை வாசித்துக் காட்டுதல் என்று புரிந்து கொள்கிறோம். வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?

வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

திருக்குர்ஆன் 29:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்ததாக ஆகுமே தவிர குர்ஆனைக் கற்றுக் கொடுத்ததாக ஆகாது.

ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்கு தூதர்கள் அவசியம் இல்லை. அந்த மொழியை அறிந்த யார் வேண்டுமானலும் அதைச் செய்ய முடியும். எனவே தேவைப்படும் வசனங்களுக்கு சொல்லாலும் செயலாலும் இவர் விளக்கம் தருவார் என்பது தான் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார் என்பதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டார்கள் என்பதன் கருத்து அவ்விளக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பது தான்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய திருக்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளதோ அவ்வாறே அவர்களின் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளன என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

குர்ஆனை முறையாகவும் முழுமையாகவும் விளங்கிட நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதை தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அமைந்துள்ளன.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதுடன் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் அறியாதவற்றை அவர் கற்றுக் கொடுப்பார் என்றும் கூறுகிறான்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்களைத் தூய்மைப்படுத்துவார் என்றும் கூறுகிறான்.

குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை இல்லை என்றால் அதற்கு மாற்றமான பொருள் தரும் வகையில் இவ்வளவு சொற்களை இறைவன் பயன்படுத்தி நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்று கூறுவானா?

முந்தைய நபிமார்களுக்கும் ஞானம் அருளப்பட்டது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு வேதத்துடன் ஞானத்தையும் அல்லாஹ் கொடுத்து அனுப்பினானோ அது போல் மற்ற நபிமார்களுக்கும் வேதத்துடன் ஞானத்தையும் கொடுத்ததாக பல வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் வழங்கிய பின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக!

திருக்குர்ஆன் 3:81

எல்லா நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவுபடுத்துகிறான்.

அவ்வுறுதி மொழியைக் குறிப்பிடும் போது நபிமார்களே! உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் வழங்கிய பின்என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபிமார்களுக்கு வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஞானமும் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

திருக்குர்ஆன் 4:54

இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆனைத் தவிர வேறு வஹீ இல்லை என்போர் உண்மையில் மேலே நாம் சுட்டிக் காட்டிய குர்ஆன் வசனங்களைத் தான் மறுக்கிறார்கள்.

குர்ஆன் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மார்க்கத்தின் மூல ஆதாரமே என்பதற்கான சான்றுகள் இன்னும் உள்ளன.

நபிமார்களுக்கு அருளப்பட்ட அதிகாரம்

அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர் வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித் தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, யூனுஸ், லூத் ஆகியோருக்கும் நேர் வழி காட்டினோம். இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம். அனைவரும் நல்லோர்கள். அனைவரையும் அகிலத்தாரை விடச் சிறப்பித்தோம். அவர்களின் முன்னோரிலும், அவர்களது வழித் தோன்றல்களிலும், அவர்களது சகோதரர்களிலும் (பலரைத்) தேர்வு செய்து அவர்களை நேரான வழியில் செலுத்தினோம். இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். அவர்களுக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் அளித்தோம். அவர்கள் இதனை மறுத்தால் இதனை மறுக்காத ஒரு சமுதாயத்தை இதற்குப் பொறுப்பாளிகளாக்குவோம்.

திருக்குர்ஆன் 6:84 – 89

இவ்வசனங்களில்

  1. இப்றாஹீம் (அலை)
  2. இஸ்ஹாக் (அலை)
  3. யஃகூப் (அலை)
  4. நூஹ் (அலை)
  5. தாவூத் (அலை)
  6. சுலைமான் (அலை)
  7. அய்யூப் (அலை)
  8. யூசுப் (அலை)
  9. மூஸா (அலை)
  10. ஹாரூன் (அலை)
  11. ஸக்கரிய்யா (அலை)
  12. யஹ்யா (அலை)
  13. ஈஸா (அலை)
  14. இல்யாஸ் (அலை)
  15. இஸ்மாயீல் (அலை)
  16. அல்யஸவு (அலை)
  17. யூனுஸ் (அலை)
  18. லூத் (அலை)

ஆகிய நபிமார்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விட்டு 87 ஆம் வசனத்தில் நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.

அதாவது நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும், சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு இவர்களுக்குக் கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும் வழங்கினோம். நுபுவ்வத்தையும் வழங்கினோம் என்று அல்லாஹ் 89 வது வசனத்தில் கூறுகிறான்.

கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத் என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி மூன்றாவதாக ஹுக்மை வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

ஹுக்மு என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத் (அலை), சுலைமான் (அலை), யூசுப் (அலை), மூஸா (அலை) போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும் அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்கச் சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு வழங்கியிருந்தான் என்பதை இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வேதம் தவிர வேறு எதுவும் நபிமார்களுக்கு வழங்கப்படவில்லை என்றிருந்தால் வேதத்தையும், நுபுவ்வத்தையும், ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

இறுதியாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத – காஃபிர்களாக இல்லாத – ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்போம் என்பது தான் அந்தப் பகுதி.

வேதம் மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ நமக்குத் தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

மூன்றையும் சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ இரண்டோ தான் வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.

இம்மூன்றையும் மறுப்பவர்கள் காஃபிர்கள் என்றும் இவ்வசனத்தில் தெளிவுபடுத்தப்படுகிறது.

எனவே புத்தகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் தபால்காரர் போல் நபிமார்கள் அனுப்பப்படவே இல்லை. மாறாக அதற்கு விளக்கம் சொல்லி, செய்து காட்டும் அதிகாரம் படைத்தவர்களாகவே அனுப்பப்பட்டனர். அதே அதிகாரத்துடன் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுப்பப்பட்டனர்

வேதம் மட்டும் போதும் என்றால் தூதருக்கு வேலை இல்லை

வேதம் மட்டுமே மக்களுக்கு வழி காட்டிடப் போதுமானது என்றால் தூதர்களை அனுப்பாமல் வேதங்களை மட்டும் அல்லாஹ் அனுப்பியிருக்கலாம். மக்கள் நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே சரியான வழியாகவும் இருந்திருக்கும்.

தூதர்கள் வழியாக வேதங்களை அனுப்பும் போது அதை வேதம் என்று நம்புவதற்கு முன்னால் இவர் தூதர் தான் என நம்ப வேண்டும். தூதரை, தூதர் என்று நம்பினால் தான் அவர் கொண்டு வந்ததை வேதம் என்று நம்புவார்கள்.

தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக மக்கள் தூதர்களை முதலில் மறுப்பார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள்.

இதை ஊகமாக நாம் கூறவில்லை. இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

திருக்குர்ஆன் 17:94

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்கள் பாவங்களை மன்னிக்கவும், குறிப்பிட்ட காலக்கெடு வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவுமே உங்களை அவன் அழைக்கிறான் என்று அவர்களின் தூதர்கள் கூறினர். நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே. எங்கள் முன்னோர் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும் எங்களைத் தடுக்க விரும்புகிறீர்கள். எனவே எங்களிடம் தெளிவான அற்புதத்தைக் கொண்டு வாருங்கள்!என்று அவர்கள் கேட்டனர்.

திருக்குர்ஆன் 14:10

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 23:33

இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலையில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?என்றனர்.

திருக்குர்ஆன் 23:47

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்என்று (அவ்வூரார்) கூறினர்

திருக்குர்ஆன் 36:15

நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!(என்றும் கூறினர்)

திருக்குர்ஆன் 26:154

நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.

திருக்குர்ஆன் 26:186

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.

திருக்குர்ஆன் 54:24

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்ததும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததும் இதற்குக் காரணம். அவர்களைத் தேவையற்றோராக அல்லாஹ் கருதினான். அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

திருக்குர்ஆன் 64:6

ஏக இறைவனை மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததற்குக் காரணம் நம்மைப் போன்ற ஒரு மனிதர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும்என்று அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் தான்.

தம்மைப் போன்ற மனிதர்களை இறைத் தூதர்கள் என்று நம்புவது மனிதர்களுக்கு மிகவும் சிரமமாகவே இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

(முஹம்மதே!) வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள்ளனர். அல்லாஹ்வைக் கண்முன்னே எங்களுக்குக் காட்டுஎன்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. பின்னர் தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பு, காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தார்கள். அதை மன்னித்தோம். மூஸாவுக்குத் தெளிவான சான்றை அளித்தோம்.

திருக்குர்ஆன் 4:153

ஒரு மனிதர் தன்னை இறைத் தூதர் என்று வாதிட்டு அதன் பின்னர் அவர் கொண்டு வந்த நூலை இறை வேதம் என்று நம்புவதை விட வானிலிருந்து அனைவரும் பார்க்கும் வகையில் ஒரு நூலைப் போட்டால் அதை இறை வேதம் என நம்புவதில் மக்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

வேதம் மட்டும் போதும்; இறைத்தூதரின் வழிகாட்டுதல் தேவை இல்லைஎன்பது இறைவனின் முடிவாக இருந்தால் அவன் இதைத் தான் செய்திருப்பான். வானிலிருந்து ஒரு நூலைப் போடுவது அவனுக்கு எளிதானது. மக்கள் நம்புவதற்கும் ஏற்றது.

இவ்வாறு செய்வதில் ஏராளமான நன்மைகளும் ஏற்படும்.

அடி, உதை, உயிர்ப் பலி ஏதுமின்றி மக்கள் அனைவரும் எளிதாக இதை ஏற்றுக் கொள்வார்கள். இறைத் தூதர் வழியாக வேதம் கிடைக்கும் போது ஏற்படும் நம்பிக்கையை விட அதிகமான நம்பிக்கை இதனால் ஏற்படுவதால் வேதத்தில் உள்ளதை அப்படியே பின்பற்றுவார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் மொழி பெயர்த்து வேதங்களைப் போடுவதால் கருத்து வேறுபாடுகள் குறையும். வேதம் மட்டும் வழிகாட்டி விடும் என்றால் அல்லாஹ் இதைத் தான் செய்திருப்பான். வேண்டாத வேலையை அல்லாஹ் ஒரு போதும் செய்ய மாட்டான்.

நமது மூக்கை நாம் தொடுவதாக இருந்தால் கூட நேரடியாகத் தான் நாம் தொடுவோமே தவிர சுற்றி வளைத்துத் தொட மாட்டோம். அவ்வாறு யாரேனும் தொட முயன்றால் அவனுக்கு என்னவோ நேர்ந்து விட்டது எனக் கருதுவோம்.

நாமே இவ்வளவு தெளிவாக இருக்கும் போது எல்லாம் வல்ல இறைவன் இப்படிச் செய்வானா?

வேதத்தைக் கொண்டு வந்து தருவதைத் தவிர வேறொரு முக்கியமான பணியும் தூதருக்கு இருந்தால் தவிர தூதர்களை அல்லாஹ் அனுப்பியிருக்கவே மாட்டான்.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோர் அந்த முக்கியமான பணி என்ன என்பதைக் கூறுவார்களா?

வேதத்தைக் கொண்டு வந்து அதற்கு விளக்கம் சொல்லி, வாழ்ந்து காட்டி வழிகாட்டும் பணியும் இறைத் தூதரின் பணி என்பதால் தான் வேதத்தை வானிலிருந்து போடாமல் மக்கள் நம்பிக்கை கொள்வதற்குச் சிரமமாகக் கருதினாலும் மனிதரைத் தூதராக நியமித்து அவர் மூலம் இறைவன் வேத்தை வழங்கினான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

தூதராக வானவரை அனுப்பாதது ஏன்?

வானிலிருந்து வேதத்தைப் போடாவிட்டால் மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக் கொடுத்து அனுப்பினால் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியுமே எனவும் மக்கள் விரும்பினர்கள்.

சாப்பிடக் கூடியவராகவும் பருகக் கூடியவராகவும் இல்லாத – மனிதனிடம் இருக்கக் கூடிய ஏனைய பலவீனங்கள் இல்லாத – வானவர்கள் இறைவனின் தூதர்களாக அனுப்பப்பட்டால் அவர்களை ஏற்பதற்குத் தங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது தான் மக்களின் வாதமாக இருந்தது.

தங்களைப் போல் உண்ணுகின்ற, பருகுகின்ற ஒரு மனிதர் எப்படி கடவுளின் தூதராக இருக்க முடியும் என்ற சந்தேகம் காரணமாக தூதர்களை முதலில் மறுப்பார்கள். அவர் கடவுளின் தூதர் இல்லை என்றால் அவர் கொண்டு வந்தது கடவுளின் வேதம் அல்ல எனவும் மறுப்பார்கள்.

இந்தக் காரணங்களைக் கூறி இறைத் தூதர்கள் மறுக்கப்பட்டதற்கு திருக்குர்ஆன் சாட்சி கூறுகிறது.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன் 6:8,9

அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை என்றனர்.

திருக்குர்ஆன் 23:24

அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்! என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 41:14

ஒரு வானவர் இறைத் தூதராக அனுப்பப்படும் போது அவர் எதையும் உண்ணாமல் பருகாமல் தங்களுடன் வாழும் போது அவரை இறைத் தூதர் என்று எளிதில் நம்பலாம். அவர் கொண்டு வந்தது இறை வேதம் தான் என்பதையும் நம்பலாம். இது தான் மக்களின் விருப்பமாக இருந்தது என்பதற்கு மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனம் சான்று. அந்தக் கோரிக்கைக்கு அல்லாஹ் பின்வருமாறு பதிலளிக்கிறான்.

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன் 6:9

பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம் என்பதைக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:95

வானவரையே தூதராக அனுப்புமாறு இவர்கள் கேட்கின்றனர். வானவரை அனுப்புவதாக நாம் முடிவு செய்தாலும் அந்த வானவரை மனிதத் தன்மை கொண்டவராக மாற்றித் தான் அனுப்புவோம். மனிதத் தன்மையுடன் வரும் அவர் உண்பார்; பருகுவார். ஏற்கனவே அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை மீண்டும் எழுப்புவார்கள் என்று அல்லாஹ் விடையளிக்கிறான்.

வானவரைத் தூதராக அனுப்புவதாக இருந்தால் கூட அவரை மனிதராக மாற்றித் தான் அனுப்புவேன்என்று அல்லாஹ் ஏன் கூறுகிறான் என்று சிந்திக்க வேண்டும். வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டும் தான் தூதரின் பணி என்றால் வானவர் வந்து கொடுத்தால் என்ன? மனிதர் வந்து கொடுத்தால் என்ன?

மனிதர்களுக்கு மனிதர் தான் செய்முறை விளக்கம் தர முடியும். நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும் என்பதைத் தவிர இதற்கு வேறு காரணம் இருக்க முடியாது.

வேதத்தைக் கொண்டு வரும் தூதர்கள் வேதத்தின் போதனைகளுக்கு விளக்கம் கூறி செயல் முறை விளக்கமும் தர வேண்டியிருக்கின்ற ஒரே காரணத்தினால் தான்

வானிலிருந்து வேதப் புத்தகத்தைப் போடாமல்…

வானவரைத் தூதர்களாக அனுப்பாமல்…

மனிதர்களையே அனுப்புகிறான்.

வேதம் மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறி வாழ்ந்து காட்டும் வேலையும் தூதர்களுடையது என்பதை இதிலிருந்தும் விளங்கலாம்.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் தூதரின் வருகையால் ஒரு பயனும் இல்லை; பயனற்ற வேலையை இறைவன் செய்து விட்டான் என்று கூறாமல் கூறி இறைவனின் தகுதியில் குறை காண்கிறார்கள்.

ஒரு சமுதாயத்திற்குப் பல தூதர்கள் ஏன்?

மனிதர்களுக்கு நேர்வழி காட்ட வேதம் மட்டும் போதுமென்றால் – வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பதைத் தவிர வேறு எந்தப் பணியும், அதிகாரமும் தூதர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் – ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் ஒரே ஒரு தூதர் தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் திருக்குர்ஆனை நாம் ஆராயும் போது பல்வேறு சமுதாய மக்களுக்கு ஒரு காலகட்டத்தில் பல தூதர்கள் கூட்டாக அனுப்பப்பட்டுள்ளதை அறிய முடியும்.

ஓர் ஊராரிடம் தூதர்கள் வந்த போது நடந்ததை அவர்களுக்கு முன்னுதாரணமாகக் கூறுவீராக! அவர்களிடம் இருவரை தூதர்களாக நாம் அனுப்பிய போது அவ்விருவரையும் பொய்யரெனக் கருதினர். எனவே மூன்றாமவரைக் கொண்டு வலுப்படுத்தினோம். நாங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 36:13, 14

இதைத் தொடர்ந்த மேலும் ஆறு வசனங்களிலும் இந்நிகழ்ச்சி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

வேதத்தைக் கொண்டு வந்து கொடுப்பதோடு தூதர்களின் பணி முடிந்து விட்டது என்றால் ஒரு தூதரை மட்டும் அல்லாஹ் அனுப்பி இருப்பான். இரண்டு தூதர்களை அனுப்பி இருக்க மாட்டான். எவ்வளவு தான் விளக்கிக் கூறிய பிறகும் மக்கள் ஏற்காத போது மேலும் ஒரு தூதரை அனுப்பியிருக்கத் தேவையேயில்லை.

இறைத் தூதர்களின் பணி வேதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது மட்டுமல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கம் கூறுவதும், பிரச்சாரம் செய்வதும் இறைத் தூதர்களின் பணியாக இருந்தால் மட்டுமே ஒரு சமுதாயத்திற்கு ஒரு காலகட்டத்தில் மூன்று தூதர்களை அனுப்பியிருக்க முடியும்.

மக்களின் கடின சித்தம், விளங்கும் திறனில் குறைவு போன்ற காரணங்களால் ஒரு தூதரால் இதை முழுமையாகச் செய்ய முடியாது என்று இறைவன் கருதும் போது அதிகமான தூதர்களை அனுப்பி வைக்கிறான். ஒரு வகையில் பார்த்தால் வேதத்தை விட தூதர்களுக்கு அல்லாஹ் அதிகமான முக்கியத்துவத்தை அளித்திருக்கிறான் என்பதை விளங்கலாம்.

இது போன்று மற்றொரு காலகட்டத்தில் மூஸா நபியுடன் துணையாக ஹாரூன் நபியையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை உதவியாளராக ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 25:35

எனது குடும்பத்திலிருந்து என் சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக ஏற்படுத்து! அவர் மூலம் என்னைப் பலப்படுத்து! எனது பணியில் அவரையும் கூட்டாக்கு! (என்று மூஸா கேட்டார்)

திருக்குர்ஆன் 20:29, 30, 31

என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பிவை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்(என்றும் கூறினார்). உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். (என்று இறைவன் கூறினான்.)

திருக்குர்ஆன் 28:34, 35

ஃபிர்அவ்னிடம் (நீங்கள் இருவரும்) சென்று நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு! என்று கூறுங்கள்!

திருக்குர்ஆன் 26:16

ஒரு காலகட்டத்தில் ஒரு சமுதாயத்திற்கு இரண்டு தூதர்கள் அனுப்பப்பட்டதை இவ்வசனங்கள் கூறுவதுடன் அவ்வாறு அனுப்பப்பட்டதற்கான காரணத்தையும் கூறுகின்றன.

வேதத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை மட்டும் தான் இறைத் தூதர்களுடையது என்றால் மூஸா (அலை) மட்டுமே அந்தப் பணியைச் செய்யப் போதுமாகும். வேதத்தைக் கொண்டு வந்து தருவதற்கு இரண்டு தூதர்களுக்கு எந்த அவசியமும் இல்லை.

மூஸா நபியவர்கள் தம்மால் தெளிவாக விளக்க முடியாது என்றும் தம்மை விட ஹாரூன் விளக்கமளிக்கும் திறன் அதிகம் பெற்றவர் என்றும் காரணம் கூறி, ஹாரூனையும் என்னுடன் அனுப்பு என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக் கொண்டு மூஸா நபியை விட அதிக விளக்கும் திறமை பெற்றிருந்த ஹாரூன் நபியையும் துணையாக – தூதராக – அனுப்புகின்றான்.

மக்களுக்குப் புரியும்படி விளக்குவதும், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நீக்குவதும் இறைத் தூதர்களின் பணியாக இருந்தது என்பதை இதிலிருந்தும் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

இதை விட முக்கியமான மற்றொரு அம்சமும் மூஸா நபி வரலாற்றில் கவனிக்கத் தக்கதாகும்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுடன் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும் மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர்.

அப்போதும் வேதம் அருளப்படவில்லை.

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கனமழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

அப்போதும் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான். ஏழாவது அத்தியாயம் 103 வது வசனத்திலிருந்து 150 வது வசனம் வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.

103 வது வசனம் முதல் 141 வது வசனம் வரை மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்ன் அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

எதிரிகள் அழிக்கப்படும் வரை அவர்களுக்கு எந்த வேதமும் அருளப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு நீண்ட நெடுங்காலம் அவர்கள் எந்த அடிப்படையில் பிரச்சாரம் செய்தனர்? வேதமில்லாத இன்னொரு வஹீயின் மூலம் தான் அவர்கள் தமது பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும்.

தூதர்களாக நியமிக்கப்பட்டதற்கும், வேதம் அருளப்பட்டதற்கும் உள்ள நீண்ட கால இடைவெளியிலிருந்து வேதம் மட்டும் இறைவனால் அருளப்படுவதில்லை. வேதமில்லாத வேறு வஹீயின் மூலமாகவும் பிரச்சாரம் செய்ய இறைத் தூதர்கள் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தனர் என்பதை அறியலாம்.

எனவே தூதர்களின் விளக்கம் தேவையில்லை என்று வாதிடுவது குர்ஆனுக்கே எதிரானதாகும்.

அல்லாஹ்வின் கூற்றுக்கும் அவனது தூதரின் கூற்றுக்கும் வேறுபாடு கற்பிப்போர் காஃபிர்கள்

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம் எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (காஃபிர்கள். நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம். அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்பி அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டாதோருக்கு அவர்களது கூலிகளை அவன் வழங்குவான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:150, 151, 152

திருக்குர்ஆன் மட்டுமே எங்களுக்குப் போதும், திருத் தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றன.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம் என்று கூறுபவர்கள் மெய்யாகவே காஃபிர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் தெளிவாகக் கூறும் இவ்வுண்மையை மறுத்திட இவ்வசனத்திற்கு சிலர் தவறான பொருள் கொடுத்து வருகின்றனர். திருக்குர்ஆனின் சில தமிழாக்கங்களில் இவ்வசனம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைத் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக்கிக் காட்டுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் சமமானவர்களே. அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது. அவர்களில் சிலரை ஏற்று வேறு சிலரை மறுக்கக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. எல்லாத் தூதர்களையும் நம்ப வேண்டும் என்பது சரி தான். இதைத் திருக்குர்ஆன் வேறு சில இடங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய வசனங்களுக்குத் தான் இவ்விளக்கம் பொருந்துமே தவிர இவ்வசனத்திற்கு அவ்விளக்கம் அறவே பொருந்தாது.

ஏனெனில் இவ்வசனம் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று பொருள் கொள்ளும் வகையில் அமையவே இல்லை.

வயுரீதூன அன் யுபர்ரிகூ பைன ருஸுலிஹிஎன்று கூறப்பட்டால் இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்ட எண்ணுகிறார்கள்என்று பொருள்.

ஆனால் இவ்வசனத்தில் பைன ருஸுலிஹி(தூதர்களுக்கு இடையில்) என்று கூறாமல் பைனல்லாஹி வருஸுலிஹி (அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையில்) என்று தான் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்ற சொற்றொடருக்கு தூதர்களிடையே பாரபட்சம் காட்டாதீர்கள் என்று பொருள் கொள்வதை விட அறியாமை ஏதும் இருக்க முடியாது.

எனவே இவ்வசனம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதைத் தான் கூறுகிறது. யாருடைய விளக்கமும் இன்றி நேரடியான வாசகமே அப்படித் தான் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருளையும் சரியான முறையில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே நிச்சயமாக பாரபட்சம் உள்ளது. அல்லாஹ்வைப் போல் அவன் தூதர்களைக் கருதக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அல்லாஹ்வுக்குச் செய்யும் வணக்கத்தை அல்லாஹ்வின் தூதருக்குச் செய்ய வேண்டும் என்று இவ்வசனத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது. அப்படியானால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்குமிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்பதன் பொருள் என்ன?

இதற்காக நாம் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஏனெனில் எந்த வகையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதையும் இவ்வசனத்திலேயே அல்லாஹ் தெளிவாகக் கூறி விடுகின்றான். சிலவற்றை ஏற்போம். சிலவற்றை மறுப்போம் என்று கூறுவதையே பாரபட்சம் காட்டுதல் என்று அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

அல்லாஹ் சொன்னதை நாங்கள் ஏற்போம். அவன் தூதர்கள் கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் நிச்சயம் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகளை மறுத்து அல்லாஹ்வும் அவனது தூதரும் சமம் என ஒருவர் கருதினால் அவர் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுவார். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் வேறுபாடு காட்டக் கூடாது.

அல்லாஹ் ஒருவரைத் தூதராக நியமித்தால் அவர் கூறும் செய்திகள் அல்லாஹ்வின் செய்திகள் என்று நம்ப வேண்டும். தூதர் கூறும் செய்திகளைஒருவர் மறுத்தால் அவர் உண்மையில் அவரை அனுப்பிய அல்லாஹ்வைத் தான் மறுக்கிறார். இதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.

இவ்வாறு வேறுபாடு காட்டுபவர்களின் நிலை என்ன என்பதையும் இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். இவர்கள் பாதியை ஏற்று மீதியை மறுத்து, புது வழியை உருவாக்கியதால் இவர்கள் தாம் உண்மையாகவே காஃபிர்கள். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை இருக்கிறதுஎன்று பிரகடனம் செய்கின்றான்.

குர்ஆன் மட்டும் போதும். நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை எனக் கூறுவோர் இவ்வசனத்தின் தெளிவான தீர்ப்பின்படி முஸ்லிம்கள் அல்லர். சந்தேகத்திற்கிடமின்றி இவர்கள் காஃபிர்களே!

மேலே நாம் எடுத்துக் காட்டிய 150, 151, 152 ஆகிய வசனங்களில் மூன்றாவது வசனத்தை இவர்கள் தங்களின் கருத்துக்கு ஆதரவாக வளைக்க நினைக்கின்றனர்.

யார் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புகிறார்களோ – மேலும் அவர்களில் எவருக்குமிடையே பாரபட்சம் காட்டாமல் உள்ளனரோ அவர்களின் பரிசுகளை அவர்களுக்கு அவன் வழங்குவான் என்பது தான் 152வது வசனம்.

இவ்வசனத்தில் இறைத் தூதர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறப்படுவதால் 150வது வசனத்திற்கும் அவ்வாறு தான் பொருள் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

முதலில் ஒரு அடிப்படையை இவர்கள் அறியவில்லை. இரண்டு விதமான கருத்துக்கள் கொள்ள எந்த வசனம் இடம் தருகின்றதோ அது போன்ற வசனங்களுக்குத் தான் – எந்த விளக்கம் கொடுக்கலாம் என்பதற்காக – வேறு வசனங்களைத் துணைக்கு அழைக்க வேண்டும்.

எந்த வசனம் இரண்டு கருத்துக்கள் கொள்ள இடம் தரவில்லையோ அது போன்ற வசனங்களுக்கு இன்னொரு வசனத்தின் துணையுடன் விளக்கம் கூறுவதாகக் கருதிக் கொண்டு நேரடியான பொருளை நிராகரிக்கக் கூடாது.

150வது வசனத்தில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டுகிறார்களோஎன்று கூறப்படுகின்றது. இதற்கு இரண்டு கருத்துக்கள் கிடையாது. அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற ஒரு கருத்து தான் இதற்கு இருக்கிறது.

தூதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பது தான் இதன் கருத்து என்றால் அல்லாஹ்வுக்கும் என்ற வாசகம் தேவையில்லாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஆகி விடும். இறை வேதத்தில் இத்தகைய வீணான சொற்கள் இருப்பதாகக் கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

எனவே அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 150வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும், தூதர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்ற 152வது வசனத்திற்கு அதற்குரிய பொருளையும் கொடுக்க வேண்டுமே தவிர இல்லாத ஒன்றை வலிந்து திணிக்கக் கூடாது.

அல்லாஹ் சொன்னதை அதாவது குர்ஆனை மட்டும் தான் ஏற்பேன்; தூதர் சொன்னதை அதாவது ஹதீஸ்களை ஏற்க மாட்டேன்என்று கூறுவது அப்பட்டமான இறை மறுப்பு என்று திருக்குர்ஆன் தெளிவுபடுத்திய பிறகு ஹதீஸ்களை எப்படி நிராகரிக்க முடியும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டிய விளக்கம்

முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 4:105

விளக்கம் தேவைப்படக் கூடிய ஒவ்வொரு வசனத்திற்கும் இது தான் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

குர்ஆனை எவ்வாறு விளங்கிட வேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேர்வு செய்து இவ்வேதத்தை அவர்களிடம் வழங்கினான்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் ஏதும் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எதைக் காட்டினானோ அது எது? தமக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து நபிகள் நாயகம் (ஸல்) வழங்கிய தீர்ப்புக்கள் யாவை? என்பதைச் சிந்திப்பவர்கள் ஹதீஸ்களை மறுக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டித் தந்ததைக் கொண்டு தான் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற இந்த வசனத்தின் அறிவுரையை, இவர்கள் மறுக்கிறார்கள்.

அழகிய முன்மாதிரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதப் புத்தகத்தைப் பெற்று மக்களிடம் கொடுப்பதற்கு மட்டும் அனுப்பப்படவில்லை. செயல்முறை விளக்கம் அளிப்பதற்காகவும் சேர்த்தே அனுப்பப்பட்டார்கள் என்பதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

திருக்குர்ஆன் 33:21

உஸ்வத் – முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும். ஒருவர் கொண்டு வந்து தந்த புத்தகத்தைப் பெற்று அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கும் அப்புத்தகத்தில் உள்ளபடி நடப்பதற்கும் உஸ்வத் – முன்மாதிரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை.

ஒரு தபால்காரர் நம்மிடம் ஒரு தபாலைக் கொண்டு வந்து தருகின்றார். அதை நாம் வாங்கிக் கொள்கின்றோம். பின்னர் அதை வாசிக்கிறோம். அதன் பின்னர் அதில் கூறப்பட்டவாறு செயல்படுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் தபால்காரரை முன்மாதிரியாக ஆக்கிக் கொண்டோம் என்று யாரும் கூறுவதுண்டா? அப்படி யாரேனும் கூறினால் அவரது அறிவை நாம் சந்தேகப்பட மாட்டோமா?

இவ்வாறு கூறுவோருக்கும், ஹதீஸ்கள் வேண்டாம் என்று கூறுவோருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

ஏனெனில் புத்தகத்தைக் கொண்டு வந்து நம்மிடம் தருவது மட்டுமே நபிகள் நாயகத்தின் பணி; அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது இவர்கள் எதை மறுக்கிறார்கள்?

குர்ஆனையே மறுக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான முன்மாதிரியாக அனுப்பப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன் மாதிரி – வாழ்ந்து காட்டிய முறை – தேவையில்லை என்போர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் மறுப்பவர்கள் என்ற கடுமையான எச்சரிக்கை இவ்வசனத்தில் உள்ளது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோர்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் மாதிரியாகத் திகழ்வார்கள் என்று இவ்வசனம் தெளிவாகவே கூறுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நடவடிக்கை மூலம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று அல்லாஹ் கூறுவது எப்போது சாத்தியமாகும்? ஹதீஸ்களை ஏற்றுச் செயல்பட்டால் தான் சாத்தியமாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கை ஹதீஸ்களில் தான் கிடைக்கும்.

குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக உள்ளது.

தூதருக்குக் கட்டுப்படுதல்

திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் பின்பற்றுவது முஸ்லிம்களின் மீது கடமை என்பதை விளக்கும் மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

திருக்குர்ஆனில் அதிகமாக வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்பதும் ஒன்றாகும்.

ஒரிரு இடங்களில் அல்ல. ஏராளமான இடங்களில் இந்தக் கட்டளை திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் எனக் கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:32

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 3:132

இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 4:13

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

திருக்குர்ஆன் 4:69

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை.

திருக்குர்ஆன் 4:80

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 5:92

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!

திருக்குர்ஆன் 8:1

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 8:20

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 8:46

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:71

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24:52

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

திருக்குர்ஆன் 24:54

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 24:56

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

திருக்குர்ஆன் 33:33

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33:66

அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.

திருக்குர்ஆன் 33:71

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 47:33

(போருக்குச் செல்லாமல் இருப்பது) குருடர் மீது குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ அவரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். யார் புறக்கணிக்கிறாரோ அவருக்குத் துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.

திருக்குர்ஆன் 48:17

நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக கட்டுப்பட்டோம் என்று கூறுங்கள்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 49:14

உங்கள் இரகசியமான பேச்சுக்களுக்கு முன் தர்மங்களை முற்படுத்துவதற்கு அஞ்சுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் செய்யாத போது அல்லாஹ் உங்கள் மன்னிப்புக் கோருதலை ஏற்றான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தும் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 58:13

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வது தான் நமது தூதர் மீது உள்ளது.

திருக்குர்ஆன் 64:12

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்! தூதருக்கும் கட்டுப்படுங்கள்! என்று இத்தனை இடங்களில் அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகின்றான்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர்கள் காஃபிர்கள்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பதன் மூலமே இறையருள் கிட்டும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் மட்டுமே சொர்க்கம் கிடைக்கும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் தான் முஃமின்கள்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

? அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாவிட்டால் செய்கின்ற நல்லறங்கள் பாழாகி விடும்.

என்றெல்லாம் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவன் முஸ்லிமா அல்லவா என்பதை அளந்து பார்க்கக் கூடிய அளவு கோலாக இந்தக் கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது.

தொழுகை, நோன்பு போன்ற கட்டளைகளை மீறினால் அது பெருங்குற்றமாகக் கூறப்பட்டாலும் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய குற்றமாகக் குர்ஆனில் கூறப்படவில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட மறுத்தால் அது இஸ்லாத்தை விட்டே ஒருவனை வெளியேற்றும் குற்றமாகக் கூறப்படுகின்றது.

எனவே பல இடங்களில் மிகுந்த முக்கியத்துவத்துடன் இக்கட்டளை கூறப்பட்டுள்ளதால் இதைச் சரியாகப் புரிந்து கொள்வது ஒன்றே ஈமானைப் பாதுகாக்கும்.

குர்ஆனைக் கொண்டு வந்து மக்களிடம் தருவது மட்டுமே தூதரின் பணி, வேறு பணி ஏதும் அவருக்கு இல்லை என்றிருந்தால் இவ்வாறு இறைவன் நிச்சயமாகக் கூற மாட்டான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று கூறுவது மட்டுமே இந்தக் கருத்தைத் தெளிவாகக் கூறி விடும் போது தேவையில்லாமலும் வேறு கருத்தைக் கொடுக்கும் வகையிலும் இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.

தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்று பல வசனங்களில் கூறப்பட்டிருந்தாலும் ஹதீஸ்களை மறுப்பவர்கள் இவ்வசனங்களுக்குப் பொருத்தமற்ற விளக்கத்தைக் கூறி நழுவப் பார்க்கின்றனர்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் என்பதும், தூதருக்குக் கட்டுப்படுதல் என்பதும் ஒன்று தான். குர்ஆனில் கூறப்பட்டதை மட்டும் பின்பற்றினால் அது தான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல். அது தான் தூதருக்குக் கட்டுப்படுதல் என்பது இவர்கள் கூறும் பொருந்தாத விளக்கமாகும்.

வீணான – தேவையில்லாத – குழப்பமான வார்த்தைகளை அல்லாஹ் கூறி விட்டான் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்களின் விளக்கம் முற்றிலும் தவறாகும்.

இதாஅத் என்ற மூலச் சொல் மேற்கண்ட வசனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரது கட்டளையை ஏற்று அப்படியே செயல்படுவது என்பது இதன் பொருளாகும்.

இதன் பொருளைச் சரியாக விளங்கிட அல்குர்ஆனின் 4:59 வசனத்தை உதாரணமாகக் எடுத்துக் கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

? அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்.

? தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

? அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.

என மூன்று கட்டளைகள் இவ்வசனத்தில் உள்ளன. முதலிரண்டு கட்டளைகளை விட்டு விடுவோம். மூன்றாவது கட்டளைக்கு என்ன பொருள்?

அதிகாரத்தில் இருப்பவர்கள் போடுகின்ற உத்தரவுகளுக்குக் கட்டுப்பட வேண்டும்என்பது தான் இதன் பொருள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றார்கள். அதிகாரமுடையவர்களுக்கு இவர்கள் வழங்குகின்ற மரியாதை கூட அல்லாஹ்வின் தூதருக்கு வழங்குவதில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

அதிகாரமுடையவர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்குக் கட்டுப்படலாம் என்று பொருள் செய்த இவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுபடுங்கள் என்பது எந்தப் பொருளும் அற்றது என்று வாதிடுவதை விட அறியாமை வேறு இருக்க முடியாது.

இன்னும் சொல்லப் போனால் இவ்வசனத்தில் அதீவூ (கட்டுப்படுங்கள்) என்ற சொல் இரண்டு தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது ஓர் இடம். அல்லாஹ்வின் தூதருக்கும் அதிகாரம் உடையவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்பது இரண்டாவது இடம்.

அதிகாரமுடையவர்களுக்குக் கட்டுப்படுவதைக் குறிக்கும் போது அதனுடன் சேர்த்து தூதருக்குக் கட்டுப்படுவதையும் இறைவன் கூறுகின்றான். இதிலிருந்து அதிகாரமுடையவர்கள் சுயமாகக் கூறும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவது போன்று தூதரின் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டும் என்பது உறுதியாகின்றது.

தூதருக்குக் கட்டுப்படுவது என்பதன் பொருள், குர்ஆனுக்குக் கட்டுப்படுவது தான்என்ற வாதம் இதனால் அடிபட்டுப் போகின்றது.

தூதருக்குக் கட்டுப்பட மறுத்து இஸ்லாமிய வேடம் போடுவோர் தோன்றுவார்கள் என்பதை அறிந்த இறைவன் 8:20, 24:54 வசனங்களில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை விட தூதருக்குக் கட்டுபடுவதை முக்கியத்துவம் கொடுத்துக் கூறுகிறான்

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று 8:20 வசனத்தில் கூறப்படுகின்றது.

அவ்விருவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று கூறாமல் அவரைப் புறக்கணிக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறி தூதருக்குக் கட்டுப்படுவதன் அவசியத்தை விளக்குகிறான்.

அல்லாஹ்வைப் புறக்கணிக்க மாட்டார்கள். தூதரைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள் என்பதற்காகத் தேர்வு செய்து பயன்படுத்தப்பட்டது போல் இவ்வாசகம் அமைந்துள்ளது.

24:54 வசனத்தில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று துவங்கி விட்டு, நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமை அவருக்கு, உங்கள் மீதுள்ள கடமை உங்களுக்கு என்றும் அவரைப் பின்பற்றினால் நேர்வழி அடைவீர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதை அல்லாஹ் எவ்வாறு நம் மீது கடமையாக்கியுள்ளானோ அது போலவே அவனது தூதருக்குக் கட்டுப்படுவதையும் கடமையாக ஆக்கியுள்ளான் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் தாம் திருக்குர்ஆனின் இவ்வசனங்களை ஏற்பவர்களாக ஆவார்கள்.

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவோம், அவனது தூதருக்குக் கட்டுப்பட மாட்டோம் என்போர் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் அல்லாஹ்வுக்கே கட்டுப்படாதவர்களாக உள்ளனர் என்பதில் ஐயமில்லை.

தூதரை நோக்கி வருதல்

அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.

திருக்குர்ஆன் 4:61

இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்திய இரண்டு சொற்றொடர்களைக் கவனியுங்கள்.

  1. அல்லாஹ் அருளியதை நோக்கியும்
  2. இத்தூதரை நோக்கியும்

என இரண்டு சொற்றொடர்களை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

ஹதீஸ்களை மறுப்போரின் கருத்துப்படி அல்லாஹ் அருளியதை நோக்கி வாருங்கள் என்று கூறியவுடனேயே கூற வேண்டிய செய்தி முற்றுப் பெற்று விடுகின்றது. இத்தூதரை நோக்கி என்ற சொற்றொடரை அல்லாஹ் அர்த்தமில்லாமல் பயன்படுத்தி விட்டான் என்று அவர்கள் கூறுவார்களா?

அல்லாஹ் தேவையற்ற ஒரு சொல்லையும் பயன்படுத்தவே மாட்டான் என்று நம்பிக்கை கொண்டு குர்ஆனை மதிப்பவர்கள், இத்தூதரை நோக்கி என்று அல்லாஹ் கூறியதை உரிய முக்கியத்துவத்துடன் கவனத்தில் கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.

இதே வசனத்தில் இறைவன் பயன்படுத்தியுள்ள மற்றொரு சொற்றொடரும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் அழைக்கப்பட்டால் இரண்டையும் புறக்கணிப்பார்கள் என்று இவ்வசனத்தில் கூறாமல் உம்மைப் புறக்கணிப்பார்கள்என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு புறக்கணிப்பவர்கள் முனாஃபிக்குகள் என்றும் பிரகடனம் செய்கின்றான்.

அல்லாஹ் அருளியதை நோக்கி வருவதை ஏற்றுக் கொண்டு, தூதரை நோக்கி வர வேண்டும் என்ற அழைப்பை யார் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் தம்மை அஹ்லுல் குர்ஆன் என்று கூறிக் கொண்டாலும் இவர்களுக்கு அல்லாஹ் சூட்டும் பெயர் முனாஃபிக்குகள்.

அல்லாஹ் அருளியதை நோக்கி மட்டும் வருவோம். தூதரை நோக்கி வர மாட்டோம் எனக் கூறும் இவர்களுக்காகவே இவ்வசனம் அருளப்பட்டது போல் அற்புதமாக அமைந்திருப்பதை அவர்கள் கவனித்துத் திருந்திக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் புறக்கணிக்கிறார்கள் என்று கூறாமல்

அல்லாஹ் இறக்கியருளியதைப் புறக்கணிக்கிறார்கள் என்றும் கூறாமல்

உம்மைப் புறக்கணிக்கிறார்கள் என்று இறைவன் கூறியது ஏன் என்பதை இவர்கள் சிந்திப்பார்களானால் நிச்சயமாக உண்மையை உணர்வார்கள்.

இதே போல் 5:104 வசனத்திலும் இரண்டு விஷயங்களின் பால் அல்லாஹ் அழைப்பு விடுக்கின்றான்.

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் வாருங்கள்!என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?

திருக்குர்ஆன் 5:104

அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் மக்கள் வரவேண்டும் என்பதும் இரண்டுமே இறைவனின் வஹீயை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் சந்தேகமற நிரூபிக்கப்படுகின்றது.

திருக்குர்ஆனில் இன்னும் பல வசனங்களில், அல்லாஹ்வை நோக்கியும் இத்தூதரை நோக்கியும் அழைக்கப்பட்டால்என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என்றிருந்தால், குர்ஆனைக் கொண்டு வந்து தருவது தவிர தூதருக்கு ஒரு வேலையும் இல்லை என்றிருந்தால் இத்தகைய சொற்களை இறைவன் பயன்படுத்தியிருக்க முடியாது.

தீர்ப்பளிக்கும் தூதர்

அவர்களிடையே தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 24:48

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24:51

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும் போது அவருக்கும் பதிலளியுங்கள்! ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லாஹ் இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 8:24

அல்லாஹ்விடம் அழைக்கப்படுவது என்றால் திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுவது என்பது பொருள். தூதரிடம் அழைக்கப்படுவது என்றால் என்ன பொருள்? அதற்கும் திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுதல் எனப் பொருள் கொள்ள முடியுமா? திருக்குர்ஆனை நோக்கி அழைக்கப்படுவது பற்றி ஏற்கனவே கூறப்பட்டு விட்ட பின் அவ்வாறு பொருள் கொள்வது பொருத்தமாகாது.

நாம் ஏற்கனவே நிரூபித்துள்ளபடி குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீயை நோக்கி அழைக்கப்படுவதையே இவ்வாறு இறைவன் குறிப்பிடுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் எனக் கூறும் வசனங்கள் இத்துடன் முடியவில்லை. இன்னும் பல வசனங்கள் உள்ளன.

வேதத்துடன் வேறொன்று

வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் அவர்கள் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 40:70

தூதர்களுக்கு வேதம் மட்டும் தான் அருளப்பட்டது, வேறு எதுவும் இறைவனால் அருளப்படவில்லை என்றால் இவ்வசனத்தில் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

! வேதத்தையும்

! எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதனையும்

என்று இறைவன் கூறுகின்றான்.

எனவே வேதத்துடன் அதற்கு விளக்கவுரையான செய்திகளையும் கொடுத்தே இறைவன் தூதர்களை அனுப்புகின்றான். இரண்டுமே இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்திகளேயாகும்.

நாங்கள் வேதத்தை மட்டும் தான் ஏற்றுக் கொள்வோம். முஹம்மது (ஸல்) அவர்கள் எதனுடன் அனுப்பப்பட்டார்களோ அதை ஏற்க மாட்டோம் என்று யாரேனும் கூறினால் அதன் விளைவை அவர்கள் மறுமையில் அறிந்து கொள்வார்கள்.

பின்னர் அறிந்து கொள்வார்கள் என்ற சொற்றொடரை அவர்கள் நரகத்தையே அடைவார்கள் என்ற கருத்தில் திருக்குர்ஆன் பயன்படுத்துகின்றது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்க மறுப்போர் நரகவாசிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

வேதமும் தராசும்

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தையும் காணுங்கள்!

அல்லாஹ்வே உண்மையை உள்ளடக்கிய வேதத்தையும், தராசையும் அருளினான். அந்த நேரம் அருகில் இருக்கக் கூடும் என்பது உமக்கு எப்படித் தெரியும்?

திருக்குர்ஆன் 42:17

வேதத்துடன் தராசையும் இறக்கியதாக அல்லாஹ் இங்கே கூறுகின்றான். மீஸான் என்பதற்கு நேரடிப் பொருள் எடை போடும் கருவி என்பதாகும். தராசை மீஸான் என்று கூறுவது இந்த அடிப்படையில் தான். நன்மை தீமைகளை மறுமையில் மதிப்பிடுவதையும் இறைவன் மீஸான் என்று கூறுகின்றான்.

மீஸானை இறக்குவதாகக் கூறும் போது தராசை இறக்குவதாகப் பொருள் கொள்ள முடியாது. உலகில் நன்மை தீமைகளை எடை போட்டுக் காட்டும் அறிவுரை என்றே பொருள் கொள்ள வேண்டும். வேதத்தை இறக்கியது போலவே மீஸானையும் இறக்கியதாக அல்லாஹ் கூறும் போது இரண்டில் ஒன்றை மறுப்பவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்ட கிதாப் என்பது குர்ஆன் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட மீஸான் என்பது என்ன?

இந்த இடத்திலும் தராசு என்றே பொருள் கொள்வார்களானால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன்பே தராசு இருந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. எனவே தராசையும், வேதத்தையும் இறக்கினோம் என்பதற்கு குர்ஆனையும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் எடை போடக் கூடிய போதனைகளையும் என்பதே பொருளாக இருக்க முடியும்.

கிதாபும் ஸுபுரும்

நபிமார்கள் வேதத்தை மட்டும் இறைவனிடம் பெற்றுத் தருபவர்கள் அல்லர். வேதமல்லாத இன்னொரு வழிகாட்டுதலையும் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்தனர் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளி வீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 3:184

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும், ஸுபுரையும், ஒளிவீசும் கிதாபையும் கொண்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 35:25

இறைத் தூதர்கள் இரண்டு வழிகாட்டி நெறிகளுடன் அனுப்பப்பட்டனர் என்று இவ்விரு வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்றாலும், ஸுபுர் என்றாலும் ஏடு என்பதே பொருளாகும். கிதாப் எனும் ஏட்டையும் ஸுபுர் எனும் ஏட்டையும் இறைத் தூதர்களுக்கு வழங்கியதாக அல்லாஹ் கூறுகின்றான்.

கிதாப் என்பதை வேதம் என்று நாம் புரிந்து கொள்கின்றோம். அப்படியானால் கிதாபுடன் அருளப்பட்ட ஸுபுர் என்பது என்ன? இறைவன் அனுப்பிய ஸுபுரை நிராகரிப்பது இறை வேதத்தையே நிராகரிப்பதாக ஆகாதா?

இரண்டு வகையான வஹீயை இறைவன் அருளியுள்ளதால் தான் கிதாபையும், ஸுபுரையும் (ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும்) அனுப்பினோம் என்று கூறுகின்றான்.

கிதாபும் ஃபுர்கானும்

நீங்கள் நேர்வழி பெறுவதற்காக வேதத்தையும், ஃபுர்கானையும் (பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும் வழி முறையையும்) மூஸாவுக்கு நாம் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்!

திருக்குர்ஆன் 2:53

ஃபுர்கான் என்றால் அசத்தியத்திலிருந்து சத்தியத்தை வேறுபடுத்திக் காட்டுவது என்று பொருள். வேதமும் சில இடங்களில் ஃபுர்கான் என்று கூறப்பட்டாலும் இங்கே கிதாபையும், ஃபுர்கானையும் என இரண்டு வழிகாட்டி நெறிகள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

மூஸா நபியவர்களுக்கு வேறு வகையில் அருளப்பட்ட வஹீ தான் இங்கே ஃபுர்கான் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

! கிதாபையும் ஹிக்மத்தையும்

! கிதாபையும் ஹுக்மையும்

! கிதாபையும் இன்னொரு செய்தியையும்

! கிதாபையும் மீஸானையும்

! கிதாபையும் ஸுபுரையும்

! கிதாபையும் ஃபுர்கானையும்

என்றெல்லாம் கிதாபுடன் இன்னொரு செய்தி இணைத்துக் கூறப்பட்டிருக்கும் போது ஒன்றை ஏற்று மற்றதை மறுப்பது குர்ஆனையே மறுப்பதாகும் என்பதில் சந்தேகமில்லை.

! வேதத்தை விளக்குவதற்காகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

! வேதத்தை விளக்குவதற்காகவே தவிர உம்மை அனுப்பவில்லை.

! இவர் வசனங்களை ஓதிக் காட்டி, வேதத்தைக் கற்றுத் தருவார்.

! எந்தத் தூதருக்கும் அவரது தாய்மொழியிலேயே வேதத்தை அருளினோம். அவர் விளக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம்.

! அவர் பேசுவதெல்லாம் வஹீ தான்.

! இறைவனின் வஹீ மூன்று வகைகளில் உள்ளன.

! தூதர்கள் அனுப்பப்படுவதற்கான நோக்கம்.

! அவரிடம் அழகிய முன்மாதிரி உள்ளது.

! தூதருக்குக் கட்டுப்படுங்கள்.

என்றெல்லாம் திருக்குர்ஆனில் கூறப்பட்ட பல சான்றுகளையும், ஆதாரங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டி ஹதீஸ்களைப் பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம் என்பதைச் சந்தேகமற நிரூபித்தோம்.

முடிவாகச் சொல்வதென்றால் நபிகள் நாயகத்தின் விளக்கமாக அமைந்துள்ள ஹிக்மத்தை, மீஸானை, ஃபுர்கானை அதாவது ஹதீஸை யார் நிராகரித்தாலும் அவர்கள் மறுப்பது குர்ஆனைத் தான் என்பதில் ஐயமே இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனுடைய வழிகாட்டுதல் இன்றி வேறு வஹீ மூலம் நடைமுறைப்படுத்திய பல விஷயங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் அங்கீகாரம் செய்துள்ளான். நபியின் கட்டளை தனது கட்டளையே என ஏற்றுள்ளான். அத்தகைய சட்டங்களைக் காண்போம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போரின் கூற்று எந்த அளவுக்கு அறியாமைமிக்கது என்பது அதிலிருந்து உறுதியாகும்.

குர்ஆன் கூறாத கிப்லா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் தொழுகையின் போது ஒரு கிப்லாவை முன்னோக்கித் தொழுதனர். பின்னர் அந்தக் கிப்லா மாற்றப்பட்டு வேறு கிப்லாவை நோக்குமாறு கட்டளையிடப்பட்டது. அது பற்றி பின்வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்?என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள். கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் நாடியோரை நேரான வழியில் செலுத்துகிறான்என்று கூறுவீராக!

இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

திருக்குர்ஆன் 2:142, 143, 144

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுகை நடத்தினார்கள். அதன் பின்னர் இது மாற்றப்பட்டு கஃபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

ஹதீஸ்களை மார்க்க ஆதாரங்களாகக் கொள்ளாதவர்களால் ஏற்கனவே இருந்த கிப்லா எது என்பதற்கு விளக்கம் கூற முடியாது. ஆயினும் கஃபா அல்லாத வேறொரு திசையை நோக்கித் தொழுது வந்தனர். பின்னர் கஃபாவை நோக்கித் தொழுமாறு கட்டளையிடப்பட்டனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது.

இம்மூன்று வசனங்களில் முதல் வசனத்தை அதாவது 142 வது வசனத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

ஏற்கனவே இருந்த அவர்களின் கிப்லாவை விட்டும் (முஸ்லிம்கள்) ஏன் திரும்பி விட்டனர்? என்று மனிதர்களில் அறிவிலிகள் கேட்பார்கள்.!

திருக்குர்ஆன் 2:142

முஸ்லிம்கள் முன்னர் ஒரு கிப்லாவை நோக்கித் தொழுது வந்தனர் என்பதும், இப்போது அந்தக் கிப்லாவை விட்டு விட்டு வேறு கிப்லாவுக்கு மாறி விட்டனர் என்பதும், அவ்வாறு மாறியதை அன்றைய அறிவிலிகள் விமர்சித்தனர் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெரிகிறது.

இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் இக்கருத்தை மனதில் பதிவு செய்து கொண்டு 144 வது வசனத்தைப் பார்ப்போம்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக

திருக்குர்ஆன் 2:144

முஸ்லிம்கள் முன்னர் எந்தக் கிப்லாவை நோக்கித் தொழுதார்களோ அந்தக் கிப்லாவை அல்லாஹ் மாற்ற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் ஆசையாகவும், விருப்பமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே கிப்லாவை மாற்றும் கட்டளைக்காக அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கிக் கொண்டிருந்தார்கள். இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கிப்லாவை விரும்பினார்களோ அந்தக் கிப்லாவையே நோக்குமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்தான் என்ற விபரங்கள் இந்த வசனத்தில் இருந்து தெரிய வருகின்றன.

முஸ்லிம்கள் இப்போது ஒரு கிப்லாவுக்கு மாறியதும், முன்னர் வேறு கிப்லாவை நோக்கித் தொழுததும் இரண்டுமே அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

வேறு கிப்லா மாற்றப்பட்ட கட்டளை 144 வசனத்தில் உள்ளது. ஆனால் முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்களே அதற்கான கட்டளை குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் அந்தக் கட்டளை காணப்படவில்லை.

முன்னர் ஒரு கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கினார்கள் என்ற தகவல் தான் இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

முன்னர் நோக்கிய கிப்லா பற்றிய கட்டளை குர்ஆனில் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அந்தக் கட்டளையைப் பிறப்பித்திருப்பார்கள். நபிகள் நாயகம் சுயமாக அந்தக் கட்டளையைப் பிறப்பித்தார்களா? நிச்சயமாக இல்லை. ஏனெனில் 143 வது வசனத்தில் முந்தைய கிப்லாவையும் நாமே நிர்ணயித்தோம் என்று பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.

திருக்குர்ஆன் 2:143

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக முந்தைய கிப்லாவை நிர்ணயம் செய்திருந்தால் சுயமாக அவர்களே அதை மாற்றியிருப்பார்கள். மாற்றுவதற்கான கட்டளை இறைவனிடமிருந்து வருமா என்று அடிக்கடி அவர்கள் வானத்தை நோக்கத் தேவை இல்லை.

முந்தைய கிப்லாவை நோக்குமாறு இறைவன் கட்டளை பிறப்பித்ததும் உண்மை, அக்கட்டளை குர்ஆனில் இல்லை என்பதும் உண்மை. இவ்விரு உண்மைகளிலிருந்து தெரியும் மூன்றாவது உண்மை, இறைவன் கட்டளைகள் யாவும் குர்ஆனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைத் தூதர்களின் இதயங்களில் ஜிப்ரீலின் துணையில்லாமல் தனது கருத்துக்களை இறைவன் பதியச் செய்வான். அதுவும் இறைக் கட்டளை தான் என்பதே அந்த மூன்றாவது உண்மை.

இந்த விபரங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது குர்ஆன் அல்லாத இன்னொரு வகையான வஹீ மூலம் அவர்களுக்கு முந்தைய கிப்லா பற்றிய கட்டளை வந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் முந்தைய கிப்லாவை நோக்கியுள்ளார்கள். இதனாலேயே புதிய கிப்லாவை நபிகள் நாயகம் சுயமாக முன்னோக்காமல் அல்லாஹ்வின் மறு கட்டளைக்குக் காத்திருந்தார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ உண்டு என நாம் ஏற்கனவே பொதுவாகக் கூறியதற்கு இது குறிப்பான ஆதாரமாக உள்ளது.

குர்ஆன் மட்டும் போதும் என வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான். உங்கள் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இரண்டாவது கிப்லாவை நோக்கும் கட்டளை போல் முதல் கிப்லாவை நோக்கும் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்டுங்கள்! கியாம நாள் வரை அப்படி ஒரு கட்டளையை குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

மேலும் முந்தையை கிப்லாவை முஸ்லிம்கள் நோக்கியது எனது கட்டளைப்படியே என்று 143 வது வசனத்தில் அல்லாஹ் கூறுவது ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அனைத்துக் கட்டளைகளையும் அல்லாஹ் குர்ஆன் மூலம் மட்டும் கூறாமல் சில கட்டளைகளைக் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் ஏன் கூற வேண்டும்? என்று சிலருக்கு ஏற்படும் சந்தேகத்துக்கு அல்லாஹ் இவ்வசனத் தொடரிலேயே ஆணித்தரமாகப் பதில் அளிக்கிறான்.

வந்த வழியே திரும்பிச் செல்வோலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம்.

எவ்வளவு அற்புதமான சொற்றொடர் பாருங்கள்! குர்ஆன் மட்டுமே போதும் என்று கூறக் கூடிய இவர்களுக்காகவே இவ்வசனம் இறங்கியது போல் இருக்கவில்லையா?

முந்தையை கிப்லாவை நோக்கும் கட்டளை குர்ஆனில் இல்லை தான், ஆனாலும் நாம் தான் அந்தக் கிப்லாவையும் ஏற்படுத்தியிருந்தோம். குர்ஆனில் இல்லாவிட்டாலும் இத்தூதர் மனோ இச்சைப்படி பேச மாட்டார் என உறுதியாக நம்பி அதனடிப்படையில் செயல்பட முன் வருபவர் யார்? வந்த வழியே திரும்பிச் செல்பவர் யார்? என்பதை அடையாளம் காட்டவே இவ்வாறு செய்தோம் என இறைவன் பதிலளிப்பது போல் இவ்வசனம் அமைந்திருக்கவில்லையா?

அதாவது வேண்டுமென்றே தான் இக்கட்டளையை குர்ஆன் மூலம் பிறப்பிக்காமல் இறைத் தூதர் வழியாக அவன் பிறப்பித்துள்ளான். இறைத் தூதர் பிறப்பித்த கட்டளையைத் தனது கட்டளை எனவும் ஏற்றுக் கொள்கின்றான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கின்றோம்.

இந்த வசனங்களிலிருந்து எழுகின்ற வேறு சில கேள்விகளையும் எழுப்புவது பொருத்தமாக இருக்கும்,

இவ்வசனங்களில் எந்த இடத்திலும் தொழுகைக்காக மஸ்ஜிதுல் ஹராமை முன்னோக்குங்கள் எனக் கூறப்படவில்லை. மாறாக கிப்லா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹதீஸின் விளக்கத்தை ஓரம் கட்டிவிட்டு கிப்லாவுக்குப் பொருள் கொள்வது என்றால் முன்னோக்கும் திசை என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையையே முன்னோக்குங்கள் என்று 2:144 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்பு என்று 2:149 வசனம் கூறுகின்றது.

நீ எங்கிருந்து புறப்பட்டாலும் உனது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்பு, நீங்கள் எங்கே இருந்தாலும் அதன் திசையிலேயே உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என 2:150 வது வசனம் கூறுகின்றது.

தொழும் போது இவ்வாறு செய்யுமாறு இவ்வசனங்களில் கூறப்படவில்லை.

பிரயாணம் செய்யும் போது கஃபாவை நோக்கியே பிரயாணம் செய்ய வேண்டும் என்பது தான் ஹதீஸ் துணையின்றி விளங்கும் போது தெரியும் விஷயமாகும்.

எனவே இந்திய முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் எந்தப் பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் ஏறத்தாழ மேற்கு நோக்கியே பயணம் செய்ய வேண்டும். அத்திசையில் தான் கஃபா உள்ளது.

வடக்கு, தெற்கு, கிழக்குத் திசைகளில் எந்தப் பயணமும் மேற்கொள்ளக் கூடாது. புறப்பட்டால் கஃபாவை நோக்கியே புறப்படு என்பது தான் கட்டளை.

அது மட்டுமின்றி நாம் எங்கே இருந்தாலும் கஃபாவை மட்டுமே நோக்க வேண்டும் என்பதும் இவ்வசனங்களின் கட்டளையாகும். நாட்டின் பிரதமரை நாம் சந்திக்கச் செல்கின்றோம். அவர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நாம் அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தால் தான் கஃபாவை நோக்க முடியும். எங்கிருந்த போதும் அத்திசையையே நோக்குங்கள் என்ற கட்டளையை அப்போது தான் செயல்படுத்த முடியும்.

இது தொழுகையில் எங்கே முன்னோக்குவது என்பது குறித்து அருளப்பட்ட வசனங்கள் எனக் கூறும் ஹதீஸ்களை அலட்சியப்படுத்தினால் இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி பெயர்ப்புகளில் (தொழுகையின் போது) என்று அடைப்புக் குறிக்குள் போட்டிருப்பதைக் கண்டு ஏமாற வேண்டாம். அது அரபு மூலத்தில் இல்லாமல் மொழி பெயர்ப்பாளர் சேர்த்ததாகும். இது போன்ற கேள்விகள் அவர்களது குருட்டுக் கண்களைத் திறக்க உதவும் என்பதற்காக இதை நாம் குறிப்பிடுகின்றோம்.

நோன்புக் கால இரவில்

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள்! வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்காதீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக தனது வசனங்களை அல்லாஹ் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:187

குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து சட்டங்கள் வந்தன என்பதை இந்த வசனமும் தெளிவுபடுத்துகிறது.

இந்த வசனம் கூறும் செய்தி இது தான்.

நோன்பு நோற்றிருக்கும் போது பகலில் மட்டும் இன்றி இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்தது என்பதும், அத்தடையைக் கடைப்பிடிக்க முடியாமல் நபித்தோழர்கள் பலர் அதை மீறியுள்ளனர் என்பதும், மக்களின் பலவீனத்தைக் கருத்தில் கொண்டு அந்தத் தடையை அல்லாஹ் நீக்கி இப்போது முதல் இரவில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று அனுமதி வழங்கினான் என்பதும் இவ்வசனத்தில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.

நோன்பு நோற்றிருக்கும் போது பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஒரு கட்டளை இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த ஆதாரம் இந்த வசனத்துக்குள்ளேயே அடங்கியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது அதைத் துரோகம் எனக் கூற முடியாது. தடை செட்டப்பட்டிருந்த ஒரு செயலை அம்மக்கள் செய்திருந்தால் தான் அது துரோகம் எனச் சொல்லப்படும். இவ்வசனத்தில் நீங்கள் உங்களுக்கே துரோகம் செய்தீர்கள்என்று அல்லாஹ் கூறுவதால் பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அறிய முடியும்

எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான்என்ற சொற்றொடலிருந்தும் இதை அறியலாம். தடை செய்யப்பட்டதைச் செய்தால் தான் மன்னிக்க முடியும். அனுமதிக்கப்பட்ட ஒன்றைச் செய்யும் போது மன்னிக்கும் பேச்சுக்கே அதில் இடமில்லை. பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்தது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

பகலில் இல்லறத்தில் ஈடுபடுவது முன்னர் தடை செய்யப்பட்டிருந்ததால் தான் இப்போது முதல் குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் எனக் கூறி தடயை நீக்குகிறான்.

நோன்புக் காலத்தில் பகலில் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற தடை இருந்ததையும், அந்தத் தடை இப்போது முதல் நீக்கப்படுகிறது என்பதையும் இம்மூன்று சொற்றொடர்களைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.

குர்ஆன் எவ்வாறு இறைச் செய்தியாக உள்ளதோ அது போல் குர்ஆன் அல்லாத வேறு வழியிலும் இறைவனிடமிருந்து சட்ட திட்டங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்ற வாதம் உண்மையாக இருந்தால் பகலில் இல்லறத்தில் ஈடுபடக் கூடது என்ற தடை குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் குர்ஆனில் எந்த வசனத்திலும் தடை செய்யும் கட்டளை காணப்படவில்லை. ஏற்கனவே தடை இருந்தது என்ற தகவல் தான் உள்ளதே தவிர எந்த வசனம் இதைத் தடை செய்தது என்பது கூறப்படவில்லை.

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி; ஹதீஸ்கள் இறைச் செய்தி அல்லஎன்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்:

பகலிலும், இரவிலும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை இருந்ததாக அல்லாஹ் கூறுகிறானே அவ்வாறு தடை விதிக்கும் வசனம் எது? குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி என்று வாதம் செய்வோர் அந்தக் கட்டளையைக் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும். கியாம நாள் வரை அப்படி ஒரு கட்டளையை அவர்களால் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மற்றொரு வஹீ மூலம் இவ்வாறு தடை செய்ய அதிகாரம் இல்லாமல் இருந்து அவர்கள் தடை செய்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் கண்டிக்கவில்லை. நீங்கள் இரவில் அவ்வாறு நடந்து கொண்டது குற்றமில்லை, முஹம்மது தவறாகக் கூறி விட்டார்என்று இறைவன் கூறிருக்க வேண்டும்.

அவ்வாறு கூறாமல் நீங்கள் செய்து கொண்டிருந்தது குற்றம் தான்; நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டிருக்கும் போது அது குர்ஆனில் இல்லாவிட்டாலும் அதை மீறுவது பாவம் தான்; என்றாலும் உங்களை நான் மன்னித்து விட்டேன்என்ற பொருள்பட மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளியுள்ளான்.

இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ குர்ஆன் மட்டுமல்ல. நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் இறைவன் போடுகின்ற கருத்துக்களும் வஹீ தான். அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதை இவ்வசனம் நிரூபிக்கின்றது.!

தடுக்கப்பட்ட இரகசியம்

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர். (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இரகசியம் பேசினால் பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறு செய்தல் ஆகியவை குறித்து இரகசியம் பேசாதீர்கள்! நன்மை மற்றும் இறையச்சத்தை இரகசியமாகப் பேசுங்கள். யாரிடம் ஒன்று திரட்டப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!

திருக்குர்ஆன் 58:8,9

இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்தியுங்கள்.

??இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை செய்யப்பட்டிருந்தது.

??இத்தடையைச் சிலர் மீறியதுடன் பாவமான காரியங்களை இரகசியமாகப் பேசினார்கள்.

??அறவே இரகசியம் பேசக் கூடாது என்ற தடை நீக்கப்பட்டு கெட்ட காரியங்களை இரகசியம் பேச வேண்டாம்; நல்ல காரியங்களை இரகசியம் பேசலாம்என்ற கட்டளை இதன் பின்னர் வந்தது,

இம்மூன்று செய்திகளையும் மேற்கண்ட வசனங்களில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியமில்லை என்பது உண்மையாக இருந்தால் ஏற்கனவே இரகசியம் பேசுவதை விட்டும் அடியோடு தடுக்கப்பட்டதைக் கூறும் வசனம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அடியோடு இரகசியம் பேசுவதைத் தடை செய்யும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் காணவில்லையா?என்று திருக்குர்ஆன் கேட்பதிலிருந்து ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்ததை விளங்கலாம். அந்தத் தடையை நீக்கும் இவ்விரு வசனங்கள் தான் குர்ஆனில் உள்ளன. தடை செய்யும் வசனங்கள் குர்ஆனில் இல்லை.

குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோர் குர்ஆனி-ருந்து இந்தத் தடையை எடுத்துக் காட்டவே இயலாது.

குர்ஆனில் தடுக்கப்படாத ஒன்று எப்படி தடுக்கப்பட்டதாக ஆகும்? இறைத் தூதர் தடை செய்ததைத் தான் இது குறிக்கின்றது என்பதைச் சாதாரண அறிவு படைத்தவர்களும் அறிந்து கொள்ளலாம்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவையில்லை என்போர் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றனர்.

அல்லாஹ் இரகசியம் பேசுவதைத் தடுத்ததாகக் கூறுகின்றானே! அந்தத் தடை குர்ஆனில் இல்லையே! தடுக்காத ஒன்றை தடுக்கப்பட்டதாகக் கூறி குர்ஆன் தவறான தகவலைத் தருகின்றதே! இது எவ்வாறு இறை வேதமாக இருக்க முடியும்என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி எழுப்பினால் நபிகள் நாயகத்தின் விளக்கம் தேவை என்று கூறக் கூடியவர்களால் தக்க பதில் கூற முடியும். அது தேவையில்லை என்போர் தக்க பதில் கூற முடியாது.

குர்ஆன் மீது சந்தேகத்தை எழுப்பும் வாதம் ஒரு போதும் சரியானதாக இருக்க முடியாது.

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளது. அதுவும் மார்க்க ஆதாரம் தான் என்பதற்கு மேலும் பல சான்றுகள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

இறைவனின் வாக்குறுதி

எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 8:7

இவ்வசனம் நேரடியாகக் கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.

தமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னிய நாட்டவர் தமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதைத் தடுக்கத் திட்டமிட்டார்கள். குறிப்பாக முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு ஊரை விட்டே விரட்டியடித்த மக்காவாசிகள் தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க வேண்டும் என நினைத்தார்கள்.

நாட்டின் மீது அக்கறையுள்ள எந்தத் தலைவரும் செய்வது போலவே தமது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களைத் தடுத்து நிறுத்தவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் ஆணை பிறப்பித்தார்கள்.

இந்த நிலையில் தான் மக்காவின் முக்கியப் பிரமுகரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாமனாருமான அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் அதிகமான சரக்குகளுடன் தமது நாட்டுக்குள் புகுந்து பயணித்துக் கொண்டிருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது.

எனவே அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக தமது தலைமையில் படை நடத்திச் சென்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வணிகக் கூட்டத்தின் வர்த்தகப் பொருட்களைப் பறிமுதல் செய்ய வரும் செய்தி வணிகக் கூட்டத்தின் தலைவரான அபூஸுஃப்யானுக்குத் தெரிந்தது. உடனே அபூஸுஃப்யான் தம்மையும், தமது வர்த்தகப் பொருட்களையும் காப்பாற்ற படையெடுத்து வருமாறு மக்காவுக்குத் தகவல் அனுப்பினார்.

இத்தகவலுக்குப் பின் மக்காவிலிருந்து சுமார் ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை மதீனாவை நோக்கிப் புறப்பட்டு வந்தது.

வர்த்தகக் கூட்டத்தை வழிமறித்து பறிமுதல் செய்வதா? அல்லது எதிர்த்து வரும் எதிரிகளுடன் போர் செய்வதா? என்ற குழப்பமான நிலை நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. வணிகக் கூட்டத்தை வழிமறித்தால் அதிகம் இரத்தம் சிந்தாமல் அவர்களை வெற்றி கொள்ள முடியும் என்பதாலும் அவர்களின் பொருட்களைப் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பதாலும் அதைத் தான் பெரும்பாலோர் விரும்பினார்கள்.

எதிரிகளின் படையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே தங்கள் படை பலம் இருந்ததால் போரை விட வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள்.

ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதையே தேர்வு செய்தார்கள். எதிரிகளை பத்ர் என்னும் இடத்தில் எதிர் கொண்டு மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள்.

இந்நிகழ்ச்சி தான் இவ்வசனத்தில் கூறப்படுகின்றது. இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகின்றான்.

வணிகக் கூட்டம், அவர்களைக் காப்பாற்ற வந்த மக்காவின் இராணுவம் இவ்விரண்டில் ஒன்றை நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்று முன்னரே அல்லாஹ் வாக்களித்துள்ளதாக இவ்வசனம் கூறுகின்றது.

ஏற்கனவே அளித்த வாக்குறுதியை இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் நினைவுபடுத்துகின்றான். குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற வாதத்தின் படி இரண்டு கூட்டத்தில் ஒரு கூட்டத்தை நீங்கள் வெல்வீர்கள் என்று குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் முழுவதும் தேடினாலும் இக்கருத்தைச் சொல்லும் வசனம் ஏதும் இல்லை. இறைவன் வாக்களித்ததாகக் கூறுகின்றான். ஆனால் அந்த வாக்குறுதி குர்ஆனில் இல்லை. குர்ஆன் மட்டுமே போதும் என்பவர்கள் இப்போது குர்ஆன் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தக் காரணமாகி விடுகின்றனர். குர்ஆன் உண்மைக்கு மாற்றமான செய்தியைக் கூறுகின்றது என்ற கருத்தை இத்தகையோர் ஏற்படுத்துகின்றனர்.

குர்ஆன் மட்டுமின்றி வேறு வகையிலும் இறைவன் புறத்தி-ருந்து செய்திகள் இறைத் தூதர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புவோருக்குக் குர்ஆன் மீது எந்தச் சந்தேகமும் ஏற்படாது. ஏனெனில் இறைவன் அளித்த அந்த வாக்குறுதி குர்ஆனில் உள்ளதா என்று தேடிப் பார்ப்பார்கள். குர்ஆனில் இல்லாத போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்த வாக்குறுதியை அல்லாஹ் பதிவு செய்திருப்பான் என்று முடிவுக்கு வந்து தங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்வார்கள்.

குர்ஆன் மட்டும் போதும் என்று கூறுவோர் முடிவில் நாத்திகர்களாக மாறும் இழிவைச் சந்திப்பதற்கு அவர்களின் தவறான கொள்கையே காரணமாக அமைந்து விடுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் குர்ஆன் அல்லாத மற்றொரு வகையிலும் செய்தியை இறைவன் வழங்குவான் என்பதற்கு இவ்வசனமும் சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ் அறிவித்த இரகசியம்

இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறிய போது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற, அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டிய போது அதில் சிலவற்றை (அம் மனைவியிடம்) நபி எடுத்துக் காட்டி, சிலவற்றை எடுத்துக் காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்த போது இதை உங்களுக்கு அறிவித்தவன் யார் என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) என நபி விடையளித்தார்.

திருக்குர்ஆன் 66:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். உங்களுக்கு இதை யார் சொன்னார்என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.

அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்என்பது தான் நபிகள் நாயகம் அளித்த விடை.

அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொருவரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.

குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாதுஎன்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.

அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.

குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்மந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.

முஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும்? பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.

குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.

அச்சமான நிலையில்

நீங்கள் அஞ்சினால் நடந்தோ, வாகனத்திலோ (தொழலாம்). அச்சம் தீர்ந்ததும் நீங்கள் அறியாமல் இருந்ததை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினையுங்கள்!

திருக்குர்ஆன் 2:239

எதிரிகள் பற்றியோ, வேறு எதைப் பற்றியுமோ அச்சம் இருந்தால், நடந்து கொண்டோ, வாகனத்தில் பயணம் செய்து கொண்டோ தொழலாம் எனக் கூறப்படுவதை எளிதாக யாரும் விளங்கிக் கொள்ளலாம்.

அச்சம் தீர்ந்து விடுமானால் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் அச்சமில்லாத போது தொழும் முறை என்ன என்பது கூறப்படவே இல்லை. ஆயினும் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் தந்தவாறுஎன்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.

அச்சமில்லாத சாதாரண நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் கற்றுத் தந்ததைத் தான் அல்லாஹ், தான் கற்றுத் தந்ததாகக் கூறுகிறான்.

நபிகள் நாயகத்தின் விளக்கமும் இறைவன் புறத்திலிருந்து பெறப்பட்டவை என்பதற்கும், குர்ஆனைப் போலவே நபிகள் நாயகத்தின் விளக்கமும் அவசியம் என்பதற்கும் இது சான்றாகவுள்ளது.

சோதனையான காட்சி

உமக்கு நாம் காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்குச் சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 17:60

இந்த வசனத்தில் அல்லாஹ் தனது தூதரை நோக்கி உமக்கு ஒரு காட்சியை நான் காட்டியுள்ளேன்; அதன் மூலம் மனிதர்களுக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தியுள்ளேன் என்று கூறுகின்றான்.

அல்லாஹ் காட்டிய அந்தக் காட்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தெரிவிப்பதற்காகக் காட்டிய காட்சி அல்ல. மாறாக அந்தக் காட்சி மனிதர்களுக்குச் சோதனையாக அமைந்துள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் அந்தக் காட்சியை நாம் அவசியம் அறிந்தாக வேண்டும். அப்போது தான் அந்தச் சோதனை என்னவென்று புரிந்து அதற்கேற்ப நடக்க முடியும்.

குர்ஆன் மட்டும் தான் வஹீ என்றால் அந்தக் காட்சி என்ன என்று குர்ஆனிலேயே கூறப்பட்டிருக்கும். ஆனால் குர்ஆன் முழுவதும் தேடிப் பார்த்தாலும் மனிதர்களுக்குச் சோதனையான அந்தக் காட்சி எது என்பதற்கான விளக்கம் கிடைக்காது. மனிதர்களுக்குச் சோதனையான அந்தக் காட்சியைக் குர்ஆன் அல்லாத வேறு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் விளக்கினான் என்பது தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்திற்கு அல்லாஹ் அழைத்துச் சென்றான். அதில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சியைத் தான் தனது திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜிற்குச் சென்றதை ஒரு மனிதன் ஏற்றுக் கொண்டுவிட்டால் அவன் இஸ்லாத்தில் நிலைத்திருப்பான். அது எப்படி ஒரே இரவில் விண்ணுலகிற்குச் சென்று வர முடியும்? என்று அல்லாஹ்வின் வல்லமையில் சந்தேகம் கொள்பவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.

அதனால் தான் அந்தக் காட்சியை மனிதர்களுக்குச் சோதனையாக ஆக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தவர்களில் சிலர் மிஃராஜைப் பற்றிக் கூறப்பட்டதும் அதை நம்ப மறுத்து வழிகேட்டில் சென்று விட்டார்கள் என்ற செய்தியும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது. எனவே அல்லாஹ் கூறிய அந்தச் சோதனையான காட்சி என்பது மிஃராஜ் தான் என்பதை அறியலாம்.

குர்ஆனுடைய வசனங்களை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு ஹதீஸ்கள் தேவை என்பதை இதிலிருந்தும் விளங்கலாம்.

தெரிந்த மாதங்கள்

ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!

திருக்குர்ஆன் 2:197

ஹஜ்ஜுடைய மாதங்கள் பற்றிக் கூறும் தெரிந்த மாதங்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை என்று மனிதர்கள் தாமாக முடிவு செய்ய முடியாது. அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை என்பதை அல்லாஹ் மக்களுக்கு அறிவித்துக் கொடுத்திருந்தால் தான் தெரிந்த மாதங்கள் எனக் கூற முடியும்.

ஹஜ்ஜின் மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படி இருந்தும் தெரிந்த மாதங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆன் அல்லாத வேறு வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருப்பான் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் குர்ஆன் முழுமையானது அல்ல என்று கூறும் நிலை ஏற்படும்.

குர்ஆன் அல்லாத வழியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த வசனத்தில் மற்றொரு செய்தியும் உள்ளது. ஹஜ்ஜுடைய காலம் பற்றிக் கூறும் போது மாதங்கள் என்று பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

அரபு மொழி இலக்கணம் பற்றி ஒரு தகவலை இந்த இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் ஒன்றைக் குறிக்க ஒருமை என்ற சொல் அமைப்பும், ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்க பண்மை என்ற சொல் அமைப்பும் உள்ளன.

ஆனால் அரபு மொழியில் இருமை என்ற ஒரு சொல் அமைப்பு மேலதிகமாக உள்ளது. தமிழில் ஒன்றுக்கு மேற்பட்டதை பண்மை என்போம். ஆனால் அரபு மொழியில் இரண்டுக்கு மேற்பட்டதைத் தான் பண்மை என்பார்கள்.

ஹஜ்ஜுக்குரிய காலம் சில மாதங்கள் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட மாதங்கள் எனப் பொருள். குறைந்தது மூன்று மாதங்களாவது இருந்தால் தான் மாதங்கள் எனப் பண்மையாகக் கூற முடியும்.

இந்த இலக்கணத்தை நினைவில் கொண்டு இவ்வசனத்தை நாம் ஆராய்வோம். குர்ஆனுடைய கருத்துப்படி ஹஜ்ஜுடைய மாதங்கள் குறைந்தது மூன்று என்றால் அந்த மூன்று மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் மட்டும் போதும் என்போர் குர்ஆனிலிருந்து எடுத்துக் காட்ட வேண்டும்.

குர்ஆனிலிருந்து அந்த மாதங்களை உலகம் அழியும் காலம் வரை எடுத்துக் காட்ட இயலாது. ஏனெனில் குர்ஆனில் அந்த மாதங்கள் யாவை என்பது கூறப்படவில்லை.

அந்த மாதங்கள் யாவை என்பதைக் குர்ஆன் அல்லாத வேறு வகையில் தான் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஒப்புக் கொண்டால் குர்ஆன் மட்டும் போதும் என்ற இவர்களின் வாதம் நொறுங்கி விழுந்து விடுகிறது.

ஹஜ்ஜில் தமத்துஃவ் என்று ஒரு வகை உண்டு. இந்த வகை ஹஜ் செய்பவர்கள் ஷவ்வால் மாதமே இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்றி விட்டு ஹரமிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். துல்ஹஜ் மாதம் வந்ததும் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இவர்களுக்கு மூன்று மாதங்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகின்றன என்பதை நபிகள் நாயகத்தின் விளக்கத்தை ஏற்பவர்களால் கூற முடியும். அவர்களுக்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

ஆனால் குர்ஆன் மட்டும் போதும் என்போர் இவ்வசனத்தின் விளக்கத்தை அறியாத நிலையைச் சந்திக்கும் போது குர்ஆனிலேயே சந்தேகம் கொண்டவர்களாக ஆவார்கள்.

முரண்பட்ட இரண்டு சட்டங்கள்

சந்ததிகளைப் பெறாமல் மரணிப்பவர் கலாலா எனக் குறிப்பிடப்படுவார். சந்ததி இல்லாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவரது சொத்தை எப்படிப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது பற்றி திருக்குர்ஆனில் முரண்பட்ட இரு சட்டங்கள் கூறப்படுகின்றன.

இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள்.

திருக்குர்ஆன் 4:12

வாரிசு இல்லாமல் மரணிப்பவரின் சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் என்று இவ்வசனம் கூறுகிறது. ஆனால் பின் வரும் வசனம் வாரிசு இல்லாமல் மரணித்தவரின் சகோதரிக்கு பாதிச் சொத்து சேரும் எனக் கூறுகிறது.

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 4:176

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும். ஆறில் ஒன்று கொடுக்க வேண்டுமா? சரி பாதி கொடுக்க வேண்டுமா? எதைக் கொடுத்தாலும் ஒரு வசனத்தை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டில் ஒரு வசனம் முதலில் அருளப்பட்டதாகவும், மற்றொன்று பின்னர் அருளப்பட்ட வசனமாகவும் இருந்தால் தான் இந்த முரண்பாடு நீங்கும். முதலில் அருளப்பட்ட சட்டத்தை பின்னர் அருளப்பட்ட சட்டம் மாற்றி விட்டது என்று முடிவு செய்தால் எந்த வசனத்தையும் மறுக்கும் நிலை ஏற்படாது.

ஒரு வசனம் முதலில் அருளப்பட்டதா பின்னர் அருளப்பட்டதா என்பதைக் குர்ஆனிலிருந்து அறிய முடியாது. ஹதீஸில் இருந்து தான் அறிய முடியும்.

திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி 4605)

ஹதீஸ்கள் மார்க்க ஆதாரங்கள் என்ற கொள்கையுடையவர்கள் 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்று தெளிவான விடையைக் கண்டறிந்து கொள்வார்கள். ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் இதற்குப் பொருத்தமான எந்த விடையயும் கூற முடியாது.

பேரீச்சை மரங்களை வெட்டியது

நீங்கள் (அவர்களுடைய) பேரீச்சை மரங்களை வெட்டியதும், அதன் வேர்களுடன் வெட்டாது விட்டதும் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தது. குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்.

திருக்குர்ஆன் 4:176

பனூ குரைலா கூட்டத்தினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட போது அங்கிருந்த பேரீச்சை மரங்களில் சிலவற்றை வெட்டினார்கள். மற்றும் சிலவற்றை வெட்டாது விட்டனர். இதை யூதர்கள் விமர்சனம் செய்த போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பேரீச்சை மரங்களை வெட்டியதும், வெட்டாது விட்டதும் எனது அனுமதியின் படி தான் நடந்தது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான். குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற கருத்துப்படி இந்த அனுமதி குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் பேரீச்சை மரங்களை வெட்டுங்கள்! அல்லது வெட்டாது விட்டு விடுங்கள்என்று குர்ஆனில் கூறப்படவில்லை. அப்படியானால் குர்ஆன் அல்லாத வஹீ மூலம் தான் அல்லாஹ் அனுமதி அளித்திருக்க முடியும். குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரம் என்ற வாதம் தவறு என்பது இதன் மூலமும் தெரிகிறது.

இரண்டு நாட்களில் புறப்படுதல்

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

திருக்குர்ஆன் 2:203

ஹதீஸ்களின் துணையின்றி இவ்வசனத்தில் கூறப்படும் இரண்டு விஷயங்களை விளங்க முடியாது.

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதைக் குர்ஆன் முழுவதும் தேடினாலும் அந்தக் குறிப்பிட்ட நாட்கள் எவை என்பது குர்ஆனில் கிடைக்காது. குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளில் தான் அறிய முடியும்.

அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

எனவே இதன் பொருள் பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது அல்ல. மாறாக குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள். குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குட்றிப்பிட்ட வணக்கம் என்ன என்பது குர்ஆனில் கூறப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் கல் எறிதல் என்ற வணக்கத்தைத் தான் இந்த வசனம் குறிக்கிறது என்று ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் குறிப்பிட்ட நாட்களையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. குறிப்பிட்ட வணக்கத்தையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. மொத்தத்தில் ஹதீஸ்கள் தேவை இல்லை என்று கூறுவதன் மூலம் குர்ஆன் தெளிவானது அல்ல என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

அடுத்ததாக இரண்டு நாட்களில் விரைவோர் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் எங்கே விரைவது? எதற்கு விரைவது? இக்கேள்விக்கு குர்ஆனில் விடை இல்லை.

கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று ஹதீஸ்கள் விளக்குகின்றன.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் இரண்டு நாட்களில் விரைதல் என்பதற்கு ஆதாரமின்றி எதையாவது உளற முடியுமே தவிர குர்ஆனிலிருந்து அதைக் காட்ட முடியாது.

குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

குறிப்பிட்ட நாட்கள்

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால் நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

திருக்குர்ஆன் 22:28

இந்த வனத்திலும் குறிப்பிட்ட நாட்களில்என்று அல்லாஹ் கூறுகிறான். அந்தக் குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதை ஹதீஸ்களின் துணையில்லாமல் விளங்க முடியாது. ஏனெனில் அந்த நாட்கள் யாவை என குர்ஆனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

ஹஜ் உம்ரா

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்!

திருக்குர்ஆன் 2:196

ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள் என இவ்வசனம் கூறுகிறது.

ஹஜ் என்பது என்ன? என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? உம்ரா என்பது என்ன? அதற்குச் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? இக்கேள்விகளுக்கான விடையைக் குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்ட முடியுமா என்றால் முடியாது. ஊகமாக எதையாவது உளற முடியுமே தவிர குர்ஆன் ஆதாரத்துடன் விடை கூற இயலாது.

குர்ஆனை முழுமையாக விளங்க ஹதீஸ்கள் அவசியம் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

பத்து இரவுகள்

முக்கியமான பத்து இரவுகள் மீது சத்தியம் செய்து இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சத்தியம் என பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக! கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக! அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?

திருக்குர்ஆன் 89:1-5

அப்படியானால் அந்தப் பத்து இரவுகள் யாவை? அந்த இரவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை அறியும் அவசியம் நமக்கு உண்டு. குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற கருத்துப் படி அந்தப் பத்து இரவுகள் யாவை என்பது பற்றியும், அவற்றின் சிறப்பு பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பத்து இரவுகள் யாவை என்பது குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படியானால் இவ்வசனத்தை விளங்க இன்னொரு வஹீ அவசியமாகும் என்பது நிரூபணமாகிறது.

மாற்றப்பட்ட வசனங்கள்

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:101

குர்ஆனுடைய சில வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும் அதை மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நீர் இட்டுக்கட்டுபவர் என்று நபி (ஸல்) அவர்களைச் சிலர் பழித்தார்கள் என்றும் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

இப்போது நாம் குர்ஆனைப் பின்பற்ற வேண்டும் என்றால் அதிலுள்ள மாற்றப்பட்ட வசனங்கள் எவை என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் எந்த வசனத்தை எடுத்துக் கொண்டாலும் இது மாற்றப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு ஒட்டு மொத்த குர்ஆனும் சந்தேகத்திற்கு உரியதாக ஆகிவிடும். எனவே குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடக்கூடியவர்கள் குர்ஆனில் எந்தெந்த வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு குர்ஆனிலிருந்தே பதில் கூற வேண்டும்.

உதாரணமாக தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு வசனம் கூறுகின்றது என்றால் அந்த வசனம் கூறக் கூடிய கட்டளை அப்படியே தான் உள்ளதா? அல்லது மாற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படி எல்லா வசனங்களிலும் இல்லாவிட்டாலும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட வசனங்களில் மாற்றப்பட்ட வசனம் எது என்ற கேள்வி எழவே செய்யும்.

எனவே குர்ஆனை விளங்கிடவும், குர்ஆனைப் பின்பற்றவும் ஹதீஸ் தேவை இல்லை என்ற கருத்துடையோர் குர்ஆனில் மாற்றப்பட்ட வசனங்களையும், எந்த வசனம் மூலம் மாற்றப்பட்டது என்ற விபரத்தையும் குர்ஆனிலிருந்து பட்டியல் போட்டுக் காட்ட வேண்டும். அவர்களால் காட்ட முடியாவிட்டால் குர்ஆன் மட்டும் போதும் என்ற தங்களின் கருத்து தவறானது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

விதியை நம்புவதில் முரண்பாடு

எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று திருக்குர்ஆனின் பலவேறு வசனங்கள் கூறுகின்றன. மனிதனின் நடவடிக்கைகளுக்கு அவனே பொறுப்பாளி எனக் கூறி விதியை மறுக்கும் வசனங்களும் குர்ஆனில் உள்ளன.

மனிதனின் செயல்களில் மனிதனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை; எல்லாம் விதிப்படியே நடக்கிறதுஎன்ற கருத்தைப் பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.

2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41,48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111,112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176,178, 7:186, 9:55, 9:85,87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33,35, 42:8, 42:24, 42:44,46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31

மனிதனின் செயலுக்கு மனிதன் தான் பொறுப்பாளி. விதியின் மீது பழி போட்டு தப்பிக்க முடியாதுஎன்று கீழ்க்காணும் வசனங்கள் கூறுகின்றன.

2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281,286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119,120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41,50,51, 40:17, 40:31, 41:17, 42:20,30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37,38, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28, 83:14, 89:24

ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும்.

விதி என்று ஒன்று இருந்தால் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?என்ற கேள்வி அதில் எழும்.

விதி என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகி விடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்?என்ற கேள்வி வரும்.

இவ்விரு வகையான வசனங்களில் ஒரு வகை வசனங்களை ஏற்றால் மற்றொரு வகை வசனங்களை மருக்கும் நிலை ஏற்படும். இரண்டையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ள முடியாது.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் இந்த முரண்பாட்டை நீக்கும் எந்த விளக்கத்தையும் தர முடியது.

விதி என்பது முரண் போல் தோன்றினாலும் அதில் சர்ச்சை செய்யக் கூடாது; அதில் சர்ச்சை செய்து தான் முன் சென்றவர்கள் அழிந்தார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும் போது குழப்பம் நீங்கி விடுகிறது.

மேலும் நடந்து முடிந்தவைகளை விதியின் மீது போடுமாறும், நடக்கவிருப்பவைகளில் விதியைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்படுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கம் தான் முரண்பாடு இல்லாமல் விதியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

ஹதீஸ் துணையுடன் மட்டும் விளங்கும் வசனங்கள்

இன்னும் பல வசனங்கள் உள்ளன. அந்த வசனங்களுக்கான அர்த்தம் தான் நமக்குத் தெரியுமே தவிர அதன் முழு விளக்கம் தெரியாது. குர்ஆன் முழுவதும் தேடினாலும் கிடைக்காது. அத்தகைய சில வசனங்களை உதாரணத்துக்காகச் சுட்டிக் காட்டுகிறோம்

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்.

திருக்குர்ஆன் 32:23

மூஸாவை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தது எப்போது? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!

திருக்குர்ஆன் 62:9

இந்த வசனத்தில் கூறப்படும் அழைப்பு என்பதன் பொருள் என்ன? ஜமுஆ தினத்தில் காலையில் யாராவது வந்து தொழுகைக்கு அழைத்தால் வியாபாரத்தை விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம் பலிப்பிராணி, (பலிப் பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 5:2

அல்லாஹ்வின் சின்னங்கள் என்றால் என்ன? அவற்றை ஹலாலாக்காமல் இருப்பது எப்படி? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 5:33

அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்வது என்றால் என்ன? மேற்கண்ட வசனத்தில் எந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் கூறப்படுகின்றன? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு நஷ்ட ஈடு ஒப்படைக்கப்பட வேண்டும்.

திருக்குர்ஆன் 4:92

நஷ்டஈடு என்பதன் அளவுகோல் என்ன? நஷ்டஈடு கொடுக்க முடியாத ஏழை கொலை செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

திருக்குர்ஆன் 4:101

சாதாரணமாகத் தொழுகையை எப்படித் தொழ வேண்டும்? சுருக்கித் தொழுவது எப்படி? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

உதாரணத்துக்காகச் சில வசனங்களை எடுத்துக் காட்டி உள்ளோம்.

இது போல் இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன. திருக்குர்ஆனுக்கு நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் கூடுதல் சான்றுகளாக இவை அமைந்துள்ளன.

ஹதீஸ்களில் குழப்பமா?

குர்ஆனை விளங்குவதற்கும், இறைவனின் கட்டளைகளை முழுமையாகச் செயல்படுத்துவதற்கும் ஹதீஸ்கள் அவசியம் என்பதைக் குர்ஆன் வசனங்களிலிருந்து கண்டோம்.

குர்ஆனை மட்டும் பின்பற்றுவோம் என்று கூறிக் கொள்பவர்கள் ஹதீஸ்களை நிராகரிப்பதற்கு வேறு சில காரணங்களையும் கூறுகின்றார்கள்.

ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன.

கருத்து தெளிவில்லாமல் உள்ளன.

ஹதீஸ்களின் நம்பகத் தன்மை குறைவு

போன்ற காரணங்களை முன்வைக்கின்றனர். ஆனால் உண்மையில் ஹதீஸ்களை உரிய முறைப்படி விளங்கினால் ஹதீஸ்கள் தெளிவானவையாகவே உள்ளன.

குர்ஆனைக் கூட உரிய முறையில் அணுகாமல் தர்க்கம் செய்யும் நோக்கத்தோடு அணுகினால் மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கும் பொருந்துவதைக் காணலாம்.

இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதமாக உள்ளதால் அதில் தன்னிலையாகக் கூறப்படும் அனைத்தும் அல்லாஹ்வின் கூற்றாகத் தான் இருக்க வேண்டும். நான் படைத்தேன்; நாம் படைத்தோம்என்றெல்லாம் கூறப்படும் போது அல்லாஹ் தன்னைப் பற்றிக் கூறுவதாக நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அப்படி இருந்தால் தான் அது அல்லாஹ்வின் கூற்றாக இருக்க முடியும். இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் பாருங்கள்!

எங்களில் யாராக இருந்தாலும் அவருக்கு குறிப்பிட்ட இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்பவர்கள். நாங்கள் துதிப்பவர்கள். (என்று வானவர்கள் கூறுவார்கள்)

திருக்குர்ஆன் 37:164,165,166

மேற்கண்டவாறு அல்லாஹ் கூறுவது போல் வாசக அமைப்பு இருந்தாலும் உண்மையில் இது வானவர்களின் கூற்றாகும். நாங்கள் துதிப்பவர்கள்; அணி வகுத்து நிற்பவர்கள் என்பது அல்லாஹ்வின் கூற்றாக இருக்க முடியாது. வாசக அமைப்பு அல்லாஹ்வே இவ்வாறு கூறுவது போலிருந்தாலும் வானவர்களின் கூற்றை அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான் என்று புரிந்து கொள்கிறோம்.

அதனால் தான் என்று வானவர்கள் கூறுவார்கள்என்பது மூலத்தில் இல்லாமல் இருந்தும் அடைப்புக் குறிக்குள் சேர்த்துள்ளோம். வாசக அமைப்பை வைத்து குர்ஆன் தெளிவில்லை என்று யாரும் கூறுவதில்லை. சொல்லாமலே விளங்கக் கூடிய இடங்களில் இது போல் பேசுவது எல்லா மொழிகளிலும் உள்ளது தான் என்ற அடிப்படையில் சரியாக நாம் விளங்கிக் கொள்கிறோம். இது போல் தான் ஹதீஸ்களையும் அணுக வேண்டும். அவ்வாறு அணுகினால் ஹதீஸ்கள் தெளிவில்லை என்று கூற மாட்டார்கள்.

இது போல் அமைந்த மற்றொரு வசனத்தைப் பார்ப்போம்.

(முஹம்மதே!) உமது இறைவனின் கட்டளையிருந்தால் தவிர இறங்க மாட்டோம். எங்களுக்கு முன்னுள்ளதும், பின்னுள்ளதும், அவற்றுக்கு இடையே உள்ளதும் அவனுக்கே உரியன. உமது இறைவன் மறப்பவனாக இல்லை (என்று இறைவன் கூறச் சொன்னான்)

திருக்குர்ஆன் 19:64

இவ்வசனத்தில் நாம் இறங்க மாட்டோம் என்பது அல்லாஹ் கூறுவதாக இருக்க முடியாது. ஜிப்ரீல் அவர்களின் கூற்றுத் தான் இது. ஜிப்ரீல் அவர்களின் கூற்று எப்படி அல்லாஹ்வின் வேதத்தில் இருக்க முடியும்? குர்ஆன் முழுவதும் ஜிப்ரீலின் கூற்று போன்ற தோற்றத்தை இந்த வாசக அமைப்பு ஏற்படுத்துகிறது. ஆனாலும் குர்ஆனில் ஜிப்ரீலின் சொந்தப் பேச்செல்லாம் இடம் பெற முடியாது என்பதால் என்று இறைவன் கூறச் சொன்னான் என்று இதைப் புரிந்து கொள்கிறோம்.

இது போல் மற்றொரு வசனத்தைப் பாருங்கள்!

(எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.

திருக்குர்ஆன் 1:4

குர்ஆன் அல்லாஹ்வுடைய கூற்று என்றால் உன்னையே வணங்குகிறோம் என்பதும் அல்லாஹ்வின் கூற்று என்பது போல் தான் வாசக அமைப்பு உள்ளது. ஆனால் வாசக அமைப்பைக் கவனிக்காமல் இவ்வாறு நம்மை இறைவன் கேட்கச் சொல்கிறான் எனப் புரிந்து கொள்கிறோம்.

எதிர் வாதங்களும் ஏற்கத்தக்க பதில்களும்

மேலோட்டமாகப் பார்க்கும் போது சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோன்றும். அது போன்ற சில ஹதீஸ்களைத் தான் மக்களைக் குழப்புவழ்ற்கு இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஹதீஸ் கலை அறிஞர்களே கடந்த காலங்களில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதற்கான முதல் விதியே குர்ஆனுக்கு முரண்படாமல் இருப்பது தான்.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்ற கொள்கை உடையவர்கள் மக்களைக் குழப்புவதற்கு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துவது குர்ஆனுக்கு முரண்படுவதாக இவர்கள் நினைக்கும் சில ஹதீஸ்களைத் தான். இது போன்ற ஹதீஸ்களை எடுத்துக் காட்டி பார்த்தீர்களா ஹதீஸ்கள் குர்ஆனுடன் மோதுகின்றன எனக் கூறி பாமர மக்களைக் குழப்புகின்றனர்ர்.

ஆனால் இந்த இடத்தில் இரண்டு தவறுகள் செய்கின்றனர்.

சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரணாக இருந்தால் அந்த ஹதீஸ்களை மட்டும் தான் மறுக்கலாம். சில ஹதீஸ்கள் முரணாக இருப்பதால் ஒட்டு மொத்தமாக அனைத்து ஹதீஸ்களையும் இவர்கள் மறுப்பது இவர்கள் செய்யும் முதல் தவறாகும். இதனால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய அனைத்து வசனங்களையும் மறுத்து குர்ஆனை மறுத்த குற்றவாளிகளாகி விடுகின்றனர்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் என்று இவர்கள் கூறும் பல ஹதீஸ்கள் உண்மையில் குர்ஆனுக்கு முரணாக இல்லை. போதிய அறிவும் ஆய்வும் இவர்களிடம் இல்லாததால் குர்ஆனுக்கு முரணில்லாத பல ஹதீஸ்களை முரண் என்று நினைப்பது இவர்கள் செய்யும் இரண்டாவது தவறாகும்.

அது போன்ற சில ஹதீஸ்களை நாம் எடுத்துக் காட்டுவோம்.

தொழுகையில் அத்தஹிய்யாத்து ஓதும் போது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு ……… என்ற வாசகத்தை ஓத வேண்டும் என ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்பதாகும்.

நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நபியே என்று கூற முடியும். நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நபியே என்று எவ்வாறு கூற முடியும்? இது இணை வைத்தல் இல்லையா? ஹதீஸ்களை ஏற்றுக் கொண்டால் ஷிர்க்கான காரியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதனால் ஹதீஸ்களை ஏற்க முடியாது என்று கூறுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அவர்களை அழைப்பது இணை வைத்தல் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவ்வாறு அழைக்கக் கூடாது என்பதைத் தான் நாமும் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.

அழைப்பதற்குரிய சொல் அமைப்பு (விளி வேற்றுமை) பெரும்பாலும் அழைப்பதற்குத் தான் பயன்படுத்தப்படும் என்றாலும் சில நேரங்களில் அழைக்கும் நோக்கம் இல்லாமலும் பயன்படுத்தப்படும்.

எதனை அழைத்தால் அது செவியேற்காதோ அவற்றையும் அழைப்பது போல் நாம் பேசுகிறோம். நிலவே! மலரே! காற்றே! என்றெல்லம் நாம் அழைப்பது போல் பேசுகிறோம். விளி வேற்றுமையாகப் பயன்படுத்தியதால் அவற்றை நாம் அழைக்கிறோம் என்று யாரும் கருத மாட்டார்கள். உண்மையில் நாம் அழைக்கும் நோக்கத்தில் அதைப் பயன்படுத்தினோமா என்பது தான் இதில் முக்கியமானது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் அழைப்பது போன்ற சொல்லைப் பயன்படுத்தினாலும் அவர்களை அழைப்பதாக எந்த முஸ்லிமும் நினைப்பதில்லை. நாம் அழைப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள் என்றும் நம்புவதில்லை. அவ்வாறு நம்புவது கூடாது.

அவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்ற பொருளில் தான் இதைப் பயன்படுத்துகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வாறு கூறுவது ஒரு புறமிருக்கட்டும். அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் நபித்தோழர்கள் இவ்வாறு தான் கூறினார்கள். மதீனாவிலும், இன்னும் பல ஊர்களிலும் ஏராளமான முஸ்லிம்கள் அப்போது இருந்தனர். எந்த ஒரு நேரத்திலும் யாராவது தொழுது கொண்டிருப்பார். அத்தொழுகையில் அவர் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நிச்சயம் கூறி இருப்பார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது கேட்கும் என்றால் ஒவ்வொரு விநாடியும் அலைக்கு முஸ்ஸலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் அப்படி கூறிக் கொண்டிருந்ததில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதிலை ஒருவரும் எதிர்பார்த்ததுமில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் கூட பலர் தொழுதுள்ளனர். அவர்கள் அத்தொழுகையில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நிச்சயம் ஓதி இருப்பார்கள். அருகில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அந்த ஸலாம் கேட்கவும் இல்லை. இதைச் சொன்னவரும் நபிகள் நாயகத்தின் பதிலை எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களை அழைப்பது போல் வாசக அமைப்பு இருந்தாலும் உண்மையில் அவர்களை அழைப்பது இந்தச் சொல்லின் நோக்கம் இல்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு இப்போது நாம் கூறும் ஸலாத்தை மலக்குகள் எத்தி வைக்கின்றார்கள் என்று தான் ஹதீஸ் அடிப்படையில் நம்புகின்றோமே தவிர அவர்களை அழைத்து நேரடியாக ஸலாம் கூறுவதாக அன்றும் முஸ்லிம்கள் நினைத்ததில்லை. இன்றும் நம்புவதில்லை.

எனவே இது இணை வைத்தல் என்ற வகையில் சேராது. இதை விளங்காத காரணத்தால் தான் இவர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

திருக்குர்ஆனில் கூட இது போன்ற வாசக அமைப்பு உள்ளது.

அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா? என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!

திருக்குர்ஆன் 43:45

இந்த வசனத்தில் உமக்கு முன்னால் அனுப்பப்பட்ட தூதர்களிடம் நீர் கேட்பீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இறந்துவிட்ட நபிமார்களிடம் போய் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கேட்க முடியும்? இந்த வசனம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமாக உள்ளது என்று கூறி குர்ஆனை மறுக்க முடியுமா?

இறந்துவிட்ட நபி (ஸல்) அவர்களை அய்யுஹந் நபிய்யு என்று சொல்வது ஷிர்க் என்றால் இறந்துவிட்ட நபிமார்களிடம் போய் கேட்குமாறு அல்லாஹ் கூறுவதும் ஷிர்க் தானே? அதிலும் இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையாக இதைக் கூறுகின்றான். அல்லாஹ்வுடைய கட்டளையை நபி (ஸல்) அவர்கள் நிச்சயம் செயல்படுத்தியதாக வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவது இணை வைப்பாகும். இல்லையென்றால் நடைமுறை சாத்தியமில்லாத கட்டளையை அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் என்று கூறி அந்த வசனத்தை மறுக்க வேண்டும்.

எந்தக் காரணத்திற்காக ஹதீஸை நிராகரித்தார்களோ அதே காரணம் குர்ஆனிலும் உள்ளது. அதனால் குர்ஆனையும் நிராகரித்து இஸ்லாத்தை விட்டே வெளியேறிப் போக வேண்டும். இது தான் குர்ஆனை மட்டும் பின்பற்றுவோம் என்று கூறுபவர்களின் இறுதி நிலையாக இருக்கும்.

இறந்து போன நபிமார்களை அழைக்கச் சொல்வது போல் வாசக அமைப்பு இருந்தாலும் இதன் கருத்து அதுவல்ல. இறந்தவர்களிடம் எதையும் கேட்க முடியாது என பல வசனங்கள் உள்ளதால் அதற்கு முரண்படாத வகையில் இவ்வசனத்தைப் புரிந்து கொள்கிறோம்.

முந்தைய நபிமார்களிடம் கேட்டுப் பார் என்றால் அவர்களின் அறிவுரைகள், போதனைகளில் தேடிப் பார் என்பதே இதன் பொருளாக இருக்கும் என்று நாம் முடிவுக்கு வருகிறோம். இந்த இடத்தில் வாசக அமைப்பைக் கருத்தில் கொள்வதில்லை. நபியே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்என்பதில் இதே பார்வை இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதே இவர்களின் குழப்பத்துக்குக் காரணம்.

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

திருக்குர்ஆன் 24:2

விபச்சாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் நூறு கசையடிகள் தான் தண்டனை என்று அல்லாஹ் இவ்வசனத்தில் தெளிவாகக் கூறி விட்டான். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று அல்லாஹ் வேறுபடுத்தவில்லை. எனவே திருமணம் ஆனவர்களானாலும், திருமணம் ஆகாதவர்களானாலும் அவர்கள் விபச்சாரம் செய்வார்களானால் அவர்களுக்கு நூறு கசையடிகள் தான் தண்டனை; மரண தண்டனை கிடையாது என்பது இவர்களின் வாதம்.

திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை எனவும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடிகள் எனவும் ஹதீஸ்களில் இரு வகையான தண்டனைகள் கூறப்படுகின்றன. இவ்வசனத்திற்கு முரணாக இது உள்ளதால் இதை ஏற்கக் கூடாது என்று இவர்கள் கூறுகின்றனர்.

விபச்சாரக் குற்றத்துக்கு இரண்டு வகையான தண்டனை கிடையாது என்ற தங்களின் வாதத்தை வலுப்படுத்திட மற்றொரு சான்றையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்ட பின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்.

திருக்குர்ஆன் 4:25

(இது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கம்)

அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன என்பதை இவ்வசனம் கூறுகிறது. அதாவது அடிமையாக இல்லாத திருமணமான பெண்கள் விபச்சாரம் செய்தால் என்ன தண்டனை அளிக்கப்படுமோ அத்தண்டனையில் பாதி அளவு அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்யும் போது அளிக்க வேண்டும் என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

விபச்சாரம் செய்யும் திருமணமான பெண்களுக்கு மரண தண்டனை என்றால் அதில் பாதி தண்டனை எப்படி வரும்? மரண தண்டனையில் பாதி என்பதைக் கற்பனை செய்ய முடியாது. ஆனால் அவர்களின் தண்டனை நூறு கசையடி என்றால் அதில் பாதி தண்டனை ஐம்பது கசையடி ஆகும். எனவே திருமணமானவர்களுக்கு மரண தண்டனை என்று ஹதீஸ்களில் கூறப்படுவது இவ்வசனத்துடன் நேரடியாக மோதுகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விபச்சாரத்திற்கு இரு வகையான தண்டனைகள் எனக் கூறியதும் நடைமுறைப்படுத்தியதும் குர்ஆனுக்கு எதிரானதா? இவர்களின் இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளது தானா?

இது பற்றி நாம் விளக்கமாக ஆராய்வோம்.

திருக்குர்ஆனில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தால் அவர்களது வாதத்தை யாரும் மறுக்க முடியாது. மொழி பெயர்ப்பாளர்கள் தவறாக மொழி பெயர்த்ததன் அடிப்படையிலேயே இவ்வாதம் எழுப்பப்பட்டுள்ளது.

விவாகம் செய்யப்பட்ட பெண்களின் தண்டனையில் பாதி என்று சிலர் மொழி பெயர்த்துள்ள இடத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு விவாகம் செய்யப்பட்ட பெண்கள் என்று சிலர் மொழி பெயர்த்துள்ளனர். இந்த இடத்தில் இவ்வாறு மொழி பெயர்ப்பது தவறாகும்.

முஹ்ஸனாத் என்ற சொல் பல அர்த்தம் கொண்ட சொல்லாகும். பயன்படுத்தும் இடத்துக்கு ஏற்ப அதன் பொருள் மாறும்.

உதாரணத்துக்குச் சில வசனங்களைப் பார்ப்போம்.

4:24 வசனத்தின் துவக்கத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 4:23 வசனத்தின் தொடர்ச்சியாகும். யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று இவ்வசனத்தில் பட்டியல் போடப்படுகிறது. அதன் தொடர்ச்சியில் முஹ்ஸனாத் களையும் திருமணம் செய்யக் கூடாது என்று குறிப்பிடப்படுகிறது.

கணவனுடன் வாழ்பவள் அல்லது பிறரது மனைவி என்று இந்த இடத்தில் பொருள் கொள்ளலாம். அப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும். இன்னொருவனின் மனைவியை ஒருவர் மணந்து கொள்ளக் கூடாது என்று இவ்வசனத்தை நாம் புரிந்து கொள்கிறோம்.

5:5 வசனத்திலும் முஹ்ஸனாத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் பற்றிக் கூறப்படுகின்றது. அந்தத் தொடரில் மூமின்களில் உள்ள முஹ்ஸனாத் களும் மணமுடிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. கணவனில்லாத பெண்கள் தான் முஹ்ஸனாத் என்று இங்கே கூறப்படுகிறார்கள் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

முஹ்ஸனாத் களை மணந்து கொள்ளலாகாது என்று 4:24 வசனத்தில் கூறி விட்டு முஹ்ஸனாத் களை மணந்து கொள்ளலாம் என்று 5:5 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

4:24 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 5:5 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் பிறருடைய மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று ஆகி விடும்.

அது போல் 5:5 வசனத்தில் முஹ்ஸனாத் என்பதற்கு என்ன அர்த்தம் செய்தோமோ அதையே 4:24 வசனத்தில் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் கணவனில்லாத பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரீதமான முடிவுக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.

5:5 வசனத்தில் கணவனில்லாத பெண்கள் முஹ்ஸனாத்கள் எனப்படுகின்றனர்.

4:24 வசனத்தில் கணவனுடன் வாழும் பெண்கள் முஹ்ஸனாத்கள் எனப்படுகின்றனர்.

இரண்டுமே இவ்வார்த்தைக்குரிய அர்த்தம் என்றாலும் இடத்திற்கேற்ற ஒரு அர்த்தத்தைத் தான் செய்ய முடியும்.

முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இவ்விரண்டு அல்லாத வேறு அர்த்தமும் உள்ளது. அத்தகைய இடங்களில் இவ்விரு அர்த்தங்களும் பொருந்தாமல் போய்விடும்.

முஹ்ஸனாத் பெண்கள் மீது யார் அவதூறு கூறுகிறார்களோ என்று 24:4, 24:23 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

திருமணமான பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோஎன்று இங்கே அர்த்தம் கொள்ள முடியாது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் திருமணமாகாத பெண்கள் மீது அவதூறு கூறலாம் என்ற கருத்து வரும்.

திருமணம் ஆகாத பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோஎன்றும் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் திருமணம் ஆனவர்கள் மீது அவதூறு கூறலாம் என்ற கருத்து வரும்.

கற்பொழுக்கத்தைப் பேணுபவர்கள் என்பது தான் இங்கே பொருள். இவ்வார்த்தைக்கு இந்தப் பொருளும் உள்ளது. திருமணமானவர்களாகட்டும்! ஆகாதவர்களாகட்டும்! கற்பு நெறியுடன் வாழும் பெண்கள் மீது அவதூறு கூறுவோர் மேற்கண்ட இரு வசனங்களில் எச்சரிக்கப்படுகின்றனர்.

நான்காவதாக ஒரு அர்த்தமும் இச்சொல்லுக்கு உண்டு. அடிமைகளாக இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் பெண்கள் என்பது அந்தப் பொருள்.

முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு இப்படி நான்கு அர்த்தம் உள்ளது. விபச்சாரம் செய்யும் பெண்களின் தண்டனை பற்றிப் பேசும் 4:25 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு திருமணமான பெண்கள் என்று இவர்கள் பொருள் செய்ததால் தான் இவ்வாறு வாதிடுகின்றனர்.

4:25 வசனத்தில் இடம் பெறும் முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனுள்ள பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா? கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று பொருள் கொள்வதா?

இரு விதமாகவும் பொருள் கொள்ள இந்த வார்த்தை இடம் தந்தாலும் இந்த இடத்தில் ஒரு பொருளைத் தான் கொள்ள வேண்டும். அதற்கு நியாயமான காரணமும் இருக்கின்றது.

4:25 வசனத்தில் முஹ்ஸனாத் என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முஹ்ஸனாத் பெண்களை மணந்து கொள்ள யாருக்கு சக்தி இல்லையோ என்பது ஒரு இடம்.

முஹ்ஸனாத் பெண்களின் தண்டனையில் பாதி என்பது இரண்டாவது இடம்.

இந்த இரண்டாவது இடத்தில் தான் திருமணமான பெண்கள் என்று மொழி பெயர்த்துள்ளனர்.

இதே போல் முஹ்ஸனாத் பெண்களை மணந்து கொள்ள யாருக்கு சக்தி இல்லையோ என்பதையும் மொழி பெயர்த்தால் என்னவாகும்? திருமணமான பெண்களை மணந்து கொள்ள யாருக்குச் சக்தி இல்லையோ என்ற கருத்து வரும்.

அதாவது திருமணமாகி கணவனுடன் வாழ்பவளை மணந்து கொள்வது அறவே கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இவர்களை அறவே மணந்து கொள்ளக் கூடாது எனும் போது கணவனுள்ள பெண்களை மணந்து கொள்ள யாருக்குச் சக்தி இல்லையோ என்று கூற முடியுமா?

கணவனில்லாத பெண்கள் என்ற மற்றொரு பொருளைத் தான் இந்த இடத்தில் கொடுக்க வேண்டும். கணவனில்லாத் பெண்களைத் தான் மற்றவர்கள் மணந்து கொள்ள முடியும்.

இவ்வசனத்தில் முதலில் கூறப்பட்ட முஹ்ஸனாத் என்ற சொல்லுக்கு கணவனில்லாத பெண்கள் என்று மொழி பெயர்க்கும் போது இரண்டாம் இடத்திலும் அவ்வாறு தான் மொழி பெயர்க்க வேண்டும். ஒரு வசனத்தில் இரண்டு தடவை ஒரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கும் போது இரண்டுக்கும் ஒரு பொருளைக் கொடுப்பது தான் முறையானது.

முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திலும் ஒரே பொருள் கொண்டால் இவர்களின் வாதம் அடிபட்டுப் போய் விடும்.

கணவனில்லாத பெண்களை மணமுடிக்க யாருக்குச் சக்தி இல்லையோஎன்று முதல் இடத்திலும்,கணவனில்லாத பெண்ணுக்கு அளிக்கப்படும் தண்டனையில் பாதி என்று இரண்டாவது இடத்திலும் ஒரே விதமாகப் பொருள் கொண்டால் இவர்களின் எதிர்க் கேள்வி அர்த்தமற்றுப் போய்விடும்.

கணவனில்லாத பெண்ணுக்கு அளிக்கப்படும் தண்டனை ஹதீஸ்களின் அடிப்படையில் நூறு கசையடி தான். இதை இரு பாதியாகப் பிரிக்க முடியும். இப்போது இந்த வசனத்தின் கருத்துக்கு மாற்றமாக ஹதீஸ்கள் அமையவில்லை.

கணவன் உள்ள பெண்கள், கணவனில்லாதவர்கள் என்று முரண்பட்ட இரண்டு அர்த்தங்கள் தரக்கூடிய இவ்வார்த்தைக்கு இரண்டாவது அர்த்தம் தான் இவ்வசனத்தில் கொடுக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு முக்கியக் காரணமும் இருக்கிறது.

விபச்சாரத்திற்குரிய தண்டனையில் பாதி எனக் கூறாமல் முஹ்ஸனாத்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி என்று அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக தண்டனைகளைக் குற்றங்களுடன் சேர்த்துக் குறிப்பிடுவது தான் வழக்கமாகவுள்ளது.

திருட்டுக் குற்றத்திற்குரிய தண்டனையைக் குறிப்பிடும் போது திருடர்களின் கையை வெட்ட வேண்டும்என்று குறிப்பிடப்படும். இவ்வாறு தான் ஒவ்வொரு குற்றத்துக்கும் குறிப்பிடப்பட வேண்டும்.

அது போல் விபச்சாரம் செய்யும் அடிமைகளின் தண்டனை பற்றிக் கூறும் போது பொதுவாக விபச்சாரத்திற்கு என்ன தண்டனையோ அதில் பாதிஎன்று தான் கூற வேண்டும். விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனை இல்லை என்றால் இப்படித் தான் கூற வேண்டும்.

இவ்வாறு கூறாமல் முஹ்ஸனாத்களுக்கு உள்ள தண்டனையில் பாதி என்று அல்லாஹ் கூறுகிறான். முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை எனவும் முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு வேறு வகை தண்டனை எனவும் இருந்தால் தான் இப்படிக் கூற முடியும்.

முஹ்ஸனாத்களுக்கு ஒரு தண்டனை, முஹ்ஸனாத் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனை என இரண்டு வகையான தண்டனை இருந்தால் மட்டுமே இவ்வாறு கூற முடியும். இதிலிருந்து விபச்சாரத்துக்கு இரு வகையான தண்டனைகள் இருப்பதைச் சந்தேகமற நாம் அறிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் முஹ்ஸனாத்களின் தண்டனைனயில் பாதி எனக் கூறப்பட்டால் எது பாதியாக முடியுமோ அது பற்றியே கூறப்படுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். எது பாதியாக ஆகாதோ அது பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

திருமணமான பெண்களுக்கு வேறு தண்டனை உள்ளது என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. அதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரண தண்டனை என விளக்கியுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு வகையான தண்டனைகள் என்று வகுத்திருப்பது இவ்வசனத்திற்கு விளக்கம் தானே தவிர முரண் இல்லை என்பதை ஐயமற அறியலாம்.

உண்பதற்குத் தடை செய்யப்பட்ட சில உணவுகளை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். குர்ஆனில் கூறப்படாத இன்னும் சில உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராம் என அறிவித்துள்ளார்கள். இது குர்ஆனுக்கு முரணானது என இவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். இதை விரிவாகப் பார்ப்போம்.

தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லைஎன்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 6:145

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 2:173

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:115

6:145 வசனத்தில் நான்கு உணவுகளைக் குறிப்பிட்டு விட்டு இவை தவிர வேறு எதுவும் ஹராமாக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான். இந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்று குர்ஆன் கூறும் போது நபிகள் நாயகம் அவர்கள் இதற்கு மேலும் சில உணவுகளை ஹராம் எனக் கூறியிருப்பது குர்ஆனுக்கு எதிராக உள்ளது. எனவே இது நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக இருக்க முடியாது என்பது இவர்களின் வாதம்.

அது போல் 2:173, 16:115 ஆகிய வசனங்களில் இதே நான்கு உணவுகளைக் குறிப்பிட்டு விட்டு இவற்றையே அல்லாஹ் ஹராமாக்கி உள்ளான் எனக் கூறப்படுகிறது. இவற்றை ஹராமக்கியுள்ளான் என்பதற்கும் இவற்றையே ஹராமாக்கியுள்ளான் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

இவற்றையே ஹராமாக்கியுள்ளான் என்றால் இவை தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்து அடங்கியுள்ளது. எனவே இவை அல்லாதவற்றை ஹராமாக்கும் ஹதீஸ்கள் இவ்வசனங்களுக்கு முரணானவை எனவும் வாதிடுகின்றனர்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்பதில் நமக்கும் உடண்பாடு உண்டு. ஹதீஸ் துறையிலும் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் அருளப்படவில்லை. மாறாக சிறிது சிறிதாக தேவைக்கேற்ப அருளப்பட்டதாகும். ஒரு காலத்தில் மதுபானம் தடை செய்யப்படாமல் இருந்தது. பின்னர் அது தடை செய்யப்பட்டது. அது போல் ஒரு கால கட்டத்தில் இந்த நான்கு உணவுகள் மட்டும் தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் இந்தப் பட்டியல் அதிகரிப்பது இவ்வசனங்களுக்கு முரணாகாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இது தொடர்பான ஹதீஸ்களை இவ்வசனத்துக்கு முரணானது எனத் தவறாக நினைக்கின்றனர்.

இந்த நான்கைத் தவிர மற்ற எந்த உணவும் தடுக்கப்பட்டவை அல்ல என்பது இவர்களின் வாதம். இவர்களின் வாதப்படி கழுதை, நாய், கரப்பான் பூச்சி, பாம்பு, பல்லி, தேள், முள்ளம் பன்றி, குரங்கு போன்ற எதுவானாலும் உண்ணத் தக்கதே. இவர்களின் வாதப்படி மலம் கூட உண்ணத் தக்கதே.

இவர்கள் வாதம் தவறு என்பதைப் பின்வரும் வசனம் தெள்ளத் தெளிவாக்குகிறது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 5:3

ஏற்கனவே கூறப்பட்ட நான்குடன் கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, மேட்டிலிருந்து உருண்டு விழுந்தவை, தமக்கிடையே மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றை இவ்வசனத்தில் அல்லாஹ் மேலதிகமாகக் கூறுகிறான்.

ஆரம்ப காலத்தில் நான்கு மட்டுமே ஹராமாக இருந்தன என்பதும், பின்னர் 5:3 வசனத்தில் கூறப்பட்டவைகளும் ஹராமாக்கப்பட்டன என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

இந்த நான்கைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்பதால் ஹதீஸ்களை மறுத்தவர்கள் இப்போது இந்த வசனத்தை என்ன செய்யப் போகிறார்கள்?

நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்பது ஒரு கால கட்டத்தில் இருந்த நிலை என இதிலிருந்து விளங்கலாம்.

நான்கு உணவுகள் ஹாராம் என அறிவிக்கும் வசனங்கள் இவற்றைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லை என்ற கருத்தை உள்ளடக்கி இருந்தன. ஆனால் நான்கை விட அதிகமானவற்றைக் கூறும் இவ்வசனத்தில் இவற்றைத் தவிர வேறு எதுவும் ஹராம் இல்லைஎன்று கூறப்படவில்லை. இன்னும் ஹராமானவை இருக்கலாம் என்ற சாத்தியத்தை இவ்வசனம் மறுக்கவில்லை. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிலவற்றை ஹராம் என அறிவித்தது இவ்வசனத்தின் விளக்கமே தவிர முரண் அல்ல.

மேலும் ஹாராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பதை திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதையும் இவர்கள் கண்டு கொள்ள மறுக்கின்றனர்.

வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது, அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்!

அல்குர்ஆன் 9:29

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவைகளை ஹராம் எனக் கருதாதவர்களுடன் போடுமாறு இவ்வசனம் கூறுகிறது. ஹராமாக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் மிகத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.

குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்டவை மட்டும் தான் ஹராம் என்று இருந்தால் அல்லாஹ் ஹராமாக்கியவை என்று மட்டும் அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹராமாக்கியவை என்று கூறியது ஏன்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 7:157

முன் வசனங்களில் கூறப்பட்ட நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை என்றால் நல்லவைகளை அவர் ஹலாலாக்குவார். கெட்டவைகளை ஹராமாக்குவார்என்ற இந்த வாசகத்திற்கு எந்தத் தேவையுமில்லை.

எனவே, நான்கைத் தவிர வேறு ஹராம் இல்லை எனக் கூறுவோர் மேற்கண்ட குர்ஆன் வசனங்களையே மறுக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 66:1

இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதையும் ஹராம் என்று பிரகடனம் செய்ய அதிகாரமில்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தைச் சரியாகச் சிந்திக்காத காரணத்தால் இத்தகைய வாதத்தை எழுப்புகின்றனர். அல்லாஹ் ஹலாலாக ஆக்கிய ஒரு பொருளை (தேனை) தமது மனைவியருக்காக தம் மீது மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கிக் கொண்டார்கள். இனி மேல் தேனை உட்கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்தார்கள். மக்கள் அனைவருக்கும் தேனை ஹராமாக ஆக்கவில்லை.

அல்லாஹ் அனுமதித்த ஒரு பொருள் ஒருவருக்குப் பிடிக்கவில்லையானால் அதைத் தன்னளவில் தவிர்த்துக் கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஹலால் என்றால் உண்பது எப்படி அனுமதியோ, உண்ண மறுப்பதும் அனுமதி என்றே பொருள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை தம் மீது மட்டும் விலக்கிக் கொண்டார்கள் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ் ஹலாலாக ஆக்கியதை ஹராம் என்று அறிவித்தார்கள் என்று கூறவில்லை. அவ்வாறு எந்த இறைத் தூதரும் கூற மாட்டார்கள்.

அப்படியானால் இந்தச் செயலை இறைவன் ஏன் ஆட்சேபிக்கிறான்? அதற்கான காரணம் இவ்வசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவியன் திருப்தியை நாடி – தமக்கு அதில் விருப்பம் இருந்தும் – விலக்கிக் கொண்டார்களே அது தான் இங்கே ஆட்சேபிக்கப்படுகிறது.

மனிதர்கள் மரணித்த பின் மறுமை நாளில் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்பதை அனைத்து முஸ்லிம்களும் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் வரை பர்ஸக் எனும் இன்னொரு உலகத்தில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு வைக்கப்படுவார்கள்; இது கப்ரு வாழ்க்கை எனவும் கூறப்படுகிறது. இது பற்றி பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களும், கப்ரு வாழ்க்கையும் பின் வரும் குர்ஆன் வசனத்துக்கு முரணாக உள்ளதால் இதை ஏற்க முடியாது என்பதும் இவர்களின் வாதம்.

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத் தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 36:51, 52

இவ்விரு வசனங்களும் மறுமை நாளில் மனிதர்கள் எழுப்பப்படுவது பற்றிக் கூறுகின்றன.

அவ்வாறு எழுப்பப்படும் போது எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று கேட்டுக் கொண்டே எழுவார்கள் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

கப்ரில் அவர்கள் வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தால் எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்என்று எப்படிக் கூறுவார்கள்?

எந்த வேதனையும் இல்லாமல், இருந்தால் தான் அவர்களால் இவ்வாறு கூற முடியும். இவ்வாறு எழுப்பப்பட்டது குறித்து அவர்கள் கைசேதமும் கவலையும் அடைகிறார்கள் என்றால் எள்ளளவும் அவர்கள் வேதனை செய்யப்படவில்லை என்பதைச் சந்தேகமற அறியலாம்.

கப்ரில் வேதனை இருப்பதாக ஹதீஸ்களில் கூறப்பட்டாலும் இந்த வசனங்களுடன் அவை நேரடியாக மோதுவதால் அதை நாம் நம்பத் தேவையில்லை என்று இந்தக் கருத்துடையவர்கள் வாதிடுகின்றனர்.

தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காக மற்றொரு வாதத்தையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

அல்லாஹ் யாருக்கும் எந்த அநியாயமும் செய்ய மாட்டான். கப்ருடைய வேதனை இருப்பதாக நம்புவது அல்லாஹ் அநீதி இழைக்கிறான் என்ற கருத்தை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது என்பது தான் அந்த வாதம்.

ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவர் அவர் செய்த ஒரு தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். உலகம் அழிவதற்கு பத்து நாட்களுக்கு முன் மரணித்த ஒருவனும் அதே தவறுக்காக கப்ரில் வேதனை செய்யப்படுவதாக வைத்துக் கொள்வோம். இரண்டாமவன் வெறும் பத்து நாட்கள் மட்டுமே கப்ருடைய வேதனையை அனுபவிக்கிறான். ஆனால் ஆதம் (அலை) அவர்களின் மகனோ இலட்சோப லட்சம் வருடங்கள் கப்ரில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.

ஒரே குற்றத்தைச் செய்த இருவரில் ஒருவருக்கு பத்து நாள் தண்டனை என்பதும், இன்னொருவருக்கு பல லட்சம் வருடங்கள் தண்டனை என்பதும் எப்படி நீதியான தீர்ப்பாக இருக்க முடியும்? இத்தகைய அநீதியான தீர்ப்பை இறைவன் வழங்குவானா? என்று இவர்கள் கேட்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இறந்த ஒருவர் கப்ரில் தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது போல் இன்று மரணித்த ஒருவரும் அதே குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். இருவரும் வேதனை செய்யப்பட்ட காலத்தைக் கணக்கிட்டால் இன்று மரணித்த வரை விட முன்னர் மரணித்தவர் 1400 வருடங்கள் அதிகமான தண்டனை பெற்றிருப்பார். இது தான் இறைவன் வழங்கும் நீதியா? என்றும் இவர்கள் வாதிடுகின்றனர்.

மேலும் கப்ரு வேதனை பற்றி குர்ஆனில் எங்குமே கூறப்படாததையும், தங்கள் வாதத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆகவே, கப்ரில் வேதனை இருப்பதாக நம்புவது திருக்குர்ஆனை மறுப்பதாகவும், அல்லாஹ்வின் நீதியைச் சந்தேகிப்பதாகவும் அமைந்துள்ளது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று மனிதர்கள் கூறுவதால் கப்ரு வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வருவது முற்றிலும் தவறானதாகும்.

குர்ஆனை முழுமையாக ஆய்வு செய்யாமல் இவ்விரு வசனங்களை மட்டும் தங்கள் மனோ இச்சைப்படி புந்து கொண்டதன் விளைவு தான் இந்த வாதம்.

ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்தை அடைபவர்கள் முந்தைய உலகில் நடந்தவற்றை மறந்து விடுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பது அவர்களுக்கு அறவே நினைவுக்கு வஜ்மல் போய் விடும். எனவே தான் கப்ரு வேதனையை அனுபவித்தவர்கள் மீண்டும் எழுப்பப்பட்டு வேறு உலகிற்குக் கொண்டு செல்லப்பட்டவுடன் கப்ரில் நடந்ததை அடியோடு மறந்து விடுகிறார்கள்.

ஒரு உலகில் நடந்ததை வேறொரு உலகிற்கு இடம் பெயரும் போது மறந்து விடுவார்கள் என்பதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளன.

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து189 அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?(என்று கேட்டான்.) ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறினர். இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம் என்றோ,இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதி மொழி எடுத்தோம்.)

திருக்குர்ஆன் 7:172, 173

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தவுடன் அவர் வழியாகப் பிறக்கவுள்ள எல்லா சந்ததிகளையும் அல்லாஹ் வெளிப்படுத்தி நான் உங்கள் இறைவனல்லவா?என்று கேட்டான். அனைவரும் ஆம்என்றனர் என்பதை இவ்வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

ஆம் எனக் கூறியவர்களில் அனைத்து மாந்தரும் அடங்குவோம்.

இவ்வாறு இறைவன் கேட்டது நமக்கு நினைவில் இல்லை. நாம் ஆம் எனக் கூறியதும் நமக்கு நினைவில் இல்லை. இறைவன் திருக்குர்ஆன் மூலம் நமக்குச் சுட்டிக் காட்டிய பிறகும் நமக்கு அது நினைவுக்கு வருவதில்லை. இறைவன் கூறுவதால் அதை நாம் நம்புகிறோமே தவிர, நமக்கு நினைவுக்கு வந்து நாம் இதை நம்புவதில்லை.

ஒரு உலகிலிருந்து மறு உலகுக்கு மனிதன் இடம் பெயரும் போது முந்தைய உலகில் நடந்த அனைத்தையும், அடியோடு மறந்து விடுவான் என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எந்த உலகத்தில் வைத்து அல்லாஹ் உறுதி மொழி வாங்கினானோ, அந்த உலகத்தில் நாம் மீண்டும் எழுப்பப்படுவோம். உறுதி மொழி வாங்கிய அந்த உலகத்தில் இறைவன் எடுத்த உறுதி மொழி நமக்கு நினைவுக்கு வரும் எனவும் இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இறைவன் இருக்கிறான் என்பது எங்களுக்குத் தெரியாதே! என்றெல்லாம் கியாமத் நாளில் யாரும் மறுத்து விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த உறுதிமொழி என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து மறுமை நாளில் அந்த உறுதிமொழி நமக்கு நிச்சயமாக நினைவுக்கு வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கப்ருடைய வாழ்வு என்பது தனி உலகம், திரும்ப எழுப்பப்பட்டு இறைவன் முன்னால் நிறுத்தப்படுவது வேறு உலகம். எனவே, கப்ரிலிருந்து இன்னொரு உலகத்துக்குச் செல்லும் போது எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவன் யார்? என்று கேள்வி கேட்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கப்ரில் வேதனை இல்லை என்று மறுப்பது அறிவீனமாகும்.

ஒரு உலகிலிருந்து மறு உலகத்துக்கு இடம் பெயர்ந்தது மட்டுமின்றி மற்றொரு காரணத்தினாலும் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார் என்று கேள்வியெழுப்பியிருக்கலாம்.

பொதுவாக மனிதன் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகும் போது அதற்கு முன்னிருந்த நிலையை மறந்து விடுவான். திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டவுடன் மனிதன் காண்கின்ற பயங்கரமான நிகழ்வுகள் அதற்கு முன் அவன் அனுபவித்த தண்டனைகளை அடியோடு மறக்கச் செய்து விடுகிறது.

எங்கள் உறக்கத்திலிருந்து எங்களை எழுப்பியவன் யார்?என்று மனிதன் கேட்பதற்கு இதுவும் மற்றொரு காரணமாக அமைந்து விடுகிறது.

இந்தக் காரணமும் நமது சொந்தக் கற்பனை அல்ல. திருக்குர்ஆனில் இதற்குச் சான்று உள்ளது.

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின் திடுக்கம் கடுமையான விஷயமாகும். நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

திருக்குர்ஆன் 22:1,2

மனிதன் திரும்ப எழுப்பப்படும் நாளில் காணப்படும் அதிர்ச்சி, அனைத்தையுமே மறக்கடிக்கச் செய்வதாக இருக்கும். பெற்ற தாய் பிள்ளையைக் கூட மறக்குமளவுக்குக் கடுமையானதாக இருக்கும்.

திரும்ப எழுப்பப்படும் மனிதன் அதிர்ச்சியின் போது கூறும் வார்த்தை நூறு சதவிகிதம் உண்மையானதாக இருக்காது. மறுமை நாளின் கொடூரமான நிலை அதற்கு முன் அவன் பட்ட வேதனைகளை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. அதனால் தான் கப்ர் வேதனையை மறந்து உறக்கத்திலிருந்து எழுப்பியவன் யார்? எனக் கூறுகிறான்.

அதிர்ச்சிகரமான நிலையை அடைந்தவனின் கூற்றாகத் தான் இவ்வசனம் அமைந்துள்ளது. அதிர்ச்சிக்கு ஆளானவன் இவ்வாறு புலம்புவதாகத் தான் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் கூற்றாக அமையவில்லை. இறந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருப்பதாக அல்லாஹ் எங்கேயும் கூறவில்லை.

மேலும் காஃபிர்கள் இது மட்டுமின்றி உண்மைக்கு மாற்றமான இன்னும் பல கூற்றுக்களை மறுமை நாளில் கூறுவார்கள். அவர்கள் கூறுவதை அல்லாஹ் எடுத்துக் காட்டுவதால் அதுவே உண்மை நிலை என்று கருத முடியாது.

இதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

அந்த நேரம் வரும் போது சிறிது நேரம் தவிர தாம் வாழவில்லை என்று குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள். இவ்வாறே அவர்கள் திசை திருப்பப்பட்டு வந்தனர்.

திருக்குர்ஆன் 30:55

சிறிது நேரம் தவிர உலகில் அல்லது கப்ரில் தங்கியிருக்கவில்லைஎன காஃபிர்கள் மறுமையில் எழுப்பப்படும் போது கூறுவார்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவார்கள் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன. இதை ஆதாரமாகக் கொண்டு மனிதன் இறந்து சிறிது நேரத்தில் கியாமத் நாள் வந்து விடும் என்று இவர்கள் கூறுவார்களா? அல்லது இவ்வுலகில் சிறிது நேரமே வாழ்ந்தார்கள் என்று கூறுவார்களா? அதிர்ச்சியின் புலம்பல் என்பார்களா?

நிச்சயமாக அதிர்ச்சியின் புலம்பல் என்றே கூறுவார்கள். இது புலம்பல் என்றால் தூக்கத்திலிருந்து எழுப்பியது யார்?என்று இவர்கள் புலம்புவதை மட்டும் எப்படி ஆதாரமாகக் கொள்கிறார்கள்?

காஃபிர்கள் மறுமை நாளில் உலகில் நடந்த எத்தனையோ விஷயங்களை மறுப்பார்கள். அவர்களுக்கு எதிராக அவர்களின் கைகளும், கால்களும் சாட்சியமளிக்கும் என்றெல்லாம் திருக்குர்ஆன் கூறுகிறது. காஃபிர்கள் இவற்றை மறுப்பதால் அவர்கள் அக்காரியங்களைச் செய்யவில்லை என்று அறிவுடைய யாரேனும் விளங்கிக் கொள்வார்களா?

எனவே, காஃபிர்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து கப்ருடைய வாழ்வு இல்லை எனக் கூறுவது அறியாமை என்பதில் சந்தேகமில்லை.

மறுமையில் வழங்கப்படும் தண்டனை தவிர வேறு தண்டனை இருப்பதாகக் குர்ஆனில் கூறப்படவில்லை என்ற இவர்களின் வாதமும் தவறாகும். கப்ருடைய வேதனை என்ற வார்த்தை தான் குர்ஆனில் கூறப்படவில்லை. அத்தகைய வேதனை உள்ளது பற்றி வேறு வார்த்தைகளால் பின் வரும் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் சூழ்ச்சி செய்த தீங்குகளை விட்டும் அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் ஆட்களைத் தீய வேதனை சூழ்ந்து கொண்டது. காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் வரும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்)

திருக்குர்ஆன் 40:45,46

ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் நரக நெருப்பின் முன்னால் காலையிலும், மாலையிலும் அதாவது தினந்தோறும் காட்டப்படுகிறார்கள் என்றும் கியாமத் நாளில் இதை விடக் கடுமையான வேதனையுள்ளது எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதற்கு விளக்கமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ருடைய வேதனை பற்றி விளக்கமளித்துள்ளனர். இத்தகைய ஹதீஸ்கள் யாவும் இவ்வசனத்தின் விளக்கவுரைகளே தவிர முரணானவை அல்ல.

இது ஃபிர்அவ்னுடைய கூட்டத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தண்டனை; மற்றவர்களுக்கு இது இல்லைஎன்று சிலர் கூறுகின்றனர். இதுவும் தவறான வாதமாகும். ஏனெனில் ஃபிர் அவ்னுக்கு எவ்வாறு வேதனை செய்யப்படுகிறதோ அவ்வாறு தான் மற்ற காஃபிர்களும் வேதனை செய்யப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் விளக்குகிறது.

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன். ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 8:50, 51, 52

அக்கிரமக்காரர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது அவர்களை அடிப்பார்கள். மேலும், சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்எனக் கூறுவார்கள் என்று கூறுகின்ற இறைவன் ஃபிர்அவ்னின் கூட்டத்தினருக்குச் செய்யப்படுவது போல் இவர்களுக்கும் ஏற்படும்என்று கூறுகிறான்.

உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் எனக் கூறி மற்றவர்களுக்கும் கப்ரு வேதனை உள்ளது என்று இறைவன் வலியுறுத்திக் கூறுகிறான்.

எனவே கப்ர் வேதனை குர்ஆனில் இல்லை எனக் கூறுவதும், அது குர்ஆனுக்கு எதிரானது என வாதிடுவதும் குர்ஆனை அறியாதவர்களின் கற்பனையில் உதித்ததாகும்.

சிலர் அதிக காலமும், சிலர் குறைந்த காலமும் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? என்ற கேள்வியும் தவறாகும். இறைவனின் ஏற்பாடு இது தான் என்பது தெந்த பின்னர் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால், அதற்கு நியாயமான விடை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் ஒருவன் ஒரு பாவத்தைச் செய்கிறான். இன்றைக்கு ஒருவன் அதே பாவத்தைச் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பாவத்தைப் பொறுத்த வரை இரண்டும் ஒரே மாதிரியானவை என்றாலும் குற்றத்தில் இருவருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

நூறு வருடங்களுக்கு முன் பாவம் செய்தவன் தனக்கு அடுத்து வருபவன் அதே பாவத்தைச் செய்திட தைரியமளித்து விட்டுச் செல்கிறான். மற்றவன் அப்பாவத்தைச் செய்வதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறான்.

நூறு வருடத்திற்குப் பின், நாம் செய்யும் அந்தப் பாவத்துக்கு அவன் வழிகாட்டியாக இருந்துள்ளான். எனவே செய்த தப்புக்கும் இவன் தண்டிக்கப்பட வேண்டும். இத்தனை பேரைக் கெடுத்ததற்கும் தண்டிக்கப்பட வேண்டும். கப்ரு வேதனையின் மூலமே இத்தகைய நீதியை வழங்க முடியும்.

ஆதமுடைய ஒரு மகன் செய்த கொலை தான் உலகில் நடக்கும் எல்லாக் கொலைகளுக்கும் முன்னுதாரணம். அவன் கொலையாளிகளின் வழிகாட்டி. எனவே, அவன் மற்ற எவரையும் விட அதிக நாட்கள் தண்டனை அனுபவிப்பது தான் சரியான நீதியாகும்.

எத்தனை பேரைக் கெடுத்தான் என்ற வகையில் சிந்தித்தால் ஒருவர் அதிக நாட்களும், இன்னொருவர் குறைவான நாட்களும் கப்ரில் தண்டிக்கப்படுவது அநீதி என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை அவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன் 16:25

அவர்கள் தமது சுமைகளையும், தமது சுமைகளுடன் வேறு சில சுமைகளையும் சுமப்பார்கள். அவர்கள் இட்டுக்கட்டியது பற்றி கியாமத் நாளில் விசாரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 29:13

வழிகெடுத்த பாவத்தையும் ஒருவன் சுமந்தாக வேண்டும் என்று இறைவன் கூறுவதால் இவர்களின் இந்த வாதமும் அடிப்பட்டுப் போகிறது.

எனவே, குர்ஆனை முழுமையாக நம்புபவர்கள் கப்ருடைய வேதனையை ஒருக்காலும் மறுக்க மாட்டார்கள்.

முடிவுரை

திருக்குர்ஆன் எவ்வாறு இறைவனின் மூலம் அருளப்பட்ட வழிகாட்டி நெறியாக அமைந்துள்ளதோ அது போல் ஹதீஸ்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபிகள் நாயகம் ஸல் அவர்களூக்கு அருளப்பட்ட வாழ்க்கை நெறிதான் என்பதை ஏராளமான சான்றுகளூடன் நாம் நிரூபித்துள்ளோம்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற கருத்து குர்ஆன் சொல்லாததும் குர்ஆனுக்கு முரணான கருத்துமாகும் என்பதையும் நாம் இந்நூலில் நிலை நாட்டியுள்ளோம்.

குர்ஆனில் கூறப்படாமல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இட்ட பல கட்டளைகளை அல்லாஹ் தனது கட்டளை என்று அங்கீகரித்ததையும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளோம்.

குர்ஆனில் மூடலாகக் கூறப்பட்ட பல விஷ்யங்களுக்கான விளக்கம் குர்ஆனில் இல்லை. அவற்றைக் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டுமாறு நாம் அறை கூவல் விட்டுள்ளோம். இந்த அறை கூவல் பல்வேறு விவாதங்களிலும், பொது மேடைகளிலும் எடுத்து வைக்கப்பட்டன. ஆண்டுகள் பல ஒடிய பின்னரும் இன்று வரை இந்த அறை கூவலுக்கு இவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. இனியும் பதில் சொல்ல இயலாது. இது ஒன்றே இவர்களின் கொள்கை இஸ்லாத்துக்கு எதிரானது என்பதற்குப் போதுமான சான்றாகும்.

ஆதாரப்பூர்வமான சில ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண் எனக் கூறி இவர்கள் மறுக்கின்றனர். உண்மையாகவே குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்பது தான் நமது நிலையும். ஆனால் குர்ஆனுக்கு முரணில்லாத ஹதீஸ்கள் சிலவ்ற்றை இவர்கள் முரண் என்ற முத்திரை குத்தி மறுப்பதால் அது போன்ற ஹதீஸ்கள் பற்றியும் இந்நூலில் ஆய்வு செய்துள்ளோம்.

காய்தல் உவத்தல் இன்றி இந்நூலை வாசிக்கும் யாரும் ஹதீஸ்கள் இஸ்லாத்தின் இரண்டு மூல ஆதாரங்களில் ஒன்று என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.